செவ்வாய், 26 மார்ச், 2013

திரையரங்குகளுக்கு அரைடஜன் பிளாக் டிக்கெட் பார்ட்டிகள்

திரையரங்குகளுக்கு சென்று படம் பார்ப்பது பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்புவரை தனியான அனுபவம். இன்று நுகர்வு கலாச்சாரத்தின் கோரப்பிடியில் கணக்குப் பார்த்து செலவழிக்க வேண்டிய செலவினமாக திரைப்பட அனுபவம் மாறியிருக்கிறது. நடுத்தரவர்க்க மக்களின் பொழுதுப்போக்கு கூடங்கள் எப்படி இருக்கின்றன? தேவி திரையரங்கு வளாகம் சென்னை மவுண்ட்ரோடின் அடையாளங்களில் தேவி திரையரங்கு வளாகமும் ஒன்று. 1994 ல் (அல்லது 1995?) கியானு ரீவ்ஸின் ஸ்பீடு படம் தேவியில் வெளியான போது அதன் டிக்கெட் கட்டணம் இருபது ரூபாய். படம் நூற்றைம்பது நாட்கள் ஓடியது. அதற்குமுன் சில்வஸ்டர் ஸ்டாலோனின் கிளிப்ஹேங்கர் 175 நாட்கள். தேவி, தேவி பாரடைஸ், தேவி கலா, தேவி பாலா என மொத்தம் நான்கு திரையரங்குகள். இதில் தேவியும், தேவி பாரடைஸும் பெரியவை. கலாவும், பாலாவும் சிறியது.டைல்ஸ் ஒட்டி, வெளியே ஒன்றிரண்டு எல்சிடி டிவிகள் வைத்து மல்டிபிளக்ஸ் கெத்துக்கு தேவி வளாகம் மாறியிருக்கிறது. டிக்கெட் கட்டணம் 90 ரூபாய்கள். இது சில மாதங்கள் முன்பு உள்ள நிலவரம்.
ஃபுட்கோட் இருந்தால் திரையரங்கு கட்டணத்தை 120 வரை உயர்த்தலாம் என்பதால் திரையரங்குக்குள் இரண்டு சேர்கள் போட்டு ரெடிமேட் ஃபுட்கோட் தயார். டிக்கெட் கட்டணம் 120 ரூபாய்.
தேவி பாலாவில் சீட்டுகளின் எண்ணிக்கை குறைவு. தாழ்வான மேற்கூரை. புரஜெக்டரின் கீழே நின்றால் உங்கள் தலை திரையில் தெரியும். அருகிலே இப்படியென்றால் திரையை நோக்கி போகப் போக எங்கு எழுந்து நின்றாலும் திரையில் உருவம் தெரியும்.

12 மணி காட்சிக்கு பன்னிரெண்டு மணிவரை கதவு திறப்பதில்லை. பிறகு அவசர அவசரமாக உள்ளே ஆட்களை திணிக்கிறார்கள். ஒருஆள் உட்கார்ந்தால் அவர்களை கடந்து உள்ளே செல்வதற்கு சர்க்கஸ் கற்றிருக்க வேண்டும். அப்படியொரு குறுகலான இடைவெளி. இந்த லட்சணத்தில் பாதி படத்தின் நடுவே தலையும் உடம்பும் திரையில் தெரிய, சார் ப்ளீஸ் இந்த ஸ்னாக்ஸை ஒன்பதாம் நம்பருக்கு பாஸ் பண்றீங்களா என்ற சிப்பந்திகளின் தொந்தரவு வேறு. இந்த படாவதி திரையரங்குக்கு இவ்வளவு அதிக கட்டணம் பகல் கொள்ளை. இன்னொரு வழிப்பறி கேன்டீன். எம்ஆர்பிக்குதான் தண்ணீர் மற்றுமுள்ள பொருட்களை விற்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. இங்கு எல்லாமே இரட்டைவிலை.

ஒருகாலத்தில் தேவி திரையரங்கின் பின்புறம் உள்ள பிரியாணி கடையில் நன்றாக வெட்டிவிட்டு திரையரங்கில் சாய்வது அங்குள்ளவர்களின் பழக்கமாக இருந்தது. இப்போது பின்பகுதி வழியாக ஆட்கள் அனுமதிக்கப்படுவதில்லை.



சிட்டிக்குள் டிக்கெட் எளிதாக கிடைக்காத படங்களுக்கு மடிப்பாக்கம் குமரன் நல்ல மாற்று. இணையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். சர்வீஸ் கட்டணத்தை மட்டும் பிடித்துக் கொள்வார்கள். டிக்கெட் கட்டணம்? தியேட்டருக்கு வந்து இணையத்தில் புக் செய்த நம்பரை காட்டி பணம் தந்து பெற்றுக் கொள்ள வேண்டும். ஏன் இந்த இரட்டை வேலை என்றால் பதில் சிம்பிள். குமரனில் திட்டவட்டமாக எந்த டிக்கெட் கட்டணமும் கிடையாது. விஸ்வரூபம், துப்பாக்கி என்றால் 150 ரூபாய். பரதேசிக்கு 100 ரூபாய். டிக்கெட்டில் என்றில்லை, தியேட்டரின் எந்த மூலையிலும் டிக்கெட் கட்டணம் என்று எதையும் பார்க்க முடியாது.

புரஜெக்டர் ரொம்ப சுமார். ஒலி அதைவிட மோசம். கதாபாத்திரங்கள் பேசுவதை உன்னிப்பாக கேட்டால்தான் ஆயிற்று. எம்ஆர்பிக்கு இங்கேயும் எந்த மரியாதையில்லை. ரிசர்வேஷன் இருந்தால் மட்டுமே சீட்டு எண் போடப்பட்டிருக்கும் இல்லையென்றக்ல் டிக்கெட் வாங்கிவிட்டு தியேட்டருக்குள் நுழைய க்யூ பிடிக்க வேண்டும். முந்துகிறவர்களுக்கே நல்ல இருக்கை. தயவுதாட்சண்யம் இல்லாமல் பாக்கு பாக்கெட்களை தடவி எடுத்து பக்கெட் தண்ணீரில் பிரித்து போட்டுவிட்டே உள்ளே அனுமதிக்கிறார்கள்

உதயம் காம்ப்ளக்ஸ்


ஒருகாலத்தில் நடுத்தரவர்க்கத்தின் சொர்க்கமாக இருந்தது. டிக்கெட் கட்டணம் தொண்ணூறுக்கும் குறைவு. நீண்ட பார்க்கிங் ஏரியாவில் வண்டி நிற்கிறதோ இல்லையோ, அரைடஜன் பிளாக் டிக்கெட் பார்ட்டிகள் எப்போதும் இருப்பார்கள். காக்கி காவலர்கள் பொறுப்பாக வந்து அவர்களிடம் அன்பளிப்பு பெற்றுச் செல்வது கண்கொள்ளாக்காட்சி. அவ்வப்போது அவர்கள் தெரிவு செய்து தரும் நபர்களை வண்டியில் ஏற்றிக் கொண்டு செல்லும் கண்துடைப்பும் ரசிக்கத்தக்கது. சில நேரங்களில் யூனிஃபார்ம் அணிந்த ஊழியர்களே கையில் டிக்கெட்டுடன் எண்பது நூற்றைம்பது என தொழிலில் இறங்குவதுண்டு. தட்டிக் கேட்டால் பிளாக் டிக்கெட் பார்ட்டிகளிடம் புகார் செல்லும். அடுத்து என்ன நடக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லையே.

உதயம், மினி உதயம், சூரியன், சந்திரன் என நான்கு திரையரங்குகள். சரியான பராமாரிப்பில்லை. குடிநீர் இருக்கும் தண்ணீர் கேனை திறந்தால் அவ்வளவுதான். வண்டல் படிந்த நீர்தான் எப்போதுமிருக்கும். மினி உதயம் திரையரங்கின் வடிவமைப்பை உள்வாங்கிக் கொள்ள நாலு படங்களாவது அங்கு பார்த்தாக வேண்டும். மற்ற திரையரங்குகளைப் போலவே வெளியே பத்து ரூபாய்க்கு விற்கும் பப்ஸை கூசாமல் இருபத்தைந்து ரூபாய்க்கு விற்கிறார்கள். அரை லிட்டர் தண்ணீர் 25 ரூபாய்.

மது அருந்தினால் உள்ளே அனுமதியில்லை. ஆனால் கால்வாசி பேர் பக்கத்து டாஸ்மாக்குக்கு போய்விட்டே வருகிறார்கள். ஸ்டெடியாக வந்தால் அனுமதி உண்டு. ஆடிக்கொண்டே வந்தால் கெட்அவுட்தான்.

கோயம்பேடு ரோகிணி காம்ப்ளக்ஸ்



ரோகிணி, ராகினி, ரூபினி என ஆரம்பிக்கப்பட்ட இந்த வளாகத்தில் ரக்ஷினி, ருக்மினி என ஐந்து திரையரங்குகள். அடித்தட்டு மக்கள்தான் பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள். ரோகிணி வளாகத்தில் உள்ள திரையரங்குகளின் டிக்கெட் கட்டணம் எது என்று அந்த கடவுளுக்கே தெரியாது. திரையரங்கிலும் சரி, டிக்கெட்டிலும் சரி... கட்டண விவரம் இருப்பதில்லை. கவுண்டரில் இருப்பவருக்கு என்ன தோன்றுகிறதோ அதுதான் கட்டணம். அனந்தகோடி அழிச்சாட்டியங்களை பொறுத்து இங்கு மக்கள் குவிய ஒரே காரணம், எந்தப் படமாக இருந்தாலும் டிக்கெட் கிடைக்கும். ரஜினி படத்துக்கே இரண்டாவது நாள் எளிதாக டிக்கெட் வாங்கலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இதில் சில திரையரங்குகள் நூறு மீட்டர் ஓட்டப்பந்தய ஓடுதளம் மாதிரி குறுகி நீண்டிருக்கும். சுவரோரமாக சீட் கிடைத்தால் முன்ஜென்மத்தில் அடாத காரியம் எதுவோ செய்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். குத்து மதிப்பாகதான் கதாபாத்திரங்களின் பேச்சை புரிந்து கொள்ள முடியும். அந்தவகையில் நமது கற்பனா சக்தியை வளர்ப்பதில் இந்த வளாகத்துக்கு பெரும் பங்குண்டு. உள்ளே நுழைந்ததும் வெக்கையான நாற்ற வரவேற்பு ஒவ்வொருவருக்கும் உண்டு. கேன்டீன் மட்டும் சொல்லி வைத்த மாதிரி இரட்டைவிலை.

திருவனந்தபுரம் கைரளி

கேரள அரசால் நடத்தப்படும் திரையரங்கு. திருவனந்தபுரம் ரயில்நிலையத்துக்கு எதிரில், பேருந்துநிலையத்தை ஒட்டி ஜாகை. மொத்தம் மூன்று திரையரங்குகள். கைரளி, நிலா மற்றும் ஸ்ரீ. திருவனந்தபுரம் ஏ கிரேடு திரையரங்குகளும், தமிழக அரசும் விஸ்வரூபத்தை புறக்கணித்த போது இந்த மூன்று திரையரங்குகளிலும் கேரள அரசு விஸ்வரூபத்தை திரையிட்டு கணிசமாக கல்லா கட்டியது. சில வருடங்களுக்கு முன்புவரை மூட்டைப் பூச்சிக்கு பயந்து அந்தப் பக்கம் யாரும் போவதில்லை.




ஆனால் இன்று திருவனந்தபுரத்தின் சுத்தமான திரையரங்கு வளாகங்களில் இதுவும் ஒன்று. 80 ரூபாய் டிக்கெட் கட்டணம். அரசாங்க ஊழியர்களுக்கு நேர் எதிரான பொறுப்பான ஊழியர்கள். அரசாங்கம் நிர்வகிக்கும் திரையரங்கா என ஆச்சரியப்பட வைக்கும் சுத்தம்.
டிக்கெட் தந்து, அனைத்து பார்வையாளர்களும் தத்தமது இருக்கையில் அமர்ந்துவிட்டார்களா என்பதை சோதித்த பிறகே படத்தைப் போடுகிறார்கள். தமிழ்நாட்டில் இல்லாத அதிசயம், 18 ரூபாய் மதிப்புள்ள ஒருலிட்டர் தண்ணீர் பாட்டில் அதேவிலைக்கு கேன்டீனில் கிடைக்கிறது.

கேரள அரசாங்கத்தைப் போல் தமிழக அரசும் திரையரங்குகளை தனது பொறுப்பில்.... ம்ஹும், வேண்டவே வேண்டாம். அரசாங்கத்தின் பொறுப்பில் நடக்கும் டாஸ்மாக் பன்றி கொட்டகையின் நிலை திரையரங்குகளுக்கு நிச்சயம் வேண்டாம். குவாட்டருக்கு ஐந்து ரூபாய் அதிகம் கேட்பது போல் தண்ணீர் பாட்டிலுக்கும் கேட்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக