வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

TamilNadu 1000 ஆண்களுக்கு, 900 பெண்கள்

தமிழகத்தில், 14 மாவட்டங்களில், பெண் குழந்தை எண்ணிக்கை குறைந்து வருகிறது. 1,000 ஆண்களுக்கு, 900 பெண்கள் என்ற அளவில் குறைந்துள்ளதாக, ஆய்வில் தெரிய வந்துள்ளது.கடந்த, 2000ம் ஆண்டில், 2015க்குள் எட்டப்பட வேண்டிய நாட்டின் தேவைகள் குறித்து, பட்டியலிடப்பட்டது. இதற்கு, "புத்தாயிரம் வளர்ச்சி இலக்குகள்' என, பெயரிடப்பட்டது.இந்த இலக்குகளை அடைவதற்கு, மத்திய, மாநில அரசுகள் எந்த வகையில் செயல்பட்டு வருகின்றன என்பது குறித்து, இளங்குழந்தைகள் உரிமை பேணும் நிறுவனம், பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது. அதில், குழந்தை பாலின விகிதம் குறித்து சிறப்பு ஆய்வு நடத்தப்பட்டதுஆய்வில் கண்டறியப்பட்டவை: பல தலைமுறைகளாக, நம் நாட்டில், பெண் பாலின குழந்தை விகிதம் குறைந்துள்ளது. புள்ளி விபரங்களின் அடிப்படையில் பார்த்தால், 1991ம் ஆண்டு, 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 945 பெண் குழந்தைகள் பிறந்தன. 2001ம் ஆண்டு, பெண் குழந்தைகள் எண்ணிக்கை, 914 ஆக குறைந்தது.
* தமிழகத்தில், குழந்தை பாலின விகிதம் உற்சாகமளிப்பதாக இல்லை. அரசின் கணக்கீடுகள், குறுகிய காலத்தை மட்டும் அடிப்படையாக கொண்டவை. கருவுறும் முன் மற்றும் கருவுறுதலுக்கு பின், பரிசோதனை நுணுக்கங்கள் (முறைப்படுத்துதல் மற்றும் தவறாக பயன்படுத்துவதை தடுத்தல்) சட்டம் - 1994 மற்றும் மருத்துவக் கருக்கலைப்பு சட்டம் - 1971 ஆகியவை அமல்படுத்தப்படவே இல்லை.

* தமிழகத்தில், கருவுற்ற பெண்களை பதிவு செய்வதற்கும், பாதுகாப்பதற்குமான மையங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அரசில் பதிவு செய்யப்பட்டுள்ள மருத்துவமனைகளின் எண்ணிக்கை வெறும், 4560 மட்டுமே. இப்பிரச்னையில், ஆவண பராமரிப்பும் சிறப்பாக நடைமுறைப்படுத்தவில்லை.
* தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட தொட்டில் குழந்தை திட்டம், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் ஆகியவை பிரச்னையின் தீவிரத்தை குறைப்பதை விட, சமத்துவமற்ற நிலையை உண்டாக்கியுள்ளன.
*தமிழகத்தில், 14 மாவட்டங்களில் குழந்தை பாலின விகிதம், 1,000 ஆண்களுக்கு, 900 பெண்கள் என்ற நிலை அதிர்ச்சியூட்டுவதாகவும், கவலை அளிப்பதாகவும் அமைந்துள்ளது.
* குடும்பத்திற்குள்ளேயே, பாலின வேறுபாடு காணப்படுகிறது. எனவே, குழந்தை உரிமையின் பல்வேறு நிலைகளான, வாழ்வுரிமை வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் பங்கேற்பு ஆகியவற்றில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டுமென, ஆய்வில் தெரிய வந்துள்ளது.
* உயர் கல்வி படிக்க வைப்பதற்கு, ஆண் குழந்தைகளே வேண்டும் என, மக்கள் விரும்புகின்றனர். இதனால், பெண் குழந்தைகள் படிப்பை நிறுத்தி விட்டு, குழந்தை தொழிலாளர்களாக மாறி விடுகின்றனர்.
* 3,000 பெண் குழந்தைகள் உள்ள கிராமத்தில், 10ம் வகுப்பு படிக்க வைக்கப்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை, வெறும், 3 மட்டுமே.
* பெண்களுக்கு கூலித்தொகை வழங்குவதிலும் பாகுபாடு நீடிக்கிறது.
* பெண் குழந்தைகளை கருக்கலைப்பு செய்து அழித்து விடுதால், குழந்தை பாலின விகிதம் குறைந்து வருகிறது.இவ்வாறு ஆய்வில் தெரியவந்துள்ளது.

- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக