சனி, 30 மார்ச், 2013

கனிமொழி திடீர் உண்ணாவிரதம்!

தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஆற்றின் குறுக்கே பாலம் கட்டக்கோரி திடீரென உண்ணாவிரதம் இருந்ததால் திருவாரூரில் பரபரப்பு ஏற்பட்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் திருவாரூர் தொகுதிக்குட்பட்ட கொரடாச்சேரி மக்கள் வெட்டாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்று 50 ஆண்டுகாலமாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்த 50 ஆண்டுகளில் தி.மு.க.வும் பல தடவைகள் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. ஆனால், எந்த அரசாங்கமும் இவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காத நிலையில், தி.மு.க. சார்பில் வாங்கிவிடப்பட்ட‌ இரண்டு படகுகள் மூலம் இக்கரைக்கும் அக்கரைக்கும் போய் வந்து கொண்டிருக்கிறார்கள் மக்கள். இங்கே பாலம் கட்ட வேண்டும் என்று சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார் திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன். அந்த உண்ணாவிரத போராட்டத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழியும் கலந்து கொண்டதால் பரபரப்பு பற்றிக் கொண்டது.
கருணாநிதி, கனிமொழியின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அந்தப் பாலத்தைக் கட்டிக் கொடுக்க உத்தரவிட்டாராம். இதையடுத்து, வெட்டாற்றில் பாலம் கட்டுவதற்காக 1.15 கோடியை கடந்த ஆண்டே ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார் கனிமொழி. ஆனால் மாவட்ட நிர்வாகம், ஆளும் கட்சிக்கு பயந்து, நிதி ஒதுக்கப்பட்ட பிறகும் வேலையை தொடங்கவில்லை. “ஏன் இன்னும் வேலை ஆரம்பிக்கவில்லை?” என்று மக்கள் கேட்டதற்கு, “இந்த நிதி போதாது கூடுதல் நிதி தேவை” என மாவட்ட  நிர்வாகம் கூறியிருக்கிறது. இந்தத் தகவல் கனிமொழிக்கு சொல்லப்பட்டதை அடுத்து, மேலும் 1.25 கோடியை கூடுதலாக ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார். அதையும் வாங்கிக் கொண்டு அடக்கி வாசித்திருக்கிறது மாவட்ட நிர்வாகம். சும்மா இருப்பார்களா உடன்பிறப்புகள், பாலத்தை உடனடியாக கட்டக்கோரி மக்களை திரட்டி சாகும் வரை உண்ணாவிரதம் உட்கார்ந்து விட்டார்கள். அதில் வந்து அமர்ந்துவிட்டார் கனிமொழி! இதனால், பதற்றமான சூழல் ஏற்பட்டதை அடுத்து, கனிமொழியை சந்தித்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், “இன்னும் ஒரு மாதத்திற்குள் பாலம் கட்டும் வேலையை தொடங்கி விடுகிறோம்” என்று எழுத்து பூர்வமாக‌ உத்தரவாதம் கொடுத்ததை அடுத்து, கனிமொழி உள்ளிட்டவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டனர். viruvirupu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக