திங்கள், 25 பிப்ரவரி, 2013

தி.மு.க. மத்திய அரசுக்கு நெருக்கடி தர தயாராகிவிட்டது .

புதுடில்லி: "2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக, விசாரணை நடத்தும், பார்லிமென்ட் கூட்டுக் குழு முன் ஆஜராகி, பல உண்மைகளை வெளிச்சமிட்டு காட்டுவேன்' என, முன்னாள் அமைச்சர் ராஜா, குட்டையை குழப்பியுள்ளார். ராஜாவின் இந்த மிரட்டல் கோரிக்கை குறித்து, ஐ.மு.கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பேசுவோம் என, தி.மு.க.,வும், மத்திய அரசுக்கு நெருக்கடி தர தயாராகிவிட்டது ."2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக, பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இதன் அறிக்கையை, நடப்பு பார்லிமென்ட் தொடருக்குள் தாக்கல் செய்யும் வகையில், இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் இக்குழு, முன் ஆஜராகி விளக்கம் அளித்த, அட்டர்ஜி ஜெனரல் வாகன்வதி, மத்திய தொலைத்தொடர்பு துறையின் முன்னாள் அமைச்சர், ராஜாவின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்து இருந்தார்.இதையடுத்து, தன் தரப்பு கருத்தையும், பார்லிமென்ட் கூட்டுக் குழு முன் தெரிவிப்பதற்கு, அனுமதிக்க கோரி, லோக்சபா சபாநாயகர் மீரா குமாருக்கும், குழுவின் தலைவர் பி.சி.சாக்கோவுக்கும், ராஜா கடிதம் எழுதியுள்ளார். இதில், "2ஜி விவகாரத்தில் உள்ள பல முரண்பாடுகளையும், இதில் பல தகவல்களையும் விளக்க முடியும்' என, ஏற்கனவே கூறியிருந்தார். பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் தலைவரான, சாக்கோவுக்கு, ராஜாவை மீண்டும் அழைக்க விரும்பவில்லை.


"குற்றம் சாட்டப்பட்ட ராஜா, சட்ட ரீதியான பாதுகாப்பு பெற்றவர். ஆகவே, எந்த கமிட்டி முன்னும் ஆஜராகி புதிய தகவல் தர ஏதும் இல்லை. அப்படியே, ராஜாவை அழைப்பதாக இருந்தால், அவர் தான் கடைசி சாட்சியாக இருப்பார். தி.மு.க., இதற்கு உடன்படவில்லை என்றால், விசாரணை அறிக்கையை விரைவில் தயாரித்து விடலாம்' என, சாக்கோ சமீபத்தில் குழுஉறுப்பினர்களிடம் குறிப்பிட்டு இருந்தார்.விசாரணை அறிக்கையை, பார்லி.,யில் தாக்கல் செய்ய, ஜே.பி.சி., தயாராகும் வேளையில், ராஜா, குட்டையை குழப்ப முயற்சி செய்கிறார் என, ஜே.பி.சி.,யில் உள்ள அரசு தரப்பு உறுப்பினர்கள் நினைக்கின்றனர். ஏனெனில், அவர் முன்பு காபினட்டில் பேசப்பட்ட விஷயங்களை தெரிவித்தால் அது சரியாக இருக்காது என, காங்கிரஸ் தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், மத்திய அரசுக்கு நெருக்கடி தர இது தான் தருணம் என, தி.மு.க., கருதுகிறது.இந்த விவகாரம் தொடர்பாக, தி.மு.க., செய்தித் தொடர்பாளரும், எம்.பி.,யுமான டி.கே.எஸ். இளங்கோவன், நிருபர்களிடம் கூறியதாவது: >இதில், கட்சி தலைமை என்ன சொல்கிறதோ அதன்படி செயல்படுவோம். தமிழகத்தில் நிகழ்ந்த விவசாயிகள் தற்கொலை, இலங்கை தமிழர் விவகாரம் குறித்து, கூட்டத்தில்எழுப்புவோம்.இவ்வாறு, அவர்கூறினார்.

ராஜாவை ஆஜராக அழைக்க வேண்டும் என, தி.மு.க., உறுப்பினர்கள், சாக்கோவை சந்தித்து வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து, குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்த பின், சாக்கோ முடிவு செய்வார் என, பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒருவேளை, ராஜாவை அழைத்து விசாரிக்க முன்வந்தால், அது பார்லிமென்ட் கூட்டம் நடைபெறும் இந்த சமயத்தில் ஆளும் கூட்டணிக்கு தொந்தரவாக அமையும். அதற்கான நேரத்தை ஆவலுடன், பா.ஜ., மற்றும் இடதுசாரி கட்சிகள் எதிர்பார்க்கின்றன.நாளை, ஐ.மு.கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெறுவதால், இந்தப் பிரச்னை எழும் என்ற எதிர்பார்ப்பு, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக