செவ்வாய், 4 டிசம்பர், 2012

BR. மகாதேவன்: நான் சாதி வெறியை வெறுக்கிறேன்!


இளவரசன் என்ற பறையர் சாதிப் பையனும் திவ்யா என்ற வன்னியர் சாதிப் பெண்ணும் மனம் விரும்பிச் செய்துகொண்ட திருமணம், அணைந்துவிட்டதாக நாம் நினைத்துக் கொண்டிருந்த ஒரு எரிமலையை வெடிக்கச் செய்திருக்கிறது. இந்தத் துயரமான நிகழ்வு பல விஷயங்களை மறுபரிசீலனைச் செய்யத்தூண்டியுள்ளது.
சாதி உணர்வானது நவீன உலகில் சாதி வெறியாக உருத்திரண்டு வருகிறது. கடந்தகாலம் பற்றிய தெளிவான புரிதல் இல்லையென்றால் எதிர்காலம் நிச்சயம் மோசமாகவே ஆகும் என்பதற்கு இந்தக் கொடூரத் தாக்குதல் நல்ல உதாரணம். தென் மாவட்டங்களைவிட வட மாவட்டங்களில் சாதி சார்ந்த ஒடுக்குமுறையானது இதுவரையில் குறைவாகவே இருந்துவந்திருக்கிறது. அது காலப்போக்கில் மறைந்துவிடும் என்ற நம்பிக்கையின் இளம் துளிரை மிதித்து நாசமாக்கிவிட்டிருக்கிறது இந்த நிகழ்வு.
இத்தனைக்கும் வன்னியர்களின் தலைவரான ராமதாஸ், பறையர்களுடன் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்காக மனப்பூர்வமாக ஏராளமான களப்பணிகள் செய்திருக்கிறார். அவருடைய முயற்சிகள் சாதி வெறியின் நெருப்பை அணைத்துவிட்டிருக்கவில்லை. அதோடு, பாட்டாளி மக்கள் கட்சியும் சமீபகாலமாக கலப்புத் திருமணத்தை வெளிப்படையாக எதிர்க்க ஆரம்பித்திருக்கிறது. ராமதாஸ் முன்னிலையில் காடு வெட்டி குரு பேசியவையெல்லாம் வெறுமனே அவருடைய தனிப்பட்ட கருத்தாக மட்டுமாக நிச்சயமாக இருந்திருக்க முடியாது.
எனவே, இது ராமதாஸின் திசைமாறலாகவே தோன்றுகிறது. ஒருவகையில் அவர் இதுவரை செய்த நல்லிணக்க முயற்சியின் நன்மையைவிட இந்த வன்முறைப் பாதையில் போவதால் ஏற்படப் போகும் இழப்பு மிகவும் அதிகமாக இருக்கும்.
தமது சாதியைச் சேர்ந்த ஒரு இளைஞனை விரும்பித் திருமணம் செய்துகொண்ட ஒரு பெண்ணுக்கு அடைக்கலம் தந்ததற்காகப் பறையர் சமூகம் கொடுக்க நேர்ந்த விலை கொஞ்சநஞ்சமல்ல. அக்கம் பக்கத்தில் இருந்தபடி, தினம் தினம் சிரித்துப் பேசியபடி, ‘தாயா புள்ளையாக’ வாழ்ந்த வன்னியர்களின் மனத்தில் இத்தனை வன்மம் குடிகொண்டிருந்ததா என்று வெறுப்பிலும் வேதனையிலும் ஆழ்ந்திருக்கும் பறையர் சமூகத்தினருக்கு என்ன செய்து நம்பிக்கையை ஊட்ட முடியும்?
அடுத்ததாக, இந்த வன்முறை நிகழ்வுக்கு மூலகாரணமாக இருந்துவிட்டிருக்கும் அந்த காதலர்களை நினைத்துப் பார்க்கவேண்டியிருக்கிறது. திவ்யா, இளவரசன் என்ற அந்த இரு இளைஞர்களைப் பொறுத்தவரை மிகவும் துர்பாக்கியசாலிகள். காதலுக்கு யார் யாரோ எவ்வளவோ பெரிய விலைகளெல்லாம் கொடுக்க நேர்ந்திருக்கிறது. ஆனால், இவர்கள் அளவுக்குப் பெரும் இழப்பை யாரும் தர நேர்ந்திருக்காது. அந்த இளைஞனின் மனத்தில் இப்போது என்ன எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும்? நாம் ஒரு பெண்ணை நேசித்ததற்காக நம் சாதியைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு பெரிய துயரத்தை சந்திக்க நேர்ந்துவிட்டது? இப்படி நடந்திருக்கும் என்று தெரிந்திருந்தால், காதலித்திருக்கவே மாட்டேனே என்று அந்த மனம் தனிமையில் கதறி அழக்கூடும்.
அந்தப் பெண்ணும் மனதுக்குப் பிடித்த ஒருவருடன் வாழ முடிவெடுத்ததற்காக என் தந்தையை இழக்க நேர்ந்துவிட்டது. சொந்த சாதிக்காரர்களின் மனத்தில் தூங்கிக் கொண்டிருந்த மிருகத்தை என் காதல் சீண்டிவிட்டது… நான் திரும்பிச் செல்லாததால் என் கணவரின் சாதியினர் பட்ட துன்பங்களுக்கு இனி எப்படி ஈடுகட்டப்போகிறேன் என்று மனதுக்குள் மருகிக்கொண்டிருக்கலாம். குலத்தை அழிக்க வந்த மாபாதகி என மற்றவர்கள் தூற்றுவார்கள் என அவள் அஞ்சக்கூடும். இவர்கள் இருவரும் எந்தவகையிலும் இந்த வன்முறைக்குக் காரணம் இல்லையென்றாலும் அவர்களுடைய திருமணம்தானே அதற்கான முதல் விதை. திவ்யா, இளவரசனின் மனம் படும் வேதனையை நாம் எப்படிப் போக்கப் போகிறோம்?
இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் பார்க்கவேண்டும். இது ஒருவகையில் நமது சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையைப் போன்றது. நம்முடைய வலிமை மிகுந்த சகோதரர் ஒருவர் வலிமை குறைந்த சகோதரரை மூர்க்கமாகத் தாக்கியிருக்கிறார். எனவே, பாதிக்கப்பட்ட சகோதரரின் காயத்துக்கு மருந்திடவேண்டும். பாதிப்பை ஏற்படுத்திய சகோதரரைக் கண்டிக்க வேண்டும். ஆனால், இருவரும் ஒற்றுமையாக வாழ என்ன வழி என்பதே நம் முயற்சியாக இருக்கவேண்டும். திருமாவளவன் இந்தத் திசையில் சிந்தித்துச் செயல்படுவது நிச்சயம் வரவேற்கத் தகுந்தது.
இந்த வன்முறையைக் கண்டிக்கும் வன்னியர்களை முதலில் ஒருங்கிணைக்கவேண்டும். அவர்கள் மூலமாக இந்த நல்லெண்ண முயற்சியை முன்னெடுக்கவேண்டும். ஒட்டுமொத்த தமிழ் சமூகம் அவர்களுக்குப் பின்னால் நின்று இந்த நேரத்தில் நம் ஆதரவை அவர்களுக்குத் தெரிவிக்கவேண்டும்.
இது தொடர்பாக, நம் சமூகத்தில் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது என்ன? வன்னியர்களின் கட்சி, தார்மிகப் பொறுப்பேற்று மூன்று கிராம மக்களுக்கு ஏற்பட்ட ஒட்டு மொத்த இழப்புக்கு நஷ்ட ஈடு தரவேண்டும் இந்த தாக்குதலின் ஆதார அச்சாக பா.ம.க. கட்சிப் பிரமுகர்களே இருந்திருக்கிறார்கள். காடுவெட்டி குருவும் (ராமதாஸ் முன்னிலையில்), கொங்கு வேளாளர் பேரவையும் கலப்பு திருமணத்துக்கு எதிராகப் பேசியவை அனைவருக்கும் தெரிந்தவைதான். எனவே, ஏதோ சில கிராமத்தைச் சேர்ந்த மக்கள் உணர்ச்சிவசப்பட்டு வன்முறையில் ஈடுபட்டுவிட்டார்கள் என்று சொல்ல முடியாது. அனைத்து கட்சியைச் சேர்ந்த வன்னியர்களும், பிற சாதியினர் சிலரும் இந்த வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார்கள். என்றாலும் பா.ம.க. கட்சியினரே கூடுதல் பொறுப்பு உள்ளவர்கள்).
தமிழக முதல்வர் ஜெயலலிதா செய்யவேண்டியது என்னவென்றால், விருப்பமுள்ள ஒரு வன்னியப் பெண்ணுக்கும் தலித் ஆணுக்கும் அரசு செலவில் பிரமாண்டமாக ஒரு திருமணத்தை நடத்தவேண்டும். ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்கள் தமது பிறந்த நாளில் கலப்புத் திருமணத்தை மட்டுமே முன்னின்று நடத்தவேண்டும். வெறும் சடங்கு மறுப்புத் திருமணங்கள் போதாது.
தமிழ் சமூகம் இந்தத் துயர நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பக்கத்தில் இருக்கிறோம் என்பதைக்காட்டும் வகையில் பொருளாதார உதவிகளை உடனே செய்து தரவேண்டும். அந்த மூன்று கிராம மக்களின் ஒரு தலைமுறை உழைப்பு கொள்ளை போயிருக்கிறது. அதில் சொற்பமேனும் நம்மால் அவர்களுக்குக் கிடைத்தாக வேண்டும். ஒருவகையில் இந்த வன்முறைத் தாக்குதலுக்கு நாமும் உடந்தையே. நாமும் பரிகாரம் செய்தாக வேண்டும்.
வெள்ளம், புயல், பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும்போது சக மனிதர்களுக்கு நன்கொடை தந்து ஆதரவுக் கரம் நீட்டுவதுபோல் இந்த துயர நிகழ்வுக்கும் நாம் உதவ முன்வரவேண்டும். தீயை நீரால் அணைப்பதுபோல், அடிப்படைவாத, சாதி, மத வெறிகளை சமத்துவ, சகோதரத்துவ எண்ணம் கொண்டு விரட்டியடிக்கவேண்டும். அடிப்பதற்கே ஆயிரம் பேர் கூடுகிறார்கள் என்றால் அணைப்பதற்கு எவ்வளவு பேர் கூடவேண்டும்? தருமபுரி என்றால் இந்தக் கொடூரத் தாக்குதல் அல்ல… நாம் செய்யப் போகும் உதவிகளே நினைவில் வரவேண்டும். அந்த அளவுக்கு கூட்டுப் பொறுப்புடன் தமிழ் சமூகம் செயல்படவேண்டிய தருணம் இது.
அதற்கு முதலில் இந்தப் பிரச்னையின் ஆணிவேரை நாம் தேடிச் செல்லவேண்டும்.
0
உண்மையில் பிரச்னை கலப்புத் திருமணம் சம்பந்தப்பட்டது அல்ல. ஏனென்றால், இது போன்ற கலப்புத் திருமணங்கள் அந்தப் பகுதியில் இதற்கு முன்பும் நடந்திருக்கின்றன. அதோடு அவர்கள் தூய்மையான காதலர்களும் அல்ல. பறையருக்கும் பள்ளருக்கும் தேவர் சாதிப் பெண் மீதும் வன்னியர், கவுண்டர் போன்ற மேல் சாதிப் பெண் மீது மட்டுமே பொங்கிப் பிரவகிக்கும் இந்தக் காதல்கள் அப்படி ஒன்றும் இயல்பானவை அல்ல. பறையர் சாதி ஆணோ பள்ளர் சாதி ஆணோ சக்கிலியர், தோட்டி, வெட்டியார் சாதிப் பெண்களை உருகி உருகிக் காதலித்ததாகப் பெரிதாகக் கேள்விப்பட்டது இல்லை. ஆக, அவர்கள் மனத்திலும் கீழ் சாதியினர் என்று அவர்கள் நினைக்கும் பிரிவினர் மீது ஒவ்வாமை இருக்கத்தான் செய்கிறது. எனவே, இடைநிலைச் சாதியினர் தமது சாதிப் பெண்ணை, கீழ்சாதி என்று அவர்கள் நினைக்கும் பிரிவினர் திருமணம் செய்துகொள்ளும்போது எதிர்ப்புக் காட்டுவதை நாம் புரிந்துகொள்ளத்தான் வேண்டும். மேலும் இந்தக் காதல் திருமணங்கள் வேறு வகையான கணக்குத் தீர்த்தலுக்குப் பயன்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இதையும் கணக்கில் கொள்ளவேண்டும்.
என்னதான் சொன்னாலும் ஒரு திருமணம் என்பது சம்பந்தப்பட்ட ஆணும் பெண்ணும் மட்டுமே தீர்மானித்துவிட வேண்டிய ஒன்று அல்ல. பிற பல விஷயங்கள் அதில் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அவையெல்லாம் எந்தவகையிலும் இன்று நடந்திருக்கும் வன்முறையை நியாயப்படுத்திவிட முடியாது. பிரச்னை வெறும் கலப்புத் திருமணம் மட்டுமே அல்ல என்பதுதான் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.
பறையர்/பள்ளர்களின் பொருளாதார வளர்ச்சியானது இடைநிலைச் சாதியினரால் மிகுந்த அதிருப்தியுடனே பார்க்கப்படுகிறது. இதுதான் பிரச்னையின் முக்கிய காரணம். இப்படியான ஒரு நிலை ஏற்பட்டதற்கு நம் நாட்டில் தோன்றிய சமூக சீர்திருத்தப் போராளிகளே ஒருவகையில் காரணம். சமத்துவம் என்ற கருத்தால் வசீகரிக்கப்பட்ட அவர்கள் அதை அடிப்படை உரிமையாக முன்வைத்திருக்கிறார்கள். ஒருவகையில் இது அதிகப்படியான ஓர் எதிர்பார்ப்பு. உண்மையில் சமத்துவ சமூகம் என்பது நம்முடைய இறுதி இலக்கு. பந்தயத்தின் ஆரம்பப் புள்ளி அல்ல.
காந்தியும் அம்பேத்கரும் சொல்லிவிட்டார்கள்… இந்திய அரசியல் சாசனத்தில் எழுதப்பட்டுவிட்டது என்பதால் எல்லாரும் எல்லாரையும் சமமாக மதிக்க ஆரம்பித்துவிடமாட்டார்கள். இது ஏதோ இந்து மதத்தின் காபிரைட் பிரச்னையும் அல்ல. நேற்றுவரை புராட்டஸ்டண்டுகளும் ரோமன் கத்தோலிக்கர்களும் ஒருவரை ஒருவர் வெட்டியும் குத்தியும்தான் வாழ்ந்திருக்கிறார்கள். இன்றும் ஷியா முஸ்லிம்களும் சன்னி முஸ்லிம்களும் ஒருவரை ஒருவர் கொன்று குவித்தபடிதான் வருகிறார்கள். உலகில் இருக்கும் அனைவருமே நம்மவர்கள் என்று ஒரு குழுவையும் பிறர் என மற்றவர்களையும் அவர்களில் ஏதாவது ஒரு பிரிவுடன் மிக மோசமான பகைமை உணர்வையும் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். இது மனித இனத்தின் சாபக்கேடு. எந்தக்குழு மனப்பான்மை வளமான வாழ்வுக்கு காரணமாக இருக்கிறதோ அதுவே ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல், குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மேல் வீழ்ச்சிக்கும் காரணமாக அமையும். அந்த எல்லை எது என்பதை எந்தக் குழு புரிந்துகொள்கிறதோ அதுவே சமூக படிகளில் முன்னேறிச் செல்லும்.
மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் குழு மனப்பான்மை பல வசதி வாய்ப்புகளை உருவாக்கித் தந்திருக்கிறது. நவீன கால உதாரணமாகப் பார்த்தால், தமிழகத்தில் நாடார்கள் பொருளாதார அடுக்கில் மேலே வந்ததற்கு சாதி எண்ணம் மிக முக்கிய பங்காற்றியிருப்பதைச் சொலலாம். மனிதர்கள் அனைவரும் சமம் என்ற உணர்வுடன் அணி திரள்வது நல்லது என்ற எண்ணம் மிக சமீபமாக அதாவது ஓரிரு நூற்றாண்டுகளாக உருவாகிவந்திருக்கிறது. மனித இனம் கடந்து வந்திருக்கும் காலகட்டத்தை ஒப்பிடும்போது இது மிகவும் குறுகிய காலகட்டமே. எனவே, இத்தகைய வன்முறை நிகழ்வுகளை பழகிய பாதையில் இருந்து புதிய பாதைக்கு மாறுவதில் உள்ள சிக்கலாகவே பார்க்கவேண்டும்.
இந்து என்ற அடையாளமோ தமிழர் என்ற அடையாளமோ ஆழமாக வேரூன்றியிருக்கவில்லை. சாதிதான் ஆழமாக ஊன்றியிருக்கிறது. எனவே, இது பற்றிப் பேசும்போது ஒவ்வொரு சாதியும் தம்மை சுயவிமர்சனமும் செய்து கொண்டே ஆகவேண்டும். தம்மைவிடத் தாழ்ந்த சாதியாக, தான் கருதும் நபர்களுக்கு, தம்மைவிட வளமான வாழ்க்கை எளிதில் கிடைத்துவிடும்போது தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதாக ஒருவர் நினைப்பதில் இருக்கும் நியாயத்தை நாம் புரிந்துகொள்ள முயற்சி செய்யவேண்டும்.
ஒரு அலுவலகத்தில் 10 கிளார்க்குகள் இருக்கிறார்கள். ஐந்து ப்யூன்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். சீனியர் கிளார்க் பதவிக்கு ஐந்து ஆட்களை நியமிக்கவேண்டுமென்றால் என்ன செய்வார்கள்? கிளார்க்களில் இருந்து ஐந்து பேரை நியமிப்பதுதான் அலுவலக நடைமுறை. கூடவே, ஐந்து பியூன்களை கிளார்குகளாக ஆக்குவார்கள். இதுதான் பொதுவாக நடக்கும் விஷயம். ஒருவேளை மூன்று கிளார்குகளை சீனியர் கிளார்க் ஆகவும் இரண்டு பியூன்களை நேரடியாக சீனியர் கிளார்க் ஆகவும் ஆக்கினால் என்ன நடக்கும் என்று யோசித்துப் பாருங்கள். பதவி உயர்வு கிடைக்காத கிளார்க்குகள் கொதித்து எழுவார்கள். பதவி உயர்வு கிடைத்த கிளார்க்குகள் கூட ஒரு பியூன் எனக்கு சமமாக நியமிக்கப்படுவதா என்று ஆவேசப்படுவார்கள். ஒரு அலுவலகத்தில் ஒரு தலைமுறைக் காலம் செய்த பணிக்கே இந்த தாக்கம் என்றால் பல தலைமுறைகளாக நிலவி வந்த சாதி அடுக்கில் இருக்கும் ஏற்றத்தாழ்வைப் போக்க என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கும்? சமத்துவம் நல்ல கொள்கைதான். ஆனால், அதை எப்படி அமல்படுத்துவது என்பதில்தான் ஒரு தெளிவு நமக்கு இல்லை.
இடைநிலைச் சாதியைச் சேர்ந்தவருக்கு தனக்குப் பக்கத்தில் சரிக்கு சமமாக கடைநிலைச் சாதியைச் சேர்ந்த ஒருவரை உட்காரவைக்க மனம் இல்லையென்றால் என்ன செய்யவேண்டும்? அனைவரும் சமம் என்ற எண்ணத்தை இடைநிலைச் சாதியினரின் மனத்தில் உருவாக்க வேண்டும். அதன் பிறகுதான் கடைநிலைச் சாதியினரை அவருக்கு அருகில் உட்காரவைக்கவேண்டும். அதைவிட்டுவிட்டு கடைநிலை சாதியைச் சேர்ந்தவரை வலுக்கட்டாயமாக இடைநிலைச் சாதியினருக்குப் பக்கத்தில் உட்கார வைத்து அதன் மூலம் இடைநிலைச் சாதியினரின் மனத்தில் கடைநிலைச் சாதியினர் மீதான சமத்துவ உணர்வை உருவாக்க ஒருபோதும் முடியாது. கலைஞர்கள், சமூக சீர்திருத்தவாதிகள், சமூக நல்லிணக்கப் போராளிகள் இது தொடர்பாக ஊர் ஊராகச் சென்று சமத்துவ எண்ணத்தை மேல், இடைநிலை சாதியினரின் மனத்தில் விதைத்திருக்கவேண்டும். விஷமானது சிறுகச் சிறுக சேகரமாகும்போதே அதை அகற்றியிருக்கவேண்டும். இந்த இடத்தில்தான் நமது திரைப்படங்கள் காதல் பிரச்னையை வெறும் பண்ணையார், அடியாள் பிரச்னையாக வர்க்கம் சார்ந்த ஒன்றாக சாதி நீக்கம் செய்து காட்டியதில் இருக்கும் அவலத்தை யோசித்துப் பார்க்கவேண்டும்.
சமூக சீர்திருத்தப் போராளிகள் பிராம்ண/இந்துமத வெறுப்பு சார்ந்த செயல்பாடுகளுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தில் நூறில் ஒரு பங்கையாவது இடை, கடை நிலை சாதிகளிடையே சமத்துவம் ஏற்படப் போராடியிருக்க வேண்டும். வைக்கத்தில் ஆலய நுழைவுக்கு எதிராக போராடியதுபோல் தமிழக கிராமங்களில் எங்கெல்லாம் இடை நிலை சாதியினரின் கோயில்களில் கடைநிலை சாதியினருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்ததோ அங்கும் போராட்டங்களை முன்னெடுத்திருக்க வேண்டும். தமிழகக் கலைஞர்கள் ஒவ்வொருவரும் இதைத் தமது சமூகக் கடமையாக எடுத்துக்கொண்டு செயல்பட்டிருக்கவேண்டும். பொருளாதார நடவடிக்கைகள் இரு சமூகத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு வழிவகுத்திருக்க வேண்டும். ஆனால், இப்படி எதுவும் நடக்கவில்லை.
பெரும்பாலானவர்கள் இடைநிலைச் சாதியினரின் மனத்தில் இருக்கும் சமத்துவ மறுப்பு எண்ணத்தை மேல் சாதியினரின் குற்றமாகப் பார்க்கிறார்கள். இந்து மதம், மனுஸ்மிருதி… இவைதான் இடைநிலை சாதியினர் இப்படி நடந்துகொள்ளக் காரணம் என்று நினைக்கிறார்கள். உலகில் எல்லா சமூகங்களிலும் இப்படியான சமத்துவ மறுப்பு இருந்துவந்திருக்கும் நிலையிலும் இந்துமதத்தின் குறையாகவே இதைப் பெரும்பாலானவர்கள் பார்க்கிறார்கள். அதுவே, இந்த சமத்துவ மறுப்பு என்ற மனித இனத்தின் இயல்பான ஒரு மனநிலையைப் புரிந்துகொள்ளவோ அதை எப்படி மட்டுப்படுத்துவது என்று நிதானமாக யோசிக்கவோ விடாமல் தடுத்துவிடுகிறது. இந்தவகைப் போராட்ட நடவடிக்கைதான் மேல், இடை, கடை என அனைத்து சாதிகளில் இருக்கும் சாதி எதிர்ப்புப் போராளிகளாலும் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கிறது. இதனால்தான் இப்படி அப்பட்டமாக இடைநிலை சாதியினரால் ஒரு வன்முறை நிகழ்த்தப்படும்போது சாதி எதிர்ப்புப் போராளிகள் என்ன சொல்ல என்று தெரியாமல் ஸ்தம்பித்து நிற்கிறார்கள். இந்த வன்முறையே ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி போன்ற அமைப்புகளால் நடத்தப்பட்டிருந்தால் முற்போக்குப் போராளிகள் தங்களுடைய ரெடிமேட் முழக்கங்களை நரம்பு புடைக்கக் கத்திக்கொண்டு வீதிக்கு வந்துவிட்டிருப்பார்கள். உலகமே ஒன்றுகூடி இந்து மதத்தைக் கட்டம் கட்டித் தாக்கியிருக்கும். ஆனால், இங்கோ நிலைமை மிகவும் தர்மசங்கடமாகிவிட்டிருக்கிறது. மனுவோடு இந்த நிகழ்வை எப்படி முடிச்சுப்போடுவது என்ற குழப்பத்தில், ஏற்கெனவே துருப்பிடித்துக் கிடக்கும் திராவிடப் போர்வாள்கள் மேலும் முனை மழுங்கிக்கிடக்கின்றன.
ஆனால், கடைநிலை சாதியினருக்கு எந்த உரிமையை வழங்குவதாக இருந்தாலும் இடைநிலைச் சாதியினரின் சம்மதத்தோடுதான் செய்யவேண்டும் என்பது நடைமுறையில் சாத்தியமா? அதை எப்படி அமல்படுத்துவது? இதுதான் நம் முன் இருக்கும் மிகப் பெரிய கேள்வி.
இப்போதைய சாதிய அணித் திரளல்கள் எல்லாம் மாறிவரும் புதிய உலகில் ஒவ்வொரு சமூகத்தினரும் தமது நலன்களைப் பாதுகாத்துக் கொள்வது தொடர்பானது. தமது உரிமை என்று எதிர்பார்ப்பது தொடர்பானது.
அரசு சமத்துவ சமூகத்தை உருவாக்கும் நல்லெண்ணத்தில் இட ஒதுக்கீட்டை ஒரு வழிமுறையாக முன்வைத்திருக்கிறது. ஆனால், அது நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிட்டிருக்கிறது. இன்றைய இட ஒதுக்கீடு என்பது ஆளெண்ணி அளந்து போடும் ஒன்றாக இருக்கிறது. அதாவது, குறிப்பிட்ட சாதியினர் இத்தனை சதவிகிதம் இருக்கிறார்களா… அப்படியானால் அவர்களுக்கு அத்தனை சதவிகித வாய்ப்புகள் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இது நியாயமான பங்கீடுதான். ஆனால், நடைமுறையில் இது பெரும் பிரச்னைகளையே உருவாக்கி வந்திருக்கிறது.
இதற்கான முக்கிய காரணம், அரசு வேலைகள் என்பது போதுமான அளவில் இல்லை. எனவே, இட ஒதுக்கீட்டை மிகவும் கறாராக முழுமையாக அமல்படுத்தினாலும் பிரச்னை தீராது. இதைக் கொஞ்சம் விளக்குகிறேன். அதாவது, நாட்டில் 1000 பேர் இருப்பதாக வைத்துக் கொள்வோம். தலித்கள் 18-20 சதவிகிதம் அதாவது 180-200 பேர் இருக்கிறார்கள். உயர் சாதியினர், பிற மதத்தினர் சுமார் 20 சதவிகிதம் இருக்கிறார்கள். இடைநிலை சாதியினர் 60 சதவிகிதம் அதாவது 600 பேர் இருக்கிறார்கள். இப்போது அரசு வேலைகள் என்பது ஒட்டுமொத்த மக்கள்திரளில் அதிகபட்சம் 10-15 சதவிகிதத்தினருக்கு மட்டுமே இருக்கிறது. அதாவது 100-150 பேருக்கு மட்டுமே அரசு வேலை இருக்கிறது. அதில் இடைநிலைச் சாதியினருக்கு 60% என்றால் சுமார் 60லிருந்து 80 வரை கிடைக்கும். அப்போதும் எஞ்சிய 500 இடைநிலைச் சாதியினர் அரசு வேலை கிடைக்காமல் விடப்பட்டிருப்பார்கள். இதைக்கூட அவர்கள் பொறுத்துக்கொண்டுவிடமுடியும். ஆனால், இந்த இட ஒதுக்கீட்டு முறையில் தலித்கள் 30-40 பேருக்கு அரசு வேலை கிடைத்துவிடுகிறது. இதைத்தான் இடைநிலை சாதியினரால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. ஆக, சமூக வளங்களை விகிதாசாரத்துக்கு ஏற்ப பங்கிடுவதற்காகக் கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீடானது இடை நிலை, கடைநிலை சாதிகளை எதிரெதிர் அணிகளில் நிறுத்திவிட்டிருக்கிறது.
இதற்கு என்னதான் தீர்வு?
அரசாங்க வேலைகளை அனைவருக்கும் கிடைப்பதுபோல் அதிகரிக்க வேண்டும். அல்லது தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்கவேண்டும். அப்போதுதான், வளங்கள் ஓரளவுக்கு முறையாகப் பங்கிடப்படும். இல்லையென்றால், சாதாரணமாக ஏற்படும் அதிருப்தியானது வெகு எளிதில் வெறுப்பாகவும் வன்முறையாகவுமே போய்முடியும்.
அரசாங்க வேலைகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்வது நீண்ட காலத் திட்டம்தான். முதற்கட்டமாக, இப்போது அரசு வேலை என்பது ஒருவருக்கு சுமார் 25 வயதில் இருந்து 58 வயது வரையானதாக இருக்கிறது. இதை பாதியாகக் குறைத்து ஒரே வேலையை இரண்டு பேருக்கு கிடைக்கும் வகையில் செய்ய வேண்டும். அதாவது, ஒருவருக்கு அரசு வேலை என்பது 15 வருடங்கள் மட்டுமே என்று கொண்டுவரவேண்டும். அதுவே ஒரு நபருக்கு வளமான குடும்ப வாழ்க்கைக்குப் போதுமானது. இதன் மூலம் இப்போதைய நிலையிலேயே இன்னும் இரண்டு மடங்கு நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழி பிறக்கும். அது கடை, இடை சாதி மக்களிடையேயான அதிருப்தியைக் குறைக்கும்.
பொருளாதார நிலையில் மேம்பாடு ஏற்பட்டால் கீழ் சாதியினரை இழிவாகப் பார்க்கும் மனோபாவம் குறைந்துவிடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. உண்மையில் அது கீழ்சாதியினர் மேல் வெறுப்பையும் கோபத்தையும் அதிகரிக்கவே செய்திருக்கிறது என்பதெல்லாம் உண்மைதான் ஆனால், விஷயம் என்னவென்றால், பொருளாதார மேம்பாடு சமூகத்தின் 10-15 சதவிகிதத்தினருக்கு மட்டுமே கிடைத்திருப்பதால்தான் இந்தப் பிரச்னை. ஒருவேளை ஐம்பது சதவிகிதத்தினருக்கு பொருளாதார மேம்பாடு கிடைத்திருந்தால் நிச்சயம் நிலைமை இந்த அளவுக்கு மோசமாக ஆகியிருக்காது. எனவே, அதற்கான முயற்சிகளையே நாம் எடுக்கவேண்டும்.
நேற்றைய நிலப்பிரபுத்துவ சாதி அமைப்பில் இருந்து முதலாளித்துவ நவீன சமூகம் உருவாகி வந்ததில் யார் யாருக்கு என்னென்ன நடந்திருக்கிறது என்பதை அலசிப் பார்த்தால் உண்மை புரியும். மேல் சாதியில் இருந்த பிராமண, சத்திரிய, வைசிய சாதிகள் தங்கள் மேலாதிக்கத்தை சிறிதும் இழக்காமல் தம்மை மறு உருவாக்கம் செய்துகொண்டிருக்கின்றன. அவற்றில் சத்திரியர்களின் வம்சம் ஓரளவுக்கு பின்தங்கிவிட்டது உண்மைதான். என்றாலும் அவர்களின் என்ணிக்கை மிக மிக குறைவு என்பதால் அவர்களால் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை. நவீன சமத்துவ சமுதாயத்தின் உருவாக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டது இடை நிலை, கடை நிலை சாதியினருடைய உறவுதான். ஏனென்றால், இரு பிரிவினரின் எண்ணிக்கை மிகவும் அதிகம். பகிர்ந்துகொள்ளக் கிடைத்த வளங்கள் மிகவும் குறைவு. அதிலும் பறையர், பள்ளர்களின் எண்ணிக்கை கணிசமாக இருந்ததால் அது இடை நிலை சாதியினரின் வெறுப்புக்கு எளிதில் இலக்காகிவிட்டது. ஆக, பறையர் பள்ளர்களுக்கு இடை நிலை சாதியினரை எதிர்க்கும் அளவுக்கு போதிய வலு கிடைத்திருக்கவில்லை. அதே நேரம் அவர்களுடைய கண்ணை உறுத்தாதவகையிலும் அந்த வளர்ச்சி இருக்கவில்லை. அவர்களுடைய போரானது தங்களுடைய கோட்டையைப் பலப்படுத்திக் கொள்வதற்கு முன்பாகவே போர் முரசை முழங்கச் செய்ததுபோலாகிவிட்டது.
தோட்டியோ, வெட்டியாரோ அரசு வேலைக்கு வந்து முன்னேறுவதை இடை நிலை சாதிகள் இந்த அளவுக்கு எதிர்க்கவில்லை. ஏனென்றால், அவர்களுடைய எண்ணிக்கை மிகவும் குறைவு. ஒருவகையில் தலித் என்ற பிரிவில் விவசாயத்தோடு நேரடித் தொடர்பில் இல்லாத சக்கிலியர், தோட்டி, வெட்டியார், போன்ற சாதியினர்தான் சாதி அடுக்கில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் ஆனால், சாதி விடுதலைப் போராட்டத்தின் மூலம் கிடைத்த வசதி வாய்ப்புகளைப் பெருமளவில் அனுபவிப்பதோ அவர்களைவிட பல நிலைகளில் மேலாக இருந்த பறையர்-பள்ளர் போன்ற விவசாய கூலி-குத்தகைத் தொழிலாளர்கள்தான். இது தனியாகப் பார்க்கப்படவேண்டிய விஷயம். இந்த இடத்தில் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது, இட ஒதுக்கீடு என்பது அதிக மக்களுக்குப் பலன் தரும் ஒன்றாக இருக்கவேண்டும். அப்போதுதான் அதிருப்திகள் இப்படியான வன்முறை வடிவில் வெளிப்படாமல் இருக்கும்.
இந்திய சமூகமானது சாதி சார்ந்து இயங்கிய சமூகம். நிலப்பிரபுத்துவ சமூகத்தில் இருந்து நவீன சமூகமாக மாறியபோது அதே நேர்கோட்டில் நகர்ந்திருந்தால் பிரச்னை இந்த அளவுக்கு அதிகரித்திருக்காது. உதாரணமாக, ஒவ்வொரு தொழிலில் ஈடுபட்டுவந்தவர்களும் அந்தத் தொழிலில் நவீன யுகத்தில் என்னென்ன வளர்ச்சிகள் வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கிறதோ அதைப் பயன்படுத்திக்கொண்டு வளர்ந்திருந்தால் ஒட்டுமொத்த சமூகமும் இயல்பாக வளமடைந்திருக்கும். அதாவது, ஒருவர் தன் வீட்டில் ஆடு, மாடு, கோழி, பன்றி எனப் பல உயிரினங்களை வளர்க்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அரைக் கிலோ தீவனம் சாப்பிட்டு வந்த ஆடுக்கு ஒரு கிலோ இழை தழைகள் தரப்படுவதுதான் வளர்ச்சியின் அறிகுறி. 100 கிராம் தானியங்களை உண்டுவந்த கோழிக்கு 200 கிராம் தீவனம் தருவதுதான் முன்னேற்றத்தின் அறிகுறி. அதைவிட்டுவிட்டு அனைத்து விலங்குகளையும் சமமாக நடத்துகிறேன் என்ற போர்வையில் அனைத்துக்கும் ஐந்து லிட்டர் கழனித்தண்ணி தரவேண்டும் என்று ஒருவர் முடிவெடுத்தால் அது சரியாக இருக்குமா? பிறப்பின் அடிப்படையில் வேலைகள் தீர்மானிக்கப்பட்டதில் தவறில்லை. அந்த வேலைகளை ஒவ்வொரு பிரிவினரும் சமூக அந்தஸ்து மிக்கதாக ஆதாயம் மிகுந்ததாக ஆக்கிக் கொண்டிருந்தால் பிறப்பின் அடிப்படையில் வேலை நிச்சயிக்கப்படுவது என்பது சாதகமான விஷயமாகவே இருந்திருக்கும். ஒரு மான் தலைமுறை தலைமுறையாக மானாகவே வாழ நேர்வது என்பது இழிவான செயல் அல்ல. அது எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வது உட்படத் தேவையான வசதி வாய்ப்புகளைப் பெற்றுவிட்டால் அதைப் போல் முன்னேற்றம் என்பது வேறு எதுவும் இருக்க முடியாது.
நேற்று விவசாயத்தில் தொழிலாளியாக, குத்தகைதாரராக இருந்தவர் இன்று விவசாயப் பல்கலையின் பேராசிரியராக ஆகியிருக்கவேண்டும். நேற்று தச்சு வேலைச் செய்தவர் இன்று கட்டுமானப் பொறியாளராக ஆகியிருக்கவேண்டும். நவீன சமூகத்தில் புதிதாக உருவாகும் பல வேலைகளுக்கு இதுபோல் பாரம்பரிய முன்னுரிமை தருவது சாத்தியமில்லை என்பது உண்மைதான். ஆனால், எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் அதை நடைமுறைப்படுத்தியிருந்தால் நிச்சயம் பிரச்னை இந்த அளவுக்கு வந்திருக்காது. செருப்பு தைக்கும் தொழில் கடினமானதாக, சமூக அந்தஸ்து பெறாததாக இருந்த காலகட்டத்தில் சக்கிலியர்கள் அதில் ஈடுபட்டுவர, அந்தத் தொழிலில் இயந்திரங்களின் அமலாக்கத்தால் பாட்டா கம்பெனியாக விரிவடையும் நேரத்தில் மேல் சாதியினர் அதைக் கைப்பற்றிக் கொண்டதைவிட நிச்சயம் ஒரு சக்கிலியரே பேட்டா நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக ஆகியிருக்கவேண்டும் என்பது சமூக நீதிசார்ந்த ஒரு செயல்தான்.
ஆனால், அப்படியான ஒரு சிந்தனையை மாடு மேய்ப்பவர் மாடேதான் மேய்த்துக் கொண்டிருக்கவேண்டுமா என்ற செண்டிமெண்ட் கேள்வியால் புறந்தள்ளிவிட்டிருக்கிறோம். அதனால் ஏற்பட்ட மோதல்களைத்தான் இன்று நாம் கண்கூடாகக் கண்டுவருகிறோம்.
எல்லாரும் எல்லா வேலைகளையும் செய்யலாம் என்பது பின் தங்கிய பிரிவினர்களுக்குச் செய்திருக்கும் நன்மையைவிடத் தீமையே அதிகம். அதாவது பலவீனமான ஒருவர் பலம் பொருந்தியவருடன் போட்டி போடவேண்டியதாக அது ஆகிவிட்டது. பலவீனமானவர்களின் தொழில்களில் ஏற்பட்ட நவீன வசதி வாய்ப்புகள் அனைத்தையுமே அவர்களே அனுபவிக்கும் வகையில் ஒருவித பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். அனைத்து சமூகத்துக்கும் அரசுப் பணிகளில் சம வாய்ப்புகள் தந்திருக்கவேண்டும். ஒவ்வொரு சமூகத்துக்கும் எம்.எல்.ஏ., எம்.பி. ஐ.ஏ.எஸ்., காவல்துறை அதிகாரி என சம விகிதத்தில் நியமனம் பெற்றிருக்கவேண்டும். ஒரு கிராமத்துக்கு ஒரு காவலர் என்ற நிலை மாறி ஒவ்வொரு சாதியினரில் இருந்தும் ஒருவரைக் கொண்ட காவலர் குழு உருவாக்கப்பட்டிருக்கவேண்டும்.
பெரும்பாலான வேலைகளைத் தனி நபர் பதவிகளாக அல்லாமல் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய குழு ஒன்றினால் இயங்க வைத்திருக்க வேண்டும். இப்படியான எதுவும் நடந்திருக்கவில்லை. இவையெல்லாம் நடக்காதவரையில் நாம் மேற்கொள்ளும் சீர்திருத்த நடவடிக்கைகள் எல்லாம் நோயைக் குணப்படுத்தாமல் நோயின் விளைவுகளைக் குணப்படுத்தும் ஒன்றாகவே இருந்துவரும்.
0

3 comments so far

  1. க்ருஷ்ணகுமார்
    #1

    வெறுமென ப்ரச்னையை மட்டும் எடுத்து வைக்காது ப்ரச்னைக்குத் தீர்வையும் எழுதியபடிக்கு மிக நீண்ட வ்யாசமாக இருப்பினும் மிகத் தெளிவான கருத்துக்கள். நன்றி ஸ்ரீ மஹாதேவன். தீர்வுகள் பல இருக்கலாம். தங்கள் தீர்வுகள் பலருக்கு ஏற்பில்லாமலும் இருக்கலாம். ஆனால் தீர்வுகள் பற்றி நேர்மையாக அலச விரும்புபவருக்கு ஒரு முக்யமான ஆரம்பப்புள்ளி இந்த வ்யாசம்.
  2. சான்றோன்
    #2

    இட ஒதுக்கீடு விஷயத்தில் க்ரீமி லேயர் பற்றி கேள்வி எழுப்பினால் ,இட ஒதுக்கீடு ஆதரவாள‌ர்கள் பொங்கி எழுகிறார்கள்…..உண்மையில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்ப‌ட்ட மக்களின் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பவர்கள் அந்தந்த சாதியில் இட ஒதுக்கீட்டின் பலனை தொடர்ந்து அனுபவிப்பவர்களே……
    கருணாநிதியின் பேரனும் , கிராமப்புற கோயிலில் நாதஸ்வரம் வாசிக்கும் இசை வேளாளர் ஒருவரின் மகனும் இன்றைய இட ஒதுக்கீட்டின்படி சம போட்டியாளர்கள் ……. அன்புமணி ராமதாசின் மகளும் ,சாதாரண வன்னிய விவசாயக்கூலியின் மகளும் இன்றைய நிலையில் சம போட்டியாளர்கள்……இது எந்த வகையில் நியாயம்?
    இது போன்ற அநீதிகளை பார்த்தும் பாராமல் இருந்துவிட்டு, இட ஒதுக்கீடு ஒரு சர்வரோக நிவாரணி என்று பிரச்சாரம் செய்வதுதான் ஏமாற்று வேலை……
  3. Anand
    #3

    இதையும் ஒரு முறை படியுங்க ஐயாvanjikkapadupavaninkuralgal.blogspot.in/, படித்துவிட்டு உங்கள் கருத்தை எழுதுங்கள்.
http://www.tamilpaper.net/?p=7164

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக