சனி, 26 ஜனவரி, 2013

ரயில் பயணிகளுக்கு தரமான உணவு : 250 சமையலறைகள்

புதுடில்லி: ரயில் பயணிகளுக்கு தரமான உணவு வழங்குவதற்காக, நாடு முழுவதும், 250 இடங்களில், சமையலறைகளை அமைக்க, ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.இதுதொடர்பாக, ரயில்வே அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:தற்போது, 302 நீண்ட தூர ரயில்களில், பயணிகளுக்கு தேவையான உணவுப் பொருட்களை தயாரித்து வழங்குவதற்கு, "பேன்ட்ரி கார்' என்ற தனிப்பெட்டி உள்ளது. இவற்றின் மூலம், ரயில்கள் ஓடிக் கொண்டிருக்கும் போதே, பயணிகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள் தயாரித்து வழங்கப்படுகின்றன.இந்த பேன்ட்ரி கார்களின் பயன்பாட்டிற்கு, இனி, முடிவு கட்டப்படும். அதற்குப் பதிலாக, நாடு முழுவதும், 250 இடங்களில், ரயில்வே சார்பில், சமையலறைகள் அமைக்கப்படும்.இதன்மூலம், ஒவ்வொரு நாளும் ரயில்களில் பயணிக்கும், ஆறு லட்சம் பயணிகளுக்கு தேவையான உணவுப் பண்டங்களும், நொறுக்குத் தீனிகளும் தயாரித்து வழங்கப்படும்.
இங்கு சுகாதாரமான முறையில், அனைத்து பொருட்கள் தயாரிக்கப்படும்.தற்போது ரயில்களில் உள்ள, பேன்ட்ரி கார்கள், இனி உணவுப் பண்டங்கள் மற்றும் நொறுக்குத் தீனிகளை சேமித்து வைக்க பயன்படுத்தப்படும். அத்துடன், டீ, காபி, சூப் போன்றவை மட்டும், அங்கு தயாரித்து வழங்கப்படும். ரயில்வே சார்பில், அமைக்கப்படும் சமையலறைகள், ரயில் நிலையங்களுக்கு அருகில், ரயில்வே நிலத்தில் கட்டப்படும்.இப்படி சமைலறைகளை அமைப்பதன் மூலம், ரயில்வே துறையின் உணவு வர்த்தகம், ஆண்டு ஒன்றுக்கு, 2000 கோடி ரூபாயாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு ரயில்வே அமைச்சக உயர் அதிகாரி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக