திங்கள், 17 டிசம்பர், 2012

சென்னை மெட்ரோ ரயிலின் தொழிலாளர்கள் எங்கிருந்து வருகிறார்கள்?

இந்தத் தொழிலாளர்கள் யார்? எங்கிருந்து வருகிறார்கள்? எப்படி வாழ்கிறார்கள்? நம்முடைய எதிர்காலக் கனவுகளை படைத்துக் கொண்டிருக்கும் இவர்களது எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும்?
ன்றிலிருந்து 5 ஆண்டுகள் என எதிர்காலத்துக்குள் பயணிப்போம்.
அதற்குள் சென்னை மெட்ரோ ரயில் பணிகள் முடிந்து
==வண்ணாரப்பேட்டையிலிருந்து சென்ட்ரல், அண்ணா சாலை வழியாக கிண்டி கத்திப்பாரா வரை
==சென்ட்ரலிலிருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்ப்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, அண்ணா நகர், திருமங்கலம் வழியாக கோயம்பேடு வரை
==கோயம்பேட்டிலிருந்து வட பழனி, அசோக் நகர், கலைமகள் நகர் வழியாக கத்திப்பாரா வரை
==கத்திப்பாராவிலிருந்து  விமான நிலையம் வரை
என மெட்ரோ ரயில் ஓட ஆரம்பித்து விட்டிருக்கும். vinvavu.com
இந்த வழித்தடங்களில் தரைக்குக் கீழே 20 ரயில் நிலையங்களும் உயர்த்தப்பட்ட பாதையில் 14 ரயில் நிலையங்களும் செயல்படும். சுமார் 8 ரூபாய் முதல் 23 ரூபாய் வரை தூரத்துக்கு ஏற்ப  டிக்கெட் எடுத்துக் கொண்டால் முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்ட, நகரும் படிக்கட்டுகள், மின் தூக்கிகள், மின்னணுத் தகவல் பலகை என்று பளபளத்துக் கொண்டிருக்கும் தரையடி ரயில் நிலையங்களுக்குள் நுழையலாம். ஸ்மார்ட் கார்டு எனப்படும் மின்னணு அட்டைகளை வாங்கி பையில் வைத்திருந்தாலே தானியங்கி கதவு திறந்து உங்களுக்கு வழி விடும்.
ரயில் நிலையத்துக்குள் போன 3 நிமிடங்களுக்குள் ரயில் வந்து விடும். தானியக்கமாக இயங்கும்  ரயில் வந்து நின்றதும், கதவுகள் தானாகவே திறக்கும். துருப்பிடிக்காத ஸ்டீலில் செய்யப்பட்ட, குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டிக்குள் நுழைந்தால் கதவுகள் தானாகவே மூடிக்  கொள்ளும். அடுத்த நிலையம் பற்றிய விபரங்கள் மின்னணுப் பலகையில் காட்டப்படுவதோடு, ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கவும் செய்வார்கள். இப்போதைய பயண நேரத்தை விட 50% முதல் 75% வரை குறைவான நேரத்தில் போக வேண்டிய இடத்துக்குப் போய் சேர்ந்து விடலாம்.
இதுதான் எதிர்கால சாத்தியம்.
காரில் அல்லது இரு சக்கர வாகனத்தில் அல்லது பேருந்தில் போக்குவரத்து நெருக்கடிகளோடு இந்த இடங்களைக் கடக்கும் சென்னைவாசிகளுக்கு மேலே சொன்ன எதிர்காலக் கனவு தான் ஆறுதல்.
இந்த மெட்ரோ ரயில் பணிகளைப் பார்த்தவாறு சாலையில் போகும் போது மஞ்சள் பூக்கள் சில எழுப்பப்பட்ட தடுப்புகளுக்குள் நகர்வது தெரிகிறது. பந்து வந்து தலையில் அடித்தால் காத்துக் கொள்ள கவசம் போட்டுக் கொள்ளும் கிரிக்கெட் வீரர்கள் போல இல்லாமல், மேலே இருந்து கற்கள்  அல்லது கருவிகள் தலையில் விழுந்து விடக் கூடாது என்பதற்காக கவசம் அணிந்து கொண்ட மெட்ரோ ரயில் தொழிலாளர்களின் நகர்வுகள் தான் அப்படித் தெரிகின்றன. வெயிலாய் இருந்தாலும், மழையாய் இருந்தாலும், காற்று அடித்தாலும் இந்தப் பூக்கள் அசரமால் உழைத்துக் கொண்டே இருக்கின்றன.
இந்தத் தொழிலாளர்கள் யார்? எங்கிருந்து வருகிறார்கள்? எப்படி வாழ்கிறார்கள்? நம்முடைய எதிர்காலக் கனவுகளை படைத்துக் கொண்டிருக்கும் இவர்களது எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும்? மெட்ரோ ரயில் வேலைகள் நடக்கும் பணியிடங்களுக்கு அருகிலும், ஒரு பகுதித் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் திருவேற்காடு தொழிலாளர்கள் குடியிருப்பிலும் தொழிலாளர்களைச் சந்தித்து தகவல் திரட்டினோம்.
வர்களின் அனுபவங்களைக் கேட்கும் பொழுதே தெரிந்தது, அவை அனுபவங்கள் அல்ல, ஆவணங்கள். அவர்களது உழைப்பின் பதிவுகள் வரலாற்றின் பக்கங்களில் ஆவணப்படுத்தப்படுவதில்லை. பாலங்களாய், சாலைகளாய், விண்ணை முட்டும் கட்டிடங்களாய்  ஆவணப்படுத்தப் படுகின்றன. ஆனால், அந்தப் படைப்புகளின் மீது உருவாக்கும் தொழிலாளர்களுக்கு எந்தவிதமான காப்புரிமையும் இல்லை, ராயல்டியும் கொடுக்கப்படுவதில்லை. உரையாடல்களில் கிடைத்த தகவல்களையும், நேரில் பார்த்த விபரங்களையும் தொகுத்து தருகிறோம். தொழிலாளர்களின் பெயர்கள் மட்டும் மாற்றப்பட்டுள்ளன.

இந்தத் தொழிலாளர்கள் எங்கிருந்து வருகிறார்கள்?

மெட்ரோ தொழிலாளிகள் 2இவர்கள் பெரும்பாலும் பீகார், உத்திரப் பிரதேசம், ஜார்கண்ட், அசாம், பஞ்சாப் போன்ற மாநிலங்களிலிருந்து வருகிறார்கள். வடபழனி சிக்னலுக்கு அருகில் மெட்ரோ ரயில் வேலை நடக்கும் இடத்தில் நின்றிருந்த மூன்று தொழிலாளர்கள் பீகாரின் ஜமுய் மாவட்டத்திலிருந்து வந்திருக்கிறார்கள். இவர்களை  ஜமுய் மூவர் என்று வைத்துக் கொள்வோம். கோயம்பேட்டில் சந்தித்த சுமார் 40 வயதான தொழிலாளர் பீகாரின் பாட்னாவுக்கு அருகில் இருக்கும் கிராமத்திலிருந்து வருகிறார். இவரை ராதே ஷ்யாம் என்று அழைக்கலாம். கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அருகில் சந்தித்து பேசிய செக்யூரிட்டி ஊழியர் அசாமிலிருந்து வருகிறாராம். இவரது பெயர் கோகோய். சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு வெளியில் வேலை நடந்து கொண்டிருந்த இடத்தில் மூர் மார்கெட் திசையிலிருந்து கையில் சாப்பாட்டு கேரியரோடு நடந்து வந்து கொண்டிருந்தவர் பஞ்சாபை சேர்ந்தவர். ஜமன்லால் சிங் என்று இவரைக் கூப்பிடலாம்.
ஈக்காட்டுத் தாங்கலில் சந்தித்த செக்யூரிட்டி ஊழியர் ஜார்கண்டைச் சேர்ந்தவர்.  நான்கு மாதம் ஊருக்குப் போய் விட்டு இப்போதுதான் திரும்பி வந்திருக்கிறார். ஆஷிஷ் குமார் என்று இவரை குறிப்பிடுவோம். காசி தியேட்டர் பாலத்தின் கீழ் சந்தித்த சிறுவன் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்தவன் என்று சொன்னான். முன்னா என்று வைத்துக் கொள்வோம். அண்ணா நகர் ரவுண்டானாவில் சாலையைத் தூய்மை செய்து கொண்டிருந்த மெட்ரோ பணியாளர் பீகாரின் பகல்பூரைச் சேர்ந்தவர். இவரது பெயரை ராம்லால் என்று வைத்துக் கொள்வோம். அதே இடத்தில் சிறிது தொலைவில் நடந்து வந்து கொண்டிருந்த வயதான தொழிலாளருக்கு சொந்த ஊர் ஒரிசாவின் கஞ்சன் மாவட்டம். இவரை நாராயண் என்று அழைப்போம் அண்ணா நகர் புளூ ஸ்டார் அருகில் சந்தித்த சிவில் சூப்பர்வைசர் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர். இவரை பசந்த் என்று வைத்துக் கொள்வோம்
திருவேற்காட்டில் தங்குமிடத்துக்கு வெளியில் கடையில் சந்தித்த நான்கு தொழிலாளர்கள் பீகாரின் சிவான் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களை சிவான் சிராமிக் என்று அழைப்போம். இவர்கள் அனைவரும் வல்லரசாக உருவாகி வரும் இந்திய நாட்டில் வசிக்கும் குடிமக்கள் தான்  என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இவர்கள் ஏன் தமது சொந்த ஊரை விட்டு வெகு தூரம் வந்து வேலை செய்கிறார்கள்? எப்படி வந்து சேருகிறார்கள்?

மெட்ரோ ரயில் பணிகள் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் சார்பாக பல்வேறு நிறுவனங்களுக்கு (எல்&டி, ஆப்கான்ஸ், சிசிசிஎல் முதலியன) ஒப்பந்தப் பணியாக அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்களிடம் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு காண்டிராக்டர்கள் இந்தத் தொழிலாளர்களை அழைத்து வருகிறார்கள்.
ஜமூய் மூவரிடம் ‘பீகாரிலிருந்து இங்கே எப்படி வந்து சேர்ந்தீங்க? ஏன் வந்தீங்க?’ என்று கேட்டதற்கு  ‘என்ன செய்ய சகோதரா! எங்க வயிறு நிரம்புகிறதோ அங்க போக வேண்டியிருக்கு’  என்றார்கள்.  அவர்களில் வயதான ஒரு தொழிலாளருக்கு ஐந்து குழந்தைகள் இருக்கின்றனவாம். ஊரில் நிலம் இருக்கிறதாம். விவசாயம் செய்கிறார்களாம். இவர் மாதா மாதம் காசு சேர்த்து 3,000 ரூபாய் அல்லது 4,000 ரூபாய் ஊருக்கு அனுப்புவாராம். எப்போதாவது வயல் வேலை அல்லது குடும்பத்தில் தேவை ஏற்பட்டால் விடுமுறை எடுத்துக் கொண்டு ஊருக்குப் போவார்களாம்.
ராதே ஷ்யாமுக்கு ஊரில் விவசாயம், நிலம் இருக்கிறது. அண்ணன் குடும்பத்தினர் அதைக் கவனித்துக் கொள்கின்றனர். இவர் இப்படி வெவ்வேறு இடங்களுக்குப் போய் கூலி வேலை செய்து பணம் அனுப்புவாராம். மாதம் 4,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை ஊருக்கு அனுப்புவாராம்.
செக்யூரிட்டி ஊழியர் கோகோயிடம் ‘அசாமில் இது போல வேலைகள் இல்லையா?’ என்று கேட்டால், ‘அசாமில் இது போன்ற வளர்ச்சி வருவதற்கு இன்னும் 30 ஆண்டுகள் வரை ஆகலாம்’  என்கிறார். ‘இங்கு நன்றாக இருக்கிறது. எங்க ஊரில் இருப்பது போல சாதிரீதியாக கொடுமைப்படுத்துவது இல்லை.  ஒழுங்காக நடத்துகிறார்கள். அனைவரும் சுதந்திரமாய் இருக்கிறோம்’ என்றார். ஜமன்லால் அவரது டேக்காதார் (மேஸ்திரி) எங்கு வேலை இருக்கிறது என்று அழைத்து போகிறாரோ அங்கே போவாராம்.
செக்யூரிட்டி ஆக இருக்கும் ஆஷிஷ் குமாருக்கு ஜார்கண்டில் மளிகைக் கடை இருக்கிறதாம். மனைவியும், குழந்தைகளும் அங்கு இருக்கிறார்களாம்.  ‘இந்தக் காலத்தில் ஒருவர் வேலை  செய்து குடும்பம் நடத்த முடியாது. குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். அந்தச் செலவு இருக்கிறது. அதனால் தான் நான் வெளியில் வந்து சம்பாதித்து பணம் அனுப்புகிறேன்’ என்றார். முதலில் ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஓரியண்டல் தொழிற்சாலையின் கட்டுமானம் நடக்கும்போது வேலைக்குப் போனாராம். வீட்டுக்கு மிக அருகில் வேலை. அந்த புராஜக்ட் முடிந்ததும் வேலை இல்லாமல் போய் விட்டது.
ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் செக்யூரிட்டி வேலைக்கு 4500 ரூபாய் தான் மாதச் சம்பளம். அதனால் வெளியில் வேலை தேடினாராம். தெரிந்த ஒருவர் மூலம் முதலில் ஐபிஎம் இல் (ராமாபுரம் டிஎல்எப்) டாப் செக்யூரிட்டி நிறுவனத்தின் மூலம் வேலைக்குப் போனாராம். சென்னைக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகி விட்டனவாம்.
பீகாரிலிருந்து கிராமத் தலைவர் சேர்த்து விட இந்த வேலைக்கு வந்தாராம் ராம்லால். நாராயண் என்ற தொழிலாளரும் மேஸ்திரியை நம்பித்தான் வாழ்க்கை நடத்துகிறார். ஊரில் விவசாய வேலைக்கு ரூ. 100-120 வரை தினக்கூலியாகக் கிடைக்குமாம். இங்கு ஒரு நாள் வேலைக்கு ரூ. 220 வரை கூலி கிடைக்கிறது. செலவுகள் எல்லாம் போக மாதா மாதம் ரூ.
2000 – ரூ. 3000 வீட்டுக்கு அனுப்ப முடிகிறது. அதற்குத்தான் இந்தக் கஷ்டம் என்று  பெருமூச்சு விட்டார்.
சிவில் சூப்பர்வைசர் பசந்த் டெல்லி மெட்ரோ ரயில் கட்டுமான வேலைகளிலும் பங்கு பெற்றாராம்.  நிறுவனத்தின் புராஜக்டுகள் நடக்கும் இடங்களுக்குப் போகிறார். திருவேற்காட்டில் பேசிய சிவான் சிராமிக் நண்பர்கள் வீட்டுச் சூழலை கருத்தில் கொண்டு வெளியில் போனால் தான் பிழைக்க முடியும் என்று இது போன்று வந்து விட்டார்கள். ஒருவர் மெட்ரிக் பாஸ், இன்னொருவர் 8 வது வரை படித்தார், இன்னொருவர் 6 வதோடு படிப்பை நிறுத்திக் கொண்டார். எங்கு வேலை கிடைக்கிறதோ அங்கே போவார்களாம். ‘ஊரில் வேலை செய்தால் கிடைக்கும் கூலி அன்றே செலவாகி விடும். இங்கு 200 ரூபாய் கூலியில் 100 ரூபாய்  செலவானாலும், 100 ரூபாய் சேமித்து விடலாம். அதுதான் இப்படி வந்து விட்டோம்.’
சிறு விவசாயிகளையும், சிறு வணிகர்களையும் உதிரிப் பாட்டாளிகளாக தூக்கி எறிந்திருக்கிறது தனியார்மய, தாராளமய, உலகமயமாக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரம்.

இவர்களது வேலை நேரம், கூலி, பணியிடச் சூழல் எப்படி இருக்கிறது?

ஜமுய் மூவர் அணி:
‘தினமும் 12 மணி நேரம் வேலை. சுமார் 200 ரூபாய் நாள் சம்பளம்’ என்று சொன்னார்கள். காலையில் 8 மணி முதல் இரவு 8 மணி வரை வேலை பார்க்க வேண்டும். நடுவில் 1 மணி நேரம் உணவு இடைவேளை. திருவேற்காட்டிலிருந்து வந்து  போவதற்கு கம்பெனி வண்டி இருக்கிறதாம். காலையில் 6 மணிக்கு அங்கிருந்து கிளம்புமாம்.  இரவு வேலை முடித்து வண்டியில் ஏறிப்  போய்ச் சேரும் போது 10 மணி ஆகி விடுமாம். காலையில் 4 மணிக்கு எழுந்து சோறும் பருப்பும் சமைத்து எடுத்துக் கொண்டு வருகிறார்களாம். ‘இரவு 11 மணிக்கு தூங்கி  விட்டு, காலையில் 4 மணிக்கு எழுந்திருப்போம்’ என்றார்கள்.
அதாவது தினமும் காலையில் 4 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். 4 மணி நேரம் வேலைக்குப் போய் வரும் பயணம். 12 மணி நேர வேலை. வேலைக்குப் போவதும் வேலை செய்வதுமாக 16 மணி நேரம் போய் விடுகிறது. இதற்கு ஒரு நாள் சம்பளம் சுமார் 200 ரூபாய். கூடுதல் ஒரு ஷிப்டு வேலை பார்த்தால் கூடுதல் பணம்; அதற்கும் துணிகிறார்கள்.
‘ஊரை விட்டு வேலை செய்ய வந்திருக்கிறோம். வாரத்துக்கு 7 நாளும் வேலை செய்தால் தானே சம்பாதிக்க முடியும். அதனால் வார விடுமுறை எல்லாம் எடுப்பதில்லை.’ தேவை இருந்தால், வாய்ப்பு கிடைத்தால் இரவும் வேலை செய்கிறார்கள். விடுமுறை தேவை என்றால் சம்பளம் இல்லாத விடுமுறை மட்டும் தான். வேலை செய்தால் சம்பளம். இல்லை என்றால் சம்பளம் இல்லை அவ்வளவு தான்.
ராதேஷ்யாம் என்ற மூத்த தொழிலாளர் 8 மணி நேர வேலைக்கு 240 ரூபாய் சம்பளம் என்று சொன்னார். ஓவர் டைம் செய்தால் அதிகம் கிடைக்குமாம். அருகிலேயே தங்க இடம் கொடுத்திருக்கிறார்கள். செக்யூரிட்டி ஊழியர் கோகோய்க்கு சேத்துப்பட்டில் தங்குவதற்கு இடம் கொடுத்திருக்கிறார்களாம். வாடகை இல்லாத தங்குமிடம். அவர்களே சமைத்துக்  கொள்கிறார்கள். 12 மணி நேரம் வேலைக்கு மாதச் சம்பளம் ரூ. 7,000. இரண்டு ஷிப்டுகளாக பொருட்களைக் காவல் காக்கிறார்கள்.
பஞ்சாபி தொழிலாளர் ஜமன்லால் ஒரு நாளைக்கு 8 மணி நேர வேலைக்கு 146 ரூபாய் சம்பளம் என்று சொன்னார். கூடுதல் 4 மணி நேரம் வேலை செய்தால் 220 ரூபாய் கிடைத்து விடுகிறது. வாரத்துக்கு 7 நாளும் வேலை செய்கிறார். விடுமுறை கிடையாது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வீட்டுக்குப் போவாராம்.
சென்ட்ரலுக்கு அருகில் தடுப்புத் தகரத்தில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை கிழித்துக்  கொண்டிருந்த இரண்டு சிறு வயதினரில் ஒரு பையன் ‘இங்கு நான் ஹெல்ப்பராக இருந்தாலும், இரவில் வெல்டர் வேலைக்குப் போகிறேன்’ என்று அந்நியன் பட ஹீரோ போல பேசினான். அப்போது அருகில் வந்த இன்னொரு இளைஞர் ‘அது எப்படி முடியும். பகலிலும் வேலை பார்த்து,  இரவிலும் வேலை பார்த்து ஒரு மனிதனால் முடிகிற காரியமா’ என்று வாதம் புரிந்தார்.
அவர் சூப்பர்வைசராம்; சூப்பர்வைசருக்கு ரூ. 8,000 முதல் 10,000 வரை சம்பளம் கொடுக்கிறார்களாம். அவருக்கும் 12 மணி நேர வேலை, வாரத்துக்கு 7 நாட்களும் வேலை தான். தேவைப்பட்டால் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொள்வாராம். அதற்கு சம்பள வெட்டு கிடையாது. மேலாளர் பார்த்து இது போல விடுப்புக்  கொடுக்கிறார்.
செக்யூரிட்டி ஊழியர் ஆஷிஷ் குமாரின் மாதச் சம்பளம் 6,500 ரூபாய். தங்குவதற்கான இடத்தை எதுவும் கட்டணம் இல்லாமல் கொடுத்திருக்கிறார்களாம். ‘நடுவில் உள்ளவனுங்க கொஞ்சம் சுருட்டிக் கொள்கிறாங்க.  நமக்கு இப்படி இழுத்துப் பறிக்கும் அளவுக்குத்தான் கிடைக்கிறது’ என்றார். 4,5 பேர் சேர்ந்து சமைத்துக் கொள்கிறார்களாம்.
முன்னா என்ற பையனுக்கு மணிக்கு 17 ரூபாய் வீதத்தில் சம்பளம் கொடுக்கிறார்களாம். நாராயண் என்ற தொழிலாளர் மிகவும் விரக்தியாகப் பேசினார். ‘கொஞ்சம் இள வயசுப் பசங்க சமாளிச்சுக்கிறாங்க. என்னை மாதிரி வயசாயிட்டா முடியலை. ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை. அதுக்கு 200 ரூபாய் தராங்க. வேலைக்குக் கூப்பிடும் போது ஞாயிற்றுக் கிழமை அரை நாள் வேலை செய்துட்டு சம்பளத்தை வாங்கிக் கொள்ளலாம்னு மேஸ்திரி சொன்னார். ஆனா இங்க 8 மணியிலேருந்து 4 மணி வரை வேலை செய்து விட்டு நிறுத்தினா 8 மணி நேர சம்பளம்தான் கொடுக்கிறாங்க. முழு சம்பளம் தருவதில்லை’.
நிறுவனம் நேரடியாக வேலைக்கு அமர்த்தியிருக்கும் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ. 12,000 கிடைப்பதாகச் சொன்னார். ‘ஆனா  நமக்கு இவ்வளவுதான் கிடைக்குது’. கொஞ்சம் படித்த, மேற்பார்வை பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு நல்ல சம்பளமும், தங்கும் இட வசதியும் செய்து கொடுத்திருக்கிறார்கள்.
சிவான் சிராமிக், ‘வெல்டர் போன்ற திறன் படைத்த தொழிலாளர்களுக்கு தினசரி தலா ரூ. 300 சம்பளம் கிடைக்கிறது. உடல் உழைப்பாளர்களுக்கு ரூ. 225 கிடைக்கிறது’ என்றனர். இவர்கள் இரவு ஷிப்டுக்குப் போகிறவர்கள்.
இந்த மெட்ரோ ரயில் திட்டத்திற்காக தரையடிப் பாதை உருவாக்க ஒரு கிலோ மீட்டருக்கு ரூ. 300 கோடி செலவு, உயர்த்தப்பட்ட பாதை உருவாக்க ஒரு கிலோமீட்டருக்கு ரூ. 100 கோடி செலவாகும் என்று திட்டமிட்டிருக்கிறார்கள். அந்தப் பிரம்மாண்டத்துடன் இந்த தொழிலாளர்களுக்கு  கொடுக்கப்படும் கூலிகளை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

பணியை எப்படித் திட்டமிட்டு நடத்துகிறார்கள்?

வடபழனியில் பணியிடத்துக்கு அருகிலேயே ஒரு வளாகத்தில் செக்யூரிட்டி அறையுடன் சேமிப்புக் கிடங்கும் இருந்தது. இங்குதான் வேலைக்கான கருவிகள், மற்ற பொருட்கள், வேலை செய்பவர்களுக்கான குடிநீர், கழிவறை போன்றவற்றை அமைத்திருக்கிறார்கள். கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குள்ளும், வேலை நடக்கும் பகுதியிலும் அருகிலேயே பொருட்கள் வைக்கும் வளாகத்தில் சிறு அலுவலகம், பாதுகாப்பாளர் கூடம் என்று அமைத்திருந்தார்கள்.
சென்ட்ரல் அருகிலான வேலைக்கு பூங்கா நகர் ஸ்டேஷனுக்கு போகும் தெரு முனையில் பொருட்கள் வைத்திருக்கும் வளாகம் இருக்கிறது. உள்ளே செக்யூரிட்டி, போலீஸ் இருந்தார்கள். குடி தண்ணீர், கழிவறை, பொருட்கள் வைக்கும் இடம் என்று சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த வளாகம்.
எல்லா இடங்களிலும் வேலை வாங்குவதற்கு துல்லியமாக திட்டமிட்டு, ஏற்பாடுகள் செய்து  செயல்படுத்தியிருக்கிறார்கள். பொருட்கள் வீணாவதைக் கவனமாகத் தவிர்த்து, வேலையில் தடங்கல்  ஏற்படாமல் துல்லியமாகத் திட்டமிட்டு நடத்துகிறார்கள். பொருட்களை விட மதிப்பு வாய்ந்த மனிதர்களின் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி மட்டும் கவலைப்படுவதில்லை.

தொழிலாளர்கள் எங்கு தங்கியிருக்கிறார்கள்? எப்படி வாழ்க்கை நடத்துகிறார்கள்?

சென்னை மெட்ரோ தொழிலாளிகள் 3
ஜமுய் மூவர் அணி தங்கியிருப்பது திருவேற்காட்டில். கம்பெனியே தங்குவதற்கு ஷீட் கூரையுடனான கொட்டகை போட்டுக் கொடுத்திருக்கிறதாம். 10 x 10 அறையில் சுமார் 20 பேர் படுத்திருப்பார்களாம். தங்கும் அறைக்கும், தண்ணீருக்கும் கம்பெனி காசு  வாங்குவதில்லையாம். சாப்பாட்டுச் செலவை இவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். கூட்டாகச் சேர்ந்து சமைத்துக் கொள்கிறார்களாம். மதிய உணவைக் கையில் கொண்டு வந்து விடுகிறார்களாம்.
மாதக் கணக்கில் சென்னையில் தங்கி வேலை செய்யும் இந்தத் தொழிலாளர்களுக்கு சாதாரண  மக்களுக்குக் கிடைக்கும் நியாய விலை உணவுப் பொருட்கள், அரசு மானியங்கள், சலுகைகள் கூட கிடைப்பதில்லை. தமிழ்நாட்டு தொழிலாளர் ஒருவருக்கு 200 ரூபாய் தினசரி சம்பளம் கிடைத்தால், இலவச அரிசி 20 கிலோ வாங்கிக் கொள்ளலாம்; மானிய விலையில் எரி பொருளும், பருப்பு வகைகளும் வாங்கிக் கொள்ளலாம். இவர்களுக்கு அந்த ஆதரவும் கிடையாது. இவர்கள் அரிசியை வெளிக் கடையில்தான் வாங்குகிறார்களாம். கிலோ 25 ரூபாய், 30 ரூபாய் ஆகிறதாம்.
இவர்கள் யாரிடமும் செல்போன் எல்லாம் இல்லை. ஊருக்குப் பேச வேண்டுமானால் STD பூத்திலே சென்று பேசுவார்களாம். ஜமன்லால் சிங் தங்குமிடமும், தண்ணீரும் கட்டணமில்லாமல் கம்பெனி கொடுக்கிறது என்று சொன்னார். உணவுக்கு கம்பெனி கொடுப்பதை சாப்பிடுகிறார்.  அதற்கு மாதம் 700 ரூபாய்  பிடித்துக் கொள்வார்களாம். 300 பேருக்கு ஒன்றாகச் சேர்த்து சமைக்கிறார்கள். தண்டையார் பேட்டையில் தங்கியிருக்கிறார்களாம்.
ஆஷிஷ் குமார் பணியிடத்துக்கு அருகிலேயே நான்கைந்து பேருடன் அறை எடுத்துத் தங்கியிருக்கிறார். உணவை அவர்களே தயார் செய்து கொள்கிறார்கள். திருவேற்காட்டில் இருக்கும் முகாம் மிகப் பிரம்மாண்டமாக நூற்றுக்கணக்கானோர்  தங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 15 அடிக்கு 15 அடி அறைகள் ஷீட்டுகளால்  உருவாக்கப்பட்டிருந்தன. வளாகம் மிகவும் சுத்தமாகப் பராமரிக்கப்பட்டிருந்தது. திருவேற்காடு பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் ஆள்  நடமாட்டம் குறைவான பகுதியில் இது அமைக்கப்பட்டுள்ளது. இரவில் வேலை பார்த்து விட்டு, பகலில் ஓய்வெடுக்க வரும் தொழிலாளர்களுக்கு வெயில் அடிக்கும் போது இந்த அறைகள் எப்படி ஓய்வு எடுக்க உதவும் என்று தோன்றியது. தொழிலாளர்களை தங்குமிடத்திலிருந்து பணியிடத்துக்கு அழைத்து செல்ல நிறுவனத்திலிருந்து பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மெட்ரோ ரயில் பணிகள் முடிந்து விட்டால் அடுத்து என்ன செய்யப் போகிறார்கள்?

ஜமுய் மூவரணியினர் 4 மாதங்களுக்கு முன்பு வந்தார்களாம். வேலை நடப்பது வரை இங்கு இருப்பார்களாம். வேலை முடிந்ததும், அடுத்து வேலை கிடைக்கும் இடத்துக்கு, வேறு நகரத்துக்கு, வேறு மாநிலத்துக்கு நகர வேண்டியதுதான். தாங்கள் உருவாக்கிய மெட்ரோ ரயில் எப்படி ஓடுகிறது என்று பார்க்கும் வாய்ப்புக் கூட இவர்களுக்கு இருக்காது.
கோகோய் ‘நிரந்தர வேலை என்று எந்த கம்பெனியிலும் கிடையாது’ என்கிறார். ‘இங்கு வேலை நடக்கும் வரை வைத்திருப்பார்கள். அடுத்த வேலை இருந்தால் அழைத்துச் செல்வார்கள். இல்லாவிட்டால் நம்ம கெட்ட நேரம் அவ்வளவு தான்.’
ஆஷிஷ் குமார் ’2012க்குப் பிறகு மெட்ரோ புராஜக்டில் வேலை இருக்காது. வேறு வேலை தேட வேண்டும்’ என்றார்.  ‘என்ன வேலை நேரம், என்ன சம்பளம் என்று எந்த நிச்சயமும் கிடையாது.’ ‘நீங்க மனது வைத்து வேறு இடத்தில் வேலை ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்’ என்று ஒரு விண்ணப்பத்தையும் எங்களிடம் வைத்தார்.  சிவான் சிராமிக் இங்கு வேலை முடிந்ததும் அடுத்து வேலை கிடைக்கும் இடங்களுக்கு போக வேண்டியதுதான். அவர்கள் ஊரிலேயே வேலை செய்வதற்கு வாய்ப்புகள் மிக மிகவும் குறைவு என்றார்கள்.

மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள் இவர்களை எப்படி நடத்துகின்றன?

ஜமுய் மூவரிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது மூன்று பேரில் ஒருவர் ‘வேலையைப் பாருங்க’ என்று மற்றவர்களை உஷார்ப் படுத்தினார். திரும்பிப் பார்த்தால், பின் பக்கத்திலிருந்து நீல நிறச் சீருடையுடன் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவர் மேலாளர், தமிழில் பேசினார். ‘நீங்க யாரு, உள்ளே ஏன் வந்தீங்க?’ என்று கேட்டவர். ‘இப்படி அனுமதி இல்லாமல், பாதுகாப்பு உடை அணியாமல் உள்ளே வரக் கூடாது. அலுவலகத்தில் போய் அனுமதி வாங்கிக் கொண்டு வாங்க’ என்று அனுப்பினார்.
கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குள் இருந்த செக்யூரிட்டி தமிழ்நாட்டுக்காரர். அவரிடம் பேசினோம். “நம் ஊர் ஆளுக நேரக் கணக்கு பார்த்து வேலை செய்வாங்க சார். வட நாட்டவங்களைத்தான் நாய் மாதிரி வேலை வாங்க முடியும். ஒரு மணி நேரம் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு அப்புறம் தொடர்ந்து வேலை செய்வாங்க. கூலியும் கம்மியா கொடுத்தா போதும். அதனால தான் இங்க முழுக்க வடநாட்டுக் காரனுங்களை வேலைக்கு வச்சிருக்காங்க” என்றார். “தமிழ் ஆளுங்களே இல்லையா?” என்று கேட்டால் “இருக்காங்க சார். அதிகாரி, பொறியாளர், ஃபீல்டு ஆபிசர் இந்த பதவியிலெல்லாம் இவங்கதான் சார் இருப்பாங்க” என்றார்.
“எல்லாம் ரூல்ஸ் படிதான் நடக்குது. சட்டப்படி குறைந்தபட்சக் கூலி கொடுக்கிறாங்க. தங்குவதற்கு இடம் இலவசமா கொடுக்கிறாங்க. ஆர் ஓ தண்ணீர் தர்றாங்க. சாப்பாட்டுக்கு மெஸ் கூட இருக்கிறது” என்கிறார்கள் மேலாளர்கள்.  மெஸ்சில் சாப்பிட வேண்டுமானால் மாதா மாதம் ரூ. 700 முதல் ரூ. 1200 வரை  பணம் கொடுக்க வேண்டியிருக்கும். அதை மிச்சப்படுத்த தாங்களே சமைத்துச் சாப்பிட்டுக் கொள்வதாகச் சொல்கிறார்கள், தொழிலாளர்கள்.

இந்தத் தொழிலாளர்கள் தமது வேலையையும், வாழ்க்கையையும் எப்படிப் பார்க்கிறார்கள்?

கோகோய்:
’8 மணி நேர ஷிப்டு எப்படி சாத்தியமாகும். நான் 8 மணி நேரம் வேலை பார்த்து விட்டுப் போய் விட இரண்டாவது ஷிப்டில் வருபவர் 8 மணி நேரம் காவல் இருப்பார். மீதி 8 மணி நேரம் என்ன ஆகும். யாராவது வந்து பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு போய்  விடுவார்கள். அதனால் தான் நாங்கள் 12 மணி நேரம் வேலை செய்கிறோம்’ என்று விளக்குகிறார். 3 ஷிப்டுகளாக பிரித்து இன்னொருவரை வேலைக்கு வைத்துக் கொள்ளலாமே என்று யோசிக்கக் கூட அவருக்குத் தோன்றவில்லை.
‘தமிழ்நாட்டு மக்கள் நல்லவர்கள் தான். சாப்பாடு எல்லாம் பிடித்திருக்கிறது’ என்கிறார். ‘நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ அப்படித்தான் மற்றவர்களும் நம்மை நடத்துவார்கள்’ என்று தத்துவம் சொல்கிறார்.
ஆஷிஷ் குமார்:
’12 மணி நேர டுயூட்டிக்கு மாதம் 9,300 ரூபாய் கொடுத்தார்கள். அது நன்றாக இருந்தது. ஆனால் வேலை நேரத்தை 8 மணி நேரமாகக் குறைத்து, சம்பளம் 5,300 ரூபாய் என்று சொல்லி விட்டார்கள். அதனால் அதை விட்டு விட்டு வந்தேன். இங்கு 12 மணி நேர வேலைக்கு 6,500 ரூபாய்  கிடைக்கிறது.’
சிவான் சிராமிக்:
‘நாட்டில் 70 கோடி உழைச்சுப் பிழைக்கிறவங்க இருக்காங்க. அவங்க எல்லாத்துக்கும் அரசாங்கம் என்ன செய்ய முடியும்? நாமதான் இப்படி அலைஞ்சு திரிந்து வாழ்க்கைப் பாட்டை பார்த்துக் கொள்ளணும். ஆனா ஒண்ண.  நாங்க இப்படி கஷ்டப்படுகிறோம். எங்க குழந்தைங்க இது போல வேலைக்கு வந்து விடக் கூடாது என்றுதான் உழைக்கிறோம்’
நிலப்பிரபுத்துவ கொடுமைகள் இல்லாத அரைகுறை போலி ஜனநாயகத்தைக் கூட பெரிதாக எண்ணும்  நிலைமையில் தான் இந்தத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.  ’எத்தனை மணி நேரமானாலும் வேலை வாங்குங்கள். கொஞ்சம் கூடுதல் பணம் கிடைத்தால் போதும்.’ என்பது தான் இவர்களின் அதிகபட்சக் கோரிக்கையாக இருக்கிறது. அப்போது தான் தம்மையும், குடும்பத்தையும்  காப்பாற்றிக் கொள்ள  முடிகிறது. இப்படி அதிக வேலையால் உடல்நிலை சீர்குலைந்து சில ஆண்டுகளில் உயிரிழந்து  விட்டால், அத்தோடு இந்த துயரம் மிகுந்த வாழ்க்கைக்கு விடை கொடுத்து விடலாம் என்று நினைக்கிறார்களோ  என்னவோ!.
பணிகளில் ஒப்பந்தத் தொழிலாளர்களை ஈடுபடுத்தி, குறைந்தபட்சக் கூலி, அளவுக்கதிகமான வேலை நேரம் என்று சுரண்டுவது ஏதோ தனியார் பெரு நிறுவனம் என்று நாம் நினைத்து விடக் கூடாது. உள்ளூர் மற்றும் பன்னாட்டு அரசு நிறுவனங்களின் நேரடி நிழலில் தான் இப்படிப்பட்ட சுரண்டல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

மெட்ரோ 2சென்னை மெட்ரோ ரயில் திட்டம் மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் கூட்டு முயற்சியின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டமாகும். இந்தத் திட்டத்துக்கு செலவாகப் போவதாக மதிப்பிடப்பட்டுள்ள 14,600 கோடி ரூபாயில் 41% மத்திய-மாநில அரசுகள் கூட்டாக பங்களிக்க, மீதி ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையிடமிருந்து கடனாகப் பெறப்படுகிறது (Japan International Cooporation Agency – JICA). இந்த நிறுவனம் கட்டுமானத்தில் ஆலோசனை வழங்குபவராகவும், கட்டுமானப் பொருட்கள், கருவிகளை வழங்குபவராகவும் செயல்படுகிறது.
2007 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனமான சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர்களாக மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் செயலர், தமிழ்நாடு அரசுச் செயலாளர், தமிழ்நாடு அரசின் தொழில்துறை, நிதித்துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைகளைச் சேர்ந்த செயலாளர்களும், டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர், நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் அலுவலர்களும் இருக்கிறார்கள். இதன் நிர்வாகக் குழுவில் அரசு அதிகாரிகள் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.
அரசு சட்டங்கள், நீதி மன்றங்கள், தொழிற்சங்கங்கள், பத்திரிகைகள் எதுவும் தமது நிகழ் காலத்தையும் எதிர் காலத்தையும் அடிமாட்டு விலைக்கு விற்றுக் கொண்டிருக்கும் இந்தத் தொழிலாளர்களுக்கு உதவியாக வரவில்லை.
தமது உரிமைகளைப் பற்றிய அடிப்படை விபரங்களைக் கூட தெரிந்து கொள்ளாமல் முதலாளிகளுக்காகத் தாமாகவே ஒரு நியாயத்தைக் கற்பித்துக் கொண்டு வேலை செய்கிறார்கள் இந்த தொழிலாளர்கள். ஒரு சிலர் உயிரும் இழந்திருக்கிறார்கள். இரத்தமும், வியர்வையும் சிந்தி இந்த ஏழைத் தொழிலாளிகள் உருவாக்கியிருக்கும் மெட்ரோவில்தான் நாம் பயணிக்க இருக்கிறோம். நாம் பயணிக்கும் போது இவர்கள் வேறு ஊரில், வேறு பணிகளில் தொடர்வார்கள்.
__________________________________________________________
- வினவு செய்தியாளர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக