சனி, 23 பிப்ரவரி, 2013

பிரதீபா காவேரி கப்பல் விபத்தில் பலியான இன்ஜினியரின் பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை : உருக்கமான கடிதம்

அரக்கோணம்: சென்னை அருகே தரைதட்டிய பிரதீபா காவேரி கப்பலில் இருந்து குதித்து பலியான இன்ஜினியரின் பெற்றோர், இன்று காலை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் நிலம் புயல் தாக்கியது. அப்போது மும்பையில் இருந்து சென்னை வந்த பிரதீபா காவேரி என்ற கப்பல், புயலில் சிக்கி சென்னையில் தரைதட்டி நின்றது. கப்பலில் இருந்த இன்ஜினியர்களும் ஊழியர்களும் கரைக்கு வர முடியாமல் தவித்தனர். சிலர், உயிர் பிழைப்பதற்காக கப்பலில் இருந்து கடலில் குதித்தனர். அவர்களில் 5 இன்ஜினியர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் கோதண்டபாணி (56)  பாரதி (51) தம்பதியரின் ஒரே மகனான மரைன் இன்ஜினியர் நிரஞ்சன் (24) என்பவரும் பலியானவர்களில் ஒருவர். தங்களது ஒரே மகன் இறந்ததால் நிரஞ்சனின் பெற்றோர் மிகுந்த சோகத்தில் இருந்தனர். தினமும் மகனை நினைத்து அழுது புலம்பி வந்தனர். அவர்களுக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர். ஆனாலும் மகன் இறந்த துக்கம் அவர்களை வாட்டி வைத்தது. இந்நிலையில், இன்று காலை நீண்ட நேரமாகியும் கோதண்டபாணி வீட்டு கதவு திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு மின்விசிறியில் ஒரே கயிற்றில் கோதண்டபாணியும் பாரதியும் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக கயிற்றை அறுத்து இருவரையும் இறக்கினர். அவர்கள் இறந்துவிட்டது தெரிந்தது.
தகவலறிந்த அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சரவணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து இருவரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் சோதனை செய்தபோது, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட 3 கடிதங்களை போலீசார் கைப்பற்றினர்.

கோதண்டபாணி வீட்டில் கைப்பற்றப்பட்ட கடிதங்களில் ஒன்று ஐகோர்ட் நீதிபதிக்கும், மற்ற 2 கடிதங்களும் அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் மற்றும் அரசு மருத்துவமனை அதிகாரிக்கு எழுதப்பட்டுள்ளது. ஐகோர்ட் நீதிபதிக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில், ‘எனது மகன் சாவுக்கு சரியான நீதி கிடைக்கவில்லை. மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்காததோடு முறையாக நிவாரணம் வழங்கவில்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘மகன் இறந்த துக்கம் தாங்காமல் நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்கள் சாவுக்கு வேறு யாரும் பொறுப்பல்ல’ என்றும் மருத்துவ அலுவலருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘எங்களது உடல் உறுப்புகளை தானமாக எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்றும் எழுதப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமண நாளில் சோகம்

தற்கொலை செய்து கொண்ட கோண்டபாணி, பாரதி தம்பதிக்கு இன்று 28வது திருமண நாள். திருமண நாளில் தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக