திங்கள், 18 பிப்ரவரி, 2013

பெண்களை போகப் பொருளாக பாவிக்கும் சமூக சிந்தனையை சட்டத்தால் தடுக்க முடியாது

 ஆண்களோடு பேசுவது, பழகுவது, தொடுவது, சிரிப்பது இவையெல்லாம் பெண்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. இதுதான் பெண்ணடிமைத்தனம். இதனைப் பெண்கள் ஏற்றுக் கொள்ளும்படி செய்யப்பட்டுள்ளது.
;திரு கோ இராமலிங்கம் B.Sc., B.L., வழக்கறிஞர், மாவட்ட அமைப்பாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், புதுக்கோட்டை
நன்றியுரை
திரு அப்துல் ஜப்பார், வழக்கறிஞர், மனித உரிமை பாதுகாப்பு மையம், திருநெல்வேலி.
பெண்கள் மீதான பாலியல் வன்முறை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. சென்ற டிசம்பர் மாதம் 16ம் தேதி டெல்லி மாநகரில் துணை மருத்துவ மாணவியை ஏழு பேர் கும்பல் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியதோடு அவரை இரும்புத் தடியால் அடித்து துவைத்து குற்றுயிரும் கொலையிருமாக வீசியெறிந்து விட்டுப் போனது. அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் இறந்து விட்டார். இந்தச் சம்பவத்தையொட்டி டெல்லியில் சுமார் 2 லட்சம் மாணவர்கள் ஒன்று திரண்டு பாராளுமன்றம், நீதிமன்றம், காவல் நிலையம் இவற்றை முற்றுகையிட்டுப் பல நாட்கள் போராடினர். இந்தப் போராட்டம் இதுவரை பாலியல் வல்லுறவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களிலேயே மிகப்பெரிய போராட்டம் என்று கணிக்கப்பட்டது.

இதையொட்டி அனைத்து ஊடகங்களும் அரசியல் தலைவர்கள், சமூக சிந்தனையாளர்கள், மதத் தலைவர்கள், எழுத்தாளர்கள் என்று பல தரப்பினரும் கருத்துத் தெரிவித்தனர். கிளர்ந்து எழுந்த மாணவர்கள் மற்றும் ஜனநாயக சக்திகளின் போராட்டம் டெல்லி காவல் துறையினரால் ஒடுக்கப்பட்டது. டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தை பாதிக்கப்பட்ட மாணவியை பார்க்கவோ அவரது குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதல் சொல்லவோ கூட போராட்டக் காரர்கள் அனுமதிக்கவில்லை. வல்லுறவு கொண்டவர்களை உடனடியாகத் தூக்கில் போட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரினர். பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்குத் தண்டனை விதிக்க வேண்டும், ஆணுறுப்பை வெட்ட வேண்டும். ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும். நடுத்தெருவில் நிற்க வைத்து சுட்டுத்தள்ள வேண்டும். சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்று பொதுவாக கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. மக்களின் கொந்தளிப்பான மனநிலையை மாற்றுகின்ற வகையில் காங்கிரஸ் அரசு வர்மா கமிஷனை அமைத்தது. அவரும் தனது நீண்ட பரிந்துரைகளை அரசுக்கு அளித்து விட்டார்.
ஆனால், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை என்பது இப்போதுதான் நடைபெற்ற ஒன்றா? இல்லை. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நடைபெற்று வருகின்ற ஒன்று. மேலும் டெல்லி மாணவி மீது நடைபெற்றது மட்டும்தானா? இல்லை. அன்றாடம் இந்தியாவில் ஒரு நிமிடத்திற்கு 7 பெண்கள் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். டெல்லி சம்பவத்தையொட்டியே நாடு முழுவதும் தொடர்ச்சியாகப் பல்வேறு வல்லுறவு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. கிராமப் புறங்களிலும் ஏழைகளின் மீதும் ஆதிவாசி, தலித் பெண்கள் மீதும் நாளும் கட்டவிழ்த்து விடப்படும் வன்கொடுமைகள் கணக்கிலடங்காதது. ஆனால் இதற்குத் தீர்வை முன் வைப்பவர்கள் பாலியல் வல்லுறவு என்பது ஒரு குற்ற நிகழ்வு என்றும் அதற்குத்தான் உரிய தண்டனை என்றும் அந்த தண்டனை சட்டத்தின் மூலமாக கடுமையாக்கப்பட வேண்டும் என்றே முன்வைக்கின்றனர்.
ஆனால் அது ஒரு குற்ற நிகழ்வு மட்டுமல்ல. இந்த வன்கொடுமைக்குக் காரணம் பெண்கள் மீது ஆண்கள் செலுத்தும் ஆதிக்கமே. அதாவது, இந்த சமூக அமைப்பே ஆணாதிக்க சமூக அமைப்பாக இருப்பதுவே. பெண்களுக்கு அணிகலன் கற்பு என்றும்- அது புனிதமானது என்றும் அதை இழந்து விட்டால் அவள் வெறும் நடைப்பிணம்தான் என்றும் கூறுகின்ற ஆண்கள், பெண்கள் கற்பிழக்க காரணமாயிருக்கிற ஆணைப் பற்றி எதுவும் சொல்வதில்லை, ஏன்? அதுதான் ஆணாதிக்கம.. பெண்ணை அடிமையாக நினைப்பது, நடத்துவது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் சொல்கிறார், “பெண்கள் பிள்ளைகளைப் பெறவும், வளர்க்கவும், வீட்டு வேலைகள், கணவனுக்குப் பணிவிடை செய்பவளுமாக இருக்க வேண்டும். அவர்களது நடையுடை பாவனைகளில் அடக்கம் வேண்டும்.” எனவே பெண் என்பவள் ஆணுக்கு இன்பம் தருகின்ற அடிமை என்பதே அவரது கருத்து. இன்னும் சிலர், பெண்கள் கவர்ச்சிகரமாக உடையணிவதாலேயே ஆண்களின் காம உணர்வு தூண்டப்படுகிறது. எனவே அவர்கள் உடை அணிவதிலே கட்டுப்பாடு வேண்டும் என்கிறார்கள். ஆனால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிறவர்கள் பற்றிய புள்ளி விவரங்கள் தெரிவிப்பது என்னவென்றால் பாதிக்கப்படுபவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் குழந்தைகள்; இன்னொரு பங்கினர் தெரிந்தவர்கள், உறவினர்கள், அலுவலக மேலதிகாரிகள், நம்பியவர்களால் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகின்றவர்கள்; இன்னொரு பகுதியினர், போலீசு, ராணுவம், அரசு எந்திரத்தினால் வன்புணர்வு செய்யப்படுகிறவர்கள்.
அது போக எஞ்சியுள்ள ஒரு சிறுபகுதி மட்டுமே முகம் தெரியாத மனிதர்களால் நடைபெறுகிறது என்று தேசிய மற்றும் சர்வதேச புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தியாவில் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்ற பெண்கள் புகார் தர முன்வருவதில்லை. இது வெளியே தெரிந்தால் பெண் வாழ முடியாத சூழ்நிலை உள்ளது. அதனால் இதற்கு எதிரான போராட்டம் இங்கே மிகமிகக் குறைவு. இதுவே மேலை நாடுகளில் மிக அதிக அளவில் (அமெரிக்காவில் நிமிடத்திற்கு 22 பெண்கள்) பாலியல் வல்லுறவு நடைபெறுகிறது. அதற்கெதிரான போராட்டமும் அவ்வாறே அதிக அளவில் நடைபெறுகின்றது, பதிவாகின்றது. இந்தியாவில் கற்பு என்ற ஒன்றால் பெண்கள் விலங்கிடப்பட்டுள்ளனர். ஒரு பெண் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டால் அவளது வாழ்க்கை அத்துடன் முடிந்து விட்டதாக கருதப்படுகிறது. இதிலிருந்து பெண்கள் விடுபட வேண்டும். ஆண்களோடு பேசுவது, பழகுவது, தொடுவது, சிரிப்பது இவையெல்லாம் பெண்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. இதுதான் பெண்ணடிமைத்தனம். இதனைப் பெண்கள் ஏற்றுக் கொள்ளும்படி செய்யப்பட்டுள்ளது.
இன்றைய ஏகாதிபத்திய உலகமயமாக்கச் சூழலில் பெண்கள் இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர், பெண்கள் ஒரு நுகர்வுப் பண்டமாக கருதப்படுகின்றனர். ஊடகங்கள், சினிமா, வலைத்தளம், செல்போன்-விளம்பரங்கள் என்று அனைத்து தளங்களிலும் பெண் போதையேற்றும் சரக்காக மாற்றப்பட்டிருக்கிறாள். மேலும் போதையேற்ற அரசே டாஸ்மாக் நடத்துகிறது. அது போலவே, காவல் நிலையங்கள், ராணுவ முகாம்கள் எல்லாம் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுக் கூடாரங்களாக மாறி விட்டிருக்கின்றன என்பது அனைவரும் அறிந்ததே. இந்த சட்ட விரோதக் கும்பல்தான் பாலியல் குற்றவாளிகளை தண்டிக்கும், அதன் கையில் அதிகாரத்தைத் தர வேண்டும் என்று கோருகிறார்கள் பலர். நம்நாட்டின் உயர், உச்சநீதிமன்ற நீதிபதிகளில் பாலியல் புகாருக்கு ஆளாகாதவர்கள் எத்தனை பேர்?
தகவல் தொடர்பு ஊடக வளர்ச்சியை பாலியல் வக்கிரங்களுக்காக பயன்படுத்துபவர்கள் வயது வராத சிறுவர், சிறுமி, மாணவர்களிடம் வேகமாகப் புகுத்துகின்றனர். இவற்றுக்கெல்லாம் அரசு தடைவிதிப்பதில்லை, கட்டுப்படுத்துவதில்லை. நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்களுக்கு முதல் எதிரி அரசுதான்.
பெண்ணியம், பெண்ணுரிமையை விலாவாரியாகப் பேசுவதெல்லாம் இவற்றுக்குத் தீர்வாகி விட முடியாது. மாறாக ஆணாதிக்க சமூக சிந்தனையை ஒழிப்பதே தீர்வாகும். ஆணாதிக்கம் ஒழிந்த சமூகத்தில்தான் பெண்ணுக்கு சம உரிமை கிட்டும். முதலாளித்துவ சமூக அமைப்பு முற்போக்கானது, அங்கே பெண்களுக்கு சம உரிமை உண்டு என்று சொல்வதெல்லாம் சுத்தப் பொய். ஏகாதிபத்திய உலகமயமாக்கச் சூழலில்தான் பெண் மிகவும் மோசமாக சுரண்டப்படுகிறாள். போகப் பொருளாக கருதப்படுகிறாள். வரைமுறையற்ற பாலுறவு, வயதுக்கு முன் பாலுறவு, பொருந்தாத பாலுறவு, இயற்கைக்கு முரணான பாலுறவு என்று அத்துணை வக்கிரங்களும் இந்தச் சூழலில்தான் வேகமாக வளர்க்கப்படுகின்றன. விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, வாழ்வாதாரங்கள் முற்றிலும் பறிக்கப்படுகின்ற காரணத்தினால் தவிர்க்க இயலாமல் பெண்கள் வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அங்கேதான் பெண் இரு வகையிலும் சுரண்டப்படுகிறாள். பெண் என்றாலே அவள் போகப் பொருள் என்கிற கருத்தோட்டம் தோன்றி வளர்ந்து பாதுகாப்புக்குள்ளாகிறது.
ஆணும் பெண்ணும் இணைந்து உயிர்களை மறு உற்பத்தி செய்வது என்பது இயற்கையின் விதி. இதில் ஓர் உயிரை ஈன்று தருகின்ற பெருமை படைத்தவள் பெண். எனவே பெண் என்பவள் இயற்கையிலேயே ஒரு படி உயர்ந்தவள். அந்தப் பெண்ணினத்தை மதிக்கத் தவறியதோடு சிறுமைப்படுத்துகிற சமூகமாக இந்திய சமூகம் உள்ளது. இந்த ஆணாதிக்கச் சமூகத்தை வீழ்த்துவதற்குப் பெண்கள் தங்களது தளைகள், அனைத்தையும் அறுத்தெறிந்து விட்டு ஜனநாய மற்றும் மனித உரிமை அமைப்புகளின் கீழ் அணி திரள்வதே ஒரே மாற்று.
  • ஆணாதிக்கத்தின் வேரறுக்கப் போராடுவோம்!
  • பெண்ணுரிமைகளை நிலைநாட்டச் சூளுரைப்போம்!
  • பெண்களை முற்றிலும் நுகர்வுப் பொருளாக மாற்றிச் சீரழிக்கும் மறுகாலனியாக்கச் சூழலை துடைத்தெறிவோம்!
மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம்
தொடர்புக்கு : 94423 39260  vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக