திங்கள், 24 டிசம்பர், 2012

தமிழகத்திலே கற்பழித்துக் கொலையும் செய்திருக்கிறார்கள்

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 டெல்லியில் நடைபெற்றதும் கற்பழிப்பு தான், தமிழகத்திலே நடைபெற்றதும் கற்பழிப்பு தானே? டெல்லி சம்பவத்திற்காக பிரதமரே அறிக்கை வெளியிடுகிறார். ஆனால் தமிழகத்திலே கொலையே செய்யப்பட்ட புனிதாவின் குடும்பத்தாருக்கு அரசின் சார்பில் யாரோ ஒரு அமைச்சராவது சென்று ஆறுதல் கூறியது உண்டா? தமிழகத்திலே அரசு என்ற ஒன்று இருக்கிறதா? தமிழ்ச்சாதி என்பதால் புனிதாவின் கொலை சாதாரணமாகி விட்டதா?
 டெல்லியில் பேருந்து ஒன்றில், 23 வயதான மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மாணவி கற்பழிக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு நீதி கோரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதில் மாணவர்கள் 100 பேர் காயமடைந்துள்ளனர்.;அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவர்& சோனியா காந்தி வீட்டிற்கு முன்பு மாணவர்கள் தர்ணா நடத்தியிருக்கிறார்கள். நள்ளிரவு 12.30 மணியளவில் சோனியா காந்தி வீட்டிலிருந்து வெளியே வந்து, போராட்டம் நடத்திய மாணவர்களோடு தரையிலே அமர்ந்து, “நான் உங்களோடு இருக்கிறேன், இந்தப் பிரச்சினை யில் விரைவிலே நீதி கிடைக்கும்” என்று ஒரு பெண்ணுக்கே உரிய மாண்பு குறையாமல் பதிலளித்திருக்கிறார். அதற்குப் பிறகும் போராட்டம் நடத்திய மாணவர்கள் விடிய விடிய கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் அங்கேயே அமர்ந்திருந்திருக்கிறார்கள். இந்தப் போராட்டத்தில் போலீஸ்காரர் ஒருவரும் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையிலே அனுமதிக்கப்பட்டுள்ளார்.போராட்டம் நடத்திய மாணவர்கள் ஐந்து பேர் சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் அவரது இல்லத்தில் சந்தித்து தங்கள் கோரிக்கைகளையெல்லாம் தெரிவித்திருக்கிறார்கள். கோரிக்கைகள் அனைத்தையும் அனுதாபத் தோடு கேட்டுக்கொண்ட சோனியா காந்தி அவர்கள், அவர்களது முக்கிய கோரிக்கையான பலாத்காரக் குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்க சட்டத்தைத் திருத்த வேண்டும் என்பதை ஏற்கத்தயார் என்று உறுதி அளித்திருக்கிறார்.
இந்தச் சம்பவம் குறித்து பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “இந்தப் பிரச்சினையில் பொது மக்களின் கோபம் நியாயமானதுதான். இந்தக் கற்பழிப்பு வழக்கிலே சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். அவர்களை விட்டுவிட மாட்டோம்” என்று உறுதி கூறியிருக்கிறார்.
இந்தக் கற்பழிப்பு பற்றி விசாரணை நடத்தவும், பாலியல் பலாத்கார குற்றங்களுக்கான தண்டனையை அதிகரிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்வது பற்றி பரிந்துரைக்கவும் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மா அவர்கள் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு ஒன்றினை மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் பேருந்தில் நடைபெற்ற கற்பழிப்பு பற்றி இவ்வாறு அனைத்து முனைகளிலும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் அங்கே போராட்டம் நின்றபாடில்லை, தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கற்பழிப்பு எங்கே நடைபெற்றாலும் அது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றுதான். அது டெல்லியிலே நடைபெற்றாலும் எதிர்க்க வேண்டியதுதான், தமிழகத்திலே நடைபெற்றாலும் எதிர்க்க வேண்டியதுதான்.
ஆனால் தமிழகத்திலே நடைபெறுவது என்ன? டெல்லியிலே கற்பழிப்புச் சம்பவம் நடைபெற்ற அடுத்த இரண்டாம் நாள், அதாவது 20-12-2012 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில், செய்துங்க நல்லூரை அடுத்த கிளாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சவுந்தரராசன் என்பவரின் மூத்த மகள் புனிதா (வயது 13), பள்ளிக்குச் சென்ற போது வழிமறித்து காட்டுப் பகுதிக்குத் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்திருப்பதும், பின்னர் சுடிதாரின் துப்பட்டாவினால் அவளது கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
புனிதாவின் கொலைக்காக கிளாக்குளம் கிராம மக்கள் சம்பவத்தைக் கண்டித்து சாலை மறியல் நடத்தியிருக்கிறார்கள். புனிதா படித்த பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு போராட்டத்திலே ஈடுபட்டுள்ளார்கள். டெல்லியில் கற்பழித்தவர்களும் காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் புனிதாவைக் கற்பழித்தவனையும் காவலர்கள் கைது செய்துள்ளார்கள். ஆனால் டெல்லியிலே மத்திய அரசும், அந்த மாநில அரசும் அங்கே நடைபெற்ற சம்பவத்திற்காக நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், தமிழகத்தில், கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஏழை புனிதாவிற்காக தமிழக அரசு சார்பில் ஏதாவது நடவடிக்கை உண்டா?
டெல்லியில் நடைபெற்றதும் கற்பழிப்பு தான், தமிழகத்திலே நடைபெற்றதும் கற்பழிப்பு தானே? டெல்லி சம்பவத்திற்காக பிரதமரே அறிக்கை வெளியிடுகிறார். ஆனால் தமிழகத்திலே கொலையே செய்யப்பட்ட புனிதாவின் குடும்பத்தாருக்கு அரசின் சார்பில் யாரோ ஒரு அமைச்சராவது சென்று ஆறுதல் கூறியது உண்டா? தமிழகத்திலே அரசு என்ற ஒன்று இருக்கிறதா? தமிழ்ச்சாதி என்பதால் புனிதாவின் கொலை சாதாரணமாகி விட்டதா?
பாலியல் குற்றங்கள் கொடுமையானவை மட்டுமல்ல; கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படவேண்டியவை என்பதிலே கருத்து வேறுபாட்டுக்கு இடமில்லை. எனினும் குற்றத்தின் தன்மை ஒரேமாதிரியாக இருக்கும் போது, இடத்துக்கு இடம், அதனைக் கண்டித்திடும் தொனியில் சில அரசியல் கட்சிகள், வேறுபாடு காட்டுவது வினோதமாக மட்டுமல்ல-வேதனை தருவதாகவும் இருக்கிறது.
உரிய நடவடிக்கைகள் அனைத்தும் டெல்லியிலே மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில்; மத்திய அரசைத் தொடர்ந்து செய்யப்படும் விமர்சனம் துளியேனும் குறையவில்லை. ஆனால் தமிழகத்திலோ-நமக்கு வெகு அருகில் உள்ள ஊரிலே நடந்த குற்றத்தை ஆட்சியாளர்கள் வெளிப்படையாகக் கண்டித்திட முன்வராத நிலையிலும் கூட சில அரசியல் கட்சிகள் அதுகுறித்து உரிய அளவுக்குக் கண்டு கொள்ளாமல் இருப்பதுதான் கவலை தருவதாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது.
டெல்லியிலே கற்பழிப்பு என்றால் போராட்டம் - தமிழகத்திலே கற்பழித்துக் கொலையும் செய்திருக்கிறார்கள் என்கிறபோது அதைப்பற்றி யாரும் கவலைப்பட முன்வராத நிலையில்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாளை 26-12-2012 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்னால், இந்தக் கொடுமையான வன்முறையைக் கண்டிக்கும் வகையில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை கழகத்தின் தலைவன் என்ற முறையிலே அறிவித்திருக்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக