வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

பாலியல் வழக்கில் கைது செய்யப்படுவோரை கடுங்குற்றவாளிகளாக கருதி சிறையில் அடைக்க உத்தரவு

சேலம்: தமிழகத்தில், பாலியல் வழக்கில் கைது செய்யப்படுவோரை, கடுங்குற்றவாளிகளாக கருதி, அவர்களை மத்திய சிறையில் அடைக்க, போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
டில்லி மாணவி ஒருவர், பாலியல் துன்புறுத்தலில் உயிரிழந்ததை அடுத்து, நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசும், கடுமையான சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசித்து வருகிறது. சில மாநில அரசுகள், தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் போல், தனியாக மகளிர் போலீஸ் ஸ்டேஷனை ஏற்படுத்தி வருகின்றன.
பெண்களுக்கு எதிராக குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது, இந்திய தண்டனைச் சட்டப்படி, வரதட்சணை கொடுமை, பாலியல் பலாத்கார முயற்சி, கற்பழிப்பு மற்றும் கொலை, கடத்தல், வன்முறை, மனம் மற்றும் உடல் ரீதியாக துன்புறுத்துதல், 21 வயதுக்குட்பட்ட பெண்ணை விலைக்கு வாங்குதல் அல்லது விற்றல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குபதிந்து போலீஸார் நடவடிக்கை எடுக்கின்றனர்.

மேலும், சிறப்பு சட்டப்பிரிவின்படி, சதி பாதுகாப்புச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம், பாலியல் தொந்தரவு தடுப்புச் சட்டம், நெறிகெட்ட செயல்களில் பெண்களை ஈடுபடுத்துதல், பெண்கள் பாதுகாப்புச் சட்டம் ஆகிய பிரிவின் கீழும் வழக்குகள் பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இதில், சிறிய குற்றங்களாக கருதப்படும், அடிதடி, வாய்த்தகராறு, பலாத்கார முயற்சி, மனம் மற்றும் உடல் ரீதியாக துன்புறுத்துதல், வரதட்சணை கொடுமை, ஆகியவற்றில் ஈடுபடுவோரை கைது செய்யும் போலீஸார், அவர்கள் எல்லைக்குட்பட்ட, கிளைச்சிறைகளில் அடைப்பர். கடுங்குற்றங்களாக கருதப்படும் கொலை, கற்பழிப்பு, கடத்தல் ஆகிய வழக்குகளில் கைது செய்யப்படுவோர், மத்திய சிறையில் அடைக்கப்படுவர்.
இந்நிலையில், பெண்களுக்கு எதிரான பாலியல் புகாரில் கைது செய்யப்படுவோரை, கடுங்குற்றங்களில் ஈடுபட்டவராக கருதி, மத்திய சிறையில் அடைக்க போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறியதாவது:பாலியல் தொடர்பான புகார்களை பதிவு செய்யும் போது, சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதால், மிக கவனமாக செயல்பட வேண்டியுள்ளது. பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்பட்டவரின் பெயர், முகவரி, புகைப்படம் ஆகியவற்றை வெளியிட தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், கடந்த காலங்களில் பாலியல் தொடர்பான சாதாரண புகார்களில் கைது செய்யப்படுவோர், சிறு குற்றம் புரிந்தவராக கருதி, கிளைச் சிறைகளில் அடைக்கப்படுவர். ஆனால், தற்போது பலாத்கார முயற்சி, மனம் மற்றும் உடல் ரீதியாக துன்புறுத்துதல், வன்முறை, வரதட்சணை கொடுமை ஆகிய குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்படுவோரை, கடுங் குற்றம் புரிந்தவராக கருதி, மத்திய சிறையில் அடைக்க உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார் dinamalar,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக