வியாழன், 28 மார்ச், 2013

மீடியா பெண்கள் எல்லார் முன்னாடியும் கதறி கதறி அழுவாங்க.

சன் டிவியா ரொம்ப வருஷத்துக்கு முன்னமே நீங்க செஞ்சிருக்க வேண்டிய விஷயம்… ரொம்ப லேட்டா வந்திருந்தாலும் உங்ககிட்டேயிருந்து ஆதரவு வர்றது என்னைய மாதிரி ஒடுக்கப்பட்ட, ஆதரவற்ற ஊடகப் பெண்களுக்கு அவசியம்தாங்க.
நான் இப்போ ஊடகத்துல இல்லீங்க. ஆனா நீங்க கட்டுரையில சொல்ற ‘சாரு’ங்களால பாதிக்கப்பட்டு மீடியாவை விட்டே ஓடிப்போன பல பெண்கள்ல நானும் ஒருத்தி. ‘பராசக்தி’ல கலைஞர் ஐயா எழுதின ஒரு ஃபேமஸான வசனம்தான் ஞாபகத்துக்கு வருது. ‘ஓடினாள், ஓடினாள்… வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்’னு வருமே… அந்த வசனம் எங்களைப் போல நேர்மையா, உண்மையா இருக்கணும்னு நினைக்கிற ஊடகப் பெண்களுக்கு ரொம்பவே பொருந்தும்.
சிறுபத்திரிகை, பெரும் பத்திரிகை, டிவி.ன்னு எல்லா விதமான மீடியாக்கள்லேயும் எங்களைத் தொறத்தறதுக்கு இவிங்க காத்திருக்காய்ங்க. எஸ்எம்எஸ் அனுப்பணும், நேரங்காலம் தெரியாம போன்ல கூப்ட நேரத்துக்கு பேசணும், பாத்ரூம் போறதுக்குக்கூட சாருங்ககிட்ட பர்மிஷன் வாங்கிட்டு போகணும், இந்த ஸ்டெப்ஸ்ல எல்லாம் தாண்டி வந்தா வேலை ரீதியாகவும் அடுத்த கட்டத்துக்கு போகலாம். வேற ரீதியாகவும் அடுத்த கட்டத்துக்கு போகலாம்.
எழுதத் தெரியுமா? பத்திரிகை அறம் தெரியுமா? சரிப்பா…உனக்கு ஒரு பேட்டி எடுக்கத் தெரியுமான்னு சாருங்களுக்கு எந்தக் கவலையும் கிடையாது.
சாருங்க வெச்ச டெஸ்ட் எல்லாம் பாஸ் பண்ணா நீங்க அடுத்தடுத்து போய் கிட்டே இருக்கலாம்.
ஐயா எங்க குடும்பத்துல நான்தான் முதல்ல காலேஜ் வரைக்கும் படிச்ச பொண்ணு. பெரிய சாதியோ, அதிகாரம் உள்ள சாதியோ கிடையாது. பணமா? வாழ்க்கை ஃபுல்லா  கடனாளிங்கதான். கடன் வாங்கித்தான் படிச்சேன். நல்ல எழுதறேன்னு தான் பத்திரிகைல வேலை கிடைச்சது. பத்திரிகைகாரி ஆகணும்னு எனக்கு எந்த லட்சியமும் கிடையாது. 15 வயசு வரைக்கும் பத்திரிகையே படிக்காத குடும்பத்திலிருந்த வர்றங்களுக்கு அந்த லட்சியம் எல்லாம் வராதுங்க.
ஆனா நான் செய்ற வேலை எப்படிப்பட்டதுங்கற தெளிவு எனக்கு இருந்துச்சு. நேர்மையா இருந்தேன், எனக்கு வாய்ப்பு கிடைச்ச வரைக்கும் ஒரு பொண்ணு எதையெல்லாம் எழுத முடியாதுன்னு சொல்வாங்களோ அதையெல்லாம் எழுதினேன். ஆனா சாருங்களுக்கு அதெல்லாம் தேவையில்லாத விஷயம். சாருங்களுக்கு இணங்கி நடக்கலைன்னு பல சோதனைகள், பல வேதனைகள். எல்லாமே மறைமுகமான தாக்குதல்கள்தான். மனரீதியாக ஒடுக்கி, அடக்க நினைக்கிறது சாருங்களுக்கு கைவந்த கலை.

இதுல புள்ளி ராஜா சாரு பண்ணதுதாங்க என்னைய மீடியாவைவிட்டே தொரத்தி விட்டது. என்னை ஆறு மாசம் சும்மாவே ஒக்காத்தி வெச்சு சம்பளம் கொடுத்த மவராசன் அவரு. ஏதோ போகட்டும்னு கொடுத்த வேலையிலேயும் எழுத்துப் பிழை, ஒற்றுப் பிழையெல்லாம் கண்டுபிடிச்சு கேப்பாரு பாருங்க அடுக்கடுக்கான கேள்வி… ஆத்தாடி! சாருக்கு ஒரு தப்புகூட வந்துடக்கூடாது அவ்வளவு தமிழ் பற்று. அதனாலதான் திராவிடப்பற்று உள்ள மற்ற பத்திரிகைகாரங்க அவரை காப்பாத்தி விடறாங்க போலிருக்கு. (ஈழப்பிரச்னைக்கு ஆதரவு கொடுத்த சாருங்க பத்து பொண்ணுங்க வாழ்க்கையை நாசம் பண்ணியிருந்தாலும் நாங்க தோள்கொடுத்து காப்போம்னு பல பத்திரிகை தோழர்கள் காப்பாத்துவாங்க. ஐயா தோழர் மாரே நாங்களும் தமிழச்சிங்கதான். அங்க சிங்களவன் எங்களைத் தொறத்தரான்னா, இங்க சாரு மாறு தொரத்தராங்க. அங்கேயும் நாங்க நாசமாப் போறோம், இங்கேயும் போறோம். எங்களுக்காகவும் கொஞ்சம் கருணைக் காட்டுங்க. உங்க கண்ணு, மனசு எல்லாத்தையும் கொஞ்சம் தொறந்து வையுங்க.)
ஐயா எனக்கு அடிமேல் அடிபட்டு ஒரு கட்டத்துல சாதி, பணம், அதிகாரம் எந்த பின்னணியும் இல்லாத நாம பத்திரிக்காரியா இருக்கவே முடியாதுன்னு முடிவு பண்ணிட்டு, சும்மா வேலைக்குன்னு போயிட்டு வந்துக்கிட்டிருந்தேன். சாருங்க நீ போய் மாடு மேய்ன்னு திட்டினாக்கூட சிரிச்சிக்கினேதான் நிப்பேன். சாருங்களைப் பார்த்து பல்லை இளிக்கறதுன்னு இதுக்கு அர்த்தம் எடுத்துக்காதீங்க. நீ எதுக்காக என்னை திட்டறேன்னு தெரியும்டாங்கிற திமிருதான். இந்த திமிருதாங்க என்னை பலப் பல ஊடக சாருங்கக்கிட்டேயிருந்து காப்பாத்துச்சு.
ஆனா அப்பாவி பொண்ணுங்க என்ன பாடுபட்டாங்க தெரியுமா? எல்லார் முன்னாடியும் கதறி கதறி அழுவாங்க. அவமானத்தால கூனிக்குறுகி போவாங்க. சில மாதத்துல பெரிசா கூம்பிடு போட்டுட்டு போயிடுவாங்க. அந்த வெறுப்புலதான் நானும் விலகிட்டேன்.
ஆனா இப்போ எனக்கிருக்கிற கேள்வியெல்லாம்… சுதந்திரமா ஒரு பொண்ணு மீடியாவுல வேலைப் பார்க்கவே முடியாதா? தன் சொந்த திறமையில முன்னுக்கு வரவே முடியாதா? மீடியாவுக்கு பெண்கள் வர்றது வேலைப் பார்க்கறதுக்கா, இல்லை விபச்சாரம் பண்றதுக்கா? சாருங்களுக்கு என்னதான் வேணும்? ஐயா வினவுக்காரங்களே கேட்டு சொல்றீங்களா?
ஐயா என் எழுத்தை சாருங்கள்லாம் சேர்ந்து தற்கொலை பண்ணவெச்சுட்டாங்க. அதனால கொஞ்சம் கோபமா எழுதிட்டேன். மத்தபடி ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட, துரத்தப்பட்ட என்னைய மாதிரி பொண்ணுங்களால வேற எதையும் செய்ய முடியாதுங்க.
- ஒரு பெண் பத்திரிகையாளர். vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக