செவ்வாய், 22 ஜனவரி, 2013

விநோதினியை சிதைத்த ஆணாதிக்க அமிலம்!

விநோதினிவினவு,
‘பெண்ணின் வாழ்க்கை ஆணின் காலடியில்தான்’ என்ற பாடத்தை கற்பிக்கின்றனர் ஆணாதிக்க சமூகத்தின் பிரதிநிதிகள்

    விநோதினி
    ருத்துவமனையில் இருந்தவாறு 64 நாளாக தன் உயிருக்காக  போராடிக் கொண்டிருக்கும் வினோதினி என்ற பெண்ணின் மீது அமிலத்தை வீசி, காதல் என்ற பெயரால் அவள் முகத்தை மட்டுமல்ல, அவள் வாழ்க்கையையே அழித்திருக்கிறான் ஒரு இளைஞன்.
    விநோதினிதன் ஒரே மகளுக்கு நிகழ்ந்த துயரத்தைக் கண்டு வெதும்பும் வினோதினியின் தந்தை ஜெயபால் காரைக்காலில் ஒரு நிறுவனத்தின் செக்யூரிட்டியாக பணிபுரிகிறார். பல கஷ்ட நஷ்டங்களுடன், சொந்த நிலத்தை விற்று, கடன்பட்டு விநோதினியை படிக்க வைத்துள்ளார். ‘மகள் நல்ல வேலைக்குப் போனால் தன் குடும்பமே முன்னுக்கு வரும், அவளுக்கும் நல்ல வாழ்க்கை கிட்டும்’ என்ற எல்லா கனவுகளையும், ஏன் அப்பெண்ணின் எதிர்காலத்தையும் திருப்பிப் போட்டிருக்கிறது இச்சம்பவம்.
    23 வயதான வினோதினி குடும்பத்தில் முதல் முறையாக உயர் கல்வி பயின்றவர். பி.டெக். (ஐ.டி) படித்து, 3 மாதங்களாக சென்னையிலுள்ள சைதாப்பேட்டையில் ஒரு விடுதியில் தங்கி ஜஸ்ட் டயல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

    கடந்த நவம்பர் மாதம் தீபாவளி விடுமுறைக்கு தன் சொந்த ஊரான காரைக்காலுக்கு சென்ற போது சுரேஷ் குமார் என்ற வினோதினியின் தந்தைக்கு தெரிந்த இளைஞன், வினோதினியிடம் காதலைக்கூறி, அதை ஏற்றுக் கொள்ளுமாறு பலமுறை நிர்ப்பந்தித்திருக்கிறான். அதனை மறுத்த வினோதினிக்கு தொல்லைகள் தொடர்ந்தன; பெற்றோர்களிடம் முறையிட்டு, பிறகு அது போலீஸ் வரை சென்று, புகாரும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘இனிமேல் வினோதினி பக்கம் திரும்ப மாட்டேன்’ என்று எழுதி வாங்கிக்கொண்டு, சுரேஷை விடுவித்துள்ளது போலீஸ்.
    தன்னை அவமானப்படுத்திவிட்டதாக குமுறிக் கொண்டு இருந்த சுரேஷ், பெண்ணை ஒரு பொருளாக, சொத்தாக பார்க்கும் மன நிலையில், ‘தனக்கு கிடைக்காத பொருள் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது’ என்று முடிவு செய்திருக்கிறான். ‘வினோதினியின் முகமும் உடலும் சிதைந்து அவள் வாழ்நாள் முழுவதும் துன்புற வேண்டும்’ என்ற நோக்கத்தில் அவள் மீது அமிலத்தை வீசி தன் காதல்வெறியை நிலைநாட்ட முடிவு செய்தான்.
    நவம்பர் 14 அன்று, சென்னைக்கு திரும்புவதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த வினோதினியின் மீது ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் அளவு அமிலத்தை வீசியிருகிறான் சுரேஷ். வினோதினிக்கு நடப்பது என்னவென்று தெரிவதற்குள் அமிலம் எரிச்சலையும், வலியையும் தர தன் உடல் பாகங்கள், முகம் எல்லாம் உதிர்வது போன்ற உணர்வில் தாங்க முடியாமல் துடியாய் துடித்திருக்கிறாள். அப்போதும், வேதனையில் துவளாமல், தன்னை தாக்கிய மிருகத்தை எதிர்த்து போராடியிருக்கிறாள்.
    40% தீக்காயங்களால், தலை, முகம், மார்பு, கைகள், வயிற்றுப் பகுதி எல்லாம் அமிலத் தீக்கு இரையான நிலையில், நரகவேதனையில் காரைக்காலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெறுவதற்கான பண வசதி இல்லாமல், புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்து அங்கும் பயனில்லாமல், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள்.
    அமிலத்தின் வீச்சு கண்களை வெகுவாக பாதித்து கண்களை நீக்க வேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளது. பார்வையில்லாமல், கண்கள் இருந்த சுவடே தெரியாமல் போய் விட, மூடிய விழிகளுக்கு மாற்றாக பொம்மைக் கண்களை பதிப்பதுதான் சாத்தியம் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.
    மருத்துவமனையில் விநோதினி
    இன்று வினோதினிக்கு நடந்த கொடுமையைப்போல, 9 ஆண்டுகளுக்கு முன்பு ஏப்ரல் 22, 2003ல் ஜார்கண்டு மாநிலத்தை சேர்ந்து 17 வயது கல்லூரி மாணவி சோனாலி முகர்ஜியின் முகம் அமிலத்தால் சிதைக்கப்பட்டது. காதலை மறுத்ததால் 3 இளைஞர்கள் அப்பெண்ணின் முகத்தில் அமிலத்தை வீசினர். 22 முறை அறுவை சிகிச்சை, இரண்டு கண்களில் பார்வை இழப்பு, வலது காது கேளாநிலை என்று சோனாலி தொடர்ந்து அவதிப்பட்டுக் கொண்டிருக்க அவரை இந்த நிலைக்கு ஆளாக்கிய குற்றவாளிகள் சிறைத் தண்டனையை முடித்து விட்டு வெளியில் வந்து இயல்பாக உலாவுகின்றனர்.
    சோனாலிக்கு உதவி செய்வதற்காக, அவரை தன்னுடைய “கோன் பனேகா குரோர்பதி” என்ற நிகழ்ச்சியில் 25 லட்சம் ஜெயிக்கவைத்திருக்கிறார் அமிதாப் பச்சன். அவருக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்தி, பார்வையாளர்களை உச்சுக்கொட்ட வைத்து அதன்மூலம் தன் நிகழ்ச்சியின் ரேட்டிங்கை அதிகப்படுத்திக் கொண்டுள்ளார் அந்த வள்ளல் அமிதாப் பச்சன். பிறரின் கண்ணீரிலும் சம்பாதிக்கும் வாய்ப்பை தேடுகிறது இந்த பிசினஸ் கலைஞர்களின் மனிதாபிமான வியாபாரங்கள். மாறாக இவர் சார்ந்துள்ள திரைத்துறைதான் இத்தகைய வெறிபிடித்த ஆணாதிக்கத்தை காதல் என்ற பெயரில் கற்றுக் கொடுக்கின்றன. அதன்படி தண்டிக்கப்பட வேண்டியவர்களே இத்தகைய சினிமா படைப்பாளிகள்தான்.
    ஹரியானாவில் உள்ள ஹிசார் பல்கலைக் கழக வளாகத்தில் கடந்த நவம்பர் 26ம் தேதி தன் காதலை ஏற்க மறுத்த பி.டெக். படிக்கும் சக மாணவியான கீத்திகா மேத்தாவை(20 வயது) பிரதீப் நயின், (21 வயது) என்ற மாணவன், பலர் முன்னிலையில் கோடாலியால் தாக்கி கொன்றான். அதே வளாகத்தில் ஆகஸ்ட் 10ம் தேதி புனேயை சேர்ந்த 19 வயது பி.டெக் மாணவன் சேட்டன் ஷீரோன், வர்ஷா யாதவ் என்ற பொறியியல் மாணவியை பல பேர் முன்னிலையில் கழுத்தை அறுத்து கொலை செய்தான். ‘தன்னைவிட்டு அவள் விலகுவதை ஏற்க மனமின்றி இதைச் செய்ததாகவும் அதற்காக  வருத்தப்படவுமில்லை என்றும் சொல்லியிருக்கிறான்.
    பெண்களின் மீதான இந்தத் தாக்குதல்களின் தன்மை வேறுபட்டு இருப்பினும் அடிப்படை காரணம் ஒன்றுதான்: ‘ஆணின் விருப்பத்திற்கு பெண் என்பவள் இணங்கவேண்டும்’.
    திருமணத்திற்கு பின்பு கணவன் எப்படி நடந்து கொண்டாலும் இது தனக்கு விதிக்கப்பட்ட ஒன்று என்று பெண் சகித்துக் கொண்டு வாழ வேண்டும் என்பது இந்த மண்ணின் மானங்கெட்ட மரபு. அதே போல் திருமணத்திற்கு முன் “காதல்” வயப்படும் பல இளைஞர்கள் இத்தகைய ஆணாதிக்கத்தை பெண்களிடம் நிலைநாட்டவே முயல்கின்றனர். ‘காதல் உறவில் ஆணின் விருப்பம்தான் பிரதானம். பெண்கள் அதை மறுக்காமல் ஏற்பதுதான் மரபு’ என்ற ஆணாதிக்க உணர்வை  ஊட்டி வளர்க்கின்றது சமூகச் சூழல். அடங்காத ஹீரோயினை அடக்கி படிய வைக்கும் ஹீரோவையும், பழகிப் பழகி காதலிக்க வற்புறுத்தும் நாயகனையும் முன்மாதிரியாக வைத்து தமக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்கின்றனர் இளைஞர்கள்.
    அப்படி உருவாக்கிக் கொண்ட அடையாளம் கேள்விக்குள்ளாகும் போது  பழிவாங்குதல் என்ற குரோதநிலைக்கு தள்ளப்பட்டு, அமிலத்தையும், கோடாலிகளையும், கத்திகளையும் கொண்டு பெண்களைத் தாக்கி ‘அவளது வாழ்க்கை என்பது ஆண்களின் காலடியில் இருந்தவாறே அமைவதுதான்’ என்பதை பாடமாகக் கற்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
    இந்த ஆணாதிக்க சமூகத்தை மாற்றி ஆணுக்குப் பெண் சரிநிகர் சமமாக வாழும் உலகைபடைக்க, ஒவ்வொரு பெண்ணும் ஒடுக்கப்படும் அனைத்துப் பிரிவினருக்குமான பிரச்சனைகளையும் புரிந்து கொண்டு அவற்றை எதிர்த்து போராட துணியவேண்டும். சமூக மாற்றத்திற்கான போராட்டங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் போதுதான் பெண்கள் ஆணாதிக்க கொடுமைகளிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக செயல்படும் சமூகச் சூழலை உருவாக்க முடியும்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக