வெள்ளி, 7 டிசம்பர், 2012

இந்தி ..Shall be என்ற வார்த்தைக்குப் பதிலாக May be என்ற


மொழிப்போர் / அத்தியாயம் 13
ஆட்சிமொழி ஆணையம், நாடாளுமன்றக் குழு ஆகியவற்றின் பரிந்துரைகளின் தொடர்ச்சியாக மத்திய உள்துறை அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி 13 ஏப்ரல் 1963 அன்று ஆட்சி மொழி மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மசோதாவின்படி, 26 ஜனவரி 1965 முதல் இந்தி மொழி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்கும். இந்திக்குத் துணையாக ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம். இந்த இடத்தில்தான் சிக்கல் தொடங்கியது. ஷரத்துகளில் May, Shall என்ற இரண்டு ஆங்கில வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.
மத்திய அரசின் ஆணைகள், அவசரச் சட்டங்கள், விதிமுறைகள் இந்தியில் மொழிபெயர்க்கப் பட்டால் அவை அதிகாரப்பூர்வமானவையாகக் கருதப்படவேண்டும் (shall be). நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்மொழியப்படும் மசோதாக்கள், திருத்தங்களுக்கு இந்தி மொழிபெயர்ப்பும் இணைக்கப்படவேண்டும் (shall be). மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படும் சட்டங்களும்கூட ஆங்கிலத்தோடு இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் (shall be). அந்த மொழிபெயர்ப்பும் அதிகாரப்பூர்வமானதாகக் கருதப்படும்
(shall be).
அரசியல் சாசனம் தொடங்கி பதினைந்து ஆண்டுகள் கழிந்தபிறகும் மத்திய அரசின் அனைத்து அதிகாரப் பூர்வ நோக்கங்களுக்கும் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கும் இந்தியோடு சேர்த்து ஆங்கில மொழியும் தொடர்ந்து பயன்படுத்தப்படலாம் (may be).  http://www.tamilpaper.net/?p=7175
இந்தி மொழி பற்றிய ஷரத்தில் Shall be என்ற வார்த்தை அழுத்தம் திருத்தமாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் ஆங்கில மொழி பற்றிய ஷரத்தில் Shall be என்ற வார்த்தைக்குப் பதிலாக May be என்ற வார்த்தை மிகுந்த கவனத்துடன் பயன்படுத்தப்பட்டது. ஆம். இந்தியைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என்று சொன்ன அந்தச் சட்டம், ஆங்கில விஷயத்தில் மட்டும் பயன்படுத்தப்படலாம் என்று பட்டும் படாமல் சொன்னது.
அதன்படி, இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலாகி பதினைந்து ஆண்டுகள் கழிந்த பிறகு (26 ஜனவரி 1965) இந்தியாவின் ஒரே ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே இருக்கும். இணை ஆட்சி மொழியாக ஆங்கிலம் பயன்படுத்தப்படலாம் அல்லது பயன்படுத்தப்படாமலும் போகலாம். இதன்மூலம் இந்தியைத் தவிர மற்ற தேசிய மொழிகளின் எதிர்காலத்துக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை என்ற சூழல் உருவாக்கப்பட்டது.
அப்படி இந்தியாவின் ஒரே ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டால் ஏற்படப்போகும் முக்கியமான பாதிப்பு இதுதான்: மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட தேசிய மொழிகளில் எழுதுவதற்கான கதவுகள் முற்றிலுமாக அடைபட்டுவிடும். இப்படி இன்னும் பல பாதிப்புகள் வரிசைகட்டிக் காத்திருக்கின்றன.
மசோதாவைத் தாக்கல் செய்து பேசிய உள்துறை அமைச்சர் சாஸ்திரி, நாடாளுமன்றக் குழுவால் வழங்கப்பட்ட அறிக்கையை இந்த அவையின் உறுப்பினர்கள் பரிசீலனை செய்திருக்கிறார்கள். நான் அறிந்தவரை இந்தக் குழுவின் பரிந்துரைகளுக்கு இந்த அவை ஒப்புதல் கொடுத்திருக்கிறது என்றார். அமைச்சரின் இந்தக் கருத்துக்குக் கடுமையான எதிர்ப்பு எழுந்தது.
அறிக்கையின் மீது வாக்கெடுப்பு எதுவும் நடத்தப்படவில்லை; திருத்தங்கள் கொடுப்பதற்கு அனுமதி தரப்படவில்லை. இந்நிலையில் அறிக்கையை நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டது என்ற தவறான தகவலை அமைச்ச்சர் அவைக்குத் தரக்கூடாது என்று ஆவேசமாகக் கூறினார் மக்களவை உறுப்பினர் ஃப்ராங்க் அந்தோனி. சட்டென்று சுதாரித்துக்கொண்ட அமைச்சர் சாஸ்திரி, “நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகளுக்கு அனுமதி அளிக்கும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இந்த மன்றத்தில் இருந்தார்கள்’ என்று பதிலளித்து, காங்கிரஸ் கட்சிக்குத்தான் பெரும்பான்மை இருக்கிறது, ஆகவே, காங்கிரஸ் கட்சி எடுக்கும் முடிவுதான் இறுதிமுடிவு என்பதை சொல்லாமல் சொல்லிமுடித்தார்.
நேருவின் முந்தைய வாக்குறுதி ஏன் மசோதாவில் இணைக்கப்படவில்லை என்ற கேள்வி நாடாளு மன்றத்தில் பலத்த விவாதத்தைக் கிளப்பியது. மக்களவை உறுப்பினர் ஃப்ராங்க் அந்தோனிக்கும் பிரதமர் நேருவுக்கும் இடையே நேருக்கு நேரான விவாதம் நடந்தது. உச்சக்கட்டமாக, ‘நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டம், மசோதாவுக்கும் உறுதிமொழிக்கும் தொடர்பு இல்லை. நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகிய அமைப்புகளின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவது முட்டாள்தனம்’ என்று பதில் சொல்லி எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார் பிரதமர் நேரு.
பிரதமர் நேருவின் இந்தப் பேச்சுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் நாஞ்சில் மனோகரன் ஆற்றிய எதிர்வினை கவனிக்கத்தக்கது.
‘பிளாரன்ஸ் வணிகன் மாக்கியவல்லி கூறியதை நினைவுபடுத்த விரும்புகிறேன். எவ்வளவு வாக்குறுதிகள் கொடுக்கமுடியுமோ, அவ்வளவு கொடு. ஆனால் அதன்படி நடக்காதே என்றான் மாக்கியவல்லி. பிரதமர் அதனைப் பின்பற்றுவாரானால், அவருக்கு இருபதாம் நூற்றாண்டின் மாக்கியவல்லி என்று பட்டமளிக்கிறேன்.’
ஆட்சிமொழி சட்டத்தில் இருக்கும் May, Shall என்ற வார்த்தைகள் இந்தி பேசாத மக்களை அவமதிக்கிறது; தவிரவும், இந்தி மொழி புழக்கத்தில் இல்லாத பிராந்தியங்களின் மக்கள் விரும்பும்வரை ஆங்கிலத்தை அகற்றமாட்டேன்; ஆங்கிலம் இணை ஆட்சி மொழியாக நீடிக்கும் என்ற நேருவின் வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது என்று விமரிசித்தார் அண்ணா. இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் குறித்து ஆலோசனை செய்வதற்காக திமுகவின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்கள் 8 ஜூன் 1963 தொடங்கி மூன்று நாள்களுக்கு நடந்தன.
ஆலோசனைக்கூட்டங்களின் முடிவில் இந்தித் திணிப்பை எதிர்த்து திமுக நேரடிப் போராட்டத்தில் இறங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. போராட்டக்குழுவின் தலைவராக மு. கருணாநிதி தேர்வு செய்யப்பட்டார். அந்தக் குழுவில் என்.வி. நடராசன் உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்கள், மாநில அமைப்பாளர்கள் இடம்பெற்றனர்.
நான்கு லட்சம் உறுப்பினர்கள், நாலாயிரத்து ஐந்நூறு கிளைகள், மூவாயிரம் துணை மன்றங்கள், ஐம்பது சட்டமன்ற உறுப்பினர்கள், ஏழு தமிழ்நாடு மேலவை உறுப்பினர்கள், ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள், சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பதினோரு நகராட்சிகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் திமுக இந்தித் திணிப்புப் போராட்டத்துக்குத் தயாராகிவிட்டது என்பது மத்திய ஆட்சியாளர்களின் கவனத்துக்குச் சென்றது. திமுக கிளர்ச்சிகளைக் கைவிடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் உள்துறை அமைச்சர் சாஸ்திரி. ஆனால் அதனைப் புறக்கணித்துவிட்டுப் போராட்டத்துக்குத் தயாரானது திமுக.
மு. கருணாநிதி தலைமையிலான போராட்டக்குழுவினர் இந்தித் திணிப்புக்கு எதிரான பிரசாரப் பணிகளில் தீவிரம் காட்டினர். பொதுக்கூட்டங்கள். கண்டனக் கூட்டங்கள். பிரசார நாடகங்கள். சுவரொட்டிகள். துண்டுப்பிரசுரங்கள். கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் மூலம் மத்திய அரசின் இந்தித் திணிப்பு முயற்சிகள் மக்களுக்கு எடுத்துச்சொல்லப்பட்டன. 13 அக்டோபர் 1963 அன்று சென்னையில் நடந்த இந்தி எதிர்ப்புப் பொதுமாநாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்தியை ஆட்சிமொழியாக அறிவிக்கும் இந்திய அரசியல் சாசனத்தின் பதினேழாவது பிரிவை நீக்க வேண்டும்; தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் பதினான்கு தேசிய மொழிகளையும் ஆட்சிமொழியாக்கும் வகையில் புதிய சட்டப் பிரிவு இணைக்கப்படவேண்டும். இவைதான் எங்களுடைய பிரதான கோரிக்கைகள். அவற்றை வலியுறுத்தி 17 நவம்பர் 1963 தொடங்கி 26 ஜனவரி 1965 வரை இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவித்தது திமுக.
போராட்டங்கள் என்றால் பொதுக் கூட்டங்கள், பேரணிகள் நடத்துவது, ஊர்வலம் செல்வது, மறியல் செய்வது, கறுப்புக்கொடி காட்டுவது, கறுப்பு பேட்ஜ் அணிவது, கறுப்புக்கொடி ஏற்றுவது, இத்யாதி இத்யாதிகள். முக்கியமாக, ஆட்சிமொழிச் சட்டத்தின் பதினேழாவது பிரிவை நகலெடுத்து எரிப்பது. இந்தித் திணிப்பை அகற்ற நான்கு ஆண்டுகள் என்ன.. நாற்பது ஆண்டுகள் கூட சிறைசெல்லத் தயார் என்ற அண்ணாவின் முழக்கம் திமுகவினரைக் களம் நோக்கி நகர்த்திச் சென்றது.
அண்ணா, கே.ஏ. மதியழகன், மு. கருணாநிதி, க. அன்பழகன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் நேரடியாகக் களத்தில் இறங்கினர். தலைமை அறிவித்த அத்தனை வகையான போராட்டங்களும் அட்சரம் பிழகாமல் நடந்தன. சட்ட நகல் எரிப்புப் போராட்டம் பெரிய அளவில் நடந்தது. அதில் ஈடுபட்டவர்கள் ஆறுமாதம், ஒருவருடம் என்று சிறைத் தண்டனை பெற்றனர்.
திமுக நடத்திய மொழிப்போரின் தாக்கம் தமிழ் இளைஞர்களை உசுப்பேற்றியது. தமிழ் காக்கும் போராட்டத்தில் தங்களையும் ஈடுபடுத்திக்கொள்ளத் தயாராகினர். அவர்களில் ஒருவர் சின்னச்சாமி. வயது இருப்பத்தியேழு. திருச்சி மாவட்டம் கீழப்பழுவூர்கிராமத்தைச் சேர்ந்தவர். திருமணமானவர். திமுக தொண்டரான இவருக்கு மனைவியும் திராவிடச் செல்வி என்ற இரண்டு வயது மகளும் இருந்தனர். சொந்த வேலை காரணமாக திருச்சியில் இருந்து ரயில் மூலம் சென்னை சென்றிருக்கிறார் சின்னச்சாமி.
முதலமைச்சர் பக்தவத்சலமும் அதே ரயிலில்தான் பயணம் செய்கிறார் என்ற செய்தி காற்றுவாக்கில் காதில் விழுந்தது சின்னச்சாமிக்கு. உற்சாகம் வந்துவிட்டது சின்னச்சாமிக்கு. எப்படியாவது முதலமைச்சரைப் பார்த்துவிடவேண்டும் என்று நினைத்துக் கொண்டார். ரயில் சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் வந்து நின்றதும் முதலமைச்சரை நோக்கி ஓடினார்.
பாதுகாவலர்கள் புடைசூழ எதிரே வந்துகொண்டிருந்தார் முதலமைச்சர் பக்தவத்சலம். அவரைப் பார்த்த மாத்திரத்தில் மனத்துக்குள் எழுந்த கேள்வியைக் கேட்டார் சின்னச்சாமி.
“அய்யா, நீங்கள் தமிழைக் காப்பதற்காக இந்தித் திணிப்பைத் தடுக்கக்கூடாதா?’
ஏற்கெனவே திமுக நடத்திக்கொண்டிருந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களைக் கண்டு எரிச்சலில் இருந்தார் பக்தவத்சலம். இப்போது வழியில் தென்பட்ட யாரோ ஒருவர் இந்தித் திணிப்பு பற்றிக் கேள்வி கேட்டதை அவர் கொஞ்சமும் ரசிக்கவில்லை. சின்னச்சாமியின் கேள்வியை அலட்சியம் செய்துவிட்டு மின்னல் வேகத்தில் நகர்ந்து விட்டார்.
மறுநொடி சின்னச்சாமியை சூழ்ந்துகொண்டனர் காவலர்கள். கையோடு எழும்பூர் காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்கத் தொடங்கினர். பிறகு விடுவித்துவிட்டனர். இருப்பினும், முதலமைச்சர் காட்டிய அலட்சியம் சின்னச்சாமியை அதிருப்தியில் ஆழ்த்தியது. இந்தித் திணிப்பைத் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்குத் தன்னால் ஆன காரியத்தைச் செய்யவேண்டும். சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தவர் தன்னுடைய நண்பருக்குக் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தின் முக்கியப்பகுதி இதோ:
ஏ, தமிழே! நீ வாழவேண்டும் என்பதற்காக நான் துடியாத் துடித்துச் சாகப்போகிறேன்.. காலை 11 மணிக்குள் என் உடல் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு செத்துவிடுவேன். இதைப் பார்த்த பிறகாவது ஏன் இந்தி? எதற்காக இந்தி? என்று மக்கள் கேட்கட்டும்.
எழுத்தில் சொன்னதைச் செயலில் காட்டத் தயாரானார் சின்னச்சாமி. 25 ஜனவரி 1964 அன்று காலை திருச்சி ரயில் நிலையத்துக்கு வந்த சின்னச்சாமி தன்னுடைய உடலுக்குத் தீ வைத்துக்கொண்டார். இந்தி ஒழிக! தமிழ் வாழ்க! என்ற கோஷம் எழுப்பியபடியே எரியத் தொடங்கினார். சில நிமிடங்களில் கோஷம் நின்றது. உயிர் பிரிந்தது. இந்தித் திணிப்பைக் கண்டித்து முதல் களபலியாக மாறியிருந்தார் சின்னச்சாமி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக