திங்கள், 22 ஏப்ரல், 2013

5 வயது சிறுமியின் வாழ்வுக்கு 2௦௦௦ ரூபாய் விலைபேசிய டெல்லி போலீஸ்


ஐந்து வயது சிறுமியைப் பாலியல்
வன்கொடுமைக்கு ஆளாக்கிய பிகார் இளைஞரை தில்லி போலீஸôர் கைது செய்த பின்னரும்கூட, மக்கள் மனக்கொதிப்புடன் தில்லி காவல் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடக் காரணம், இந்த வழக்கில் காவல்துறை காட்டிய மெத்தனப் போக்கும், அந்தச் சிறுமியின் காயங்களில் வெளிப்படும் மனித வக்கிரமும்தான். சட்டத்திற்கு காவலாக இருக்காமல் காவல்துறையினர் தாங்களே சட்டாம்பிள்ளைகளாக மாறிவிடுவதுதான் இந்த மெத்தனப் போக்கிற்கு அடிப்படை. ஆனால், இதுகுறித்துக் கடந்த பதின்ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தாலும், காவல்துறையைச்  சீரமைக்கும் நடவடிக்கைகள் பெயரளவுக்கே நடைபெற்று வருகின்றன. உணர்வூட்டும் (சென்சிடைஸ்) பயிற்சிகளும் பெயரளவிலேயே நடக்கின்றன. ஒரு திருட்டு வழக்கைப் பதிவு செய்வதைப் போலவே, ஒரு சிறுமி காணாமல் போனதையும் காவல்துறை அணுகுகின்றது என்பதுதான் பல தரப்பிலிருந்தும் எழுகின்ற புகார். இதையும்கூட நுட்பமாகப் பார்த்தால், காவல்துறை ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடம் மட்டுமே இத்தகைய மெத்தனத்தைக் காட்டுகின்றது என்பது தெளிவு.

தற்போதைய சம்பவத்தில், ஐந்து வயது சிறுமியைக் காணவில்லை என்று புகார் கொடுக்க ஏப்ரல் 15-ஆம் தேதி மாலை நேரம் காவல்நிலையம் சென்ற பெற்றோர் நள்ளிரவு வரை அங்கேயே காக்க வைக்கப்படுகின்றனர். பிறகு புகைப்படம் கொண்டுவரச் சொல்கிறார்கள். மறுநாள், புகைப்படத்துடன் சென்ற பெற்றோர் மாலை 4 மணிவரை, உரிய அதிகாரி இல்லை என்று காக்க வைக்கப்படுகின்றனர். அதற்குள், வீட்டின் கீழ்தளத்தில் அழும் குரல் கேட்டு, கதவை உடைத்து மக்களே சிறுமியை மீட்டுவிட்டாலும், குழந்தை வக்கிரமான முறையில் சீரழிக்கப்பட்டிருப்பதைச் சொல்லியும்கூட, பெற்றோரை காவல்நிலையத்துக்கு வரச் சொல்கிறார்களே தவிர, அவர்கள் முதலில் வரவில்லை.

இதுவே ஒரு எம்.பி., எம்.எல்.ஏ., அல்லது காவல்துறை அதிகாரி ஒருவரின் ஐந்து வயது மகள் வீடு வந்து சேரவில்லை என்று வைத்துக்கொள்வோம். இதே காவல்துறை சிட்டாகச் செயல்பட்டிருக்கும். எழுத்து மூலமாகப் புகார் கொடுக்கப்படும்வரை காத்திருக்காது. வயர்லெஸ் மூலம் செய்திகள் எல்லா மூலைகளுக்கும் போய்ச்சேரும். அந்தச் சிறுமியின் புகைப்படம் காவல்துறையில் கான்ஸ்டபிள் முதல் டி.ஐ.ஜி. வரை அனைவருடைய செல்போனுக்கும் காட்சிக் குறுந்தகவலாக அனுப்பப்பட்டிருக்கும்.

அப்படியானால் காவல்துறைக்கு செயலுறு அறிவு இருக்கிறது. ஆற்றல் இருக்கிறது. நவீனக் கருவிகள் இருக்கின்றன. தொழில்நுட்பத்தை முழுமையாகக் கையாளத் தெரியும். ஆனால், அவையாவும் அதிகாரமும் பணமும் படைத்தவர்களுக்கு மட்டுமே  பயன்படுத்தப்படும். சாதாரண மக்களுக்குப் பயன்படுத்த வேண்டுமானால், புகார் மனுவைக் காகிதத்தில் எழுதிக் கொடுத்தால் மட்டும் போதாது.

மாநகரம், நகரம் எதுவானபோதிலும், எந்தக் காவல்நிலையத்தில் அதிக மாமூல் கிடைக்கிறதோ அந்தக் காவல்நிலையத்துக்கு "போஸ்டிங்' வாங்குவதிலும், அதற்காகச் செலவழித்தத் தொகையைப் பல மடங்காக மீட்கவும்தான் அக்கறையும் போட்டியும் நிலவுகிறதே தவிர, குற்றங்களைத் தடுக்கவோ, கண்டறியவோ, வழக்குகளைப் பதிவு செய்யவோ அக்கறை காட்டப்படுவதில்லை. காவல்நிலைய வசூலின் பங்குத்தொகை காவல்துறையின் தலைமை வரை பகிர்ந்து கொள்ளப்படும் நிலைமை ஏற்பட்டால்,  அங்கே ஒரு கான்ஸ்டபிள் சரியாகப் பணியாற்றவில்லை என்று கண்டிக்கவும் தண்டிக்கவும் யாருக்குமே அருகதை இல்லாமல் போகிறது என்பதுதான் மெத்தனத்துக்குப் பின்னால் இருக்கும் யதார்த்தம்.

2006-ஆம் ஆண்டில், காவல்துறை அதிகாரி கொலை வழக்கு தொடர்பான தீர்ப்பில்,  காவல்துறைச் சீரமைப்பு குறித்து 7 முக்கிய அம்சங்களை உச்ச நீதிமன்றம் வரையறை செய்து, மத்திய - மாநில அரசுகள் இவற்றை அமல்படுத்த வேண்டும் என்று கூறியது. அவற்றில் முக்கியமானவை நான்கு. அவை:

காவல்துறை மீது அரசு, அரசியல் செல்வாக்கு இல்லாமல் இருக்க வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்து, ஒவ்வொரு காவலரின் செயல்பாட்டையும் மதிப்பீடு செய்யும் பாதுகாப்பு ஆணையம் அமைக்க வேண்டும்; காவல்துறைத் தலைவர் தகுதி அடிப்படையில் நியமிக்கப்படுவதோடு, காவல்நிலைய ஆய்வர் பதவி வரை குறைந்தது 2 ஆண்டுகளுக்கு இடமாறுதல் செய்தல்கூடாது; இடமாற்றம், பதவி நியமனம், பதவி உயர்வு ஆகியவற்றைத் தகுதி அடிப்படையில் முடிவு செய்யும் காவல்துறை வாரியம் அமைக்க வேண்டும்; லஞ்சம் வாங்குகிற, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுகிற, வசூல் ராஜா காவல்துறையினர் குறித்து மக்கள் புகார் தெரிவிக்கும் விதத்தில், மாவட்ட அளவில் "காவல்துறை மீதான புகார்கள் ஆணையம்' அமைக்க வேண்டும்.

இந்தப் பரிந்துரைகளில் தகுதிக்கும் மக்கள் புகாருக்கும் முக்கியத்துவம் தரப்பட்டிருந்ததால், மத்திய - மாநில அரசுகள் இந்தப் பரிந்துரைகளைத் தூசுபிடிக்க விட்டிருக்கின்றன. காவல்துறைச் சீரமைப்பு வெறும் நீதிமன்றத்தின் கருத்தாக மட்டுமே இன்றுவரை நீடிக்கிறது.

பதவியிலிருப்போருக்கும், பணக்காரர்களுக்கும், செல்வாக்குப் படைத்தவர்களுக்கும், சொல்வன்மை மிக்கோருக்கும் துணையாக இருப்பதற்கா மக்களின் வரிப்பணத்தைக் கொட்டியழுது இத்தனை பெரிய காவல்துறையை நாம் நிலைநிறுத்தி இருக்கிறோம்? "தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்' என்ற மகாகவி பாரதி இன்று இருந்திருந்தால், "தனி ஒரு குடிமகனுக்குப் பாதுகாப்பு இல்லையெனில், அந்தக் காவல்துறையைக் கலைத்திடுவோம்' என்று பாடியிருந்தாலும் வியப்பில்லை.

குற்றவாளிகளிடம் கல்லாகவும், பாதிக்கப்பட்டவர்களிடம் கனிவாகவும் இருக்க வேண்டிய காவல்துறை அநியாயக்காரர்களிடம் கனிவாகவும் அப்பாவிப் பொதுமக்களிடம் கல்லாகவும் அல்லவா இருக்கிறது dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக