வெள்ளி, 5 ஏப்ரல், 2013

சினிமாவின் கிளைமாக்ஸில் வரும் போலீஸ் போலவே நிஜத்தில் வந்த போலீஸ்!

nakkheeran.in  வணக்கம் நக்கீரன்களா.... சென்னை அரசு பொதுநல மருத்துவமனைலிருந்து பேசுறேன். இங்க நியூரோ வார்டுல ஒரு சின்னப்பையன் தலையில அடிபட்டு உயிருக்குப் போராடிக்கிட்டிருக்கான். வலியால் துடிச்சிக்கிட்டிருக்கிற அந்த சிறுவனின் பெற்றோர் யாருன்னு தெரியல" என்று 2 ந்தேதி சனிக்கிழமை நமக்கு தகவல் சொல்ல விரைந்துசென்றோம். எட்டு வயது மதிக்கத்தக்க அந்த ச்சிறுவன் வலியில் பேசமுடியால், உணவுகூட ட்யூப் வழியாக செலுத்தப்பட்டுக்கொண்டிருந்தது. தலைக்கழுத்து தொங்கியபடி இருந்தது. சிறுநீரகம்கூட ட்யூப் வழியாகத்தான் போய்கொண்டிருந்தது. அவனது அழுகையை கண்டு பரிபாதப்பட்ட பக்கத்து பெட்டிலுள்ள நோயாளிகளின் உறவினர்கள் வந்து அவனை கவனித்துக்கொண்டு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அவனது வலி, வேதனை, பெற்றோர் அருகில் இல்லாத ஏக்கம் இதையெல்லாம் கருத்தில் கொண்டு அவனது பெற்றோருக்கு தெரியப்படுத் தவேண்டுமென்று தொலைக்காட்சி மீடியாக்கள் சிலருக்கு தெரியப்படுத்தினோம். அடுத்த அரைமணி நேரத்திலேயே வந்த 24 மணி நேர செய்தி தொலைக்காட்சி நிருபர்கள் டீம்... அந்த சிறுவன் படும் வேதனையை படம்பிடித்து ஒளிபரப்பியது. அந்த சிறுவனின் விபத்துக்குக் காரணம் என்ன? இவனது பெற்றோர் எங்கே இருக்கிறார்கள்? யார் இந்த சிறுவனை அரசு பொதுநல மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்தது? என்று ஆராய ஆரம்பித்த போதுதான்...காணாமல் போகிறவர்கள் ஏழையாக இருந்தால் தமிழக காவல்துறை நடந்துகொள்ளும் விதம் நமது ரத்தத்தை கொப்பளிக்கவைக்கிறது.
சென்னை போரூர் மியாட் மருத்துவமனிலிருந்துதான் 21ந்தேதி இச்சிறுவனை கொண்டுவந்து ஒருவர் சேர்த்துவிட்டுப்போனார் என்று ஜெ.ஹெச்சில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மியாட் மருத்துவமனையின் சீஃப் மெடிக்கல் ஆஃபிஸர் பஞ்சநாதனை தொடர்புகொண்டு கேட்டபோது, கடந்த 15 ந்தேதி ராஜேஷ் என்பவர்தான் அட்மிட் பண்ணினார் என்று அவரது செல்நம்பரை கொடுத்தார். நாம் ராஜேஷை தொடர்புகொண்டு கேட்டபோது, "நான் காரில் வந்தபோது இந்த சிறுவன் அடிபட்டு கிடந்தான். நான் காப்பாற்றி மியாட் ஹாஸ்பிட்டலில் சேர்த்து ஆயிரக்கணக்கில் செலவு செஞ்சேன். முடியாமத்தான் ஜி.ஹெச்சில் சேர்த்தேன்" என்றவர் மேலும் விவரங்களுக்கு பல்லாவரம் எஸ்.ஐ. தணிகாச்சலத்திடம் பேசிக்கொள்ளுங்கள் என்றார்.



நல்ல காரியம்தானே பண்ணியிருக்கீங்க இதை தொலைக்காட்சியில பேட்டியா கொடுத்தீங்கன்னா அந்த பையனின் பெற்றோரை கண்டுபிடிக்க உதவுமே எம்று நாம் கேட்க  "விளம்பரம் வேணாம் சார்" என்று மறுத்துவிட்டார். ஆனால், பல்லாவரம் ட்ராஃபிக் எஸ்.ஐ. தணிகாச்சலத்திடம் பேசியபோதுதான் தெரிந்தது ராஜேஷ்தான் இண்டிகோ காரில் செல்லும்போது அச்சிறுவனை நந்தப்பாக்கம் சாலையில் விபத்துக்குள்ளாக்கியிருக்கிறார். ஆனாலும், மனிதாபிமானத்தோடு அச்சிறுவனை ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்துள்ளார்  என்பதும் அவர்மீது பல்லாவரம் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்ப்பட்டுள்ளதும் தெரியவந்தது.  பல்லாவரம் போலீஸும் சிறுவன் குறித்த தகவலை அனைத்து ஸ்டேஷன்களுக்கும் தெரியப்படுத்தவில்லை.

2....3....4-ந்தேதி  திங்கள் கிழமை காலை வரை அச்சிறுவனின் பெற்றோர்  வராததால்.. தமிழக அரசின் குழந்தைகள் நலக்குழுமத்தின்(Child Welfare Committte) தலைவரை தொடர்புகொண்டு அச்சிறுவனுக்கு சிகிச்சை முடியும்வரை அவனை பார்த்துக்கொள்ளவும் சிகிச்சைக்குப்பிறகு தங்களது ஹோமில் வைத்து பாதுகாத்து அவனது பெற்றோர்களிடம் சேர்க்கும்படி கேட்டுக்கொண்டோம்.  ’’இது போன்று சிறுவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் தமிழக அரசின் 1098 என்ற அவசர எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.  உடனடியாக அந்த சிறுவனுக்கு உதவுகிறோம்’’ என்று நேசக்கரம் நீட்டிய சி.டபுள்யூ.சி தலைவர், "அரசு பொதுநலமருத்துவனையின் போலீஸாரை என்னுடைய செல் நம்பருக்கு பேசச்சொல்லுங்கள்" என்றார்.  நாம் உடனடியாக ஜி.ஹெச். போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ. குணசேகரனை(இன்ஸ்பெக்டர் இல்லையாம்) தொடர்புகொண்டு சொன்னபோது, "அப்படியா?... அன் நோன் பேஷண்ட் அட்மிட் ஆகியிருக்கா? நாங்க எப்படி ஹோம்ல கொண்டுபோயி சேர்க்கமுடியும்? எங்களுக்கு இதுகுறித்து எந்த தகவலும் இல்லையே?" என்று அலட்சியமாகவே பேசியவரிடம், 'இப்போ நக்கீரன்மூலமா உங்களுக்கு தகவல் கிடைச்சிடுச்சி.... நடவடிக்கை எடுக்கலாமில்லை? மனிதாபிமானத்தோடு அச்சிறுவனுக்கு உதவி செய்யுங்கள்" என்று கேட்டுக்கொண்டோம்.
அன்று மதியமே ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடத்தது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதை பார்த்துவிட்டு அச்சிறுவனின் பெற்றோர் மருத்துவமனைக்கு வந்துவிட்டார்கள் என்ற தகவல்தான். அதற்கு பிறகுதான் தெரிந்தது அச்சிறுவனின் பெயர் சரவணன். அவனது அப்பா பெயர் பத்பநாபன். சென்னை கே.கே.நகர் அருகிலுள்ள எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் என்பது.
'15 ந்தேதி காணாமல் போன சிறுவனை தேடாமல் 16 நாட்கள் கழிச்சி வர்றீங்களே' என்று நாம் கோபத்துடன் கேட்க.... கண்ணீரோடு பேச ஆரம்பித்தார் அச்சிறுவனின் தந்தை பத்மநாபன், "சார்...எம்.ஜி.ஆர். நகரிலிருந்து நந்தம்பாக்கம் போறதுக்கு இங்க ஒரு ஷார்ட் கட் இருக்கு. பசங்களோட குளிக்கப்போனவன் வீடு திரும்பல. தேடிப்பார்த்துட்டு மறுநாளே எம்.ஜி.ஆர் நகர் ஆர்-10 போலீஸ் ஸ்டேஷன்ல எஸ்.ஐ. செளந்தரராஜனிடம் புகார் கொடுத்துட்டு பொதிகை சேனலுக்கெல்லாம் எழுதிக்கொடுத்துட்டு தேடினோம்ங்க. எம்புள்ள கிடைக்கல. கம்ப்ளைண்ட் பண்ணின அன்னைக்கே எல்லா போலீஸ் ஸ்டேஷனுக்கும்  எம்.ஜி.ஆர் நகர் போலீஸார் தகவல் கொடுத்திருந்தா பல்லாவரம் ஸ்டேஷன்ல என் பையன் விபத்துக்குள்ளான புகாரை வெச்சி கண்டுபிடிச்சிருக்கலாம்.


அட்லிஸ்ட் விபத்துக்குள்ளாகி  உயிருக்கு ஆபத்தான நிலைமையில் போராடினதை வழக்குப்பதிவு செய்த பல்லாவரம் போலீஸார் அனைத்து காவல் நிலையத்துக்கும் தகவல் கொடுத்திருந்தா உடனடியாக எங்க புள்ளைய கண்டுபிடிச்சிருப்போம். ஏன்,  ஜி.ஹெச்சுக்குன்னு இருக்குற போலீஸார் 21- ந்தேதி அட்மிட் ஆன பையனை விசாரிச்சு தகவல் கொடுத்திருக்கலாம். என்னங்க பன்றது நான் ஒரு ஏழைத் தொழிலாளி. இதே ஒரு பணக்கார வீட்டு பையனுக்கு நடந்திருந்தா இந்த காவல்துறை அதிகாரிகள் ரொம்ப ஸ்பீடா நடவடிக்கை எடுத்திருப்பாங்க போல. நல்லா பேசிக்கிட்டிருந்த என்புள்ள இப்போ தலையில அடிப்பட்டதால தலை நிக்காம பேச்சும் வராம வலியில துடிச்சிக்கிட்டு கிடக்கிறான் பாருங்க..." என்கிறார்கள் அச்சிறுவனின் பெற்றோர் கண்கலங்கிபடி. 

சரி ஜி.ஹெச். போலீஸார் என்ன செய்கிறார்கள்? மறுபடியும் எஸ்.ஐ.குணசேகரனை தொடர்புகொண்டோம். "சார்... வேற ஒரு வேலையா இருக்கேன். விரைவில் அந்த சிறுவனை ஹோமில் சேர்த்து பிறகு அவனது பெற்றோரை கண்டுபிடித்து ஒப்படைத்துவிடலாம்"என்றார். பெற்றோரே டி.வியை பார்த்துட்டு வந்து சேர்ந்துட்டாங்க.


இதுதானா உங்க டக்கு என்று மனதில் நினைத்துகொண்டோம்.  மறுநாள் செவ்வாய்க்கிழமை ஆகியும் எஸ்.ஐ.குணசேகரன் அதே பதிலை ரிப்பீட் அடித்துக்கொண்டிருந்தார். மனிதாபிமானத்தோடு அச்சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தாலும் இன்னும் சிறப்பு கவனம் எடுத்து சிகிச்சை அளிக்க மருத்துவமனை டீன் கனகசபை மற்றும் ஆர்.எம்.ஓ. ஆனந்த் பிரசாத் மற்றும் டாக்டர்களை வேண்டிக்கொண்டோம்.

பிச்சைக்காரர் முதல் கோடீஸ்வரர் வரை பாகுபாடு பார்க்காமல் வசூலிக்கப்படும் வரிப்பணத்தை சம்பளமாக வாங்கிக்கொண்டிருக்கும் காவல்துறை அதிகாரிகளின் காணாமல் போய் விபத்துக்குள்ளான சிறுவனை அவனது பெற்றோரிடம் கொண்டு சேர்க்காமல் அலட்சியமாக இருக்க....மீடியா மட்டும் இல்லையென்றால் அச்சிறுவனின் நிலைமை என்னவாகியிருக்கும்? என்ற பெருமூச்சோடு நாம் யோசித்துக்கொண்டிருக்க செவ்வாய் இரவு 7:15 -க்கு ஜி.ஹெச். எஸ்.ஐ.குணசேகரிடமிருந்து நமக்கு அவசர ஃபோன். கொஞ்சம் பதட்டமாகவே பேசினார்.


தங்கப்பதக்கம் சிவாஜிகணேசனையே ஓவர்டேக் செய்தது. "சார்....எங்களுக்கு ஒரு க்ளூ கிடைச்சது சார். அதவெச்சி அந்த பையனோட பேரண்டை நாங்க கண்டுபிடிச்சிட்டோம் சார்...அந்த பையனோ அப்பா யாருன்னா..."- நமக்கு தெரிந்த விவரங்களையே ரிப்பீட்டாக ரிவீட் அடிக்க நாமும்  "அப்படியா?" என்ற ஆச்சர்யத்தோடு அப்படியே ஷாக்க்க் ஆகிப்போய் கேட்டுக்கொண்டிருந்தோம்!
சினிமாவின் கிளைமாக்ஸில் வரும் போலீஸாகவே  தமிழக காவல்துறையினர் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவும் ஓர் ஆதாரம்.

-மனோ
படங்கள்: ஸ்டாலின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக