திங்கள், 4 மார்ச், 2013

சென்னை: ஒரு மாத குழந்தை கொலை ; சடலத்தை வாஷிங் மெஷினில் போட்ட அம்மா

சென்னை: கணவரை பிடிக்காததால் ஒரு மாத பெண் குழந்தையை கழுத்தை இறுக்கி கொன்று வாஷிங் மெஷினில் போட்ட அம்மா கைது செய்யப்பட்டார். புரசைவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சென்னை புரசைவாக்கம் மூக்காத்தாள் தெருவில் டைமன்ட் பேலஸ் என்ற 5 அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. 10 குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆந்திராவை சேர்ந்த வெங்கல் ராவ் என்பவர், கடந்த 5 ஆண்டுகளாக இங்கு காவலாளியாக இருக்கிறார். மகள் ரம்யா (19)வுடன், குடியிருப்பில் தனியாக உள்ள சிறிய அறையில் வசித்து வருகிறார். இதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக இருக்கும் ஆந்திராவை சேர்ந்த பாபு (24), என்பவருக்கும் ரம்யாவுக்கும் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதியருக்கு கடந்த ஜனவரி 28ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. வர்ஷா என பெயர் வைத்தனர்.
குழந்தை பிறந்ததால் ஆந்திராவில் உள்ள குலதெய்வ கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக வெங்கல் ராவும் பாபுவும் சென்றுவிட்டனர். ரம்யாவுக்கு துணையாக உறவுக்கார பெண் பாக்யா (32) என்பவரை வீட்டில் விட்டுவிட்டு சென்றனர். குடியிருப்பில் உள்ள வீட்டில் நேற்றிரவு ரம்யாவும் பாக்யாவும் படுத்திருந்தனர். அவர்களுடன் பாக்யாவின் இரண்டு குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 4 மணிக்கு எழுந்த ரம்யா, அருகில் படுத்திருந்த குழந்தை வர்ஷாவை காணாமல் திடுக்கிட்டார். அருகில் படுத்திருந்த பாக்யாவை எழுப்பி விஷயத்தை கூறினார். இருவரும் குடியிருப்பு முழுவதும் குழந்தையை தேடினர். இவர்கள் பதற்றத்துடன் அலைவதை பார்த்து, குடியிருப்பில் உள்ள சிலர் விசாரித்தனர். குழந்தை காணவில்லை என்றதும் அவர்களும் சேர்ந்து தேடினர். அப்போது, குடியிருப்பின் ஒரு பகுதியில் கழிவுப் பொருட்கள் கொட்டிவைத்துள்ள இடத்தில் கிடந்த பழுதான வாஷிங் மெஷினுக்குள் வர்ஷா சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

குழந்தையின் உடலை பார்த்து ரம்யா கதறித் துடித்தார். குழந்தையின் கழுத்து வெள்ளை துணியால் இறுக்கப்பட்டு இருந்தது. வாஷிங் மெஷினில் பாதியளவுக்கு தண்ணீர் இருந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வேப்பேரி போலீஸ் உதவி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள வேப்பேரி போலீசார் ரம்யா, பாக்யா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். ரம்யா முன்னுக்குப் பின் முரணாக பேசியது, போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரிடம் தீவிர விசாணை நடத்தினர். குழந்தையை கொன்றது அவர்தான் என தெரியவந்தது.

போலீசாரிடம் ரம்யா கூறியதாவது: அப்பாவின் கட்டாயத்தால் பாபுவை திருமணம் செய்து கொண்டேன். திருமணத்துக்கு பிறகு எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. எதற்கெடுத்தாலும் என்னை பாபு சந்தேகப்பட்டார். இதனால், அவர் மீது வெறுப்பு ஏற்பட்டது. இனியும் அவருடன் வாழ முடியாது என்பதால் விலகி செல்ல முடிவு செய்தேன். அதற்கு குழந்தை தடையாக இருந்தது. என் அப்பாவும் கணவரும் ஆந்திராவுக்கு சென்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டேன். அதிகாலையில் குழந்தையின் கழுத்தை துணியால் இறுக்கி கொன்று, உடலை அங்கிருந்த வாஷிங் மெஷினில் போட்டுவிட்டேன். யாரும் சந்தேகப்படாமல் இருக்க குழந்தையை காணவில்லை என்று கூறி கதறினேன். ஆனால், போலீசார் என்னை பிடித்துவிட்டனர். இவ்வாறு ரம்யா கூறியுள்ளார். இதையடுத்து ரம்யாவை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் புரசைவாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக