செவ்வாய், 26 மார்ச், 2013

தி.மு.க: காங்கிரசுடன் உறவு வைக்கப் போவதில்லை

வரும் லோக்சபா தேர்தலில், காங்கிரசுடன் உறவு வைக்கப் போவதில்லை. கூட்டணி குறித்து, தலைவர் கருணாநிதி முடிவு செய்வார். அதனால், இனி யாருடைய நிர்பந்தமும், கட்டுப்பாடும் இல்லாமல், கட்சி பணியாற்றலாம்,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.
காங்கிரஸ் கூட்டணியில் இருந்து, தி.மு.க., விலகிய நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க., செயற்குழு கூட்டம், நேற்று காலை நடந்தது. தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். பொதுச் செயலர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின், கனிமொழி மற்றும் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, துவக்கம் முதல், கவிழாமல் இருக்க, தி.மு.க., அனைத்து உதவிகளையும் காங்கிரசுக்கு செய்தது. ஆனால், காங்கிரஸ், தி.மு.க.,வுக்கு, எந்த உதவியும் செய்யவில்லை; தி.மு.க.,வையும் பெரிதாக மதிக்கவில்லை. மத்திய அரசிலும், தி.மு.க.,வை தொடர்ந்து அலட்சியம் செய்தது. காங்கிரசுடன் நாம் இணைந்து செயல்பட்டதால், இலங்கை தமிழர் பிரச்னையில், தி.மு.க.,வுடன் இணைந்து போராட வேண்டிய கூட்டணி கட்சிகள், நம்மை விட்டு விலகி, மக்களிடம் நம்மை பற்றி தவறாக விமர்சனம் செய்து வந்தன. தற்போது மத்திய அரசில், கூட்டணியில் இருந்து விலகியதால், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக, தி.மு.க., ஓங்கி குரல் கொடுக்கலாம். காங்கிரசுடன் கூட்டணியில் இருந்த நாட்களில், நமக்கு மன உளைச்சல் தான் அதிகமாக இருந்தது. இனி, காங்கிரசுடனான கூட்டணி முறிந்தது. வரும் லோக்சபா தேர்தலில், உறவு வைக்கப் போவதில்லை. கூட்டணி குறித்து, தலைவர் கருணாநிதி முடிவு செய்வார். அதனால், இனி யாருடைய நிர்பந்தமும், கட்டுப்பாடும் இல்லாமல், கட்சி பணியாற்றலாம். இவ்வாறு அவர் பேசினார்.

- நமது நிருபர் குழு - dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக