வியாழன், 7 பிப்ரவரி, 2013

பார்த்து தொலைச்சேன் விஸ்வரூபம் ஒரு வழியா

vishwaroopamகுத்துங்க கமல்.. குத்துங்க.. இந்த முஸ்லிம்களே இப்படித்தான்..’ விஸ்வரூபம் விமர்சனம்

விஸ்வரூபம் ஒரு வழியா படத்தை பார்த்து தொலைச்சேன். ஆமாம், அத இப்படித்தான் சொல்லவேண்டியிருக்கு..
இந்த எரிச்சல் படத்தின் உள்ளடக்கத்தை சார்ந்து மட்டுமல்ல, வடிவதினாலும்தான்.
உள்ளடக்கம் கோபம் கொள்ள வைக்கிறது. வடிவம் எரிச்சலும் அலுப்பும் ஊட்டுகிறது. அப்படி ஒரு சுவாரஸ்யமற்ற திரைக்கதை.
மதிமாறன் என்கிற நான், நண்பர் அதிகாலை நவின், அவரின் தம்பி வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் மூவரும் 5-02-2013 அன்று ஆந்திர மாநிலம் சத்தியவேடுக்கு சென்று விஸ்வரூபத்தை பார்த்தோம். ‘இஸ்லாமிய அமைப்புகள் நீக்க சொன்ன காட்சிகளை பார்த்தால், கமலின் யோக்கியதையை கூடுதலாக தெரிந்து கொள்ளலாம்’ என்பதற்காகவே அந்த நீண்ட பயணம்.
நீக்க சொன்ன காட்சிகளை தாண்டியும் ‘துடிப்போடு’ இருக்கிறது விஸ்வரூபம்.
இந்தப் படத்தின் பல காட்சிகளையும் வெட்டி எடுத்துவிட்டு, ஒரு அய்ந்து நிமிட நேர குறும்படமாக சுருக்கினாலும், அதற்குள்ளும் இஸ்லாமிய காழ்ப்புணர்ச்சியும் அமெரிக்க விசுவாசமுமே ‘துடிப்போடு’ நிறைந்து வழியும்.
‘இந்தியனாக இரு, இந்திய பொருட்களை வாங்கு..’ என்று தேசபக்தியோடு நமக்கு அறிவுரை செய்த பலர் அமெரிக்காவிற்கு சென்று குடியேறியதைப்போல்; தனது முந்தைய படங்களில் ‘இந்தியனாக’ இருந்து இந்திய தேசபக்தியை ஊட்டிய கமல்; இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அல்ல, ஒவ்வொரு ஷாட்டிலும் ‘அமெரிக்கனாக இரு, அமெரிக்க பொருட்களை வாங்கு’ என்று தன்னை அமெரிக்க அடிமையாக அடையாளப்படுத்தியிருக்கிறார்,
படத்தில் கமல் பயன்படுத்துகிற கார்கள்கூட அமெரிக்க தயாரிப்புகள் மட்டுமே.
விஸ்வரூபம் முதல் விளம்பரம் வந்தபோது, 6-6-2012 அன்று ‘‘கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; அமெரிக்க சார்பு இஸ்லாமிய எதிர்ப்பு படம்தான்? என்று எழுதியிருந்தேன்.

என் எழுத்தை பொய்யாக்கவில்லை கமல். எவையெல்லாம், யாரெல்லாம் அமெரிக்காவிற்கு, அமெரிக்கர்களுக்கு பிடிக்கதோ அவைகளெல்லாம், அவர்களெல்லாம் படத்தில் வில்லன்கள். வில்லத்தனமான குறியீடுகள்.
ஆப்கான் நாட்டு இஸ்லாமிர்களை மட்டுமல்ல; பாகிஸ்தான், இந்தியா, நைஜீரியா என்று பல நாட்டு முஸ்லீம்களை ‘அல்கொய்தா’ தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்று காட்டுகிறார்.
கமலே ‘காஷ்மீர் முஸ்லிம்’ என்று சொல்லிதான் ஆப்கானியர்களுக்குள் ஊடுறுவுகிறார். ‘காஷ்மீர் முஸ்லிம்’ என்று சொன்னவுடன், ஆப்கான் இஸ்லாமியர்கள் அவரை கொண்டாடுகிறா்கள்.
அமெரிக்கர்களுக்கு இஸ்லாமியர் மீது உள்ள காழ்ப்புணர்ச்சிபோலவே ஆப்பரிக்க கருப்பர்களின் மீதும் உண்டு. அதற்காகவே படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நைஜிரியாவைச் சேர்ந்த, கருப்பின முஸ்லிமே தீவிரவாதி.
‘பாபர் மசூதி இடிப்பு, குஜராத்தில் இஸ்லாமியர்கள் மேல் கொலைவெறி தாக்குதல், விஸ்வரூபத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு’ என்று இதுபோன்ற சம்பவங்கள் தீவிரமாக நடக்கும்போது, ஒரு பகுத்தறிவாளைனைப்போல் ‘இஸ்லாத்தில் பெண்ணடிமைத்தனம், சவுதி அரேபியாவில் மனித உரிமை மீறல்’ என்று தொடர்ந்து நீட்டி முழங்குகிற அல்லது அதுபோன்ற கட்டுரைகளை மட்டும் ‘Like’ செய்கிற இந்து, அறிவாளிகளைப்போல்,
இஸ்லாமிய நாடுகள்; பெண்கள் உட்பட தனி மனிதர்களுக்கு மிக மோசமான, கொடுமையான தண்டனைகளை தருவதை, கடுமையாக கண்டிக்கிற அமெரிக்கா;
இன்னொருபுறத்தில் ஒரு நாட்டின் மீது ஈவு இரக்கம் இல்லாமல் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்களை விமானத்திலிருந்து குண்டு வீசி கொல்வதை எப்படி நியாப்படுத்துகிறதோ;
அதுப்போல், இந்தப் படத்திலும் இஸ்லாமியர்கள் செய்கிற கொலைகளை, கொடுமையாகவும் பார்வையாளர்களுக்கு ‘ச்சீ..இவனுங்க எல்லாம் மனுசனா..?’ என்கிற எண்ணத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது.
ஆனால், இதற்கு நேர் மாறாக, அமெரிக்க சார்பாக கமல்ஹாசனும், வெள்ளைக்காரர்களும் ஆப்கானியர்களை, இஸ்லாமியர்களை செய்கிற கொலைகள் நியாயமாகவும், ‘இவர்களை கொலை செய்வதுதான் தர்மம்’ என்கிற எண்ணத்தையும ஏற்படுத்துகிறது.
சிகப்பு ரோஜாக்கள் படத்தில் வேறு ஒருவருடன் உறவில் ஈடுபடும் பெண்ணை, அவளின் கணவர், கத்தியால் குத்தும்போது, சிறுவனாக இருக்கிற கமல், ‘குத்துங்க எஜமான்.. குத்துங்க.. இந்த பொம்பளைங்களே இப்படித்தான்..’ என்பாரே அதுப்போல்;
அமெரிக்கர், கமல், அமெரிக்க காவல்துறை இவர்கள் சகட்டுமேனிக்கு இஸ்லாமியர்களை கொலை செய்யும்போது, பார்வையாளர்களுக்கு, ‘குத்துகங்க கமல்.. குத்துங்க.. இந்த முஸ்லிம்களே இப்படித்தான்..’ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
கமல்ஹாசன் ‘பாய்’ கூட வெள்ளைக்காரப் பெண் மருத்துவர் கொலை செய்யப்படும்போது, அமெரிக்கர்கள் கொலை செய்யப்படும்போது துக்கம் தாங்காமல் குமுறுகிறார்.
இதே உணர்வுதான் பார்வையாளர்களுக்கும் ஏற்படுகிறது.
தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன் என்பவர் ‘விஸ்வரூபம் பிராமணர்களுக்கு எதிராக இருக்கிறது’ என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டை அவர் கமல் ஆலோசனையின் பெயரில் செய்தாரோ என்று சந்தேகிக்கும் படியாக இருக்கிறது படத்தில வரும் காட்சி.
பார்ப்பன பெண், அமெரிக்கர்களை விட பெரிய அறிவாளியாக இருக்கிறார். ஒரு நகரத்தையே அழிக்க இருக்கிற ‘வெடிகுண்டை’ அமெரிக்காகாரன் செய்வதறியாது முழித்துக்கொண்டிருக்கும்போது, அவர்தான் தன் அறிவால் தடுத்து நிறுத்துகிறார்.
**
இஸ்லாமிய வெறுப்பும் அமெரிக்க விசுவாசமாகவும் படம் நகர்கிறது. ‘நகர்கிறது’ என்கிற இந்த வார்த்தையை நேரடியாக புரிந்து கொள்ளுங்கள். திரைக்கதை அமைப்பு அப்படி மந்தமாக இருக்கிறது. அதுவும் பிற்பகுதி… ‘பப்புள்காமில் செய்த பிலிம்ரோம்…’
ஒரு படத்தை பலமுறை பார்க்கிற சினிமா விரும்பியாக இருக்கிற கமல் ரசிகர்களேக்கே இந்தப் படம் நிச்சயம் பிடிக்காது, காரணம் ‘இஸ்லாமிய எதிர்ப்பு’ என்பதற்காக அல்ல. நான் சொன்ன அந்த ‘நகர்கிறது’ பிரச்சினைதான். படத் துவக்கதில் ‘ஆரவாரத்தோடு படம் பார்த்த ரசிகர்கள், கொஞ்சம் கொஞ்சமாக தொய்வடைந்து, போக போக.. கமல் வசனத்தைவிட, ரசிகர்கள் பேசுகிற வசனமே அதிகம் தியேட்டரில் எதிரொலித்தது.
இடைவேளையின் போது, என்னிடம் பேசிய ஒரு ரசிகர், ‘தலைவரு தப்பான வேசத்துல நடிக்கிறாரு.. காதல் மன்னன்.. இன்னும் ஒரு கிஸ்கூட அடிக்கல..’ என்று ஆதங்கப்பட்டார்.
நண்பர் நவினுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த கமல் ரசிகர்கள்,  படத்துவக்கதில் படம் பார்ப்பதற்கு இடைஞ்சலாக யாராவது கதவைத் திறந்து வெளியில் போனாலோ உள்ளே வந்தாலோ அசிங்கமான வார்த்தைகளால் திட்டினார்கள்.
அவர்களே பாதி படத்திற்குமேல், மற்றவர்கள் படம் பார்பப்பதற்கு இடையூறாக கத்திக் கொண்டே இருந்தார்கள். ஒருவர் நவினிடம் ‘அண்ணே நாங்க போறோம்.. ஒன்னும் புரியல..’ என்றார்.
நவின் ‘இருங்க படம் முழுக்க பாருங்க.. புரியும்’ என்றார். நவின் பேச்சை கேட்காமல் 30 நிமிடத்திற்கு முன்பே கிளிம்பி விட்டனர் கமல் ரசிகர்கள்.
ஆனாலும் இஸ்லாமிய எதிர்ப்பு மனோபாவம் கொண்டவர்கள், படம் முடிந்த பிறகு, ‘படம் சூப்பர், என்னங்க தமிழ்நாட்ல மட்டும்தான் முஸ்லீம் இருக்காங்களா?’ என்று ஆவேசமாக பேசினார்கள். இந்தப் படத்திற்கு பிறகு இஸ்லாமிய எதிர்ப்புக் கண்ணோட்டம் கொண்டவர்கள் நிறையபேர் கமல் ரசிகர்களாக மாறியிருக்கிறார்கள் என்பதையும் அங்கு பார்க்க முடிந்தது.
(தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்களால் மட்டுமே திரையரங்கு நிரம்பி வழிந்தது)
ஆக, விஸ்வரூபம் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடுவதற்கு வாய்பில்லை. அதற்கான காரணத்தை கமல் தரப்பினர் இஸ்லாமியர்கள் மீதே போடலாம்.. ‘படத்தில் முக்கியமான காட்சிகளை எல்லாம் கட் பண்ணதாலே..’ என்று.
ஆனால், அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்தப் படம் வசூல் செய்வதாக சொல்கிறார்கள்.
காரணம், அமெரிக்க சார்பு கொண்ட கமலின் மனநிலையும் அமெரிக்க வாழ் இந்தியர்களின் மனநிலையும ஒன்றாக சங்கமிப்பதுதான்.
அமெரிக்க இந்தியர்கள் இந்தியாவில் தாங்கள் படித்த படிப்பின் தொடர்ச்சியாக அதற்கான ஆய்வு செய்வதற்கோ, அதை குறித்த தேடுதலுக்கோ போகவில்லை.
தங்களின் கல்விக்கு இந்தியாவைிட அதிகம் சம்பளம் கிடைக்கிறது, அதை ஒட்டிய சொகுசான வாழ்க்கை, சொந்தவீடு..’ என்று காரணத்திற்காகவே சென்றிருக்கிறார்கள்.
அது அமெரிக்காவில் அவர்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவே அமைகிறது. அந்த நன்றி அவர்களிடம் நிறைந்திருக்கிறது. அதனால்தான் அமெரிக்க வாழ் இந்தியர்கள், இந்தியாவிற்கு வந்தால், அமெரிக்க அரசின் பொது ஒழுங்கு, சாலைகள் பராமரிப்பு, சாலை விதிகள், ஒழுங்கு இவைகளை இந்தியாவோடு ஒப்பிட்டு அமெரிக்க புகழை பேசி பேசி வியக்கிறார்கள். (அறுக்கிறார்கள்)
மாறாக சர்வதேசிய அரசியலில், மூன்றாம் உலக நாடுகளிடமும், அரபு நாடுகளிடமும் எவ்வளவு இழிவாக மூன்றாம் தர பொறுக்கியைப் போல் அமெரிக்கா நடந்து கொள்கிறது, என்பதை அவர்கள் உணர்வதே இல்லை.
அதற்கு நேர் எதிராக அமெரிக்கவிற்கு எதிரான ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட தீவிரவாத இயக்கங்களின் மேல் கடும் வெறுப்பு கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.
‘இவனுங்களாலதான் அமெரிக்காவுல நிம்மதியே போச்சு..’ என்று கோபப்படுகிறார்கள். இந்த மனநிலை உள்ளவர்கள் விஸ்வரூபத்தை பார்த்தால், ‘இல்லாததை ஒன்னும் காட்ல.. இருக்கிறதைதான் காட்டியிருக்கார் கமல்’ என்று கருத்து சுதந்திரவாதிகளாக, கருத்து சொல்கிறவர்களாக அவர்களின் அமெரிக்க வாழ்க்கை முறை உருவாக்கியிருக்கிறது.
இது அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் மட்டுமல்ல; இந்தியாவிலேயே அமெரிக்க வாழ்க்கையை வாழ்கிற, ‘இந்திய வாழ் அமெரிக்கர்களிடம்’ அதவாது ‘இன்னும் நமக்கு அமெரிக்க போவதற்கு வாய்பில்லையே..’ என்று KFC சிக்கனும் கோக்கும், பிட்ஸாவும் கோக்கும், தோசையும் கோக்கும், தயிர் சாதமும் கோக்குமமாக வாழ்கிற இந்திய உயர் நடுத்தர வர்க்கத்திற்கும் இந்தப் படம் நிறைய பிடிக்கும்.
**
படம் வெளியாவதற்கு முன் கருத்து சுதந்திரத்தை வலியுறுத்தியவர்கள், இந்தப் படம் பற்றி விரிவாக எழுதுவார்கள் என்று நம்புகிறேன்.
அவர்கள் எழுதுவது போதுமானதாக இல்லை என்றால் நான் இந்தப் படத்தை பற்றி மீண்டும் எழுத வாய்ப்பிருக்கிறது..    mathimaran.wordpress.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக