சனி, 2 பிப்ரவரி, 2013

விஸ்வரூபம் பற்றி (ஜெயலலிதா வெளியே சொல்லாத) மற்றொரு உளவுத்துறை அறிக்கை!

 Viruvirupu
“விஸ்வரூபம் படம் ரிலீஸானால் தமிழகத்தில் வன்முறை வெடிக்கும் என்று தமிழக உளவுத்துறை அறிக்கை கொடுத்தது” என்று முதல்வர் ஜெயலலிதா தனது பிரஸ் மீட்டில் சொன்னார். ஆனால், அவர் சொல்லாத மற்றொரு உளவுத்துறை ரிப்போர்ட்டும் இருக்கிறது என்று தெரிகிறது.
அந்த உளவுத்துறை அறிக்கையை பார்த்துவிட்டே, முதல்வர் பிரஸ்மீட் வைத்தார் என்று உளவுத்துறை வட்டாரங்களில் சொல்கிறார்கள்.
தமிழக உளவுத்துறையின் ஒரு பிரிவினர் தயாரித்த இந்த உளவு அறிக்கையை பார்த்த மேலதிகாரி ஒருவர், “இதை எப்படி முதல்வரிடம் கொண்டு போவது” என்று கையை பிசையும் அளவுக்கு போனாராம்.
தமிழக உளவுத்துறையில் உள்ள நமது சோர்ஸ் ஒருவர் சொன்னதன்படி, அந்த அறிக்கையில் கன்குளூஷன்: “விஸ்வரூபம் விவகாரம் ஆரம்பத்தில் ‘கமல் vs இஸ்லாமிய அமைப்புகள்’ என்று இருந்தது. இப்போது, அப்படியல்ல, ‘கமல் vs தமிழக அரசு’ என்று மக்கள் பார்க்கிறார்கள். இதனால், அரசு மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது”
இந்த அறிக்கை எப்படியோ, முதல்வரிடம் சேர்க்கப்பட்டது என்கிறார்கள். அதையடுத்தே முதல்வர் டி.ஜி.பி. ராமானுஜத்தை அழைத்து இது பற்றி பேசியிருக்கிறார்.
இதற்கிடையே ஒரு ‘அதிசயம், ஆனாலும் உண்மை’ டைப் சம்பவம் நடந்தது.
நம்பினால் நம்புங்கள், தமிழக உளவுத்துறை தயாரித்த இந்த உளவு அறிக்கை, அரசுத் தலைமைக்கு போகுமுன், கோபாலபுரம் போய்விட்டது!
அங்கே (கோபாலபுரத்தில்) இந்த அறிக்கை தீபாவளி எஃபக்டை ஏற்படுத்தியது. அதற்குமுன் கலைஞர், விஸ்வரூபம் தொடர்பாக பொத்தம் பொதுவான ஒரு அறிக்கையை (அதுவும், டாக்டர் ராமதாஸின் அறிக்கைக்கு பிறகு) வெளியிட்டிருந்தார். இந்த உளவு ரிப்போர்ட்டை பார்த்தபின், விஸ்வரூபம் படம் தொடர்பாக தமிழக அரசை நேரடியாக விமர்சித்து கலைஞரின் நீண்ட அறிக்கை வெளியானது.
பெரும்பாலான மக்களின் மனநிலையும், கருணாநிதியின் அறிக்கையும் ஒரே நேர்கோட்டில் போவது, அரசியல் ரீதியாக எவ்வளவு ஆபத்தானது என்பதை புரியாதவரா, 30 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் முதல்வர்? உடனடியாக தன் தரப்பு விளக்கத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்.
ஒரே ஒரு பிரச்னைக்காக, தனியாக ஒரு பிரஸ்மீட் வைத்தாக வேண்டிய நிலைமைக்கு ஜெயலலிதா இறங்கி வர வேண்டியதாயிற்று.
விஸ்வடூபம் விவகாரத்தில் அநேக மீடியாக்களும் கமல் பக்கத்தையே ஆதரித்து வந்த நிலையில், அறிக்கையாக அனுப்பினால், மீடியாவில் எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களோ என்ற சந்தேகம் முதல்வருக்கு இருந்திருக்கலாம். அதனால், பிரஸ்மீட் வைத்து அதை ஜெயா டி.வி-யில் நேரடியாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யச் சொல்லி இருக்கிறார்.
மிக மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதல்வர், மீடியாவை கோட்டையில் சந்தித்தார். அதிலிருந்தே இந்த விவகாரத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என புரிந்து கொள்ளலாம்.
முதல்வர் கொடுத்த விளக்கம், எந்தளவுக்கு தமிழக மக்களை கன்வின்ஸ் பண்ணியது? அதை அடுத்த உளவு அறிக்கையில் அவர் தெரிந்து கொள்வார்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக