திங்கள், 11 பிப்ரவரி, 2013

போப்பாண்டவர் பெனடிக்ட் திடீர் பதவி விலகல்! 600 ஆண்டுகளின் பின் முதல் தடவை!!

Viruvirupu  புனித போப்பாண்டவர் பெனடிக்ட் XVI பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வாடிகனில் இருந்து வெளியானபோது, உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 600 ஆண்டுகளாக எந்தவொரு போப்பாண்டவரும் தாமாக பதவி விலகியதில்லை. இதற்குமுன் தாமாக பதவி விலகியவர், போப்பாண்டவர் ஜார்ஜ் XII. அது, 1415-ம் ஆண்டு நடைபெற்றது.
உடல் நலக்குறைவு காரணமாகவே வருகிற 28-ம் தேதியன்று போப்பாண்டவர் 16 ஆவது பெனடிக்ட் பதவி  விலகப்போவதாக வாடிகன் அறிவித்துள்ளது. வாடிகன் கார்டினல்களுடனான கூட்டத்தில் பெனடிக்ட் XVI தமது இந்த முடிவை அறிவித்ததாகவும், தாம் முழுச் சுதந்திரத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
போப்பாண்டவரின் 89 வயதான சகோதரர் ஜார்ஜ் ராட்ஸிங்கர், “அவர் (போப்பாண்டவர்) பதவி விலகும் முடிவை கடந்த சில மாதங்களாகவே பரிசீலித்து வந்தார். காரணம் வயது காரணமாக அவர் நடப்பதே சிரமமாக உள்ளது. இந்த வயதில் அவருக்கு ஓய்வு தேவை” என ஜெர்மன் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
பதவி விலகுவதாக அறிவித்துள்ள பெனடிக்ட் XVI, தற்போது 85 வயதில் உள்ளார். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இவரது இயற்பெயர் ஜோசப் ராட்ஸிங்கர். இவர் போப்ப்பாண்டவராக பதவியேற்ற பின்னர் தெரிவித்த சில கருத்துக்கள் சர்சைகளை ஏற்படுத்தின.
இது தொடர்பாக பெனடிக்ட் XVI வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடவுள் முன் என் மனசாட்சியை ஆய்வு வந்த பிறகே நான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன். முதுமை காரணமாக போப்பாண்டவரின் பணிகளை செம்மையாக நிறைவேற்ற எனது உடல் நிலை இடம் தரவில்லை.
இன்றைய உலகில், அவரசமாக மாறுதல்களுக்கு இடையே நற்செய்தியை அறிவிக்கவும், இந்தத் தொண்டை திறம்பட செய்யவும் மனம் மற்றும் உடல் இரண்டின் வலிமையும் மிக அவசியம். ஆனால், கடந்த சில மாதங்களில் எனது உடல் வலிமை அதிகமாக குன்றிவிட்டது. இதனால் என்னால் இந்தப் பணியை சரியாக செய்ய முடியாது என்பதை உணர்ந்ததால் தான் பதவி விலகுகிறேன்” என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக