வெள்ளி, 11 ஜனவரி, 2013

நடிகை ஹேமாஸ்ரீ கொலை : கணவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

பெங்களூர்: கன்னட நடிகை ஹேமாஸ்ரீ கொலை வழக்கில் அவரது கணவர் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். கன்னட படங்களில் நடித்திருப்பவர் ஹேமாஸ்ரீ. கடந்த அக்டோபர் மாதம் அனந்தபுரில் உள்ள ஒரு ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மரணம் குறித்து தந்தை நாகராஜ் போலீசில் புகார் செய்தார். அதில் ‘என் மகள் சாவில் மர்மம் இருக்கிறது. அவரை கணவர் சுரேந்திர பாபுதான் கொலை செய்திருப்பார். இதுபற்றி விசாரிக்க வேண்டும்Õ என்று புகாரில் கூறி இருந்தார். இதையடுத்து சுரேந்திர பாபுவை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இந்த சம்பவத்தில் போலீசார் குற்றப்பத்திரிகையை தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். வரதட்சணை கொடுமை, கொலை முயற்சி, சாட்சியங்களை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது: சம்பவத்தன்று ஹேமாஸ்ரீ வீட்டில் இருந்தபோது அவரது அறைக்கு சென்ற சுரேந்திர பாபு ஒரு துணியில் மயக்கமருந்து வைத்து அதை ஹேமாஸ்ரீ மூக்கில் காட்டி மயங்க வைத்திருக்கிறார். இதற்கு சதிஷ் என்பவரும் உடந்தையாக இருந்தார். மயக்கம் அடைந்த ஹேமாஸ்ரீயை காரின் பின் சீட்டில் படுக்க வைத்து அனந்தபுரில் ரெட்டிபள்ளியில் உள்ள ஒஐ ஓட்டலுக்கு அதிகாலை 4.30 மணிக்கு கொண்டு சென்றனர். ஏற்கனவே சொல்லி வைத்திருந்தபடி இரண்டு பேர் அங்கு தயாராக இருந்தனர். அவர்கள் உதவியுடன் ஹேமாஸ்ரீயை அறைக்கு கொண்டு சென்றனர். பின்னர் 7 மணி அளவில் சுரேந்திர பாபு தன் மனைவி மயங்கி கிடப்பதாகவும் உதவி செய்யும்படியும் ஓட்டல் ஊழியர்களிடம் கேட்பதுபோல் நாடகமாடி இருக்கிறார். உடனடியாக ஹேமாஸ்ரீயை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் ஹேமாஸ்ரீ ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கணவரே ஹேமாஸ்ரீயை கொலை செய்திருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதால் கன்னட படவுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக