செவ்வாய், 5 மார்ச், 2013

நேர்மையும் செல்வமும் நல்ல சிந்தனையும் நிச்சயம் பலன் தரும்

கீதா பிரேம்குமார்
truth
ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 30
சிலர் பத்து, பதினைந்து ஆண்டுகளாக நல்ல பெயருடன் சிறுதொழில் நடத்திக்கொண்டிருப்பார்கள். ஆரம்பித்துவிட்டு திணறுபவர்களும் இருப்பார்கள். பணமுடையால் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டு, தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியாமல் தங்கள் வாழ்வையே சிக்கலாக்கிக் கொண்டவர்களும் உள்ளனர். ஒரு சில செல்வந்தர்களுக்கும் சிறுதொழில் ஆர்வம் இருக்கும். ஆனால் அதற்கான பொறுமை இருக்காது. வேறு சிலரைப் பயன்படுத்தி இவர்கள் தங்கள் கனவைப் பூர்த்தி செய்துகொள்வார்கள்.
சேகர் என்பவர், எலக்ரானிக்ஸ் துறையில் அனுபவம் வாய்ந்தவர். இவரது சிறுதொழில் நிறுவனம் சுமார் இருபது வருடங்களாக மார்க்கெட்டில் நிலைத்து வருகிறது. சுமார் இரண்டு கோடி வரை டர்ன்ஓவர் செய்துவந்தார். ஒரு கட்டத்தில், ஒரேயடியாக லாபத்தை அதிகரிக்கும் நோக்கில் தவறான நபர்களை தன் வியாபாரத்தில் இவர் இணைத்துக்கொண்டார். அவர்களோ இவருடைய பலவீனத்தை உணர்ந்து, பணப் பற்றாக்குறையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, சிறிது சிறிதாக நிறுவனத்தின் அதிகாரத்தை தங்கள் வசம் எடுத்துக்கொண்டனர்.
சேகர் மன உளைச்சலுக்கு ஆளானார். தொழில் கைவிட்டுப்போவதை அவர் உணர்ந்த பொழுது காலம் கடந்துவிட்டது. இவரை நம்பி, நிறுவனத்துக்குக் கச்சாப்பொருட்களைக் கொடுத்த மற்ற நிறுவனங்கள் நெருக்க ஆரம்பித்தனர். மற்றொரு பக்கம் வங்கிகள் கடனுக்காக அழுத்தம் கொடுக்கத் தொடங்கின. தொழிலாளர்களுக்குச் சம்பள பாக்கி வேறு.

சேகரைப் போன்று பல சிறுதொழிலதிபர்கள் இப்படிப்பட்ட சிக்கல்களில் எளிதாக மாட்டிக்கொண்டுவிடுகின்றனர். இது போன்று நிகழாமல் தடுப்பது தொழிலதிபரின் தலையாயக் கடமையாகும். குறுந்தொழில்களை மேற்கொண்டு நடத்த முடியாமலும் அல்லது விரிவுபடுத்த முடியாமலும் போகும்போது, நிறுவனம் ஒரு நிலையான இடத்தில் இருக்கும்போதே அதை ஒரு நல்ல விலைக்கு கைமாற்றித்தருதல் நலம்.
தன்னை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையைக் கேள்விகுறியாக்கி தொழிலை முடக்கி வைப்பது ஒரு சமுதாயத்துக்கு செய்யும் தீமை. நன்னடத்தையுள்ள தொழிலதிபர்களின் தொழில் முடங்கினாலும் வேறு ஒன்றை தொடங்குவதற்கான வாய்ப்புகள் எளிதாக அமையும். மாறாக தனி நபர் நாணயம் பறிபோனால் மீண்டு வருதல் மிக மிகக் கடினம்.
0
செல்வச் செழிப்புள்ள பலரைப் பார்க்கும்போது நம் எல்லோருக்கும் பொதுவாக ஒரு எண்ணம் தோன்றும். இவருக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது? நிச்சயம் இது தவறான முறையில் வந்ததாகத்தான் இருக்கும் என்று நினைத்துவிடுவோம். ஆனால் நம் அனைவருக்கும் அதே ஆசைகள் இருக்கின்றன என்பதை மறுக்கமுடியாது.
செழிப்புடன் வாழ்ந்து வரும் ஒரு தொழிலதிபர் குடும்பத்தை நான் அறிவோன். அப்பா, மகன், மகள், மருமகள் ஆகியோர் இணைந்து இத்தொழிலை நடத்தி வருகிறார்கள். அவர்கள் நேர்மையானவர்கள் என்பது எந்தவித சீர்கேடும் அற்றவர்கள் என்பதும் முக்கியமானது. மனித நேயத்தோடு பிறரை நடத்துவதிலும் தங்கள் செல்வத்தின் பிரம்மாண்டம் அடுத்தவரின் கண்ணை உருத்தாத அளவுக்கு நடந்து கொள்வதிலும் அவர்கள் திறமையானவர்கள்.
இதில் நான் உணர்ந்த உண்மை என்னவென்றால், பாஸிட்டிவாக உள்ளவர்களிடம் செல்வம் நல்ல எண்ணத்தை மட்டுமே தோற்றுவிக்கிறது. நல்ல உணர்வோடு பணத்தைக் கையாள்பவர்கள் தங்களைச் சுற்றி நல்ல மனிதர்களின் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்கின்றனர். பணத்தால் பெரிய எதிரிகளை இவர்கள் ஏற்படுத்திக் கொள்ளுவதில்லை.
இதற்கு மாறாக, அதிக சுயநலத்துடன் செல்வத்தை கையாண்டவர்கள், அந்தச் செல்வத்தால் மேன்மேலும் சிறப்புகளைப் பெறுவதில்லை. புத்தியோடு பகிர்ந்தளித்து வாழ்பவர்களிடம்தான் பணம் மீண்டும் மீண்டும் வந்து ஒட்டிக்கொள்கிறது.
ராமகிருஷ்ணன் என்பவர் பெரும் பணக்காரர். பொருளை நல்ல வழியில் சம்பாதித்தவர். இறை நம்பிக்கையும் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற தாராள சிந்தனையும் உள்ளவர். அதே சமயம் கேட்கும் பொழுதெல்லாம் அள்ளிக் கொடுக்கும் கர்ணனைப் போன்றவர். இவரது வருமானம் காலச்சுழற்சியில் தடைப்பட்டு போன பொழுது, கொடுக்க பணம் இல்லை என்று சொல்லத் தொடங்கினார். இவரிடம் வாங்கியே பழக்கப்பட்டவர்கள் இந்தப் பதிலை ஏற்க மறுத்தனர். இருக்கும் போது காசை வச்சுப் பிழைக்கத் தெரியலை. இப்ப நம்மகிட்ட வந்து உதவிக்கு நிற்கிறார் என்று பேசத் தொடங்கினார்.
இந்த நிலைமையை நம்மால் தடுக்கமுடியும். உதவிக்குக் கொடுக்கும்பொழுது சிந்தித்து, முடிவெடுத்து, இன்முகத்தோடு அடுத்தவருக்குக் கொடுங்கள். இல்லையேல் நிதானத்துடன் மறுத்துவிட்டு குற்ற உணர்ச்சி இல்லாமல் வாழப் பழகிக் கொள்ளுங்கள்.
என் பெற்றோராகட்டும், மாமனார், மாமியாராகட்டும் இவர்கள் வாழ்க்கையில் நான் கண்ட பொதுவான அம்சம், மற்றவர்களுக்கு உணவளிப்பதிலாகட்டும் பரிசுகள் கொடுப்பதிலாகட்டும் அதை நல்ல சிந்தனையோடு அன்புடனும் விருப்பத்தோடு கொடுப்பார்கள். அதனால் தானோ என்னவோ அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் பெரிய வறுமையோ, பொருளிழப்பு அனுபவங்களோ இல்லாமல் வாழ்க்கை நடத்துகின்றனர். சிறு குழந்தைகளுக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்தே, மற்றவர்களுக்கு கொடுப்பதில் இருக்கும் சுகத்தைப் புரிய வைத்தல் நலமாகும்.
பணம் நம்மிடம் இருக்கும் பொழுது நாம் நல்லவர்களாக நடந்து கொள்வதைப் பொருத்தும் அது அதிக அளவில் பெருகினாலும், நல்லவர்களாகவே இருப்போம் என்று எண்ணுவதிலும்தான் செல்வத்தின் சூட்சமம் இருக்கிறது.
பணக்காரர்கள் கெட்டவர்கள், ஆணவக்காரர்கள், இரக்கமற்றவர்கள், அடுத்தவர்களின் ரத்தத்தை உறிஞ்சுபவர்கள் என்று சொல்லிச் சொல்லியே வளர்ந்துவருகிறோம். சினிமாவிலும் இதே கருத்து. அதிக பணம் ஆபத்தானது, நிம்மதியைக் கெடுத்துவிடும், நாம் கெட்டவர்களாக மாறிவிடுவோம் என்பன போன்ற எதிர்மறை எண்ணங்கள் நமக்குள் ஆழமாக ஊறிப்போயுள்ளன.
ஏன் நாம் நல்லவர்களாக, மனிதாபிமானம் உள்ளவர்களாக, கருணை, இரக்கம் கொண்டவர்களாக இருக்கக்கூடாது? செல்வம்-நன்மை என்று ஏன் நம்மால் தொடர்புபடுத்திக் கொள்ள முடிவதில்லை? இது நம்முடைய பலவீனம்.
பணம் வேண்டும் என்று வெளிமனமும், வேண்டாம் ஆபத்து என்று உள்மனமும் இரு வேறு திசையில் பயணிக்கும்பொழுது நம்மால் வளமையை எட்டமுடிவதில்லை. இதற்கு மாறாக மீண்டும் மீண்டும் பணம் வேண்டும், நல்ல விதத்தில் வேண்டும், அடுத்தவர் அழுகையிலிருந்து இல்லாமல் புன்னகையோடு வரவேண்டும். அந்தச் செல்வம் சிரிப்பையும் சந்தோஷத்தையும் கொடுக்க வேண்டும் என்று நினைத்தோமானால் நம்மால் செல்வந்தர்களாக நிச்சயம் ஆக முடியும். சுமையாக செல்வத்தை நினைக்கும் மனப்போக்கு மாறி நல்லவர்களோடு பணத்தையும், நன்மையோடு பணத்தையும் தொடர்புப்படுத்தி பார்க்க வேண்டும்.
உதாரணமாக நாட்டாமை சினிமாவில் வரும் ஒரு சரத்குமார் பாத்திரத்தைப் போல் அல்லது எஜமான் படத்தில் வரும் பாத்திரத்தைப் போல் பணக்காரர்கள் நல்லவர்களாக வாழும் சூழல் அதிகமாக அதிகமாக பணம் நன்மையாக மாறும். நம் ஊடகங்கள் பெண்களை, அதுவும் படித்த பெண்களை அரக்க குணம் கொண்டவர்களாகவே தொடர்ந்து காட்டி வருகிறது.
பொதுவாக நம் சமூகத்தில் சைக்கிளில் செல்பவன் அல்லது பஸ்ஸில் செல்பவன், ஏழையாகவும், காரில் செல்பவர்கள் அனைவரும் திமிர் பிடித்தவர்களாகவும் நம்பும் குணம் இருக்கிறது. காரில் செல்லும் ஒருவர் மிகுந்த கவனத்தோடு வண்டியை ஓட்டுபவராக இருப்பினும், குறுக்கே முட்டாள்தனமாக ஒருவர் வந்து விழுந்தால், சுற்றியுள்ள கூட்டம் வண்டியைச் சுற்றி நின்று பெரும் சப்தத்துடன் கூச்சலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி பணம் பறிக்கும் அவலம் நிறைய இடங்களில் நடக்கிறது. இதற்காக எல்லா ஏழைகளும் ஏமாற்று பேர்வழிகள் என்றோ அல்லது எல்லாப் பணக்காரர்களும் உத்தமர்கள் என்றோ நான் சொல்ல வரவில்லை. ஆனால் சைக்கிளில் செல்பவன் பைக் வாங்க ஆசைப்படுகிறான். பைக்கில் செல்பவனோ கார் வாங்க ஆசைப்படுகிறான். காரில் செல்பவனோ ஒரு விமானத்துக்குச் சொந்தக்காரனாக வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அவரவரின் தேவைக்கேற்ப பணத்தின் அளவு மாறுகிறதே ஒழிய, பணம் வேண்டும் என்ற எண்ணம் யாரிடமும் கடைசிமட்டும் மறைவதில்லை.
இந்தச் சூழலில் அடுத்தடுத்த நிலைகளுக்கு, பணத்தோடு மேலே போக வேண்டும் என்று நினைப்பவர்கள் நல்ல குணங்களை மட்டும் கீழே விட்டுவிட்டு, மேலே போவது எப்படி சாத்தியம்?
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி வரி ஏய்ப்புச் செய்வதாக எவ்வித உண்மையுமின்றி சில பத்திரிகைகள் எழுதி வந்தன. பல சமயம் அமைதியாக அதை புறம் தள்ளிய நாராயணமூர்த்தி ஒரு சமயம் பதிலடி கொடுக்க விரும்பினார். பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். அந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு வருடமும் வருமான வரித்துறையிடமிருந்து வந்த சம்மன்களையும் அவர் ஒழுங்காக வரிகட்டியதற்கான ரசீதுகளையும் தைரியமாக புன்னகையோடு எடுத்து வைத்தார். அவர் மடியில் கனம் இல்லாததாலும், பணத்தைப்பற்றிய தெளிவான அணுகுமுறை இருந்ததாலும் இது சாத்தியமானது.
அவர் மனைவி திருமதி. சுதா, பலவிதமான சமூக சேவைகளுக்கு நிறைய பொருளுதவி செய்வதோடு, சேவை மையங்களையும் நடத்தி வருகிறார். இதைப்போல் விப்ரோ நிறுவனர், மற்றும் குறிப்பிடத்தக்க பெரும் பணக்காரர்கள், சமூக சேவைக்காக நிறைய பணம் செலவழித்துவருவதை நாம் காணலாம். நல்லவர்களோடு தொடர்புகொள்ளும்பொழுது பணம் புனிதமடைகிறது. பெருகவும் செய்கிறது.
0
நினைவு தெரிந்த நாளிலிருந்து நாம் பணத்தின் பின்னால் அலையத் தொடங்கிவிடுகிறோம். ஆனாலும் எப்போதும் நம்மோடு பணம் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டே இருக்கிறது. ஒன்றும் இல்லாதவன் கொஞ்சம் கிடைத்தால் போதுமென்கிறான். கொஞ்சம் இருப்பவனோ, தன் எதிர்பார்ப்பின் விளிம்பை உயர்த்திக்கொண்டே போகிறான். அதிகம் இருப்பவனோ அதைப் பெருக்குவதிலும் தக்க வைத்துக் கொள்வதிலுமே தன் வாழ்நாளைச் செலவிடுகிறான்.
எல்லை தெரியாத மைதானத்தில் ஓடி ஓடிக் களைத்த ஒருவன், ஒரு கோடிக்குச் சென்ற பின்பு அங்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் மீண்டும் வந்த வழியே திரும்பி ஓடுவதைப் போல், பணம் நம்மை அலைகழிக்கிறது. அர்த்தமற்ற ஓட்டப்பந்தய வீரர்களாக நம்மை மாற்றிவிட்டது. பணத்தால் நாம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அநேகம். இழந்த உறவுகள் அதிகம். தொலைத்த நட்புகள் அதிகம்.
பணம் ஒருவரையும் திருப்திபடுத்துவதில்லை என்பதே உண்மை. நம்மை மகிழ்விக்கவேண்டிய பணம் உண்மையில் நம்மை மன உளைச்சலுக்குத்தான் ஆளாக்குகிறது. இது ஏன் என்ற கேள்வியை நம்மில் பலரும் கேட்க மறுக்கின்றோம்.
நாம் செய்யவேண்டியது என்ன தெரியுமா? செல்வத்தை அடைவதில் பிழையில்லை. அதனால் வரும் பலன்களை அனுபவியுங்கள். அது கொடுக்கும் வளமையை ஈர்த்துக் கொள்ளுங்கள், தவறில்லை. ஆனால் அது வரும் வழியை உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும்.
சென்னை அண்ணாசாலையில் மிக முக்கிய இடத்தில் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக நண்பர்கள் இருவர்- கண்ணப்பன், முருகேசன்- பெரிய கடையெடுத்து கூட்டாகத் தொழில் செய்தனர். தொழில் நன்கு விரிவடைந்து லாபமும் பெருகியது. திடீரென்று ஒரு நாள் எதிர்பாராத விதத்தில் கண்ணப்பன் சாலை விபத்தில் மரணமடைந்துவிட்டார். அவர் மரணம், அவரது நண்பரை உலுக்கியது. ஆனால் சில மாதங்களிலேயே அவருக்குள் இருந்த சாத்தான் தலை தூக்கி அவரை திசைத் திருப்பியது.
கண்ணப்பன் மறைந்த பின் சில மாதங்கள் வரை அவரது மனைவிக்கு லாபத்தில் சரி பங்கு கொடுத்து, நிர்க்கதியான நண்பரின் குடும்பத்துக்கு ஆதரவு அளித்து வந்த முருகேசன், அதன் பின்னர் குறுகிய புத்தியுடன் செயல்பட்டார். இரண்டே, இரண்டு நண்பர்கள் நடத்தி வந்த நிறுவனத்தில் தனது சொந்தக்காரர்களைப் பங்குதாரர்கள் ஆக்கி, வந்த லாபத்தை பல கூறுகளாகப் பிரித்து, ஒரு சிறு பகுதியை மட்டும் கண்ணப்பனின் மனைவிக்குக் கொடுக்கத் தொடங்கினார். அதிகம் படித்திராத, உலக நடத்தை தெரியாத, சட்ட நுணுக்கம் அறியாத கண்ணப்பனின் மனைவி, அதில் உள்ள சூழ்ச்சியை அறியாமல் நீட்டிய காகிதங்களிலெல்லாம் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்.
சிறிது சிறிதாக முழு நிர்வாகத்தையும், லாபத்தையும் முருகேசனே ஆண்டு அனுபவிக்கத் தொடங்கினார். இது நடந்து சரியாக ஒரு வருடம் கழித்து, முருகேசன் தன் மகனுக்கு ஆசையாக ஒரு கார் வாங்கி பரிசளித்தார். காரை டெலிவரி எடுத்து வீட்டு வாசலில் நிறுத்தி தன் மகனை அழைத்தார். ஆசையாக ஓடோடி வந்த மகன், (வயது 24, பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த மாணவன்) நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே விழுந்தான். மாரடைப்பு. நொடியில் மரணம். முருகேசனை இயற்கை கொடூரமாகவே தண்டித்துவிட்டது.
சம்பந்தம் பிரபல வங்கி ஒன்றில் கிளை மேலாளர். சனிக்கிழமை மதியம், ரத்னம் என்பவர் இவரைத் தேடி வந்தவர். அவர் அந்த வங்கியில் நீண்டகாலமாக கணக்கு வைத்திருப்பவர். சுமார் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை சம்பந்தத்திடம் கொடுத்து தனது கணக்கில் சேர்ப்பித்துவிடுமாறு அவர் கேட்டுக்கொண்டார். இருவருக்கும் நல்ல பழக்கம் என்றபோதும் அலுவலக நேரம் முடிந்துவிட்டதால் பணத்தை வாங்கிக்கொள்ள மறுத்தார் சம்பந்தம். ஆனால் ரத்னம், தான் வியாபார விஷயமாக வெளியூர் செல்லவிருப்பதாகவும் எப்படியாவது தன் கணக்கில் பணத்தைச் சேர்ப்பித்து விடுமாறும் வேண்டிக்கொண்டார். சம்பந்தமும் திங்கட்கிழமை காலை பணத்தைச் செலுத்திவிடுவதாகக் கூறி பெற்றுக்கொண்டார்.
நான்கைந்து நாட்கள் கழிந்து ஊர் திரும்பிய ரத்னம், தான் மற்றவர்களுக்குக் கொடுத்த காசோலைகள் கணக்கில் பணம் இல்லாத காரணத்தில் வங்கியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டதை அறிந்து சம்பந்தத்தைச் சந்திக்க ஓடினார்.
சம்பந்தம் விடுப்பில் போயிருப்பதாக மற்றவர்கள் சொல்ல அதிர்ச்சி அடைந்து அவரைத் தொடர்பு கொள்ள பலவாறாக முயன்று தோல்வியடைந்தார். பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி ரத்னம் திகைத்து நின்றார். பணம் கொடுத்த நபர்களோ, பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு அவரை நச்சரிக்க ஆரம்பித்தனர். நாணயஸ்தர் என்று பெயர் வாங்கிய ரத்னம் செய்வதறியாது அல்லாடி, புது கடன்கள் வாங்கி தன்மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள முனைந்து போராடினார்.
entrepreneurசில நாட்கள் கழித்து சம்பந்தம் வங்கியில் விடுப்பு முடிந்து சேர்ந்து விட்டதாக தகவல் கிடைத்து, வங்கியை நோக்கி ஓடினார் ரத்னம். அவரை வரவேற்ற சம்பந்தம், ஒன்றும் அறியாதது போல் ‘என்ன விஷயமாக என்னைப் பார்க்க வந்தீர்கள்?’ என்று கேட்டதும், பெரும் பாறாங்கல் தன் தலையில் விழுந்தது போல் ரத்னம் அலறினார். அவரிடம் தன் கணக்கில் கட்டக் கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டார். சம்பந்தமோ தனக்கு எந்தத் தொடர்பும் இல்லாதது போல் ‘பணமா? எப்போது கொடுத்தீர்கள்?’ என்று கேட்டதும் ரத்னம் நொந்து, மனம் அதிர்ச்சியடைந்தார். ஊருக்குக் கிளம்பும் அவசரத்தில் அவர் பணத்தை கொடுத்ததற்கான அடையாளமாக எந்தப் ஆதாரத்தையும் வாங்கவில்லை. இதற்கு சம்பந்தத்தின் மேலுள்ள நம்பிக்கையும், அவர் வகித்து வந்த பதவியின் மேலுள்ள மதிப்பும் காரணம் ஆகும். நியாயம் கேட்கச் சென்ற அனைவரும் ரத்னத்தைதான் குறைகூறினார்கள்.
இது நடந்து சரியாக நான்கு மாதங்கள் கழித்து சம்பந்தம் தன் குடும்பத்தினருடன் உல்லாசப் பயணம் சென்றுவிட்டு காரில் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். எதிர்பாராமல் லாரி வந்து காருடன் மோதியதில் சம்பந்தமும் அவரது மனைவியும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். இரு குழந்தைகளும் விபத்து நடந்த இடத்தில் அநாதைகளாக அழுது கொண்டிருந்தன. காலம் குரூரமாக அவரைப் பழிவாங்கிவிட்டது.
0
பணம் கையில் தங்க வேண்டும் என்று மன உறுதியுடன் நினைப்பவர்கள், முதலில் தங்கள் எண்ணங்களில் தூய்மையைக் காத்தல் வேண்டும். உண்மையான உழைப்பும் நல்ல சிந்தனையும் நிச்சயம் பலன் தரும். செல்வம் அவர்களைத் தேடி வரும். tamilpaper.net
முடிந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக