வியாழன், 28 மார்ச், 2013

ஜெயலலிதா கிரிக்கட்டை அரசியல் மயப்படுத்துவது மன்னிக்க முடியாத குற்றமாகும்!

இலங்கை::ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய
நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டு வந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டதனால் எங்கள் நாட்டில் எவ்வித அரசியல், சமூக, பொருளாதார தாக்கங்கள் ஏற்படாத போதிலும் எங்களுக்கு எதிராக அமெரிக்காவுடன் சேர்ந்து வாக்களித்த இந்தியாவில் பெரும் அரசியல் பிரளயத்தையும், சமூக எதிர்ப்பு செயற்பாடுகளையும் ஏற்படுத்தி உள்ளது. இலங்கையை எதிர்க்கும் தங்கள் அரசியல் பகடை காய்நகர்த்தலுக்கு கருணாநிதியும், ஜெயலலிதாவும் தமிழ்நாட்டு மாணவர்களை வீதி யிறக்கி பெரும் ஆர்ப்பாட்டங்களை செய்தார்கள்.
இப்போது அந்த மாணவர்களை சாந்தப்படுத்தி மீண்டும் கல்வியை தொடரச் செய்வதற்கு அவர்களால் முடியாதிருக்கிறது. இந்திய காங்கிரஸின் தமிழ்நாட்டு மாநிலத் தலைவரும், முன்னாள் மத்திய அரசாங்கத்தின் அமைச்சருமான தங்கபாலுவுக்கு எதிராக இப்போது அக்கட்சியை சார்ந்தவர்களே எதிர்ப்புத் தெரிவித்து வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளார்கள். அவரது கட்சி காரியாலயம் உடைத்து நொருக்கப்பட்டுள்ளது. இவ்விதம் அரசியல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா முழு இந்தியாவையே ஆட்டம் காணக்கூடிய ஒரு குண்டை போட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கட் வீரர்கள் தமிழ்நாட்டில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் கலந்து கொள்ளக்கூடாது என்று தடை விதித்துள்ளார்.
இலங்கை கிரிக்கட் வீரர்கள் சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் கலந்து கொண்டால் அங்கு அந்த போட்டிகளை நடத்த அனுமதிக்க மாட்டேன் என்று ஜெயலலிதா தனக்கு இருக்கும் முதலமைச்சர் பதவிக்கான அதிகாரத் திமிருடன் அறிவித்திருப்பது இலங்கையில் உள்ள கிரிக்கட் ரசிகர்களுக்கு மட்டுமல்ல இந்தியாவில் உள்ள கிரிக்கட் ரசிகர்களுக்கும் பெரும் வேதனையை அளித்துள்ளது.
கிரிக்கட் விளையாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியூட்டும், மக்களின் அபி மானத்தைப் பெற்றுள்ள ஒரு விளையாட்டாகும். இதில் அரசியலைக் கலந்து கிரிக்கட் என்ற புனிதமான விளையாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருப்பது மன்னிக்க முடியாத ஒரு குற்றமாகும். இந்தியாவும், பாகிஸ்தானும் மூன்று எல்லை யுத்தங்களில் ஈடுபட்ட போதிலும் இந்திய அணியினர் பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் அணியினர் இந்தியாவிலும் விளையாடுவதற்கு ஆரம்பத்தில் சில எதிர்ப்புகள் தோன்றிய பின்னரும் இப்போது அந்த எதிர்ப்புகள் அனைத்தும் மறைந்துவிட்டன.
சென்னையில் நடைபெறும் போட்டிகளில் இலங்கை கிரிக்கட் வீரர்களோ, இலங்கை நடுவர்களோ, இலங்கையைச் சார்ந்த உத்தியோகத்தர்களோ கலந்துகொள்ளலாகாது என்று ஜெயலலிதா இந்தியப் பிரதமமந்திரி மன்மோகன் சிங்கிற்கு தனது நிலைப்பாட்டை திட்டவட்டமாக விளக்கிக் கூறி கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். சென்னை நகரில் 10 ஐ.பி.எல். கிரிக்கட் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஏனைய சுமார் 90 போட்டிகள் பெங்களூர், புதுடில்லி, ஐதராபாத், கொல்கத்தா, மும்பை, பூனே, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளன.
சென்னை அணியின் சார்பில் இலங்கையை சேர்ந்த நுவன் குலசேகர, அகில தனஞ்சய ஆகிய இருவரும் விளையாடுவதற்கு ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளார்கள். இவர்களைவிட ஜீவன் மென்டிஸ் மற்றும் மஹேல ஜயவர்தன டெல்லி டெயாடெவில்ஸ் சார்பிலும் சஷித்ர சேனநாயக்க கொல்கட்டா நைட்ரைடஸ் சார்பிலும் லசித்மாலிங்க மும்பை இன்டியன்ஸ் அணி சார்பிலும் அஜன்த மென்டிஸ், அஞ்சலோ மெத்தியூஸ் பூனே வரியர்ஸ் இந்திய அணி சார்பிலும் குசல் ஜனித் பெரேரா ராஜஸ்தான் அணி சார்பிலும், முத்தையா முரளிதரன் மற்றும் திலகரட்ன டில்சான் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சார்பிலும் குமார் சங்கக்கார மற்றும் திசர பெரேரா அதே அணியின் சார்பிலும் ஐ.பி.எல்.
போட்டிகளில் கலந்து கொள்வதற்கு ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளார்கள். ரோயல் செலஞ்சர் பெங்களூர் அணி சார்பாக விளையாடவுள்ள இலங்கையின் முன்னாள் சுழல்பந்துவீச்சு சம்பியன் முத்தையா முரளிதரன் தாம் இப்போது குடும்ப தொடர்புகள் காரணமாக சென்னையில் இருப்பதாகவும் சென்னையில் இலங்கை வீரர்கள் விளையாடக்கூடாது என்று விடுக்கப்பட்டிருக்கும் தடை உத்தரவை தாம் ஏற்கின்ற அதே வேளையில் இது கிரிக்கட் என்ற புனிதமான விளையாட்டுக்கு இழைக்கப்படும் தீங்கு என்பதனால் மனம் வருந்துவதாகவும் கூறினார்.
இலங்கை அணியின் சார்பில் தான் சுமார் 20 வருடங்கள் விளையாடிய போது பல்வேறு பிரச்சினைகளை வெளிநாடுகளில் எதிர்நோக்கினேன். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை கிரிக்கட் சபையின் அணியின் சக அங்கத்தவர்களும் அரசாங்கமும் எனக்காக குரல் கொடுத்து என்சார்பில் வாதாடி வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறது. தமிழன் என்ற முறையில் நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் புறக்கணிக்கப்படவோ, மனவேதனைக்கு உட்படுத்தப்படவோ இல்லை என்று முத்தையா முரளிதரன் சென்னையில் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் குறிப்பாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா, அரசியல் விளையாட்டுகளில் ஈடுபடுவதை நாம் எதிர்க்கவோ கண்டிக்கவோ இல்லை. அவர் கிரிக்கட் என்ற 11 கனவான்கள் ஆடும் ஒரு புனிதமான விளையாட்டை சீர்குலைக்கக்கூடிய வகையில் தமது அதிகாரத்தை பயன்படுத்தி ஆட்டம் போடுவதை நாம் வன்மையாக கண்டிக்க விரும்புகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக