சனி, 12 ஜனவரி, 2013

சிவகாமி IAS: தேசிய பாதுகாப்பு சட்டத்தில் ராமதாசை கைது செய்ய வலியுறுத்தல்

வேலூர்: ""ஜாதி, மோதல்கள் உருவாக்கும் வகையில் பேசி வரும், ராமதாசை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்,'' என, சமூக சமத்துவப் படை கட்சி தலைவர் சிவகாமி கூறினார்.சமூக சமத்துவப் படை கட்சியின் நிர்வாகிகள் கூட்டம், வேலூரில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்துக்கு பின், கட்சி தலைவர் சிவகாமி கூறியதாவது: தருமபுரி மாவட்டத்தில் தலித் இளைஞருக்கும், வன்னிய இனப்பெண்ணுக்கும் ஏற்பட்ட காதல் திருமணத்தை காரணம் காட்டி, 1,500 பேர் திரண்டு, தலித் இன மக்கள் வசிக்கும், சில கிராமங்களில் உள்ள வீடுகளை, பெட்ரோல் குண்டு வீசி, தரைமட்டமாக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும், கலவரம் நடந்து வருகிறது. தமிழகத்தில், ஜாதி வெறியை தூண்டும் வகையில் செயல்படும், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், காடு வெட்டி குரு ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டேவை சந்தித்து, மனு கொடுக்க உள்ளோம். "வன்கொடுமை சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்' என, பா.ம.க., மற்றும் சில கட்சிகள் கூறுகின்றன. அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றக் கூடாது. இவர்கள் மீது, தமிழக அரசு, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மபுரி கலவரத்தை தூண்டியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கக் கோரி, வரும், 22ம் தேதி, தருமபுரியில் இருந்து நடை பயணம் புறப்பட்டு, பாதிக்கப்பட்ட கிராமங்கள் வழியாகச் சென்று, அந்த மக்களுக்கு ஆறுதல் கூறி, வரும், 29ம் தேதி, தமிழக கவர்னரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். dinamalar,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக