புதன், 6 பிப்ரவரி, 2013

தலைமைச் செயலர்கள் ஏன் கோர்ட்டில் ஆஜராகவில்லை? வாரன்ட் பிறப்பிக்க வேண்டியிருக்கும்

 புதுடில்லி : "குழந்தைகள், மர்மமான முறையில் காணாமல் போவது தொடர்பான வழக்கு விசாரணையில், தமிழகம், குஜராத் மாநில தலைமைச் செயலர்கள், கோர்ட்டில் ஆஜராகாதது கண்டனத்துக்குரியது. அடுத்த முறை, கோர்ட்டில் ஆஜராகவில்லை எனில், அவர்களுக்கு எதிராக, ஜாமினில் வெளிவர முடியாத, வாரன்ட் பிறப்பிக்க வேண்டியிருக்கும்' என, சுப்ரீம் கோர்ட், கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. "பச்சோபன் பச்சாவோ அந்தோலன்' என்ற தன்னார்வ அமைப்பு, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பொது நல மனு: நம் நாட்டில், ஏராளமான சிறுவர், சிறுமியர், மர்மமான முறையில், காணாமல் போகின்றனர். 2008-2010 காலத்தில் மட்டும், நாடு முழுவதும், இரண்டு லட்சம் குழந்தைகள், காணாமல் போயுள்ளன. பெரும்பாலான குழந்தைகள், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றன; குழந்தை தொழிலாளர்களாக மாற்றப்படுகின்றன. இதை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனுவின், முந்தைய விசாரணையின்போது, "அனைத்து மாநில அரசுகளும், இந்த விவகாரத்தில், தற்போதைய நிலவரம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்'என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த மனு, தலைமை நீதிபதி, அல் தாமஸ் கபீர் தலைமையிலான, சுப்ரீம் கோர்ட், "பெஞ்ச்' முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: "குழந்தைகள் காணாமல் போனது தொடர்பாக, அனைத்து மாநிலங்களும், தற்போதைய நிலவரத்தின் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டிருந்தோம். பெரும்பாலான மாநிலங்கள், இன்னும் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. இதன்மூலம், குழந்தைகள் விஷயத்தில், யாருக்கும் அக்கறை இல்லை என்பது தெரிகிறது;
இது, கவலைக்குரிய விஷயம்.முட்டாளாக்க நினைக்கின்றனர் : கடந்த விசாரணையின்போது, கோவா, ஒடிசா,அருணாச்சல பிரதேசம், குஜராத், தமிழகம் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலர்கள், கோர்ட்டில் ஆஜராகி, விளக்கம் அளிக்க வேண்டும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், கோவா மற்றும் ஒடிசா மாநில தலைமைச் செயலர்கள் தான், ஆஜராகினர்; மற்ற மூன்று மாநில தலைமைச் செயலர்கள் ஆஜராகவில்லை. இதன்மூலம், கோர்ட்டை, முட்டாளாக்க நினைக்கின்றனர். நேரில் ஆஜராவதிலிருந்து, சம்பந்தபட்ட தலைமைச் செயலர்கள் தரப்பில், விலக்கு கேட்கப்படுகிறது; இந்த விஷயத்தில், யாருக்கும் விலக்கு அளிக்க முடியாது. அவர்கள் ஏன் கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவர்களுக்கு எதிராக, ஜாமினில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பிக்க வேண்டுமா? கோர்ட்டின் உத்தரவை, அவர்கள் செயல்படுத்தியிருக்க வேண்டும். அடுத்த முறை, ஆஜராகவில்லை எனில், ஜாமினில் வெளிவர முடியாத, வாரன்ட் பிறப்பிக்க வேண்டியிருக்கும்.
உத்தரவு சாதாரணமா? : தலைமைச் செயலர்கள் சார்பில், அவர்கள் தான், ஆஜராக வேண்டும்; அவர்களின் பிரதிநிதிகள் ஆஜராக கூடாது. குஜராத் தரப்பில், தலைமைச் செயலர், தற்போது தான், நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், அதனால் தான், அவர்ஆஜராக முடியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த காரணத்தை ஏற்க முடியாது. எப்போது, நியமிக்கப்பட்டார் என்பது முக்கியமல்ல; ஏன் அவர் ஆஜராகவில்லை என்பதே எங்களின் கேள்வி. முந்தைய விசாரணையின்போது, கோர்ட் பிறப்பித்த உத்தரவை, இவர்கள் மிகச் சாதாரண விஷயமாக கருதியுள்ளனர். குழந்தைகள் காணாமல் போவது குறித்த, நிலவர அறிக்கையை, இந்த வழக்கின் அடுத்த விசாரணை தேதியான, வரும், 19ம், தேதிக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். இது தொடர்பாக, மத்திய அரசின், குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாடு, சமூக நலம், உள்துறை ஆகிய அமைச்சகங்கள் சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வாய்தா ராணியின் கீழ் பணி புரிபவர்கள் வேறு என்ன செய்வார்கள், ராணியை பின் பற்றுகிறார்கள். இதே கண்டிப்பை சுப்ரீம் கோர்ட் ராணியிடமும் காட்டினால் நன்றாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக