வியாழன், 28 பிப்ரவரி, 2013

நாகாலாந்திலும் ஆட்சியில் மாற்றம் இல்லை : திரிபுராவில் கம்யூனிஸ்ட், மேகாலயாவில் காங். முன்னிலை

அகர்தலா: திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று தொடங்கியது. 3 மாநிலங்களிலும் தற்போது ஆட்சியில் உள்ள கட்சிகளே பெரும்பான்மையான இடங்களில் முன்னிலையில் உள்ளன. திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலய சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. திரிபுராவில் கடந்த 14-ம் தேதியும், மேகாலயா, நாகாலாந்தில் 23-ம் தேதியும் தேர்தல் நடந்தது. திரிபுராவில் 93 சதவீத வாக்குகளும், மேகாலயா, நாகாலாந்தில் முறையே 88, 83 சதவீத வாக்குகளும் பதிவாகின. 3 மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டன.
திரிபுராவில் கடந்த 20 ஆண்டுகளாக இடதுசாரிகள் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக மாணிக் சர்க்கார் உள்ளார். ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கடும் முயற்சி மேற்கொண்டது. ஆனால், அங்கு மீண்டும் கம்யூனிஸ்ட் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பெரும்பாலான இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னிலையில் இருந்தது. மொத்தமுள்ள 60 இடங்களில் காலை 11 மணி நிலவரப்படி 43 இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சியும், 1 இடத்தில் இந்திய கம்யூனிஸ்டும் முன்னிலையில் இருந்தன. 2 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் முன்னிலை பெற்றிருந்தது.


மேகாலயாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வ ராக முகுல் சங்மா உள்ளார்.  மொத்தம் 60 தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் காங்கிரஸ் 16 இடங்களிலும், ஐக்கிய ஜனநாயக கட்சி 6 இடங்களிலும், மக்கள் ஜனநாயக கட்சி, சுயேச்சைகள் உள்பட மற்ற கட்சிகள் 12 இடங்களிலும் முன்னிலையில் இருந்தன. நாகாலாந்தில் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 60. அங்கு 19 இடங்களில் ஆளும் நாகா மக்கள் முன்னணி, முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 7 இடங்களிலும் ஐக்கிய ஜனதா தளம் ஒரு இடத்திலும் சுயேச்சைகள் 3 இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன. வடக்கு அங்கமி தொகுதியில் முதல்வர் நெபு ரியோ, தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட 4500 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் இருந்தார். dinakaran,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக