ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

120 அகதிகளை கடலோர காவல் படையினர் மீட்டு வந்தனர்

australia-2தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயற்சி நடுக்கடலில் தத்தளித்த 120 இலங்கை அகதிகள் கடலோர காவல் படையினர் மீட்டு அழைத்து வந்தனர்


இலங்கை அகதிகளை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்காக சில ஏஜெண்டுகளும், புரோக்கர்களும் உள்ளனர். இவர்கள் மூலம் அகதிகள் விசைப்படகில் தப்பிச்செல்ல முயலும்போது படகு என்ஜின் கோளாறு போன்ற காரணங்களால் அகதிகள் நடுக்கடலில் தத்தளிக்கும் நிலை ஏற்படுகிறது.காஞ்சீபுரம் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, நெல்லை மாவட்டம் தோகைமலைநல்லூர், வேலூர் மாவட்டம் வாலாஜா, குடியாத்தம் ஆகிய இடங்களில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் இருந்து 120 அகதிகள் வெளியேறி ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றனர். இவர்களில் 79 பேர் ஆண்கள், 21 பேர் பெண்கள், 20 குழந்தைகள் ஆவார்கள்.


இவர்கள் அனைவரும் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள கிராமத்தில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல திட்டமிட்டனர். இதற்காக கடலோர கிராமங்களில் செயல்படும் ஏஜெண்டுகளிடம் பல லட்ச ரூபாய் பணம் கொடுத்தனர்.கடந்த 5–ந் தேதி நள்ளிரவு வேளாங்கண்ணி அருகே உள்ள கிராமத்தில் இருந்து 120 பேரும் பைபர் படகு மூலம் நடுக்கடலுக்கு சென்றனர். பின்னர் அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு பெரிய விசைப்படகில் ஏறினர். பின்னர் அந்த விசைப்படகு அங்கிருந்து புறப்பட்டு ஆஸ்திரேலியா நோக்கி சென்று கொண்டிருந்தது.

நேற்று அதிகாலை நாகை அருகே நடுக்கடலில் அகதிகள் சென்ற படகில் திடீரென்று என்ஜின் கோளாறு ஏற்பட்டது. இதனால் படகை மேலும் செலுத்தமுடியாததால், அகதிகள் 120 பேரும் கடலிலேயே தத்தளித்தனர். படகில் அளவுக்கு அதிகமான பேர் இருந்ததால் படகு மூழ்கும் அபாயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அகதிகளில் ஒருவர் கடலோர காவல் படைக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.இதையடுத்து இந்திய கடலோர காவல்படையைச் சேர்ந்தவர்களும், இந்திய கடற்படையைச் சேர்ந்தவர்களும் கடற்படைக்குச் சொந்தமான ‘‘ராஜஸ்ரீ 82’’ என்ற கப்பல் மற்றும் ஹெலிகாப்டரில் அகதிகள் தத்தளித்துக்கொண்டிருந்த இடத்திற்குச் சென்றனர்.

அங்கு விசைப்படகில் மூழ்கும் அபாயத்துடன் நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த இலங்கை அகதிகளை மீட்டு, கடற்படை கப்பலில் ஏற்றினர். அகதிகளுடன் அந்த கப்பல் நேற்று பிற்பகல் 2.30 மணி அளவில் காரைக்கால் துறைமுகம் வந்து சேர்ந்தது.காரைக்கால் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்ட அகதிகளிடம் நாகை மாவட்ட கலெக்டர் முனுசாமி, காரைக்கால் மாவட்ட கலெக்டர் அசோக்குமார் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து அகதிகள் அனைவரும் தமிழக கடலோர காவல் படை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதையடுத்து அவர்களை நாகை மாவட்ட கலெக்டர் முனுசாமி, நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார். அதன்பேரில் அகதிகள் 120 பேரும் போலீஸ் வாகனம் உள்பட 3 பஸ்களில் நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.கலெக்டர் அலுவலக வளாகத்தில் அதிகள் 120 பேரும் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. பின்னர் கடலோர காவல்படை போலீசார் அகதிகளிடம் பெயர், ஊர் போன்ற விவரங்களை சேகரித்தனர். அதைத்தொடர்ந்து நாகை சாமந்தான்பேட்டை கிராமத்தில் உள்ள அரசு விடுதியில் அகதிகள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர்.அவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாகை மாவட்ட நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுவார்கள் என தெரிகிறது.

இலங்கை அகதிகளுடன், தமிழகத்தைச் சேர்ந்த சிலரும் ஆஸ்திரேலியா செல்ல முயன்றது கடலோர காவல் படை நடத்திய விசாரணையில் தெரியவந்தது. நாகையில் தங்கவைக்கப்பட்டு உள்ள அகதிகளில் ஒரு பெண் கர்ப்பிணி என தெரிய வந்ததால், அவர் நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக