வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

ஜெயலலிதாவுக்கு 1217-வது தடவையாக (உத்தேச கணக்கு) களங்கம் ஏற்பட்டது

விஸ்வரூபம் விவகாரம்: “புரட்சித் தலைவி கார்ட்டூன் கேரக்டரா?” தமிழக அரசு கடும் ஆவேசம்!

Viruvirupu
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 1217-வது தடவையாக (உத்தேச கணக்கு) களங்கம் ஏற்பட்டு விட்டது. இதனால் வெகுண்ட தமிழக அரசு, டி.வி. சேனல் ஒன்றின்மீது, அவதூறு வழக்கு போட்டுவிட்டது.
விஸ்வரூபம் படம் தடை செய்யப்பட்டது குறித்து என்.டி. டி.வி.யில் ஒளிபரப்பப்பட்ட செய்தி, தமிழக முதல்வர் மீது மக்கள் வைத்திருக்கும் அளப்பரிய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது எனக்கூறி, அந்த டி.வி.யின் நிர்வாகிகள் மீது முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “ஜனவரி 31-ம் தேதி என்.டி. டி.வி.யில் விஸ்வரூபம் தடை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக செய்தி வெளியானது. இந்த செய்தி காமிக்ஸ் முறையில் ஒளிபரப்பப்பட்டது.
அதில், நடிகர் கமலஹாசன், மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தி.மு.க. தலைவர் கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் டயலாக் பேசுவதுபோல் காட்சி அமைந்திருந்தது.
இந்த செய்தி தமிழக முதல்வரின் நற்பெயருக்கும், தமிழக அரசின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படும் வகையில் உள்ளது. செய்தியை வெளியிட்ட நிகழ்ச்சி தொகுப்பாளர் காஷிஸ் குப்தா, என்.டி. டி.வி. தலைவர் பிரணாய்ராய், தலைமைச் செயல் அதிகாரி விக்ரம் சந்திரா, செயல் துணைத் தலைவர் கே.வி.எல்.நாராயண ராவ் ஆகியோர் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 500ன் கீழ் தண்டனைக்கு உரியவர்களாவார்கள். எனவே, அவர்கள் மீது அவதூறு சட்டப் பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள டி.வி. சேனல் முதல்கொண்டு, காதுகுத்து விழா போஸ்டர்வரை புரட்சித் தலைவிக்கு களங்கம் விளைவிப்பதை, மானமுள்ள தமிழன் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? புரட்சித் தலைவியின் நற்பெயர் ஸ்டாக்கும், எத்தனை காலம்தான் தாங்கும்?
இதற்கு சீக்கிரமே ஒரு முடிவு கட்ட வேண்டும். அதற்கு பல வழிமுறைகள் உள்ளன.
1) தமிழக அரசு அவதூறு வாரியம் அமைக்கலாம்.
2) அவதூறு துறை அமைச்சு ஒன்றை உருவாக்கி, அதிபணிவு அமைச்சர் ஒருவரை நியமிக்கலாம்.
3) அவதூறு விரைவு நீதி மன்றம் அமைக்கலாம்.
4) ஜெயா டி.வி. தவிர்ந்த மற்றைய அனைத்து மீடியாவுக்கும் இடைக்கால தடை கோரலாம். யாராவது எதிர்த்து வழக்கு போட்டால்… கைவசம் இருக்கவே இருக்கிறார், விஸ்வரூபம் புகழ் நவநீதகிருஷ்ணன். கேஸை பிச்சுபுடுவார்.. பிச்சு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக