வியாழன், 14 மார்ச், 2013

புதிய உலகமயமாக்கம்: யார் பலன் பெறுகிறார்கள்?

price_of_civilization_jeffrey_sachs200 ஆண்டுகளுக்கு முன்பாக, ஐரோப்பாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் தொழிற்புரட்சியை மேம்படுத்துவதும் மனிதத்தன்மையை ஏற்படுத்துவதும்தான் மிகப் பெரிய சவாலாக இருந்தது. 150 ஆண்டுகளுக்கு முன்பாக, தொழிற்சாலைகள் மிகுந்த நகரங்களில் அதிக எண்ணிக்கையில் குடி பெயர்ந்த மக்களுக்கு பாதுகாப்பையும், நகரங்களில் வாழ்வதற்கேற்ற சூழலை ஏற்படுத்துவதும் சவாலாக இருந்தது. 75 ஆண்டுகளுக்கு முன்பாக, மக்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தைப் போக்குவதே சவாலாக இருந்தது. ஆனால் இன்று உலகம் எதிர் கொள்கிற மிகப் பெரிய சவால், புதிய உலகமயமாதல்தான் என்கிறார் The Price of Civilisation நூலாசிரியர் ஜெஃப்ரி சாக்ஸ் (Jeffrey Sachs).
உலகமயமாதல் எளிதாக சாத்தியமானதற்கு என்ன காரணங்கள்?  உலகமயமாதலை அமெரிக்கா சரியாக எதிர் கொண்டுள்ளதா? மேலும், இப்புதிய உலகமயமாதலால் பலனடையும் நாடுகள் எவை? உலகமயமாதலின் தாக்கத்தால் ஏற்படப் போகும் உலக அரசியல் மாற்றங்கள் என்னவாக இருக்கும்? எம்மாதிரியான சமூகம் இதனால் பலன் பெறுகிறது? புதிய உலகமயமாதல் ஏற்படுத்திய தாக்கத்தால் ஏற்படும் விளைவுகள் என்ன? அமெரிக்கா இனிவரும் காலங்களில் உலகமயமாதலை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும்? இது போன்ற கேள்விகளை இந்தப் புத்தகம் எதிர்கொள்கிறது.
அதென்ன புதிய உலகமயமாக்கல்?
வணிகம், முதலீடு மற்றும் உற்பத்தி கூடங்கள் ஆகியவற்றின் மூலமாக உலகம் இணைக்கப்பட்டிருப்பதற்கு புதிய உலகமயமாதலின் தாக்கம்தான் காரணம். உலகமயமாதல் என்பது ஏதோ கடந்த 40 வருடங்களில் ஏற்பட்டதல்ல. கடந்த 2000 ஆண்டுகளாக பண்டமாற்று முறைகளும் வணிகமும் நடந்தேறி உள்ளன. சீனாவிலிருந்து பட்டு ஐரோப்பியப் பேரரசுகளுக்கு ஏற்றுமதியாகியுள்ளதும் அதற்கு மாற்றாக சீனா தங்கத்தைப் பெற்றுள்ளது என்பதும் வரலாறு. 15ஆம் நூற்றாண்டில் கிறிஸ்டோபர் கொலம்பஸ், வாஸ்கோடகாமா ஆகிய இருவரும் உலகத்தின் அனைத்துப் பகுதிகளையும் வணிகத்துக்கு அதாவது கடல் வழி வணிகம் செய்ய பாதை அமைத்துத் தந்தார்கள். ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்கா மூன்றுக்குமான கடல் வழி இணைப்புகளை கண்டறிந்தவர்கள் இவர்களே.
உலகமயமாதலின் டிஜிட்டல் காலம்தான் புதிய உலக மயமாதல் என்கிறார் ஜெஃப்ரி. தொழில் நுட்ப த்தின் துணை கொண்டும் , பொருளாதார இணைப்புகள் மூலமும் ஏற்பட்ட மாற்றங்களே புதிய உலகமயமாதலுக்கான அடிகோல். உலகப் பொருளாதாரம் முன்பைவிட இப்போது அதிக அளவிற்கு இணைக்கப்பட்டிருப்பதற்குக் காரணம், உலக அளவில் குறைந்த செலவில்  விமானத்தின் மூலமும், கப்பல் சேவையின் மூலமும் பொருட்களை ஏற்றுமதி/இறக்குமதி  செய்ய முடிகிறது. மேலும், வணிகம் சார்ந்த அத்தனை விடயங்களையும் கணினியில் சேமித்து வைப்பதும், செய்முறை விளக்கங்களை இணையம் மற்றும் கைபேசிகள் மூலமாகவோ,  நேரடியாகவோ, Online மூலமாகவோ இன்று எளிதாகப் பெற இயலுகிறது.
1950களில் பொருட்களை உற்பத்தி செய்யும் பெரும்பாலான நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்றவை  ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஜப்பானில்தான்  இருந்தன. இந்த நாடுகள்  உற்பத்திக்குத் தேவையான உதிரி பாகங்களை மட்டும் மற்ற நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்து கொண்டன. ஆனால், புதிய உலகமயமாதலுக்குப் பிறகு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவை உலகின் அனைத்து நாடுகளிலும் குறிப்பாக சீனா, இந்தியா மற்றும் வளரும் நாடுகளில் அமைந்துள்ளன. பன்னாட்டு நிறுவனங்கள், இந்த வளரும் நாடுகளில் பொருட்களை தயாரித்தல் அல்லது assembly என தொழிற்சாலைகளை நிறுவியுள்ளன.
குறிப்பாக மின்னியல் துறையென எடுத்துக் கொண்டால் Schneider Electric , ABB, Alstom, Siemens போன்ற ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்களும், GE, Exxon Mobil, Wall mart, Mc donalds, Ford Motor company, IBM என்று பல அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களும், ஜப்பானின் பன்னாட்டு நிறுவனங்களான  Toyota , Mitsubishi, Hitachi ஆகியவையும் உலகின் பெரும்பாலான நாடுகளில் தங்கள் தொழிற்சாலைகளை அமைத்துள்ளன.
புதிய உலகமயமாதலின் விளைவாக பன்னாட்டு நிறுவனங்கள் அதிக வணிகத்தையும் அதிக லாபத்தையும் அடைந்தன. உதாரணமாக, GE நிறுவனம் 1,33, 000 பணியாளர்களை அமெரிக்காவில் கொண்டிருந்தது. ஆனால் மற்ற 60 நாடுகளில் அந்நிறுவனத்தின்மூலம் பணி செய்தவர்களின் எண்ணிக்கை 1,54,000 ஆகும். அந்த ஆண்டில் GE நிறுவனம் அமெரிக்காவில் 75 பில்லியன் டாலர்களுக்கு வணிகம் செய்ததென்றால் மற்ற நாடுகளில் 83  பில்லியன் டாலர்களுக்கும் மேலாக வணிகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது என்கிறார் ஜெஃப்ரி. மேலும் புதிய உலகமயமாதலுக்கு முன்பாக, 1960ல் 5 % மட்டுமே லாபமீட்டிய பன்னாட்டு நிறுவனங்கள் இன்று 25 % அளவிற்கு லாபமீட்டுகின்றன.
தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி, போக்குவரத்து தொழில் நுட்ப வளர்ச்சி, இணைய வளர்ச்சி மற்றும் உலக அரசியல் மாற்றங்களின் வாயிலாகவே புதிய உலகமயமாதல் பரவலாகியுள்ளது.  ஐரோப்பிய காலனியாதிக்கத்திலிருந்தும், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரும்தான் பல நாடுகள் சுதந்தரமடைந்தன. அதன் பிறகே பல நாடுகள் பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் பயணம் செய்தன. 1960ன் தொடக்கத்தில் ஆசிய நாடுகளான வட கொரியா, தைவான், ஹாங் காங் போன்றவை உலகச் சந்தை வணிகத்தில் ஈடுபட ஆரம்பித்தன. அதாவது, அந்நிய முதலீட்டை தொழிற்சாலைகளில் குறிப்பாக ஏற்றுமதி செய்கிற பொருள் சார்ந்த வணிகம் செய்ய அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றன.
1978 ல் சீனா உலகமயமாதலைத் திறந்துவிட்டிருந்தது. அதன் மூலம் நிதி, உலக வணிகம், அந்நிய முதலீடு என தங்கள் தேசத்தை புதிய பொருளாதாரக் கொள்கை என்றழைத்துக் கொண்டு வரவேற்றது. அதே வழியை  இந்தியா 1991 ல் பின்பற்ற ஆரம்பித்தது. இப்போது உலகின் அனைத்து நாடுகளும் வணிகம் , நிதி மற்றும் (பொருள்) உற்பத்தி என உலகமயமாதலின் மூலம் பிணைக்கப்பட்டுள்ளன.
புதிய உலகமயமாதலால் ஐக்கிய அமெரிக்க நாடுகள், ஐரோப்பா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைக் காட்டிலும் சீனா, இந்தியா, பிரேசில் மற்றும் வளரும் நாடுகள் அதிகம் பலனடைகின்றன என்கிறார் ஜெஃப்ரி. சீனா, இந்தியா போன்ற நாடுகள் இதன் மூலம் அதிக பொருளாதார வளர்ச்சியை அடைகின்றன. ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் மட்டுமே பொருட்கள் உற்பத்தியையும் (Goods ), சேவையையும் (Services)  ஒரு காலத்தில் அளித்து வந்தன. ஆனால் இன்று வளரும் நாடுகளில் பொருள் உற்பத்தியையும் சேவைகளையும் செய்யும் அனைத்து வசதிகளும் வந்து விட்டன. மேலும் உற்பத்தி செய்த பொருட்களை High Income Economies மூலம் ஏற்றுமதி செய்து அதிக பொருளாதார வளர்ச்சியை இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் பெறுகின்றன.
புதிய உலகமயமாக்குதலால் உற்பத்தி, சேவை ஆகிய  இரண்டும்  குறைந்த சம்பளத்திற்குத் தொழிலாளிகள் கிடைக்கும் நாடுகளுக்கும், பொருள் தேவையிருக்கும் நாடுகளுக்கும் அனைத்து உற்பத்தி நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இடம் பெயர்ந்ததால் அமெரிக்காவில் அதிக வேலை வாய்ப்பின்மையும் வருமானமும் குறைந்துள்ளன என்கிறார் ஜெஃப்ரி சாக்ஸ்.
1998-2009 காலகட்டத்தில், அமெரிக்காவில்  2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பின்மை ஏற்பட்டது. டிசம்பர் 2010 ஆம் ஆண்டின் கணக்கின் படி, 19.3 % பேர் வேலை வாய்ப்பின்றியோ, அல்லது பகுதி நேரப் பணி மட்டுமே செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக 8.3 % பேர் வேலை வாய்ப்பின்றி இருந்தனர். இன்று அது இரு மடங்கிற்கும் மேலாக சென்றதற்கு முக்கியக் காரணம் புதிய உலகமயமாக்கலே.
புதிய உலகமயமாதலுக்குப் பிறகு அமெரிக்காவில் GDP விகிதாச்சாரம் குறைந்துள்ளது. சேமிப்பு பழக்கம் அறவே இல்லாமல் போனது. பொருட்களை வாங்கி குவிக்கும் நுகர்வுக் கலாசாரத்திற்கு மக்கள் தள்ளப்பட்டார்கள். ஊதியம் கொடுப்பதில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, வேலை வாய்ப்பின்மை பெருகியுள்ளது என்கிறார் நூலாசிரியர்.
1900 – 1998  காலத்தில் உற்பத்தி நிறுவனங்களில் 17.2 மில்லியன் பணியாளர்கள் இருந்தார்கள். அந்த எண்ணிக்கையில் 1998 – 2004 காலத்தில் உற்பத்தி நிறுவனங்களில் 3.2 மில்லியன் பணியாளர்களுக்கு வேலையின்மை ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கியக் காரணம், பெரும்பாலான உற்பத்தி நிறுவனங்கள் சீனாவிலும் இந்தியாவிலும் உள்ளன. அமெரிக்காவில் உற்பத்தி செய்வதற்குப் பதிலாக, உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்து அதிக லாபம் பார்க்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள்.
2009ம் ஆண்டில், சீனா அமெரிக்காவிற்கு 296 பில்லியன் டாலருக்கு பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. அதாவது அமெரிக்கா 2.1 % GDP அளவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. உற்பத்தி நிறுவனங்களில் 19% அமெரிக்காவைக் காட்டிலும் அதிகமாக உள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கணினி, தகவல் தொழில்நுட்ப சாதனங்கள், தொலைக்காட்சி, எலக்ட்ரானிக் பொருட்கள், பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள், செருப்புகள், ஆடைகள் மற்றும் மர வகையிலான உற்பத்திப் பொருட்களை,  அதிகமாக சீனாவே ஏற்றுமதி செய்து வருகிறது.
புதிய உலகமயமாதலுக்குப் பிறகு சீனாவின் வளர்ச்சி அபரிமிதமானது. அது வெறும் பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல. உலக அரசியலிலும் மிகப் பெரிய வளர்ச்சியை சீனா அடைந்துள்ளது. 2010 ஆம் ஆண்டின் கணக்கின்படி, சீனா ஜப்பானைக் காட்டிலும் முன்னேறி உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக விளங்குகிறது. பொருட்களை விற்பதில் ( purchasing power) சீனா ஜப்பானை 2001 லேயே சமன் செய்து விட்டது.  2020ல் சீனா அமெரிக்காவைக் காட்டிலும் பொருளாதார வளர்ச்சியில் விஞ்சி விடும் என ஜெஃப்ரி தெரிவிக்கிறார். உலக அரசியல் மாற்றங்களிலும் அனைத்து நாடுகளும் அமெரிக்காவைக் காட்டிலும் சீனாவுடன் உறவு கொள்வதையே விரும்பும். சீனா மிகப் பெரிய அரசியல் சக்தியாக 2020 ல் விளங்கும் என்றும் குறிப்பிடுகிறார்.
உண்மையைச் சொல்லப் போனால் 200 ஆண்டுகளாக அட்லாண்டிக் பகுதி செய்த அரசியல் அதிகாரங்கள், பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு இனி மாறிவிடும். உலகிலேயே அதிகமாக ஆயில், தாமிரம், நிலக்கரி மற்றும் சோயா பீன்ஸ் இறக்குமதியில் அமெரிக்காவைக் காட்டிலும் சீனா முன்னணியில் உள்ளது. ஆகையால் அதிக அளவில் பச்சை வாயுக்களை (Greenhouse gases) வெளியிடுவதிலும், அதிக மாசு ஏற்படுத்துதலிலும் சீனா மோசமாகி வருகிறது.
குறிப்பாக பொருள் உற்பத்தி மட்டுமல்லாமல், நுகர்வோர் வாங்குகிற பொருட்களுக்கான விலையில் சீனாவோடு அமெரிக்கா போட்டியிட இயலாது தவிக்கிறது. பொருட்களின் தரம் அதிகமென அமெரிக்கா சொல்லிக் கொண்டாலும், மிகப் பெரிய சமூகத்தின் தேவையென்பது குறைந்த விலையிலான பொருட்களை வாங்குகிற சக்தியாகவே இருக்கிறது. அவ்வகையில் பெரும் சமூகத்தின் தேவையை சீனாவில்  உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் பூர்த்தி செய்வதால் அமெரிக்காவைக் காட்டிலும் சீனா வேகமாக முன்னேறி செல்கிறது.
நீண்ட கால அடிப்படையில் புதிய உலகமயமாதல் கொள்கையால் எந்தெந்த அதிக நாடுகளுக்கு லாபம்? அமெரிக்காவைக் காட்டிலும் சீனா, இந்தியா, பிரேசில் மற்றும் சில வளரும் நாடுகளுக்குத்தான் அதிக லாபம். இந்த நாடுகள் வணிகம், முதலீடு, அதிக மக்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் அதிக வருவாய் என தங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய புதிய உலகமயமாதல் பெருமளவு உதவுகிறது.
புதிய உலகமயமாதலால் பலனடையப் போவது யார்?
வளரும் நாடுகள் புதிய உலகமயமாதலால் பலனடைய மூன்று காரணங்களை முன்வைக்கிறார் ஜெஃப்ரி.
  1. Convergence Effect : பொருட்களைத் தயாரிப்பது, உற்பத்தி செய்வது போன்றவை  உலகின் எல்லா நாடுகளிலும் அமையலாம் என்றான பிறகே இந்தியா , சீனா போன்ற நாடுகள் பெருமளவு லாபமடைய ஆரம்பித்தன. குறிப்பாக சீனாவின் அந்நிய முதலீட்டுக் கொள்கை  என்பது எந்த நிறுவனமாக இருந்தாலும் அதன் உற்பத்தியில் தங்கள் பங்கென்பது (Joint Venture Partner in technology) தொழில்நுட்பத்திலும் இருக்கும் என அமைத்துக் கொண்டுள்ளது. இதனால் குறுகிய காலத்தில் வெளிநாட்டுப் பொருட்களை பற்றிய அறிவை வளர்த்துக் கொண்டு , அதற்கு இணையாக புதுமையான முறையில் பொருட்களின் உற்பத்தியை சீனாவே செய்து வருகிறது.
  2. Labour Effect : தாராளமயமாக்கலுக்குப் பிறகுதான் சீனாவும் இந்தியாவும் அதிக அளவுக்குப் பயனடைந்து வருகின்றன. உலகின் பல நாடுகளும் தங்களின் பொருள் உற்பத்திக்கும், சேவைக்கும் குறைந்த சம்பளத்திற்கு பணியாட்களை நியமித்துக்கொண்டன. ஆகையால் பெருமளவிற்கு இந்தியா, சீனாவிலிருந்து பணியாட்கள் பல்வேறு நாடுகளுக்கு அழைத்து வரப்பட்டார்கள். அதிகம் கற்க வேண்டிய தேவை இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்பட்டது. அதில் அவர்கள் ஓரளவு வெற்றியும் கண்டார்கள்.  உதாரணமாக, அமெரிக்காவில் உள்ள ஒருவருக்கு தர வேண்டிய நியாயமான சம்பளத்தில் மூன்றில் ஒரு பகுதியையோ அதை விடக் குறைவாகவோ இந்தியா, சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்தால் போதுமென்ற சித்தாந்தத்தை பன்னாட்டு நிறுவனங்கள் கடைப்பிடிக்க ஆரம்பித்தன. இதன் காரணமாகவே வேலைவாய்ப்பின்மை அமெரிக்கா, ஐரோப்பாவில் பெருகி உள்ளது.
  3. Mobility Effect : தங்கள் நாட்டுக்கு வேலைக்கு பணியாளர்களை வரவழைத்து உற்பத்தி செய்வதைக் காட்டிலும் முதலீட்டை அந்தந்த நாடுகளில் செய்வது என்பதாக உலகமயமாதல் மாறிப் போனதும் காரணம். அதாவது எந்த நாட்டில் முதலீடு செய்கிறார்களோ அந்த நாட்டின் மக்களைக் கொண்டே தங்கள் உற்பத்தியைக் குறைந்த செலவில் செய்து, ஏற்றுமதி செய்து  அதிக லாபத்திற்கு பொருட்களை விற்பது வழக்கமானது. இதைத் தான் Internationally Mobile Capital and Immobile Labour என தனது நூலில் வர்ணிக்கிறார் ஜெஃப்ரி.
இதை பன்னாட்டு நிறுவனங்கள் செய்வதற்குக் காரணம் நிறைய வரி விலக்கு ரத்து, எளிதான முறையில் பொருட்களை நுகர்வோருக்கு கிடைக்கச் செய்வது, குறைந்த விலைக்குப் பொருட்களை உள்நாட்டு வரிவிலக்கின்றி விற்க இயலும் என சொல்லி அரசுகளிடம் அனுமதி வாங்கி கொள்ளை லாபமீட்டுகின்றன.
ஒவ்வொரு நாடும் இந்தப் போட்டியில் வரிவிலக்கு, பல சலுகைகள் என பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதால் அனைத்து நாடுகளும் கடும் பொருளாதாரப் பிரச்னைகளை எதிர்கொள்ளும் என்கிறார். மேலும்  Internationally Immobile Labour தான் அதிக பாதிப்புக்கு (பல வரிகளுக்கு) உள்ளாவார்கள் எனவும் கருத்துத் தெரிவிக்கிறார் ஜெஃப்ரி.
மேற்கூறிய மூன்று விடயங்களின் வாயிலாக நிச்சயமாக சீனா, இந்தியா மற்றும் சில வளரும் நாடுகள்தான் அதிக வெற்றியடையும்.  அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் முதலீட்டாளர்களே அதிக லாபம் அடைகிறார்கள். ஆனால் ஒப்பீட்டளவில் வளரும் நாடுகளே அதிக பலனை அறுவடை செய்யும். பல புதுமைகளை கொண்டு வருவதிலும் தரமான தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்களைக் கொண்டிருப்பதால் அமெரிக்கா அதிக பலனடைகிறது. உதாரணமாக Microsoft , Google, Facebook , Amazon , Apple என தொழில்நுட்ப புதுமைகளைப் படைப்பதே அமெரிக்காவின் பொருளாதார வெற்றிக்கு முக்கியக் காரணம்.
அமெரிக்க நிறுவனங்களில் பெரும்பாலான மென்பொருள் நிறுவனங்கள் இந்தியா, சீனாவில் அமைந்துள்ளதே தங்கள் நாட்டின் வேலை வாய்ப்பின்மைக்கு முக்கியக் காரணம் என்கிறார்.
வருவாயில் நடுநிலையின்மை:
அதிக திறமை கொண்டவர்கள் (அதிகக் கல்வி) அதிக ஊதியம் பெறுவதும் , குறைவான திறமையானவர்கள் (குறைந்த கல்வியறிவு) குறைவான ஊதியம் பெறுவதும் மிகப் பெரிய நடுநிலையின்மையை ஏற்படுத்தி உள்ளது. தொழில்நுட்ப அறிவைப் பெற்றவர்களே இந்தப் போட்டியில் தங்களை எளிதாக நிலைநிறுத்த முடிகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கத் தொழிலாளர்கள் அதிகமாக போட்டியை எதிர்கொள்ளவேண்டிய அவசியமில்லாமல் இருந்தது. இன்று கல்வியறிவை வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் பெற்றுள்ளதால் பலத்த போட்டியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இன்று வெளிநாடுகளில் பணி புரியச் செல்கிற அதிக திறமையானவர்கள் வசதி வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். எந்த ஒரு நேரத்திலும் 5,00,000 பேர் வானூர்தியில் பறந்துகொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
இயற்கையை மாசுபடுத்துதலில் உலகமயமாதலின் பங்கு:
இந்தியா, சீனா மற்றும் வளரும் நாடுகளிலும், ஏழைமை நாடுகளிலும் மக்கள் தொகை அதிகமாகவதால் உணவுப் பொருட்களின் தேவை அதிகமாகிறது. அதற்கேற்றாற் போல விலைவாசி ஏற்றமும் அதிகமாகிறது. ஆகையால் உணவுப் பிரச்னையும் வறுமையும் அதிகரிக்கிறது.  இரும்பு, தாமிரம், அலுமினியம் போன்ற பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. மேலும் தொழில்நுட்ப வளர்ச்சியால் எண்ணெய், நிலக்கரி ஆகியவற்றின் விலையேற்றமும், இவற்றை உபயோகிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுதலும் அதிகரிக்கிறது. காடுகளை அழித்தல், சூழலியல் மாற்றங்கள், நில அரிப்பு, போன்றவற்றை சிறிதும் பொருட்படுத்தாது உலக நாடுகள் தங்களின் பொருளாதார வளர்ச்சியையும் மக்களின் ஆடம்பர வாழ்க்கையைப் பூர்த்தி செய்யும் போட்டியிலும் இறங்கியுள்ளது வருந்தத்தக்கது.
உலகமயமாதலை அமெரிக்கா சரியான முறையில் அணுகத் தவறிவிட்டது. உற்பத்தி நிறுவனங்கள் மற்ற நாடுகளில் அமையப் பெற்றதால் அமெரிக்கர்கள் பெருமளவிற்கு வேலை வாய்ப்பை இழந்துள்ளார்கள் என்று குறைபடுகிறார் ஜெஃப்ரி சாக்ஸ். மேலும் உலகமயமாதலால் உலக நாடுகளின் பொருளாதார நிலைத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. தொழில்நுட்பத்திற்கும் உற்பத்தி சார்ந்து மட்டும் பொருளாதாரக் கொள்கைகளை வகுக்காது, வேளாண்மை மற்றும் ஏழ்மை மக்களும் பலன்பெறும் வகையிலும் அரசாங்கமும் சந்தையும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலமே உலகமயமாதலை முழுமையாக வெற்றி பெற செய்ய இயலும்.
0
லஷ்மண பெருமாள் tamilpaper.net

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக