திங்கள், 25 மார்ச், 2013

கலைஞர் திலகம் ஸ்ரீதர் மசாலாவை கலை ஆக்கியவர்

luckylookonline.com
சந்தேகமே இல்லை. அந்த காலத்து ஷங்கர். ஆனால் ஸ்ரீதருக்கும் ஷங்கருக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உண்டு. ஷங்கர் கலையை மசாலா ஆக்குபவர். ஸ்ரீதர் மசாலாவை கலை ஆக்கியவர். எஸ்.எஸ்.வாசனுக்குப் பிறகு வட இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழர். தமிழ் சினிமாவின் முழுமையான வரலாறு எழுதப்படும் போதெல்லாம் ஸ்ரீதரின் பெயர் இடம்பெற்றாக வேண்டியது வரலாற்றுக் கட்டாயம். சினிமாவின் வெற்றி என்பது நாயகனின் ஆற்றலைச் சார்ந்தது என்கிற பிம்பத்தை உடைத்தெறிந்து, அது இயக்குனரின் குழந்தை என்று அழுத்தம் திருத்தமாக பதிந்தவர்.

ஸ்ரீதரின் சிறுவயது சென்னை, செங்கல்பட்டு, மதுராந்தகம் என்று கழிந்தது. ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது பள்ளி நாடகத்தில்தான் அவரது கலையுலகப் பிரவேசம். பள்ளிப் பருவத்தில் அவருடைய நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் கடுகு என்கிற பெயரில் எழுதும் எழுத்தாளர் அகஸ்தியனும், சித்ராலயா கோபுவும். எட்டாம் வகுப்பில் ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட்டை தமிழில் எழுதி இயக்கி நடித்து செங்கல்பட்டையே ஒரு கலக்கு கலக்கினார். இவரது நாடகத்தைப் பார்த்த இயக்குனர் ஒருவர் அப்போதே சினிமாவில் நடிக்க வாய்ப்பு தந்திருக்கிறார். ஸ்ரீதரரின் ஆசிரியர் ஒருவர்தான் படிப்பு கெட்டுவிடும் என்று அவ்வாய்ப்பை மறுத்தவர். ஆனாலும் சினிமா ஸ்ரீதருக்குள் நீறுபூத்தநெருப்பாய் கனன்றுக் கொண்டிருந்தது.

எஸ்.எஸ்.எல்.சி. முடித்தவுடன் ஏனோ கல்லூரியில் சேரவில்லை. அரசுப்பணிக்கு அவர் சேரவேண்டும் என்று வீட்டில் ஆசை. ஸ்ரீதரையோ சினிமாதான் ஈர்த்துக் கொண்டிருந்தது. இருந்தும் அவருடைய அப்பா கூட்டுறவுத் துறையில் க்ளார்க் பணியில் இவரை சேர்த்துவிடுகிறார். அலுவலகத்தில் ஏதோ சிறு பிரச்னை என்று சீக்கிரமே ராஜினாமாவும் செய்துவிடுகிறார்.

அப்போது சினிமாவில் கொடிகட்டிப் பறந்துக்கொண்டிருந்த வசனகர்த்தா இளங்கோவன் செங்கல்பட்டுக்காரர். அவர் மூலமாக சினிமாவில் நடிகனாக நுழைந்துவிடலாம் என்று முயற்சிக்கிறார். அவரைப் பார்க்க அடிக்கடி சென்னையிலிருந்த ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கிளை அலுவலகத்துக்கு செல்வார். அங்கு பழக்கம் ஏற்பட்டு ஜூபிடரின் கம்பெனி ரெப்ரசண்டேட்டிவ் வேலையில் சேர்கிறார். அந்நிறுவனத்தின் படம் ஓடும் தியேட்டர்களுக்கு சென்று தங்கி, வசூலை கண்காணிக்க வேண்டும். இரண்டு மாதம் இந்தப் பணியில் இருந்தார். தஞ்சாவூரில் ‘வேலைக்காரி’ ஓடிய தியேட்டரில் வேலை. அவருக்கு மேலே இருந்த அதிகாரியோடு பிரச்னை. இந்த வேலையும் போனது.

மீண்டும் சினிமா வாய்ப்புக்கு அலைகிறார். ஏ.வி.எம்.மில் கதை கேட்கிறார்கள் என்று தெரிந்து ஒரு ஸ்க்ரிப்ட்டை தருகிறார். முதல் பரிசீலனையிலேயே நிராகரிக்கப்படுகிறது (பிற்பாடு ஸ்ரீதர் பிரபலமான பின் அதே ஸ்க்ரிப்ட் பெரிய தொகை கொடுத்து வாங்கப்பட்டு, அதே ஏ.வி.எம்.மால் இந்தியில் படமாக்கப்பட்டது). டி.கே.எஸ். சகோதரர்களுக்கு நாடகத்துக்கு ஏதாவது கதை எழுதிக்கொடு என்று நண்பர் ஒருவர் ஆலோசனை சொல்கிறார். இவர் தரும் கதை பிரமாதமாக இருந்தாலும், வயதில் ரொம்ப சிறியவரான ஸ்ரீதரால் இந்த கதையை எழுதியிருக்க முடியுமாவென்று டி.கே.எஸ்.சுக்கு டவுட்டு. ஸ்ரீதர்தான் எழுதினார் என்று உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர் அந்நாடகத்தை அரங்கேற்றினார். ‘ரத்த பாசம்’. நாடகம் பெருவெற்றி அடைந்ததை தொடர்ந்து சினிமாவாகவும் தயார் ஆனது. அதற்கு ஸ்ரீதர்தான் வசனம் எழுதவேண்டும் என்று டி.கே.எஸ். படத்தை தயாரித்த ஜூபிடர் பிக்சர்ஸிடம் வற்புறுத்தினார். இவ்வாறாக ஸ்ரீதரின் திரையுலகப் பிரவேசம் ஒரு வசனகர்த்தாவாகவே நிகழ்ந்தது.

ரத்தபாசம் படமாக்கம் தாமதமாகிக்கொண்டே போன நேரத்தில் ஸ்ரீதருக்கு வேறு படங்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது. இந்நிலையில் சிவாஜிக்கு ஜீபிடர் பிக்சர்ஸ் கதை ஒன்று தேடிக்கொண்டிருந்தார்கள். இவர் சொன்ன ‘எதிர்பாராதது’ சிவாஜிக்கும் பிடித்திருந்தது. ஆனால் வசனம் வேறு ஒருவரை வைத்து எழுதிக்கொள்ளலாம் என்று சிவாஜி சொல்லிவிட்டாராம். சிவாஜி முன்பாகவே ஸ்ரீதர் தான் எழுதிய வசனங்களை படித்துக்காட்ட “பிரமாதம், இந்த தம்பியையே வசனம் எழுத வையுங்க” என்று சொல்லிவிட்டாராம். உண்மையில் ‘எதிர்பாராதது’ படத்துக்கு கலைஞர் வசனம் எழுதவேண்டும் என்றுதான் ஆரம்பத்தில் சிவாஜி விரும்பியிருக்கிறார்.

இக்கட்டத்தில் ஓரளவுக்கு வசனகர்த்தா ஆகிவிட்டார் ஸ்ரீதர். தெலுங்கு படங்களை வாங்கி ‘டப்பிங்’ வசனம் எழுதி டப்பு பார்க்கும் டெக்னிக்கையும் அவரும், அவரது நண்பர்களும் கண்டுபிடித்தார்கள் (ஸ்ரீதருக்கு தெலுங்கு தெரியும்). தெலுங்கு இயக்குனர் பிரகாஷ்ராவின் படங்களைதான் நிறைய டப்பிங் செய்து வந்தார்கள் இவர்கள். அவரை வைத்து தமிழில் நாமே ஒரு படத்தை தயாரித்தால் என்னவென்று திட்டம். வீனஸ் பிக்சர்ஸ் ரெடி. முதல் படமே சிவாஜி நடித்த அமரதீபம். சூப்பர்ஹிட். இதையடுத்து பிரும்மாண்டமாக ‘உத்தம புத்திரன்’ தயாரித்தார்கள். படத்தின் வெற்றியை சொல்லவும் வேண்டுமா?

முதலிரண்டு படங்கள் சக்கைப்போடு போட்டதால் மூன்றாவது படத்தையும் சிறப்பாக கொண்டுவரவேண்டுமென மெனக்கெட்டார்கள். அப்போது ஸ்ரீதர் சொன்ன கதைதான் கல்யாணப்பரிசு. பார்ட்னர்களின் ஒருவராக இருந்த வினஸ் கிருஷ்ணமூர்த்திக்கு கதை பிடிக்கவேயில்லை. இருந்தாலும் வேறு நல்ல கதை கிடைக்காததால் எடுக்க ஆரம்பித்தார்கள். ஸ்ரீதரே இயக்கினால் என்ன என்று பார்ட்னர்களுக்கு ஒரு யோசனை, செலவும் மிச்சமாகும். ஒரு ஷெட்யூல் எடுத்துப் பார்ப்போம், சரியாக வந்தால் தொடர்வோம். இல்லையேல் யாரேனும் நல்ல இயக்குனரை வைத்து எடுத்துவிடலாம் என்று திட்டம்.

கல்யாணப் பரிசின் வெற்றிவிழாவின் போது அவருக்கு தஞ்சாவூரில் ‘கலைஞர் திலகம்’ என்று பட்டம் வழங்கப்படுகிறது. அப்பட்டத்தை தன் வாழ்நாளில் என்றுமே ஸ்ரீதர் பயன்படுத்தியதில்லை. பட்டம் கொடுத்தவர் யார் தெரியுமா? பின்னாளில் தஞ்சாவூரில் கலைஞரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்த பரிசுத்த நாடார்.

இயக்குனர்களின் இயக்குனரான ஸ்ரீதர் இயக்குனர் ஆன கதை இதுதான். மீதி கதை தமிழர்கள் எல்லோருக்குமே தெரிந்த கதைதான். சித்ராலயா தொடங்கியது. மெகாஹிட் படங்களை தயாரித்தது. தேனிலவு, நெஞ்சில் ஓர் ஆலயம், போலிஸ்காரன் மகள், ஆலயமணி, நெஞ்சம் மறப்பதில்லை, காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு, இளமை ஊஞ்சலாடுகிறது, தென்றலே என்னைத்தொடு என்று ஸ்ரீதரை நினைவுபடுத்திக்கொள்ள ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒவ்வொரு படமாவது நினைவுக்கு வந்தே தீரும்.

ஸ்ரீதரின் படங்கள் ஏன் அவ்வளவு சுவாரஸ்யமாகவும், துல்லியமான தொழில்தரத்திலும் இருந்தன என்பதற்கு சந்திரமவுலியின் எழுத்துவடிவத்தில் ‘திரும்பிப்பார்க்கிறேன் : டைரக்டர் ஸ்ரீதர்’ புத்தகம் விடையளிக்கிறது. கல்கி இதழில் தொடராக வெளிவந்த அவரது சுயசரிதை, இப்பெயரில் புத்தகமாகவும் வந்திருக்கிறது.

ஸ்ரீதரின் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள் சினிமாவில் வரும் காட்சிகளை விட சுவாரஸ்யமானவை. சிறுவயது ஏழ்மை என்றெல்லாம் வழக்கமான க்ளிஷே காட்சிகள் இல்லையென்றாலும், அதற்கு இணையான போராட்டத்தை ஸ்ரீதர் தன்னுடைய தனிப்பட்ட வாழ்வில் சந்தித்திருக்கிறார். வாழ்க்கை முழுக்க சாண் ஏறினால் முழம் சறுக்கிக்கொண்டே இருந்திருக்கிறது. ஆனால் முயற்சியை கைவிடாமல் தொடர்ச்சியாக ஏறிக்கொண்டேதான் இருந்தார்.

சிவாஜியின் இயக்குனர்கள் குழுமத்தில் அவர் சேர்ந்தது சுவாரஸ்யமான கதை. உத்தம புத்திரனுக்கு இவர் பூஜைபோட, அதே நாளில் அதே கதை அதே டைட்டிலில் எம்.ஜி.ஆரும் பூஜை போடுகிறார். பின்னர் யாரோ சமரசம் செய்ய எம்.ஜி.ஆர் விட்டுக்கொடுத்து அதற்குப் பதிலாக எடுத்த படம்தான் நாடோடி மன்னன். காதலிக்க நேரமில்லை பூஜை போட்டபோது, எம்.ஜி.ஆரை இயக்கவும் ‘அன்று சிந்திய இரத்தம்’ என்கிற படத்தையும் தொடங்குகிறார் ஸ்ரீதர். இரண்டு படங்களுக்கும் அருகருகே கால்பக்க விளம்பரம். புதுமுகங்கள் நடிக்கும் காதலிக்க நேரமில்லை வண்ணப்படம். மக்கள் திலகமும், புரட்சி நடிகருமான எம்.ஜி.ஆருக்கு ப்ளாக் & ஒயிட் திரைப்படம். இதனால் கோபப்பட்ட எம்.ஜி.ஆர் அன்று சிந்திய இரத்தத்தை கைகழுவுகிறார். பிற்பாடு பிளாக் & ஒயிட்டில் திட்டமிடப்பட்ட ‘அன்று சிந்திய இரத்தம்’, சிவாஜிக்காக கொஞ்சம் மாற்றப்பட்ட ‘சிவந்த மண்’ ஆனது. எம்.ஜி.ஆர் மீதிருந்த கோபத்தாலோ என்னவோ, சிவந்த மண்ணை பிரும்மாண்டமாக எடுத்தார் ஸ்ரீதர். முதன் முதலாக வெளிநாட்டுக்குப் போய் படமாக்கப்பட்ட தமிழ்ப்படம் அதுதான். ஸ்டுடியோவுக்குள் ஓர் ஆற்றையே ‘செட்’ போட்டு அசத்தியிருந்தார். இவ்வாறாக எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் நடந்த விளையாட்டில் தெரிந்தோ தெரியாமலேயோ ஸ்ரீதர், சிவாஜியின் இயக்குனராக மாறிவிட்டிருந்தார்.

சிவாஜியை வைத்து ஹிட் படங்களாக கொடுத்துக் கொண்டிருந்தாலும் சிவந்த மண் ஸ்ரீதரின் காலை வாரிவிட்டது. அவர் நினைத்த அளவுக்கு ஓகோவென்று ஓடவில்லை. தமிழில் படமெடுக்கும்போதே அதன் வடிவத்தை இந்தியிலும் அங்கிருக்கும் பெரிய நடிகர்களை வைத்து எடுப்பது ஸ்ரீதரின் ஸ்டைல். சிவந்த மண்ணின் இந்தி வடிவம் மெகா ஃப்ளாப். சிவந்த மண்ணுக்கு வசனம் எழுத ஆரம்பத்தில் கலைஞரைதான் தொடர்பு கொண்டார் ஸ்ரீதர். அப்போது கலைஞர் அமைச்சர் ஆகிவிட்டதால், அது தொடர்பான விதிமுறைகளை பார்த்து ஒப்புக்கொள்கிறேன் என்றாராம். ஸ்ரீதர் அவரை திரும்ப தொடர்புகொள்ளவில்லை. ஒருவேளை கலைஞர் வசனம் எழுதியிருந்தால் சிவந்தமண் சிறப்பாக ஓடியிருக்கும் என்று இப்புத்தகத்தில் எழுதுகிறார்.

சிவந்த மண்ணுக்கு பிறகு ஸ்ரீதருக்கு கொஞ்சம் இறங்குமுகம்தான். அவரது தயாரிப்பு நிறுவனமான சித்ராலயா பொருட்சிக்கலில் மாட்டிக் கொள்கிறது. வழக்கமான டிராமா வேலைக்கு ஆகாது, ஆக்‌ஷன் படங்களைதான் மக்கள் வரவேற்கிறார்கள் என்று சிவாஜியை வைத்து ஆக்‌ஷன் படமெடுக்க திட்டமிட்டார் ஸ்ரீதர். அப்படம்தான் ஹீரோ 72. இந்தியில் ஜிதேந்திரா, ஹேமமாலினி காம்பினேஷன். இந்தியில் ஏறத்தாழ படம் முடியும் நிலையில் இருந்தபோதும், தமிழில் பாதிகூட வளரவில்லை. சிவாஜி ஏராளமான படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் ஸ்ரீதருக்கு கால்ஷீட் வழங்கமுடியவில்லை. வேறு வழியின்றி இந்தி வெர்ஷனை ரிலீஸ் செய்கிறார். ஓரளவுக்கு ஓடினாலும் பெருசாக பிரயோசனமில்லை. இங்கு கால்ஷீட் தருவதாக ஒப்புக்கொண்ட சிவாஜி எதுவும் சொல்லாமல் சிங்கப்பூர் போய்விடுகிறார். நெருக்கடிக்கு மேல் நெருக்கடி சித்ராலயாவுக்கும், ஸ்ரீதருக்கும்.

அப்போது இந்தி நடிகர் ராஜேந்திரகுமார், எம்.ஜி.ஆரை அணுகுங்கள் என்று ஸ்ரீதருக்கு ஆலோசனை சொல்கிறார். சிவாஜி பட்டறையில் இருந்துகொண்டு எம்.ஜி.ஆரை தொடர்புகொள்வது பற்றி ஸ்ரீதருக்கு தயக்கம். எம்.ஜி.ஆருக்கு மேக்கப்மேனாக இருந்த பீதாம்பரம் (இயக்குனர் பி.வாசுவின் அப்பா) மூலம் எம்.ஜி.ஆரை தொடர்புகொள்கிறார் ஸ்ரீதர். இதன்பிறகு நடந்த சம்பவங்கள் உருக்கமானவை. எம்.ஜி.ஆரும் ஸ்ரீதரும் ஏன் அவரவர் துறையில் உச்சத்தைத் தொட்டார்கள் என்பதற்கு சாட்சியாக திகழ்பவை. உரிமைக்குரல் படப்பிடிப்பில் எம்.ஜி.ஆருக்காக தன்னுடைய தனித்தன்மையை நிறைய இழந்தார் ஸ்ரீதர். இயக்குனரிடம் எதற்கெடுத்தாலும் அடம் பிடிப்பது எம்.ஜி.ஆரின் ஸ்டைல். ஏனெனில் பெரும் நஷ்டத்தில் இருக்கும் ஸ்ரீதருக்கு இப்படம் வணிகரீதியாக பெரிய லாபத்தை தரவேண்டும் என்பது அவரது அக்கறை. ஸ்ரீதருக்கும் இது புரிந்ததால் விட்டுக்கொடுத்தே போனார். அதற்கேற்றாற்போல ரிசல்ட் சூப்பர்ஹிட். நிதிநெருக்கடியில் இருந்து மீண்டார் ஸ்ரீதர். உரிமைக்குரல் வெற்றி கொடுத்த தெம்பில் பாதியில் நின்றுபோயிருந்த ஹீரோ 72ஐ தூசுதட்டி வைரநெஞ்சமாக மாற்றி வெளியிட்டார். நல்லவேளையாக கையைக் கடிக்கவில்லை.

உரிமைக்குரலுக்கு அடுத்து ‘அண்ணா நீ என் தெய்வம்’ ‘மீனவநண்பன்’ என்று ஒரேநேரத்தில் இரண்டு படங்களில் மீண்டும் ஸ்ரீதர்-எம்.ஜி.ஆர் இணைகிறார்கள். படம் முடிவதற்குள்ளாகவே எம்.ஜி.ஆர் முதல்வர் ஆகிறார். ஆரம்பநிலையிலேயே நின்றுபோன ‘அண்ணா என் தெய்வம்’ படத்தை முடிக்க எம்.ஜி.ஆர் ஆவலாக இருந்தாலும் தயாரிப்பாளர்களால் பணம் புரட்ட முடியவில்லை. மீனவநண்பனை மட்டும் எம்.ஜி.ஆர் முடித்துக் கொடுக்கிறார்.

படப்பிடிப்பின் கடைசிநாளன்று “முதல்வராக பதவியேற்கும் விழாவுக்கு நீங்க அவசியம் வரணும்” என்று ஸ்ரீதரை அழைக்கிறார் எம்.ஜி.ஆர். விழாவில் ஸ்ரீதர் வி.வி.ஐ.பியாக மரியாதை செய்யப்படுகிறார். மேடையில் இருக்கும் எம்.ஜி.ஆர் ஸ்ரீதரை பார்த்து புன்னகைக்கிறார். அந்த புன்னகையோடு இப்புத்தகம் முடிகிறது.

ஸ்ரீதரின் வாழ்க்கை வரலாறு எனும் போர்வையில் கிட்டத்தட்ட முப்பதாண்டுகால தமிழ் திரையுலகப் போக்கினை காப்ஸ்யூலாக தருகிறது ‘திரும்பிப் பார்க்கிறேன் : டைரக்டர் ஸ்ரீதர்’ புத்தகம். சினிமா ஆர்வலர்கள் மட்டுமின்றி, சுயமுன்னேற்ற நூல்களை வாசிப்பவர்களுக்கும் ஏதுவான நூல் இது. சினிமாத்துறையில் பணியாற்றுபவர்கள் வாசித்தே ஆகவேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.

நூல் : திரும்பிப் பார்க்கிறேன் – டைரக்டர் ஸ்ரீதர்

எழுதியவர் : எஸ்.சந்திரமவுலி

பக்கங்கள் : 360, விலை : ரூ.90

வெளியீடு : அருந்ததி நிலையம்,
19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக