திங்கள், 28 ஜனவரி, 2013

Iran பத்திரிகை அலுவலகங்கள் அதிரடி ரெயிடு! நிருபர்கள் கைது செய்யப்பட்டு இழுத்து செல்லப்பட்டனர்!

Viruvirupu
ஈரானிய உளவுத்துறை அதிகாரிகள் பத்திரிகை அலுவலகங்களை அதிரடி ரெயிடு செய்து, பல செய்தியாளர்களை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். குறைந்தது 4 பத்திரிகை அலுவலகங்கள் ரெயிடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
போலீஸ் கார்களில், சீருடை அணியாத நபர்கள் வந்து, கைது நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்று கூறப்படுகிறது. சீருடை அணியாமல் வந்தவர்கள், ஈரானிய புரட்சிப் படையின் உளவுப்பிரிவை சேர்ந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்தினர், பத்திரிகை அலுவலகங்களை சேர்ந்தவர்கள்.
கைது செய்யப்பட்டதற்கு காரணம் கூறப்படவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் எங்கே அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்ற விபரமும் தெரிவிக்கப்படவில்லை. பத்திரிகை அலுவலகங்களில் இருந்து, செய்தியாளர்கள் கைவிலங்கு போடப்பட்டு, வீதியில் இழுத்து செல்லப்பட்டனர்.
இதையடுத்து, ஈரானின் ஒட்டுமொத்த மீடியாக்காரர்களும் பீதியில் மூழ்கியுள்ளனர்.

ஈரான தலைநகர் தெஹ்ரானில் இருந்து வெளியாகும் பத்திரிகைகளான எதிமாட், சார்க், பஹார், ஆர்மான் ஆகியவை ரெயிடு செய்யப்பட்டது, உறுதி செய்யப்பட்டுள்ளது. இவற்றை தவிர வேறு சிறு பத்திரிகைகள், மற்றும் இணையத்தள அலுவலகங்களும் ரெயிடு செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பத்திரிகை அலுவலகங்களுக்குள் வந்த உளவுப்பிரிவு அதிகாரிகள், அங்கிருந்த அனைவரையும் தனித்தனியாக போட்டோக்கள் எடுத்துக் கொண்டனர், கைவிரல் ரேகைகளும் பதிவு செய்யப்பட்டன. பத்திரிகை அலுவலகங்களில் இருந்த ஆவணங்களும் எடுத்துச் செல்லப்பட்டன. பத்திரிகையாளர்கள் அனைவரும் கிரிமினல்கள் போல நடத்தப்பட்டனர். யாரும், தமது வீடுகளுக்கோ, நண்பர்களுக்கோ போன் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
இந்த தகவல் கிடைத்ததும், தெஹ்ரானில் உள்ள சில பத்திரிகை அலுவலகங்களை போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, உளவுப்பிரிவு அதிகாரிகளே பதில் அளித்தனர். எதிமாட் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஜவாத் தலிரியை தொடர்பு கொள்ள முடியவில்லை. எதிமாட் பத்திரிகை அலுவலகத்தில் இருந்து இழுத்துச் செல்லப்பட்ட 10 பேரில், பிரதம ஆசிரியர் ஜவாத் தலிரியும் ஒருவர் என பின்னர் தெரியவந்தது.
இவர்கள் கைது செய்யப்பட்டதன் காரணம் அறிவிக்கப்படவில்லை. ஈரானிய இஸ்லாமியக் குடியரசு சட்டங்களில், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்ற குற்றச்சாட்டில் கைது செய்வதானால், வாரண்ட் ஏதும் தேவையில்லை. நீதிமன்றத்திலும் ஆஜர் செய்ய வேண்டியதில்லை.
ஈரானிய மீடியா நண்பர்களுடன் பேசியபோது, ஈரானுக்கு வெளியே உள்ள பார்ஸி மொழி மீடியாக்களுக்கு இவர்கள் செய்திகள் கொடுத்திருக்கலாம். இவர்களை உளவு பார்த்த உளவுத்துறையினர், அதை கண்டுபிடித்திருக்கலாம் என்றனர். தமது நாட்டு செய்திகள் சுதந்திரமாக வெளியே செல்வதை ஈரான் விரும்புவதில்லை. அரசு செய்தி ஏஜென்சி வெளியிடும் செய்திகள்தான் வெளிநாட்டு மீடியாக்களுக்கு அங்கிருந்து கிடைப்பது வழக்கம்.
செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள விபரம், நியூயார்க்கில் இருந்து இயங்கும் செய்தியாளர் பாதுகாப்பு அமைப்பான Committee to Protect Journalists (CPJ)க்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக