வெள்ளி, 8 மார்ச், 2013

லஞ்சம் 500 ரூபாய்: பிறந்த குழந்தையை தந்தைக்கே காட்டாமல் அலைக்கழித்த எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை

லஞ்சம் தர மறுத்ததால், பிறந்த குழந்தையை, அதன் தந்தைக்கே காட்டாமல் அலைக்கழித்த, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை பணியாளர்களின் அடாவடி செயல், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, கிண்டியை அடுத்த, நடுவங்கரையைச் சேர்ந்தவர் மணிகண்டன், 25; ஆட்டோ டிரைவரான இவர், தன் மனைவி கன்னியம்மாளை, 21, பிரசவத்திற்காக, நேற்று முன்தினம் காலை, 10:00 மணியளவில், எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்த்தார். மதியம், 12:30 மணியளவில், கன்னியம்மாளுக்கு, சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. தகவல் அறிந்த, கன்னியம்மாளின் தாய், பேர குழந்தையை பார்க்கும் ஆவலுடன், பிரசவ வார்டு நுழைவாயிலுக்கு சென்றுள்ளார். குழந்தையை காட்ட வேண்டுமென்றால், 500 ரூபாய் தர வேண்டும் என, மருத்துவமனை பணியாளர்கள் கேட்டுள்ளனர். ஆத்திரமடைந்த அவர், பேர குழந்தையை பார்க்க முடியாத மனவருத்தத்துடன், வீடு திரும்பி உள்ளார். மனைவியை பிரசவ வார்டில் அனுமதித்ததில் இருந்து, ஏற்கனவே, 300 ரூபாய் வரை, லஞ்சம் கொடுத்த மணிகண்டன், "மேற்கொண்டு தர என்னிடம் பணம் இல்லை; என் குழந்தையை எனக்கு காட்டுங்கள்' என, கேட்டுள்ளார்.


மணிகண்டனின் கோரிக்கை நிறைவேறாததால், விஷயம் மருத்துவமனை நிர்வாகத்தின் கவனத்திற்கு சென்றது. பின் ஒரு வழியாக, நேற்று காலை, 9:30 மணியளவில், மணிகண்டன், தன் குழந்தையை பார்த்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில், பிறக்கும் குழந்தைகளை, அவர்களின் உறவினர்களிடம் காட்ட, 300 ரூபாயில் இருந்து, 600 ரூபாய் வரை, லஞ்சம் கேட்கப்படுகிறது. பிரசவத்திற்காக வந்த இடத்தில் பிரச்னை செய்ய, பெரும்பாலானோர் விரும்பாததால், மருத்துவமனை பணியாளர்களின் லஞ்ச வேட்டை தொடர்கிறது. அதற்காக, பணம் தந்தால் தான் குழந்தையை காட்ட முடியும் என, அவர்கள் சொல்வது நியாயமில்லை; பிரசவத்திற்கு வரும் என்னை போன்ற ஏழை குடும்பங்களின் நிலையை கருத்தில்கொண்டு, இம்மருத்துவமனையில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை ஒழிக்க, அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மணிகண்டன் கூறினார்.

மருத்துவமனை ஆர்.எம்.ஓ., மணி கூறியதாவது: குழந்தை பிறந்த, 15 நிமிடத்திற்குள், அவற்றை அவர்களின் உறவினர்களிடம் காட்ட வேண்டும் என, பணியாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். அவ்வாறு காண்பிக்க முடியாவிட்டால், அதற்குரிய, மருத்துவ ரீதியான காரணத்தை அவர்களிடம் தெரிவிக்க வேண்டும். லஞ்சம் போன்ற காரணங்களால், தங்கள் குழந்தையை பார்க்க முடியாமல் பாதிக்கப்படுவோர், என்னிடமோ, லஞ்ச ஒழிப்பு போலீசிலோ புகார் தரலாம். அதன்படி, சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு மணி கூறினார்.

- நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக