ஞாயிறு, 10 மார்ச், 2013

எல்லா படங்களையுமே சுட்டு எடுத்த 9ன்பதுல குரு

“எம்படத்துலே கதையே இல்லை.. கதையே இல்லைன்னு ஒரு க்ரூப் புரளி கெளப்பிக்கிட்டு இருக்காங்க.. உங்களுக்கெல்லாம் ஒரு உண்மையை சொல்றேன்.. கதையே இல்லாம படம் எடுக்க முடியாது” - ‘ரட்சகன்’ படம் வெளியானபோது இயக்குனர் பிரவீன்காந்த் பிரவீன்காந்த் ‘ஒன்பதுல குரு’ பார்த்தாரேயானால் தன்னுடைய கூற்று எவ்வளவு அபத்தமானது என்பதை உணர்வார். பேச்சுலர்ஸ் பாரடைஸான ஹாலிவுட்டின் ‘ஹேங்க் ஓவர்’ படத்தை சுட்டு எடுத்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். எனக்கென்னவோ அப்படித் தெரியவில்லை. 1895ல் லூமியர் சகோதரர்கள் முதன்முதலாக ’சினிமா’ போட்டுக் காட்டிய துண்டுப்படத்தில் இருந்து, இதுவரை வெளிவந்திருக்கும் கோடிக்கணக்கான எல்லா சினிமாப் படங்களையுமே சுட்டு எடுத்திருப்பதாக தெரிகிறது. குறைந்தபட்சம் தமிழில் வெளிவந்திருக்கும் ஐயாயிரத்து சொச்சம் படங்களிலிருந்தும் ஓரிரு நொடி காட்சிகள் இப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. முன்பு முரளி, மோகன், எஸ்.வி.சேகர் மாதிரி இடைநிலை நாயகர்களை வைத்து இராம.நாராயணன் துணுக்குத் தோரணம் கட்டி சகாதேவன் மகாதேவன், தங்கமணி ரங்கமணி ரேஞ்சுக்கு படங்களாக பிரசவித்துத் தள்ளுவார் இல்லையா?
இரண்டாயிரங்களின் தொடக்கத்தில் இந்த genre கொஞ்சம் கொஞ்சம் அழிந்து குற்றுயிரும் குலையுயிருமாக போய்விட்டது. சில ஆண்டுகளாக மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கிறது. பாஸ் (எ) பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி மாதிரி படங்கள் இவற்றின் கொஞ்சம் மேம்படுத்தப்பட்ட வடிவம். கண்ணா லட்டு தின்ன ஆசையா, ஒன்பதுல குரு போன்றவை அவற்றின் அச்சு அசலான வடிவம். இந்தப் படங்களால் தமிழ் சினிமா ஹாலிவுட் தரத்தை நெருங்க முடியாது. சிறந்த அயல்நாட்டுப் படங்களுக்கான பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப் படாது. ஆனால் அதையெல்லாம் விட முக்கியமான விஷயம். கல்லா கட்டும். தியேட்டர்களுக்கு பஞ்சமில்லாமல் content கிடைக்கும். இரண்டு பெரிய படங்களுக்கு இடையேயான இடைவெளியை நிரப்பும் filler ஆக செயல்படும். தியேட்டர் கேண்டீன்களில் சமோசா விற்பனை பெருகும். அச்சகங்களுக்கு போஸ்டர் ஆர்டர் இருந்துகொண்டே இருக்கும். தினத்தந்திக்கும், தினகரனுக்கும் ரெகுலர் விளம்பரம் கிடைக்கும். பிளாக்கர்களுக்கும் ஹிட்ஸ் தேத்த வசதியாக இருக்கும்.

பொதுவாக தயாரிப்பாளரின் கையை கடிக்காது. சில சமயங்களில் ஜாக்பாட்டும் அடிக்கும். அப்படியே தோற்றாலும் தயாரிப்பாளர் வடபழனி கோயில் வாசலில் தேங்காய் பொறுக்க வேண்டிய நிலைமை வராது. எனவே ஒன்பதுல குருக்களை எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்கலாம்.

படத்தில் ஹீரோ என்று யாரையும் சொல்ல முடியவில்லை. எனவே அவர்களை லூஸில் விட்டுவிடலாம். ஹீரோயின் லட்சுமிராய். இவரை அரபுக்குதிரை என்று குமுதங்களும், சினிக்கூத்துகளும் வர்ணிக்கின்றன. எனக்கென்னவோ கட்டுக்கடங்காத காட்டுக்குதிரையாக தெரிகிறார். ஒரு காட்சியில் ஸ்விம்மிங் பூலில் இருந்து எழுகிறார். அவரது நெஞ்சுரத்தை கண்டு வியந்து நமது நெஞ்சு உரமேறுகிறது. அசுரத்தனமான உடல் வளர்ச்சி என்றாலும் அவரது முகம் மட்டும் எட்டாம் க்ளாஸ் படிக்கும் பாப்பா மாதிரி இருப்பது அதிசயம்தான்.

சமகால ஹீரோக்கள், இயக்குனர்கள் அத்தனை பேரின் டவுசரையும் எந்தவித கூச்சநாச்சமுமின்றி கயட்டுகிறார்கள். குறிப்பாக மணிரத்னமும், பாரதிராஜாவும் படத்தைப் பார்த்தால் சினிமாவுக்கு துறவறம் பூண்டுவிடுவார்கள். சினிமாக்காரர்களைதான் வம்புக்கு இழுக்கிறார்கள் என்று பார்த்தால் கலைஞரையும் விட்டுவைக்கவில்லை. அவ்வளவு ஏன் விவேகானந்தரை கூட விட்டு அடிக்க பயன்படுத்திக் கொள்கிறார்கள். பச்சை பச்சையாக டயலாக்குகள். கரும்பச்சை நிற காட்சிகள். இந்தப் படத்துக்கு தடை கோரவேண்டுமானால் இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம், பவுத்தத்தில் தொடங்கி உலகின் எல்லா மதக்காரர்களும், எல்லா சாதிக்காரர்களும், சினிமா, அரசியல், பத்திரிகை என்று எல்லா துறையினரும் தடைகோர வேண்டும். தமிழக அரசு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் தொடங்கி சீனா, அமெரிக்க அரசுகள் வரை தடை விதிக்க வேண்டும். நியாயமாகப் பார்க்கப் போனால் சென்ஸார் இப்படத்துக்கு ‘த்ரிபிள் ஏ’ சர்ட்டிஃபிகேட் தந்திருக்க வேண்டும்.

நாடி, நரம்பு, மூளை, புத்தி, நெஞ்சு, பஞ்சு என்று உடலின் சகல பாகங்களிலும் கட்டுக்கடங்காத காமவெறி கரைபுரண்டு ஓடும் ஒரு மனிதரால் மட்டுமே இத்தகைய படைப்பை வழங்கியிருக்க முடியும்.

கலாச்சாரப் போலிஸாருக்கும், சென்ஸாருக்கும் நடுவிரலை தூக்கிக் காட்டிய தைரியத்துக்கு இயக்குனர் பி.டி.செல்வகுமாருக்கு அட்டென்ஷனில் அடிக்கலாம் ஒரு சல்யூட்!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக