புதன், 6 பிப்ரவரி, 2013

பாமக-வை நிராகரிக்கும் வன்னியர்கள் – கள ஆய்வு!

தர்மபுரி – சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன்பு உழைக்கும் மக்களின் விடுதலைக்கான விடிவெள்ளியாய் முளைத்த நக்சல்பாரி இயக்கம் தீவிரமாய்ச் செயல்பட்டு வந்த மாவட்டம். இம்மாவட்டத்தின் நாயக்கன் கொட்டாய் தான் அந்த எழுச்சியின் குவிமையமாய் இருந்தது. நக்சல்பாரிகளின் தலைமையில் திரண்டெழுந்த உழைக்கும் மக்கள் சாதித் தீண்டாமையின் பல்வேறு வடிவங்களை அடக்கி ஒடுக்கியிருந்தனர்.
1980களுக்குப் பிறகு ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைகளால் நக்சல்பாரி இயக்கங்கள் பின்னடைவுக்கு உள்ளாகியிருந்த நிலையில் சாதி அமைப்புகள் திட்டமிட்ட ரீதியில் வளர்த்து விடப்பட்டன. பல்வேறு சாதி அமைப்புகள் தமது சாதி மக்களைத் திரட்டி தேர்தல் அரசியலில் செல்வாக்கை வளர்க்க முயற்சித்தன. எனினும் சாதிக் கூட்டணியில் துவங்கி, தமிழ் தேசியத்தில் வளர்ந்து, ஓட்டரசியலில் கிடைத்த பதவிகளில் சீரழிந்து, மக்களிடம் செல்வாக்கு இழக்கத் துவங்கி, தற்போது முற்றிலுமாய் அம்பலப்பட்டு நிற்கின்றன.

இந்நிலையில் தான் கடந்த நவம்பர் 7-ம் தேதியன்று நாயக்கன் கொட்டாய் பகுதியிலிருக்கும் மூன்று கிராமங்களின் தலித் குடியிருப்புகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன் என்னும் தாழ்த்தப்பட்ட இளைஞருக்கும், செல்லன் கொட்டாயைச் சேர்ந்த திவ்யா என்ற வன்னியர் சாதிப் பெண்ணுக்கும் இடையிலான காதல் திருமணம்தான் இந்தத் தாக்குதலுக்கான காரணம் என்று சொல்லப்பட்டாலும், ஆதிக்க சாதிவெறி பிடித்த வன்னியர் சங்கத்தின் திட்டமிடல் தான் முக்கியக் காரணம்.
தர்மபுரி தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக அரசியல் அரங்கில் சாதி மீண்டும் முன்னணிக்கு வந்து விட்டதைப் போல் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ராமதாசின் முயற்சியால் 42 ஆதிக்க சாதிச் சங்கங்கள் ஒன்றிணைந்தன. ‘காதல் நாடகத் திருமணங்களை’ எதிர்ப்பதாகவும், “வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்” தவறாகப் பயன்படுத்தப்படுவதால் அதைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் கோரிக்கைகளை நிறைவேற்றினர். தலித் அல்லாதோர் இயக்கம் ஒன்றும் துவங்கப்பட்டது.
சாதி நல்லிணக்கம் பேசும் திராவிடக் கட்சிகளோ இந்தப் பச்சையான ஆதிக்கசாதி வெறித்தனத்தை எதிர்கொள்ளத் திராணியற்று இருக்கின்றனர். ராமதாசின் குறிப்பான சாதித் திமிரைக் கண்டிப்பதற்கு பதிலாய் பொதுவான சாதி சமத்துவம் பேசுவதாக மழுப்பி வருகினறனர். தலித் இயக்கங்களோ ஒட்டு மொத்தமாக சரணாகதி நிலையை எடுத்துள்ளன. அம்பேத்கரியத்தின் அடிப்படையில் தலித்திய அணி திரட்சியை முன்வைத்த திருமாவளவனோ, பா.ம.க.வின் சாதித் திமிரை எதிர்கொள்ள வக்கற்று, திராவிட இயக்கங்கள்,போலி கம்யூனிஸ்டுகள் பின்னால் நின்று ஆதரவு தேடுகிறார்.
ராமதாசின் வன்னிய சாதித் திமிரை புரட்சிகர இயக்கங்கள் தவிர்த்து வேறு எவரும் களத்தில் நேருக்கு நேராய் சந்திக்கத் தயங்கி வந்த நிலையில், அவர் உரிமை கொணடாடும் அந்த ‘2 கோடி’ வன்னியர்களில் சிலரையாவது நேருக்கு நேர் சந்தித்து விடுவது என்றும், அவர்களிடம் ராமதாஸ் முன்வைக்கும் சாதிவெறி அரசியலுக்கும் எந்த அளவுக்கு ஆதரவு இருக்கிறது என்பதை நேரடியாகக் கண்டறிவது என்றும் தீர்மானித்தோம்.
இந்தக் கள ஆய்வுக்காக இரண்டு வெவ்வேறு பகுதிகளைத் தேர்ந்தெடுத்தோம். சென்னையின் மத்தியில் வன்னியர்கள் அடர்த்தியாக வாழும் பகுதி ஒனறையும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வன்னிய மக்கள் பெரும்பான்மையாக வாழும் இரண்டு கிராமங்களையும்தேர்ந்தெடுத்தோம்.
கள ஆய்வுக்கென தருமபுரி சம்பவம், ராமதாசு, காடுவெட்டி குரு மற்றும் கொங்கு வெளாள கவுண்டர் சங்கத் தலைவர் மணிகண்டன் ஆகியோரது பேச்சுக்கள், சாதிச் சங்கங்களின் செயல்பாடுகள், தந்தை பெரியார் குறித்த கருத்து, சாதி மறுப்புத் திருமணங்களுக்கு மக்களின் ஆதரவு எவ்வாறு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் விதமாகவும் கேள்விகளை அமைத்துக் கொண்டோம்.
ஆய்வின் முடிவுகளைத் தனியே பெட்டிகளில் அளித்துள்ளோம். சாராம்சமாகச் சொல்ல வேண்டுமென்றால், பா.ம.கவும் சரி, வன்னியர் சங்கமும் சரி; அல்லது பிற சாதி அமைப்புகளும் சரி – தங்களுக்கு இருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் பலம் என்பது அசிங்கமாய்த் துருத்திக் கொண்டிருக்கும் ஊளைச் தசை தான். இவர்களுக்கு மக்களிடையே – அதிலும் குறிப்பாக வன்னியர் சாதியைச் சேர்ந்த பெரும்பான்மை மக்களிடையே எள்ளளவும் மரியாதை இல்லை என்பதை இந்த கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
முதல் சுற்று ஆய்வை சென்னையில் வன்னியர்கள் அடர்த்தியாக வாழும் பகுதி ஒன்றில் நடத்தினோம். ராமதாஸ், காடுவெட்டி குரு மற்றும் இரா.மணிகண்டன் ஆகியோர் காதலுக்கு எதிராகவும், சாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதிராகவும் பேசியதன் விவரங்களை விவரிக்கத் துவங்கிய மாத்திரத்திலேயே மலத்தை மிதித்து விட்டதைப் போல் அசூசையான முகபாவனைகளையே காட்டினர். கேள்வியை முடிக்கும் முன்னதாகவே “இவனுங்க எல்லாம் சரியான காட்டுமிராண்டிங்க சார்”என்று அர்ச்சனையைத் துவங்கி விட்டனர். சென்னை மொழியில் சொல்வதானால், ராமதாசையும் காடுவெட்டியையும் ‘கழுவிக் கழுவி ஊற்றினர்’. இவர்களில் ஆகப் பெரும்பான்மையான மக்கள் தர்மபுரி தாக்குதல் சம்பவத்தை மிகக் கடுமையான வார்த்தைகளில் கண்டித்தனர்.
நகர முடிவுகள்
வன்னியர் சாதியைச் சேர்ந்த வயதானவர் ஒருவர், “நானே வன்னியன் தான் சார். நான் சொல்றேன். இந்த நாயிங்களை நடு ரோட்டுல ஓட விட்டு சுட்டுக் கொல்லணும் சார்” என்று கோபத்துடன் தன்னுடைய சாதிவெறியர்களைச் சாடினார். காதல் என்பதும், திருமணம் என்பதும் தனிப்பட்ட நபர்களின் விருப்பங்கள் என்பதே மக்களின் கருத்தாக இருந்தது. தனிப்பட்ட இருவரின் பிரச்சினைக்காக 300 குடிசைகளை எரித்துள்ளதைக் கேட்டு மக்கள் ஆத்திரப்பட்டனர்; வன்னியர் சங்கத்தைக் கடுமையான வார்த்தைகளில் சாடினர்.
“யாரைக் காதலிக்கலாம், யாரைக் காதலிக்க கூடாதுன்னு சொல்ல இவன்லாம் யாரு சார்? இவன்ட்ட எவன் சார் கேட்டான்? இவன்ட்ட கேட்டா சார் காதல் வருது? அதுல்லாம் காத்து மாதிரி சார்; தடுக்க முடியாது… இவன் சுத்த லூசுப் பய சார். ஒரே சாதின்றதுக்காக குருவோட பொண்ணை கூலி வேலை செய்யிற வன்னியனுக்கு கட்டித் தருவானா சார்? ஒவ்வோரு தரமும் கருணாநிதி-ஜெயா கால்ல விழுவுறானுவோ… அப்பல்லாம் சாதி சாதி பெருமை எங்க போச்சா சார் இவனுக்கு? த்தா… இவனுங்கள தூக்கி உள்ள போட்னும் சார். உள்ளயே கெடந்து சாதிய வளத்துக்கங்கடான்னு அப்டியே விட்ரணும் சார்..” இது வன்னியர் சாதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் கருத்து.
மக்களின் ஆத்திரமும், கோபாவேசமும் கவிதையாய்ப் பொங்கியது. சாதாரண உழைக்கும் மக்கள் சாதிச் சங்கங்களே தேவையில்லை என்கிற கருத்தை முன்வைத்தனர். சாதிச் சங்கம் தேவை என்று சொன்னவர்கள் கொஞ்சம் நடுத்தர வர்க்கத்தினராகவும், நடுத்தர வயதினராகவும் இருந்தனர். இவர்களும் மிகச் சிறிய சதவீதத்தினரே. அப்படி வேண்டும் என்று தெரிவித்தவர்களும் ‘கண்ணாலத்துக்கு பொண்ணு பார்த்து தருவான் சார்’ என்று தரகர் வேலை பார்க்கவே சாதிச் சங்கங்கள் தேவையென்றனர். இதே பிரிவைச் சேர்ந்த ஒரு சிலர் சாதி மறுப்புத் திருமணம் தங்களுக்கு உவப்பானதாக இல்லையென்றாலும், இனிமேல் அதையெல்லாம் தடுக்க முடியாது என்பதையும் சேர்த்தே சொன்னார்கள்.
பொதுவான இந்தக் கருத்துக்களுக்கு ஒரு சில விதிவிலக்குகளும் இருக்கத்தான் செய்தன. இவர்கள் காடுவெட்டியையும், ராமதாசையும் ஆதரித்தனர்; தருமபுரி குடிசை எரிப்பு சம்பவம் சரிதான் என்றனர். ஆனால், ஆச்சரியப்படும் விதத்தில் அவர்கள் யாரும் வன்னியர்கள் இல்லை. தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் – அதிலும் குறிப்பாக தேவர் சாதியைச் சேர்ந்தவர்கள்.
சென்னைக் கள ஆய்வில் இன்னும் சில சுவாரசியமான விஷயங்களும் உண்டு.
- அநேகமான குடும்பங்களின் உறவு வட்டத்தில் காதல் திருமணங்கள் நடந்திருக்கின்றன. பெரும்பாலான இளைஞர்கள் ஒன்று வேறு சாதிப் பெண்ணைக் காதலிப்பவர்களாவோ அல்லது சாதி மறுப்புத் திருமணத்தை நடத்தி வைத்தவர்களாகவோ தான் இருந்தனர்.
- திருமண வயதில் பெண்கள் இருக்கும் வீடுகளிலும் கூட சாதி மறுப்பு, காதல் திருமணங்களுக்கு ஆதரவு இருந்தது. இது போன்ற இடங்களில், கூடுதலாக “உங்கள் வீட்டில், உங்கள் பெண்ணே வேறு சாதிப் பையனைத் திருமணம் செய்து கொண்டாலும் இப்படித் தான் பேசுவீர்களா?” என்றும் கேட்டுப் பார்த்தோம். அப்போதும் அதே பதில் தான் வந்தது. அதில் கணிசமானோர், “பையனின் ஸ்டேடஸ் மட்டும் பார்ப்போம் சார். சாதி பிரச்சினையில்லை” என்று வர்க்கத்தை முன்னிறுத்தினர்.
- வர்க்கம், சாதி, பாலினம், வயது என்று எந்த வேறுபாடுகளும் இன்றி ராமதாசை சகலரும் கரித்துக் கொட்டினர். பாட்டாளி மக்கள் கட்சியை சாதிக் கட்சி என்று தூற்றினர். அரசியல் ரீதியாக விவரம் தெரிந்த சில வன்னியர்கள் ராமதாசின் ஆரம்பகால சவடால்களையும், தற்போதைய பல்டிகளையும் ஒப்பிட்டுப் பேசினர்.
- ஆச்சரியப்படும் விதமாக பலரும் திருமாவளவனை தலித் தலைவராக அறிந்திருக்கவில்லை; தமிழ் தேசிய அரசியல்வாதியாகப் பார்க்கின்றனர். ‘ஈழத் தமிழர்களுக்காக ஏதோ செய்யும்’ தலைவர் என்று இவர்கள் திருமாவைப் பற்றிச் சொல்கிறார்கள். தேவர் சாதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே திருமாவைப் பற்றி அவ்வாறு குறிப்பிட்டதோடு, தனக்கு மிகவும் பிடித்தமான தலைவர் இவர் என்றும் தெரிவித்தார்.
கடுமையான பிற்போக்குக் கருத்துக்கள் வரக் கூடும் என்றே நாங்கள் ஆரம்பத்தில் எதிர்பார்த்திருந்தோம். அதிலும், வன்னியர்களில் சிலராவது ராமதாசை கேள்விக்கிடமின்றி ஆதரிக்கக் கூடும் என்று நினைத்தோம். தாக்குதல் நிலையில் எவராவது பேசினால் அதை எப்படிக் கையாள்வது என்று விரிவாகத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதற்கெல்லாம் மக்கள் எங்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை.
காலை ஏழு மணிக்குத் துவங்கி நாள் முழுவதும் அலைந்து திரிந்ததில் எமது தோழர்கள் உடல் அளவில் சோர்வடைந்திருந்தாலும், தங்கள் அனுபவங்களை விவரித்த போது அவர்களிடம் எல்லையில்லாத உற்சாகம் கரை புரண்டோடியது. ஆதிக்க சாதி வெறிக்கு எதிர்காலம் இல்லை என்பதை நேரடியாகக் கண்டதில் அவர்கள் அளவிலாத மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
“காலம் மாறிப் போச்சுங்க; இனிமேட்டு ஒன்னியும் செய்ய முடியாது”
அடுத்து சென்னை நகரத்தின் வெளியே சுமார் ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சிறு நகரம் ஒன்றை அடுத்துள்ள கிராமங்களைத் தேர்ந்தெடுத்தோம். இது கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டிய பகுதி. இப்பகுதியின் மக்கள் தொகையில் வன்னியர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் சரிபாதியாக உள்ளனர். இவ்விரு பிரிவினரிடையே சாதிக்கலப்பு நிகழ சாத்தியங்கள் அதிகமுள்ள பகுதி. மட்டுமின்றி, விடுதலைச் சிறுத்தை கட்சியிலும், பா.ம.க.விலும் உள்ளூர் மட்டத் தலைவர்கள் பலரும் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டப்பஞ்சாயத்துகளில் அவ்வப்போது உரசிக் கொள்ளும் வாய்ப்பு உள்ள பகுதி இது.
இந்தப் பகுதியிலிருந்து கிடைத்த ஆய்வு முடிவுகள் சென்னை முடிவுகளில் இருந்து பெருமளவுக்கு மாறுபடவில்லை.
ஊரக விபரங்கள்
காதல் மற்றும் சாதி மறுப்புத் திருமணங்களை ஏற்றுக்கொள்ளும் நிலையில் கணிசமான பேர் இல்லை என்றாலும், பெரும்பான்மையோர் சாதி மறுப்புத் திருமணஙகளை ஏற்றுக்கொள்ளும் நிலையிலேயே உள்ளனர்.
46 சதவீதம் பேர் சாதி மறுப்புத் திருமணங்களை நேரடியாக வரவேற்றுப் பேசினார்கள். மேலும் 25 சதவீதம் பேர் ‘காலம் மாறி விட்டது; இதற்கு மேல் காதலைத் தடுப்பதோ, சாதி மறுப்புத் திருமணங்களை நிறுத்துவதோ சாத்தியமில்லை’ என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். சுமார் 29 சதவீதம் பேர் மட்டுமே காதல் திருமணங்களை எதிர்த்தனர்.
ஒட்டு மொத்தமாக சுமார் 82 சதவீதம் பேர் தர்மபுரி சம்பவத்தை மிகக் கடுமையாக கண்டித்தனர். சுமார் 27 சதவீதம் பேர் சாதிச் சங்கங்கள் தேவை என்கிற கருத்தைக் கொண்டிருந்தாலும் சுமார் 94 சதவீதம் பேர் சாதிச் சங்கங்கள் விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக்களுடைய அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு போராட வருவதில்லை என்றே தெரிவித்தனர்.
இளைஞர்கள் பெரும்பாலும் காதல் மற்றும் சாதி மறுப்புத் திருமணங்களை வரவேற்றனர்.
இந்தப் பகுதியில் முன்பு வன்னியர் சங்கத்தின் கிளைத் தலைவராக பொறுப்பு வகித்த இளைஞர் ஒருவரே சாதி மறுப்புத் திருமணம் செய்துள்ள தகவலைக் கேள்விப்பட்டு அவரைச் சந்தித்தோம். ராமதாஸ் குறிப்பிடுவது போல் நாடகக் காதல் என்றெல்லாம் இருக்க வாய்ப்பே இல்லை என்று மறுத்தவர், காடுவெட்டி குருவின் பேச்சை கடுமையாக விமர்சித்தார். அவரிடம் ராமதாசின் பேச்சுகள் பற்றி குறிப்பிட்டுக் கேட்டோம், “அவர் சொல்வது போல் ஜீன்ஸ், டீ சர்ட் போட்டு மயக்குவது உண்மையென்றால், வன்னிய பெண்கள் அந்தளவுக்கு இளிச்சவாயர்கள் என்று ராமதாஸ் சொல்கிறாரா?” என்று கிண்டலாகக் கேட்டார்.
அவரிடம் பேசி விட்டு சமீபத்தில் கட்டப்பட்ட ஒரு புது வீட்டில் நுழைந்தோம். இன்னும் மர வேலைகள் முடியவில்லை; முகப்பிலேயே தச்சு தொழிலாளி ஒருவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். வீட்டின் உரிமையாளர் தனது மகனுக்கு ரூ 50 லட்சம் கொடுத்து மருத்துவப் படிப்புக்கான சீட்டு வாங்கியதாகவும், அடுத்து மேற்படிப்பு படிக்க இன்னும் ஒரு கோடி ரூபாய் திரட்டி இருப்பதாகவும் நாங்கள் கேட்காமலேயே பெருமையாக சொல்லிக் கொண்டார். தச்சுத் தொழிலாளி இயல்பாக ஜனநாயகப் பூர்வமாகப் பேசினார். தருமபுரி சம்பவத்தைக் கண்டித்ததோடு, சாதி மறுப்புத் திருமணங்களையும் ஆதரித்தார். ஆனால் வீட்டு உரிமையாளரோ, அசப்பில் காடுவெட்டிக் குருவைப் போன்றே பேசினார். “எங்க தலைவராவது சொல்றதோடு விட்டாரு… நானா இருந்தா வெட்டி எறிந்திருப்பேன்” என்று ஆத்திரப்பட்டார்.
சாதி மறுப்புத் திருமணத்தை எதிர்ப்பதோடு, வன்னியர் சங்க ஆதரவோடு பேசுபவர்கள் அநேகமாக இவரைப் போல ரியல் எஸ்டேட் மூலம் புதுப் பணக்காரர்களாக ஆனவர்களாகவோ, பெரும் நிலச்சுவான்தார்களாகவோ இருக்கிறார்கள். கூடவே இவர்களை அண்டிப் பிழைக்கும் முறையான வேலைகளுக்குச் செல்லாத உதிரிகளும், லும்பன்களும் சாதி அராஜக அரசியலை ஆதரிக்கிறார்கள். இந்த இரண்டு வகைப்பட்டவர்களைத் தவிர்த்து பெரும்பான்மையான உழைக்கும் மக்களிடம் சாதிக்கு எதிரான கருத்துக்களும், சாதிச் சங்கங்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்கிற கருத்துக்களையுமே காண முடிந்தது.
ஓரளவுக்கு நடுத்தர வயதுடையோர், தாங்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் காதலைத் தடுப்பதோ, சாதிக் கலப்பைத் தடுப்பதோ சாத்தியமில்லை என்பதை வேறு வழியின்றி ஏற்றுக்கொள்கிறார்கள்.
நாங்கள் சந்தித்த ஒரு நடுத்தர வயதுப் பெண்ணின் மூத்த மகன் சமீபத்தில் தான் சாதி மறுப்புத் திருமணம் புரிந்துள்ளார். ஆறு மாதப் போராட்டத்திற்குப் பிறகு தற்போது சேர்த்துக் கொண்டதாகத் தெரிவித்தார். “என்ன இருந்தாலும் கொள்ளி வைக்கப் போறவன் அவன் தானே தம்பி? சாதியா பெத்த புள்ளையான்னு பாத்தா புள்ள தான் தம்பி பெரிசா தோணிச்சி” என்றார். அவரிடம், “இனிமேல் நீங்கள் காதல் திருமணங்கள் சரி என்று ஒப்புக் கொள்வீர்களா?” என்று கேட்டோம். “இல்லை” என்றே பதிலளித்தார்.
மேற்கொண்டு பேசிய போது, பிள்ளைகள் வேலைகளுக்குச் செல்லும் இடங்களில் பல்வேறு சாதிக்காரர்களும் வருவதாகவும், அங்கே பிறருடன் பழக்கம் ஏற்படுவதைத் தடுப்பது சாத்தியமில்லை என்றும், ஆனாலும் பழைய விழுமியங்களைப் பிள்ளைகளுக்கு சின்ன வயதிலிருந்தே ஒழுங்காக சொல்லிக் கொடுத்து வளர்த்தால் காதலில் இருந்து அவர்களைக் காப்பாற்றி விடலாம் என்றும் தெரிவித்தார். அப்படியும் ஒருவேளை காதலித்து வேறு சாதிப் பெண்ணையோ, பையனையோ திருமணம் செய்து விட்டால் அதற்கு மேல் ஒன்றும் செய்யக் கூடாது என்றும் தெரிவித்தார். விடைபெறும் சமயத்தில், “சின்னஞ் சிறுசுக தம்பி! இனிமேட்டு எல்லாம் இவங்க காலம் தானே; எங்க காலமெல்லாம் எப்பவோ போயாச்சு தம்பி” என்று சொல்லி வழியனுப்பினார்.
தொகுப்பாக, பெரும்பான்மை உழைக்கும் மக்களிடையே சாதி வேறுபாடுகள் மங்கி வருவதை நேரடியாகக் கண்டுணர முடிந்தது. இன்றைய நிலையில் ராமதாசுக்கு வன்னியர்களிடையே குறிப்பிடத் தகுந்த ஆதரவு இல்லை என்பதும், இருக்கும் சொற்ப ஆதரவும் அவருக்கு தேர்தல் டெபாசிட்டைக் கூட தக்கவைத்துக் கொள்ள உதவாது என்பதும் இந்த ஆய்வின் முடிவுகள் சுட்டும் உண்மை. எனில், இவர்கள் வெறும் காமெடியர்கள் மட்டும் தானா? சிரித்து விட்டுக் கலைந்து விடலாமா?
ராமதாஸ்-காடுவெட்டி குரு : சமூகத்தில் பரவும் புற்றுநோய் செல்கள்..!
உலகமயமாக்கலின் விளைவாய் நகரமயமாதல் மேலும் மேலும் அதிகரித்து வருகின்றது. ஒரு பக்கம் மக்கள் தங்கள் வாழ்விடங்களில் இருந்து இடம் பெயரச் செய்யும் பொருளாதாரப் போக்குகள் பல்வேறு சமூகங்களை மேலும் மேலும் நெருங்கி வரச் செய்துள்ளது. இதன் விளைவாய், நகரங்களில் உழைக்கும் வர்க்கத்தினரிடையே சாதிவாரியான பிரிவினைகள் மங்கி வருவதைக் கண்கூடாய்ப் பார்க்க முடிகிறது. ஒரே தரமான வாழ்க்கை வாழும் மக்கள் பொருளாதாரத்தின் அடிப்படையிலேயே தங்களை இனம் பிரித்துப் பார்க்கிறார்கள்.
நகரங்களைப் பொறுத்த வரை புதிய பொருளாதாரக் கொள்கைகளின் பலன்களை ருசித்தவர்களாக ஐ.டி சேவைத் துறையைச் சேர்ந்தவர்களும், புதிய ரக உயர்நடுத்தர வர்க்கத்தினரும் இருக்கிறார்கள் என்றால், கிராமங்களில் அன்றைய நிலச்சுவான்தார்களும், இன்றைய ரியல் எஸ்டேட் பணக்காரர்களும் இருக்கிறார்கள். ஒட்டுமொத்த சமூகத்தில் சிறுபான்மையினராக உள்ள இவர்களே சுயசாதி அபிமானம் கொண்டவர்களாக உள்ளனர். ‘உயர்’ சாதி நடுத்தர வர்க்கத்து இளைஞன் முகநூலில் தனது சாதி அபிமானத்தை வெளிப்படுத்தத் தயங்குவதில்லை.
ஊரகப் பகுதிகளில் தரகு வேலைகளால் உருவெடுத்த திடீர் பணக்காரர்களுக்கும், பழைய நிலச்சுவான்தார்களுக்கும் கட்டப்பஞ்சாயத்து வேலைகளுக்காகவும், தொழில் போட்டியைச் சமாளிக்கவும் சாதிச் சங்கங்களின் ரவுடித்தனம் தேவைப்படுகிறது. பதிலுக்கு சாதிச் சங்கங்களை வாழவைக்கும் புரவலர்களாக இவர்கள் இருக்கின்றார்கள். வேலையற்ற உதிரிகளையும், லும்பன்களையும் தங்களது அடியாட்களாகச் சேர்த்துக் கொள்கின்றனர். மொத்த சமூகத்தில் இவர்கள் சிறுபான்மை என்றாலும் ஆபத்தானவர்கள்.
முதலில் பொய்யான கதைகளை இட்டுக் கட்டுவது, பின் அதையொட்டி அவதூறுகளைப் பரப்புவது, தொடர்ந்து சிறு சிறு கலவரங்களைத் தூண்டுவது, அதனடிப்படையில் சமூகத்தைப் பிளவுபடுத்துவது – அதன் மூலம் அரசியல் ஆதாயங்களை அறுவடை செய்வது என்கிற இந்துத்துவ பாணியைத் தற்போது ஆதிக்க சாதிச் சங்கங்களும், அவர்களின் அரசியல் அமைப்புகளும் கையிலெடுத்துள்ளன. இதை மிகக் கச்சிதமாக திட்டமிட்ட ரீதியில் வன்னியர் சங்கம் செய்து வருகிறது.
முதலில் மாமல்லபுரம் கூட்டத்தில் காடுவெட்டியின் பேச்சு, பின் வன்னியர்கள் வாழும் பகுதிகளுக்கு தொடர்ச்சியாக சென்று பிரச்சாரம், தொடர்ந்து தர்மபுரி கலவரம், ஸ்ரீமுஷ்ணத்தில் தலித் இளைஞர் படுகொலை – இப்போது ராமதாஸ் தலைமையில் 51 அமைப்புகளைக் கொண்ட கூட்டணி. வேகமாக முளைவிடத் துவங்கியுள்ள நச்சுக் காளான்களை இந்த மட்டத்திலேயே ஒழித்துக்கட்டத் தவறினால், நாளைய தமிழகம் சாதித் தாலிபான்களின் கைகளில் விழுவதைத் தவிர்க்கவே முடியாது.
வன்னியர் சாதிச் சங்கம் உள்ளிட்ட ஆதிக்க சாதிக் கூட்டணியை எதிர்த்து நிற்கும் அரசியல் சித்தாந்த பலமோ, தார்மீக பலமோ தலித் அமைப்புகளிடம் இல்லை என்பதைத் தான் திருமாவின் சரணாகதிப் பேச்சுகள் சுட்டிக் காட்டுகின்றன. ஆதிக்க சாதிவெறி என்பது அதே சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களுக்கே எதிரானது என்பதை உணர்த்தி, வர்க்க ரீதியில் அம்மக்களை அணி திரட்டுவதால் மட்டுமே இந்தக் கூட்டணியை வீழ்த்த முடியும். அதற்கு கடந்த காலத்தில் தர்மபுரியே முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
- வினவு செய்தியாளர் குழு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக