வியாழன், 20 டிசம்பர், 2012

கடத்தப்பட்ட "ஈமு' அதிபர் கொலை

திருப்பூர்: கடத்தப்பட்ட "ஈமு' கோழி அதிபர் மோகன், மைசூரு அருகே கொலை செய்யப்பட்டார்.திருப்பூர் அருகே நொச்சிபாளையத்தில், "ஜோதிவேல்' என்ற பெயரில், "ஈமு' கோழி நிறுவனம் நடத்தி வந்தவர் மோகன், 40. இவர் முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் இவர், கடந்த 10ம் தேதி, பல்லடம் அருகே பெரும்பாளி என்ற இடத்தில் காரில் சென்றபோது, மற்றொரு காரில் வந்த, எட்டு பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டார். இவரை மீட்க, மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த வழக்கில் தொடர்புடைய மோகன சுந்தரம், மதிவாணன், கார்த்திக் உள்பட, 10 பேரை தனிப்படை போலீஸார் கடந்த, 13ம் தேதி கைது செய்தனர். தலைமறைவாக இருந்த, மூன்று பேரை தேடி வந்தனர். அதில் ஒருவரான ஈரோட்டை சேர்ந்த ஜெயராமகிருஷ்ணன் என்பவர், சில நாட்களுக்கு முன் சிக்கினார்.அவரிடம் நடத்திய விசாரணையில், மோகனை கொலை செய்து, அவரது உடலை கர்நாடகா மாநிலம் மைசூரு அருகே சென்னப்பட்டணம் காட்டுப்பகுதியில் வீசியதாக தெரிவித்தார். இத்தகவலை உறுதி செய்ய, பல்லடம் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான தனிப்படை குழுவினர், இரு நாட்களுக்கு முன் மைசூரு சென்றனர்.மோகனின் உடலை அடையாளம் காட்ட, அவரது மனைவி அமலையும் அழைத்துச் சென்றனர். சென்னப்பட்டணம் போலீஸாரிடம், பல்லடம் தனிப்படை போலீஸார் விசாரித்ததில், 13ம் தேதி காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம் யார்? என அடையாளம் தெரியாததால், பிரேத பரிசோதனை செய்து, உடலை அடக்கம் செய்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.மேலும், பிணமாக கிடந்தவர் அணிந்திருந்த ஆடைகளை காண்பித்தனர். அந்த ஆடை, தனது கணவர் அணிந்திருந்தது தான் என, அவரது மனைவி அடையாளம் காட்டினார். அதனால், கொலை செய்யப்பட்டு கிடந்தது மோகன் என்பது உறுதியாகி உள்ளது.மோகன் கொலை செய்யப்பட்டது எப்படி? இதில் தொடர்பு உடையவர்கள் யார் யார், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், கொலைக்கு பயன்படுத்திய வாகனங்கள் போன்ற விவரங்களை போலீஸார் விசாரித்து வருகின்றனர். தனிப்படை போலீஸார், இன்று பல்லடம் திரும்புகின்றனர்.  dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக