திங்கள், 24 டிசம்பர், 2012

PMK :பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு இவ்வாறு தடைவிதிக்கப்பட்டால்

ராமதாஸ் மதுரை வருவதை தடுத்து விட்டு, அவர்கள் அரசியல் செய்துவிட முடியுமா?

ஐயகோ கலெக்டருக்கு தமிழ் புரியலையா?Viruvirupu
ஐயகோ கலெக்டருக்கு தமிழ் புரியலையா?
அரசியல் சட்டப்படி வழங்கப்பட்டுள்ள பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு தடைவிதிக்கப்பட்டால், தமிழகத்தில் எந்த தலைவருமே அரசியல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடும். கலகத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக கூறி டாக்டர் ராமதாஸுக்கு மதுரை கலெக்டர் நோட்டீஸ் அனுப்பியிருப்பது கண்டனத்துக்குரியது என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவரிடம் இருந்து அறிக்கை ஒன்று வந்துள்ளது.
“மதுரையில் கடந்த 20-ம் தேதி நடைபெற்ற அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவையின் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தெரிவித்த கருத்துகள் பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும், கலகத்தை தூண்டும் வகையிலும் இருப்பதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஷ்ரா கூறியிருக்கிறார். இதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 144-வது பிரிவின்படி மதுரை மாவட்ட எல்லைக்குள் நுழைவதற்கு ஏன் தடை விதிக்கக்கூடாது என்று விளக்கம் கோரி ராமதாஸுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.
ஆட்சியரின் இந்த நடவடிக்கை தமிழகம் முழுவதுமுள்ள பா.ம.க.வினரையும், அனைத்து சமுதாய மக்களையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
மதுரையில் நடந்த அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவைக் கூட்டத்திலோ, அல்லது செய்தியாளர் சந்திப்பிலோ, கலகத்தை தூண்டும் வகையிலோ அல்லது பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலோ எந்தக் கருத்தையும் ராமதாஸ் தெரிவிக்கவில்லை. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும், பின்னர் ராமதாஸ் அளித்த நேர்காணலிலும் வன்கொடுமை தடுப்பு சட்டம் சிலரால் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே கருத்தை இந்தியா முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் பலமுறை கூறியிருக்கிறார்கள். நீதி மன்றங்களும் இந்த குற்றச்சாற்றை உறுதி செய்திருப்பதுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆணையிட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் மத்திய அரசும் இதை உறுதி செய்திருக்கிறது.
அப்பாவிகளை பழிவாங்குவதற்காக வன்கொடுமை சட்டத்தை சிலர் தவறாக பயன்படுத்துவதை தடுக்கும்படி ராமதாஸ் கோரிக்கை விடுத்தது எவ்வகையில் கலகத்தை தூண்டும்? இந்த கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்துவதால் பொது அமைதி எந்த வகையில் பாதிக்கப்படும்? என்பதை மாவட்ட ஆட்சியர்தான் விளக்க வேண்டும்.
மதுரையில் கூறியதாக கூறப்படும் கருத்துகளைத்தான் கடந்த 2-ம் தேதி சென்னையில் நடந்த அனைத்து சமுதாய தலைவர்கள் கூட்டத்திலும் ராமதாஸ் கூறியிருந்தார். அந்த செய்தி தமிழகம் முழுவதும் ஊடகங்களில் வெளியாகியிருந்தது. இன்றுவரை சிறிய சலனம் கூட ஏற்படாத நிலையில், மதுரை ஆட்சியர் அறிவிக்கை அனுப்பியிருப்பது முறையல்ல.
இந்திய அரசியல் சட்டத்தின் 19 (1) பிரிவின் உட்பிரிவு (ஏ)-ன்படி அனைத்து குடிமக்களுக்கும் கருத்து மற்றும் பேச்சு சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது. உட்பிரிவு (சி)-ன்படி புதிய அமைப்புகளை ஏற்படுத்தும் உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. உட்பிரிவுகள் (டி), (ஈ)-ன்படி இந்தியாவின் எந்தப் பகுதியிலும் நடமாடுவதற்கோ அல்லது வசிப்பதற்கோ உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு இருக்கும் போது, ராமதாஸுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த உரிமையை, இல்லாத காரணங்களுக்காக பறிக்க முயல்வது அரசியல் சட்டத்தை மீறும் செயலாகும். இதற்காக நீதிமன்றத்திற்கு பதில்கூற வேண்டியிருக்கும்.
அரசியல் சட்டப்படி வழங்கப்பட்டுள்ள பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு இவ்வாறு தடைவிதிக்கப்பட்டால், தமிழகத்தில் எந்த தலைவருமே அரசியல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடும்” என்று அவர் அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக