செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

இளம்பெண் சுட்டு கொலை வேடிக்கை பார்த்தது போலீஸ்

புதுடெல்லி : டெல்லியில் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவி இறந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்கும் முன்பே மற்றொரு கொடூரம் அரங்கேறியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் இளம் பெண் ஒருவரை சுட்டுக் கொன்றனர். டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பஸ்சில் இருந்து வீசப்பட்ட மருத்துவ மாணவி இறந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக டெல்லி மாறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியதோடு, நீதிமன்றமும் கவலை தெரிவித்தது.
இந்நிலையில், தெற்கு டெல்லியில் பஸ்சுக்காக பூஜா என்ற 25வயது பெண் தனது கணவர் மற்றும் கிரண் என்ற நண்பருடன் நேற்று முன்தினம் இரவு காத்திருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் இருவர் வந்தனர். அதில் ஒருவன்  கிரணை தன்னுடன் வருமாறு கட்டாயப்படுத்தினான். இதற்கு பூஜா எதிர்ப்பு தெரிவித்தார். சிறிது நேரம் அவர்களுக்குள் வாக்குவாதம் நடந்தது. அப்போது அந்த ஆசாமி திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து பூஜாவை 3 முறை சுட்டான். இதில் பூஜாவின் முகம், தலையில் குண்டு பாய்ந்தது. சத்தம் கேட்டு சுற்றியிருந்தவர்கள் கூடி துப்பாக்கியால் சுட்டவனை பிடித்தனர். மற்றொருவன் மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டான். படுகாயமடைந்த பூஜாவை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார்.

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால், சம்பவம் நடந்த இடத்துக்கு சற்று தூரத்திலேயே போலீசார் வேனில் இருந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் பூஜாவுடன் பல நிமிடங்கள் வாக்குவாதம் செய்வதை போலீசாரும் பார்த்துள்ளனர். ஆனால், தலையிடவில்லை என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.

தாங்கள் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளில் ஒருவரை பிடித்து விட்டதாகவும் மற்றொருவரை தேடி வருவதாகவும் போலீசார் தெரி வித்தனர். ஆனால், சுற்றியிருந்தவர்கள்தான் குற்றவாளியை பிடித்து டிராபிக் போலீசிடம் ஒப்படைத்தனர் என்று பொதுமக்கள் கூறினர். துப்பாக்கியால் சுட்டு பிடிபட்டவன் பெயர் முன்ஷி யாதவ். அவனை போலீசார் கைது செய்து நாட்டு துப்பாக்கியையும் தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர். குற்றவாளிகள் இருவரும் போதை யில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக