புதன், 20 பிப்ரவரி, 2013

யார் இந்து? ஓடும் ரயிலில் பார்ப்பனர்களோடு சண்டை !

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வழக்கின் இறுதி விசாரணை பிப்ரவரி 20ம் தேதி உச்சநீதி மன்றத்தில் நடக்கிறது.
இது பெரியாரின் நிறைவேறாத ஆசை. நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக பார்ப்பனர்கள் இதை சட்ட ரீதியாக தடுத்து வருகிறார்கள். பெரியார் பிறந்த மண் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் தமிழகத்திலிருந்து இதை எதிர்த்து எந்த அமைப்பும் வழக்காடவில்லை.
ஒரு பக்கம் தடைகோரி பார்ப்பனர்கள். இன்னொரு பக்கம் பார்ப்பனர்களை பகைத்துக்கொள்ளாமல் வாதிடும் தமிழக அரசு. எதிர்த்தரப்பாக புரட்சிகர அமைப்புகள். இந்த மூன்று பேரைத் தவிர இந்த வழக்கில் வேறு யாரும் தங்களை இணைத்துக் கொள்ளவில்லை. பார்ப்பனர்கள் தரப்பில் பணத்தை அள்ளி இறைக்க ஆயிரம் பேர் இருக்கிறார்கள். பெரியார் படத்தையும் கோடிகளில் பணத்தையும் வைத்துக் கொண்டிருப்பவர்களோ அமைதியாக இருக்கிறார்கள் ! இந்நிலையில் ம.க.இ.க உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வழக்கு நிதி திரட்டி வருகின்றனர். vinavu,com

சென்னை மின்சார இரயிலில் ஒரு முழு நாள் செய்யப்பட்ட பிரச்சாரம் மற்றும் நிதிவசூல் அனுபவம் ஒன்றை வாசகர்களுக்காக இங்கு தருகிறோம்.
ஓடுகின்ற மின்சார இரயிலில் தோழர்கள் குழுக்களாக பிரிந்துகொண்டு ஒவ்வொரு பெட்டியாக ஏறி மக்களிடையே வழக்கைப் பற்றி விளக்கி கூறிய பிறகு நிதி கோருவார்கள். பிரச்சாரத்தின் போது மக்களிடையே பேசிய உரையின் சுருக்கம் இது தான்.
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
தேர்தல் பாதை திருடர் பாதை! புரட்சி ஒன்றே மக்கள் விடுதலைப் பாதை! என்கிற முழக்கத்தோடு செயல்பட்டு வரும் புரட்சிகர நக்சல்பாரி அமைப்பான மக்கள் கலை இலக்கியக் கழகத்திலிருந்து வருகிறோம். வணக்கம்.
இந்த நாட்டில் பெரும்பான்மை மக்கள் இந்துக்கள் என்கிறார்கள், சரி தான், ஆனால் ஒரு மதம் என்கிற வகையில் மதங்கள் பக்தனுக்கு வழங்கக்கூடிய அடிப்படையான வழிபாட்டு உரிமையை இந்து மதம் அனைத்து இந்துக்களுக்கும் வழங்கியிருக்கிறதா என்றால் இல்லை. பக்தன் தனது கடவுளை தொட்டு வணங்கி பூஜிக்கும் உரிமையை இந்து மதம் அனைவருக்கும் வழங்கவில்லை. நீங்கள் கோவில் வாசல்படி வரை தான் போக முடியும், அதற்கு மேல் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது, மீறி எடுத்து வைத்தால் அங்கு வன்முறை வெடிக்கும். இன்றுவரை ஆகம விதிகளின்படி அமைந்த கோவில் கருவறைக்குள் பார்ப்பனர்களைத் தவிர வேறு எந்த இந்துவும் நுழைய முடியாது. இது தான் இந்து மதம். இரண்டாயிரம் ஆண்டுகளாக இது தான் நிலைமை. இதை எதிர்த்து தான் தந்தை பெரியார் 1970-ல் கருவறை நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார்.
உடனே அன்றைக்கு இருந்த தி.மு.க அரசு அனைவரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தது. பார்ப்பனர்கள் அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தடையாணை வாங்கினார்கள். தமிழக அரசு அதற்கெதிராக எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. அதன்பிறகு கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் கழித்து 2006 இல் தி.மு.க அரசு அனைவரையும் அர்ச்சகராக்கும் அரசாணையை வெளியிட்டு, அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி ஒன்றையும் துவங்கியது. அதில் பல்வேறு சாதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்க்கான மாணவர்கள் படித்தார்கள். அவர்களில் 206 மாணவர்கள் முறையாக ஆகம விதிகளை கற்று, சமஸ்கிருத வேதங்கள், ஸ்லோகங்களை கற்று தீட்சையும் பெற்று கோவில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட இருந்த தருணத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் பார்ப்பனர்கள் மறுபடியும் உச்சநீதி மன்றத்தில் நியமனத்திற்கு தடை வாங்கினார்கள்.
இதன் மூலம் இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? என்னைத் தவிர எவனும் கோவில் கருவறைக்குள் வரக்கூடாது என்கிறார்கள். பொதுவாக சாதியைப் பற்றி பேசினால் பலரும் இப்பல்லாம் யார் சார் சாதி பார்க்கிறாங்க என்று கேட்கிறார்கள். இதோ இது தான் ஆதாரம், இது தான் சான்று. இதற்கு பெயர் என்ன? அப்பட்டமான, பச்சையான சாதிவெறி இல்லையா இது? இவர்கள் தான், இந்த பார்ப்பனர்கள் தான் வெறித்தனமாகவும், பார்ப்பன கொழுப்பு கொப்பளிக்கவும் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள். கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டை எதிர்க்கும் இவர்கள் தான் கோவில் கருவறைக்குள் முழு இடஒதுக்கீடும் தமக்கே வேண்டும் என்று ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்துக்களில் பார்ப்பனர்கள் வெறும் மூன்று சதவிகிதம் தான். மூன்று சதவிகிதம் உள்ள பார்ப்பன கும்பல் மிச்சமுள்ள தொண்ணூற்று ஏழு சதம் இந்துக்களை, அதாவது பெரும்பான்மையான இந்துக்களை கோவில் கருவறைக்குள் விட மறுப்பது ஏன்? இது தான் மிக முக்கியமான கேள்வி. நீங்கள் இந்தியாவின் ஜனாதிபதியாகலாம், பிரதமர் கூட ஆகிவிடலாம் ஆனால் கோவில் கருவறைக்குள் நுழைய முடியாது ! ஏனென்றால் பெரும்பான்மை மக்களை இந்து மதம் சூத்திரன், பஞ்சமன் என்கிறது. சூத்திரன் என்றால் என்ன தெரியுமா? வேசி மக்கள் என்று அர்த்தம். அந்த வேசி மக்கள் சாமியை தொட்டால் சாமி தீட்டாகி பவரை இழந்துவிடும் என்கிறான் பார்ப்பான். அதனால்தான் பிறப்பிலேயே உயர்ந்தவனாகிய என்னைத்தவிர எவனும் உள்ளே வரக்கூடாது என்கிறார்கள்.
இது செருப்பால் அடித்தது போல் இல்லை? இது அவமானமாகவும், அசிங்கமாகவும் இல்லையா? இந்த நாடு வல்லரசு ஆகிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள், உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்கிறார்கள், ஆனால் சாமியை கும்பிடுவதற்குக் கூட இங்கு ஜனநாயகம் இல்லை.
இங்குள்ள கோவில்களில் எல்லாம் ஆகமவிதிப்படி தான் எல்லாம் நடக்கிறதா ? கோவில்களையே லாட்ஜாகவும், டாஸ்மாக் பாராகவும் பயன்படுத்தும் கிரிமினல் சங்கராச்சாரி, தேவநாதன், தில்லை தீட்சிதர்கள் எல்லாம் ஆகமவிதிகளின் படி தான் நடந்து கொள்கிறார்களா?
இது தமிழனுக்கு நேர்ந்த இழிவு மட்டுமல்ல, தமிழுக்கும் நேர்ந்த இழிவு. தமிழனைப் போல தமிழ் மொழியும் கருவறைக்குள் நுழைய முடியாது. தமிழர்கள் வேசி மக்கள் என்றால் அவர்களின் மொழி வேசி மொழி, நீஷ பாஷை என்று கூறி கருவறைக்குள் விட மறுக்கிறது பார்ப்பனியம்.
எனவே யார் யாரெல்லாம் தன்னை இந்து என்று கருதிக்கொள்கிறார்களோ, யார் யாரெல்லாம் தமிழ் என்னுடைய தாய் மொழி என்று கூறுகிறார்களோ அவர்களுடைய பிரச்சினை இது. உங்களுடைய பிரச்சினை இது. ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் நாங்க தான் அத்தாரிட்டின்னு பேசுகின்ற பி.ஜே.பி.யோ இந்து முன்னணியோ அல்லது வேறு எந்த இந்து அமைப்புகளுமோ இந்தப் பிரச்சினையில் தலையிடவில்லை. அவர்கள் அமைதியான முறையில் ஆலையத் தீண்டாமையை அங்கீகரிக்கிறார்கள். நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகள் தான் இந்தப்பிரச்சினைக்காக போராடி வருகிறார்கள்.
வருகின்ற இருபதாம் தேதி இந்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் இறுதி விசாரணைக்கு வருகிறது. பார்ப்பனர்களின் தரப்பில் பராசரன் என்கிற மூத்த வழக்குரைஞர் ஆஜராகிறார். அவருடைய வாதங்களை முறியடிக்க வேண்டுமானால் அவருக்கு இணையான வழக்குரைஞர்களை நியமிக்க வேண்டியுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டுக்கு எல்லோரும் சாதாரணமாக போய்விட முடியாது. ஒரு வழக்குரைஞரை நியமித்து அவர் ஒரு முறை எழுந்து நின்று வாதாடினாலே சில பல லட்சங்களை எடுத்து வைக்க வேண்டியிருக்கும். பார்ப்பனர்களுக்கு பல லட்சங்களை கொட்டி அழுவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் முதலாளிகளிடமோ, கந்து வட்டிக்காரர்களிடமோ, சமூக விரோதிகளிடமோ போய் கையேந்துபவர்கள் அல்ல. மாறாக அனைத்து போராட்டங்களுக்கும், வழக்குகளுக்கும் மக்களையே சார்ந்து நிற்கிறோம். உழைக்கும் மக்கள் வழங்கும் நிதியிலிருந்து தான் எமது போராட்டங்களையும் வழக்குகளையும் நடத்துகிறோம். அந்த வகையில் இந்த வழக்கை நடத்துவதற்கான நிதியை கோரி உங்கள் முன்னால் வந்திருக்கிறோம். அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதன் மூலம் சாதி தீண்டாமையை ஒழித்துக்கட்ட உங்களையும் எங்களோடு இணைத்துக்கொள்ளுங்கள். சாதி தீண்டாமையை ஒழித்துக்கட்ட நிதியளித்து ஆதரவு தாருங்கள். நன்றி.
என்று உரையாற்றிய பிறகு தமது பங்கேற்பை உறுதிபடுத்தும் வகையில் மக்கள் நிதியளிப்பார்கள். இந்த நிதிவசூல் பிரச்சாரம் எந்த தடையுமின்றி நடந்துவிடவில்லை. இந்த பிரச்சாரம் மட்டுமல்ல எந்த பிரச்சாரமும் அப்படி நடப்பதில்லை. பல்வேறு இடையூறுகள், தடைகள், சண்டை சச்சரவுகளைக் கடந்து தான் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் நிதிவசூல் நடத்தப்படுகிறது. சிறப்பாக இந்த பிரச்சாரம் நேரடியாக இந்து மதத்தின் தீண்டாமையை தாக்கக்கூடியதாக இருப்பதால் வரவேற்பும் எதிர்ப்பும் சேர்ந்தே இருக்கிறது.
இந்து முன்னணி லும்பன்கள், ஆர்.எஸ்.எஸ் இல் இல்லாத ஆர்.எஸ்.எஸ் காரர்கள், பார்ப்பனியத்தை ஆதரிப்பவர்கள், பார்ப்பனர்கள், கருப்பு பார்ப்பனர்கள் என்று பல தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பு வந்தது. இவர்களைத் தவிர பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் விசயத்தை கூர்ந்து கவனித்து மகிழ்ச்சியோடு நிதியளித்தார்கள். பார்ப்பனர்களையும் கருப்பு பார்ப்பனர்களை எதிர்த்து கேள்வி எழுப்பினார்கள்.
ரு பெட்டியில் தோழர் ஒருவர் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு பார்ப்பனரும் அவரோடு ஒரு கருப்பு பார்ப்பானரும் சேர்ந்து கொண்டு இந்து மதத்தைப் பற்றி பேசக்கூடாது என்று சண்டைக்கு வந்தனர்.
“ஏய் நிறுத்துடா மதத்தை பத்தியும், சாதியை பத்தியும் இங்க பேசாதே!” என்றனர்.
தோழர்கள் பதிலளிப்பதற்குள் தரையில் அமர்ந்துகொண்டிருந்த உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவர் பாய்ந்துகொண்டு வந்தார்
“ஏன் பேசக்கூடாது, அவனுங்க பன்ற அட்டகாசம் தாங்க முடியலய்யா, காது குத்திலிருந்து கல்யாணம் வரைக்கும் எல்லாத்துக்கும் ஐயாயிரம் பத்தாயிரம்னு காசப் புடுங்குறானுங்க, கொள்ளையடிக்கிறானுங்க. அதை பேசக் கூடாதா ? அவங்கள பேசக்கூடாதுன்னு சொல்ல நீ யாருய்யா? தம்பி நீ பேசுப்பா” என்றார். இரண்டு பேரும் கப்சிப் ஆகிவிட்டார்கள். அதோடு அடுத்த ஸ்டேஷனில் இறங்கியும் போய் விட்டனர்.
ன்னொரு பெட்டியில் பேசிக்கொண்டிருந்த போது குழந்தை குட்டிகளோடு வந்திருந்த நடுத்தர வயதைச் சேர்ந்த ஒருவர் எழுந்து நின்று ஆவேசமாகக் கத்தத் துவங்கி விட்டார். “இந்து மதத்தை பத்தி நீ எப்படி பேசலாம், வெளிய போடா நாயே, டிரெய்ன விட்டு கீழ இறங்குங்கடா” என்றார். தோழர்கள் பொறுமையாக விளக்கமளித்தனர். இருந்தும் அவர் அடங்கவில்லை.
“சரி நாங்கள் பேசுவதைப் போல நீங்களும் உங்கள் கருத்தை மக்கள் மத்தியில் நின்று பேசுங்கள்” என்றனர். அதற்கும் அவர் சம்மதிக்கவில்லை. அத்துடன் “தே.பசங்களா, மகனுங்களா” என்றெல்லாம் கெட்ட வார்த்தைகளில் ஏசத்துவங்கிவிட்டார். அதன்பிறகு தோழர்கள் அவரை நையப்புடைத்து விட்டார்கள். அடி உதைகளால் அல்ல வார்த்தைகளால். நாலா பக்கமும் சூழ்ந்துகொண்டு அவரை நோக்கி தோழர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திக்குமுக்காடிப்போனார்.
இதற்கிடையில் அவருடைய வேட்டி வேறு அவிழ்ந்துவிட்டது. வேட்டியை சரி செய்வதா பதிலளிப்பதாக என்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார். அவரை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்திவிட்டு தோழர்கள் அடுத்த ஸ்டேஷனில் இறங்கினர்.
தொண்ணூற்று ஒன்பது சதம் பார்ப்பனர்கள் வாயையே திறக்கவில்லை. தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தனர்.
ரு பெட்டியில் ஆறு ஏழு பார்ப்பனர்கள் அமர்ந்துகொண்டிருந்தனர். அவர்களில் நீட்டாக பேண்ட் ஷ்ர்ட் அனிந்து உச்சிக்குடுமியுடன் அமர்ந்துகொண்டிருந்த ஒரு நடுத்தர வயது பார்ப்பனர் துண்டறிக்கையை கேட்டு வாங்கி படித்துக்கொண்டிருந்தார். அவருக்கு எதிரில் ஒருவர் அமர்ந்திருந்தார். அப்போது தான் டாஸ்மாக்கிலிருந்து வந்திருக்கிறார் என்பது அவரைக் கடந்து சென்ற போது நன்றாக தெரிந்தது.
பேசிக்கொண்டிருந்த தோழர் ’பார்ப்பனக் கும்பல்’ என்ற வார்த்தையை உச்சரித்ததும் “டேய்” என்றார் லும்பன் பார்ப்பனர். அதை சட்டை செய்யாமல் தோழர் தொடரவே அடுத்ததாக “வேண்டாம்… வேண்டாம்..” என்று இழுத்தார். உடனே அருகில் நின்று கொண்டிருந்த மற்றொரு தோழர் “என்ன வேண்டாம்.. என்ன..” என்று கேட்டுக்கொண்டே அருகில் நெருங்கியதும் உச்சிக்குடுமி பார்ப்பனர் உதிரிப் பார்ப்பனரை பார்த்து ’எதுக்கு சும்மா டென்ஷன் ஆகிறேள்’ என்றார் ஏதோ ஒரு அர்த்தத்துடன். அத்துடன்டு லும்பன் பார்ப்பனர் நிதானமாக பேச முடியாத நிலையிலும் இருந்ததால் வாயை மூடிக்கொண்டார்.
ன்னொரு கம்பார்ட்மெண்டில் உலகறிந்த பொறுக்கியான நித்தியானந்தாவைப் பற்றி பேசியதற்கு ஒருவர் சண்டைக்கு வந்துவிட்டார். தமிழகத்தில் நித்திக்கெல்லாம் ஆதரவாளர்கள் இருக்கிறார்களே என்று அதிர்ச்சியாக இருந்தது. அதன் பிறகு தான் “அந்தாள் நித்தியோட சாதிக்காரன் தோழர் அதனால தான் அவனுக்கு கோபம் வருது” என்றார் ஒரு தோழர்.
வேறொரு பெட்டியில் பேசி முடித்ததும் “சங்கராச்சாரியை பற்றி தப்பா பேசாதீங்க” என்றார் ஒரு பார்ப்பனர். ஏன் என்பதில் துவங்கி பல்வேறு கேள்வி பதில் மறுப்பு என்று போய்க்கொண்டிருந்த விவாதத்தில், “சரி ஜெயேந்திரரை நீங்க மகா பெரியவான்னு சொல்றீங்க அந்த மகா பெரியவா இப்போ நித்தியானந்தாங்கிற மகா பொறுக்கியை பார்த்திருக்கிறாரே அதுக்கு என்ன சொல்றீங்க” என்றதும், “அது அவரோட பர்ஸ்னல்(!) விஷயம்” என்றார். கடைசியில் “நான் என்ன சொல்ல வர்றேன்னா ஜெயேந்திரரை நீங்கள் குற்றவாளின்னு சொல்ல முடியாது ஏன்னா வழக்கு நீதிமன்றத்தில் நடந்துட்ருக்கு அவர் குற்றவாளியா இல்லையான்னு நீதிமன்றம் தான் சொல்லணும். வேணும்னா பொறுக்கின்னு சொல்லிக்கிங்க “என்றார். இவர் நூறு ரூபாய் நன்கொடையும் போட்டார். இது என்ன மாதிரி கேஸ் என்பது புரியவில்லையே என்று எண்ணிக்கொண்டே அடுத்தப் பெட்டிக்கு ஓடினோம்.
தோழர் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். பேசிக்கொண்டிருந்த போதே மூலையில் அமர்ந்திருந்த ஒருவர் விதம் விதமாக முகத்தை சுழித்துக்கொண்டிருந்தார். பிறகு நிதி கோரி உண்டியலை ஏந்திச் சென்ற போதும் “ச்சீ.. போ அந்தப்பக்கம்” என்பதைப் போல நிதி தர மறுத்து வேகமாக தலையை ஆட்டினார். அவ்வாறு தலையை ஆட்டியதில் ‘நான் மட்டுமல்ல நீங்களும் போடாதீர்கள்’ என்று மற்றவர்களுக்கும் சேர்த்து ஆட்டியதை போல இருந்தது. அந்த பெட்டியில் பேசி முடித்ததும் மதிய உணவு இடைவேளைக்காக இறங்க வேண்டும் என்பதால் அதே பெட்டியிலுள்ள இருக்கைகளில் அமர்ந்தோம். ஒரு தோழர் மட்டும் அந்த நபரை ஆரம்பத்திலிருந்தே கவனித்துக்கொண்டே இருந்தார்.
தமிழ்நாடு பார்ப்பனர்
அந்த நபருக்கு அருகில் அமர்ந்து கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் அனைவரும் நிதியளித்திருந்தனர். துண்டறிக்கையை அனைவரும் கூட்டாக சேர்ந்து வாசித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அருகில் தான் அந்த முக்கியஸ்தர் அமர்ந்துகொண்டிருந்தார். அவர் அந்த மாணவர்களிடம் “இதெல்லாம் என்னப்பா முட்டாள்தனமா இருக்கு, எல்லோரும் அர்ச்சகராகனும்னு பேசுறாங்களே இதெல்லாம் தேவையா? தேவையில்லாத வேலைப்பா” இது என்று பிரச்சாரம் செய்துகொண்டிருந்ததை அந்த தோழர் பார்த்து விட்டார்.
உடனே அனைத்து தோழர்களும் அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு மாறினர். “உங்கள் பிரச்சினையை எங்ககிட்ட சொல்லுங்க சார்” என்றதும் அவர் அதிர்ந்து போனார். இதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் தோழர்கள் இறங்காமல் அதே பெட்டியில் அமர்ந்துவிட்டதை அவர் கவனிக்கவில்லை, இறங்கிப் போய்விட்டார்கள் என்று எண்ணிக்கொண்டு தான் மாணவர்களிடம் தனது பார்ப்பன ஆதரவுப் பிரச்சாரத்தை செய்து கொண்டிருந்தார்.
இருந்தாலும் சமாளித்துக்கொண்டு “எதுக்கு எல்லோரும் அர்ர்சகராகனும்னு சொல்றீங்க” என்றார். “ஆகம விதிப்படி அமைந்த இந்துக்கோவில்களில் பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரும் கருவறைக்குள் நுழைய முடியாதுங்க…” என்று விளக்கிக்கொண்டிருக்கும் போதே, “ஏன் நான் நுழைஞ்சிருக்கேனே” என்றார். “நீங்க ஏதாவது ஒரு கருப்பசாமி கோவில்ல நுழைஞ்சிருக்கலாம் சிறீரங்கம், திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி போன்ற கோவில்களில் நுழைய முடியாது, ஏன் தெரியுமா? ஏன்னா அது தீட்டு” என்று விளக்கினோம்.
“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல காலம்காலமா இப்படித்தான் இருக்கு, இந்து மதம் எல்லோருக்கும் சொந்தமானது தான் நீங்க தான் பர்ப்பனர்களை மட்டுமே வேணும்னு திட்றீங்க அந்த கோவில் இல்லைன்னா வேற கோவிலுக்கு போங்க அங்கே ஏன் போறீங்க” என்றார்.
“வேற கோவிலுக்கு போறதெல்லாம் இருக்கட்டுங்க அந்த கோவிலுக்குள்ள ஏன் விடமாட்டேங்கிறாங்கிறதை முதல்ல பேசுங்க. இடஒதுக்கீட்டை எதிர்க்கிற இந்த பார்ப்பனர்கள் தான் கருவறைக்குள்ள நூறு சதவீதம் இடத்தையும் ஆக்கிரமிச்சிக்கிட்டு மத்தவங்களை விடமாட்டேங்கிறாங்க” என்றதும்.
“இடஒதுக்கீடே குடுக்கக்கூடாதுங்கிறேன் எதுக்கு இடஒதுக்கீடு ? இடஒதுக்கீடு கொடுக்கிறதால தான் திறமை இல்லாம போகுது” என்றார்.
“சார் நீங்க பாப்பானுக்காகவும் இந்துமதத்துக்காகவும் ரொம்ப வருத்தப்படுறீங்க. இந்து மதத்துக்காக இவ்வளவு பேசுறீங்களே பகவத்கீதையோட பதினாறாவது அத்யாயத்துல கண்ணன் என்ன சொல்றான்னு தெரியுமா?” என்றதும் திரு திருவென்று முழித்தார். அருகில் அமர்ந்திருந்த மாணவர்களையும் பார்த்துக்கொண்டார். மாணவர்கள் நக்கலாக பார்த்துக்கொண்டிருந்தனர். கடைசியில் “தெரியல நீங்களே சொல்லுங்க” என்றார்.
“சரி, மனுஸ்மிருதியில் பார்ப்பனர்களைத் தவிர உள்ள பெரும்பான்மை மக்களை என்னன்னு எழுதி வச்சிருக்கான்னு தெரியுமா?” என்றோம் அதற்கும் “தெரியாது நீங்களே சொல்லுங்க” என்றார். இதற்கிடையில் அனைவரும் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது. பிளாட்பாரத்தில் இறங்கியும் அவருடைய பார்ப்பன அடிவருடித்தனத்தை அம்பலப்படுத்திக்கொண்டிருந்தோம். அந்த மாணவர்கள் பிளாட்பாரத்தில் இறங்கிய பிறகும் அவரை வடிவேலைப் பார்ப்பதைப் போல பார்ப்பதை விடவில்லை. மாணவர்களுக்கு புத்திமதி சொல்லப்போய் அவர்கள் காரித்துப்பாத குறையாக அந்த நபர் அனைவரின் முன்பாகவும் அவமானப்பட்டுப்போனார்.
இதைப்போன்று இன்னும் பல்வேறு சம்பவங்களும் இந்த நிதிவசூல் அனுபவத்தில் கிடைத்தன. அனைத்தையும் குறிப்பிட்டால் நான்கு பதிவுகளாக விரியும். பார்ப்பனியத்தை எதிர்த்து செய்யப்பட்ட இந்த பிரச்சாரத்தில் பொதுவாக பெரும்பான்மையாக உழைக்கும் மக்களும், நடுத்தர வர்க்கத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கும், மாணவர்கள் மத்தியில் குறிப்பிடும்படியும் வரவேற்பு இருந்தது. இவர்கள் அனைவரும் நிதியளித்து ஆதரவளித்தனர்.
பிரச்சாரத்தின் வீச்சாலும் அதன் நியாயத்தாலும் பார்ப்பனர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கப்சிப் ஆகியிருந்தானர். பார்ப்பனமயமாக்கப்பட்ட பலர் பார்ப்பனர்களாக இல்லாவிட்டாலும் பார்ப்பனர்களுக்காக பரிந்துபேசினார்கள். பார்ப்பனர்களை விட இத்தைகைய கருப்புப் பார்ப்பனர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இவர்களை கருத்து ரீதியாக வீழ்த்தாவிட்டால்பெரியார் பிறந்த மண் என்று இனியும் நாம் பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக