செவ்வாய், 8 ஜனவரி, 2013

கலாநிதி மாறனுக்கு எதிரான 2 வழக்குகளை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்


கலாநிதி மாறன் உள்ளிட்டோருக்கு எதிராக காவல் துறையினர் பதிவு செய்த 2 வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.திரைப்பட விநியோகம் தொடர்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனத் தினர் தன்னிடம் ரூ.6 கோடியே 75 லட்சத்தை மோசடி செய்து விட்டதாக திரைப்படத் தயாரிப்பாளர் சக்தி சிதம்பரம் காவல் துறையினரிடம் புகார் அளித்திருந்தார்.அதேபோல் திரைப்பட விநியோகம் தொடர்பான விவகாரத்தில் தனக்குத் தர வேண்டிய ரூ.20 லட்சத்தைத் தராமல் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் தன்னை ஏமாற்றி விட்டதாக நரேஷ் பாபு என்பவர் மற்றொரு புகார் அளித்திருந்தார்.இந்தப் புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை மத்தியக் குற்றப் பிரிவு போலீசார், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஆர்.எம். ரமேஷ், செம்பியன் சிவகுமார், எஸ். கண்ணன் ஆகியோர் மீது இரண்டு தனித்தனி வழக்குகளைப் பதிவு செய்தனர். இந்நிலையில் பொய்யான புகார்களின் அடிப்படையில் தங்கள் மீது இந்த இரண்டு வழக்குகளையும் போலீசார் பதிவு செய்துள்ளதாகவும், இந்த இரு வழக்குகளையும் நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி கலாநிதி மாறன் உள்ளிட்ட 4 பேரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்
.இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி ஏ. ஆறுமுகசாமி, சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் உள்ளிட்டோர்

மீது பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளையும் ரத்து செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டார். இந்த இரண்டு வழக்குகளிலும் எழுந்துள்ள விவகாரங்கள் தொடர்பாக சிவில் நீதிமன்றத்தில்தான் தீர்வு காண முடியும் என்றும், குற்ற வழக்கின் மூலம் இந்த விவகாரங்கள் பற்றி விசாரிக்க இயலாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்<  nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக