செவ்வாய், 5 மார்ச், 2013

சூரிய சக்தியில் இயங்கும் "பம்ப்': டெல்டா விவசாயிகளுக்கு தர திட்டம்

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு, சூரிய சக்தியில் இயங்கும், "பம்ப்'களை, தமிழக அரசு வழங்க உள்ளது. இதற்காக, 530, "சோலார் பி.வி., பம்ப்'களை கொள்முதல் செய்ய, தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை, ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழைகள் பொய்த்ததாலும், காவிரியில் உரிய நீர் கிடைக்காததாலும், நிலத்தடி நீரை நம்பியே, தமிழக விவசாயிகள் உள்ளனர். ஆனால், தொடரும் மின்வெட்டால், பல மாவட்டங்களில், மின் மோட்டார்களை இயக்க முடியாததால், குடிநீர்த் தேவையைக் கூட நிறைவேற்ற முடியாத நெருக்கடி நிலவுகிறது. தமிழக அரசு மின்வெட்டை சீர்செய்ய, பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, உடனடி நிவாரணமாக, சூரிய சக்தியில் இயங்கும், பம்ப்களை, டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு வழங்க, தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, டெல்டா மாவட்டங்களில், தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு, சோலார் பி.வி., பம்புகள் வழங்கப்பட உள்ளன.
அரசாணை: இதுகுறித்து, வேளாண் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்தாண்டு, டிச., 26ம் தேதி இது குறித்து, அரசாணை வெளியிடப்பட்டது. டெல்டா மாவட்டங்களில், தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு, சோலார் பி.வி., பம்ப்கள் வழங்கப்பட உள்ளன. முதல்கட்டமாக, 530 பம்புகளை கொள்முதல் செய்ய, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள், ஏப்., 2ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். இதில், தேர்வாகும் நிறுவனம், 180 நாட்களுக்குள், சோலார் பம்புகளை வழங்கி, விவசாயிகளுக்கு அவற்றை பொருத்திக் கொடுக்க வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு, பராமரிக்கும் பணியையும், அந்நிறுவனமே மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக