வெள்ளி, 21 டிசம்பர், 2012

பாலியல் வன்புணர்ச்சி – டெல்லி மட்டுமல்ல….

‌டந்த ஞாயிறன்று டெல்லியில் நடந்த பேருந்து கும்பல் பாலியல் வன்முறைக்காக ஒட்டுமொத்த தேசமுமே வீதியில் இறங்கிப் போராட வேண்டுமென்று ஊடகங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன.
மறுநாள் திங்களன்று மாலை ஆறு மணிக்கு பாட்னா அருகிலுள்ள சகார்ஸா மாவட்டத்திலுள்ள பெல்வாரா புனர்வாஸ் என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண் குழந்தை கோழிக்கறிக் கடையில் வேலை செய்யும் தனது அண்ணனை அழைக்க வெளியே செல்கிறாள். அரை கி.மீ தூரத்தில் உள்ள அந்த கடையை அடைந்து சகோதரனை அழைக்கிறாள். நீ முன்னால் போ, நான் கடையை அடைத்து விட்டு வருகிறேன் என்கிறார் சகோதரன். சகோதரன் வீடு திரும்பிய பிறகும் பெண் குழந்தை வந்தபாடாக இல்லை. இரவு 9 மணிக்கு தேடத் துவங்குகின்றனர். குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.
காலையில் 250 மீட்டர் தூரத்தில் உள்ள கால்வாய்க்கருகில் செருப்பும் துப்பட்டாவும் கிடைக்கிறது. கால்வாயில் சிறுமியின் பிணத்தை கண்டுபிடிக்கின்றனர். பிரேதப் பரிசோதனையில் அவள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு அதன் பிறகே கொல்லப்பட்டிருக்கிறாள் என தெரிய வருகிறது. அவளது மாமா சொல்வது போல யாரும் காவல்துறை உயரதிகாரிகள் இங்கு வந்து விசாரித்ததாகவே தெரியவில்லை. ஒரு கண்காணிப்பாளர் மட்டும் தான் வந்தாராம். டெல்லியில் நடந்தால் அவர்களுக்கு அது முக்கியம், இங்கு நடந்தால் யாருக்குமே தெரிவதில்லை என்கிறார் அக்குழந்தையின் மாமா.

டெல்லி சம்பவத்திற்காக மாணவர்கள் ஊர்வலம் போகிறார்கள். நடுத்தர வர்க்கம் ஊர்வலம் போகிறது. சீக்கிய பெண்மணிகள் அமிர்தசரசில் உடனடியாக ஆறு பேரையும் தூக்கில் போடு எனக் கோரி ஆர்ப்பாட்டத்தில் தூக்குக்கயிறை உயர்த்திப் பிடிக்கிறார்கள். சுஷ்மா சுவராஜ் 30 நாளில் வழக்கை நடத்தி முடித்து தூக்கில் போடுங்கள் என அப்சல் குருவுக்கு கேட்டது போல உத்திரவிடுகிறார். டெல்லி முதல்வர் காங்கிரசின் ஷீலா தீட்சித் அப்பெண்ணின் குடும்ப விருப்பங்களை நிறைவேற்றுவதாக உறுதி கூறுகிறார். மகிந்திரா நிறுவனம் பாதிக்கப்பட்ட பாரா மெடிக்கல் கல்லூரி மாணவிக்கு வேலை தருவதாக உறுதி அளித்துள்ளது.
டெல்லியில் கும்பலாக நடத்திய பாலியல் தாக்குதலையும், அதனைத் தொடர்ந்து அப்பெண் மற்றும் அவரது நண்பரை தாக்கியதும் மிகவும் கொடூரமான நிகழ்ச்சிதான். கட்டாயம் அனைவரும் அதனை கண்டிப்பது சரியானதுதான். ஆனால் சத்திய ஆவேசம் உண்மையானது என்றால் கேட்கப்படாத வன்முறைகள் ஆயிரம் இருக்கின்றனவே!
வாச்சாத்தியின் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயமே கிடைக்காத போதிலும் மொன்னைத் தீர்ப்பை பெறவே 20 ஆண்டுகள் ஆனதையும், சிதம்பரம் பத்மினி வழக்கையும் கொஞ்ச‌ம் ஒப்பிட்டுப் பார்க்க‌ வேண்டியுள்ள‌து. வ‌ட‌ கிழ‌க்கின் போராளிப் பெண்க‌ளை இந்திய‌ பாதுகாப்பு ப‌டைக‌ள் கொன்று குவிப்ப‌தும், க‌ஞ்ச‌ம் ம‌னோர‌மா போன்ற‌ போராளிப் பெண்க‌ளை பாலிய‌ல் வ‌ல்லுற‌வுக்குள்ளாக்கியும், அவ‌ர்க‌ள‌து பிற‌ப்புறுப்பில் ல‌த்தியை திணித்திருந்த‌ செய‌லையும் செய்த‌  ராணுவ‌த்தை இன்று போராடும் யாரும் எதிர்த்த‌தாக‌ தெரிய‌வில்லை.
விழுப்புரத்தில் இருளர் பெண்களை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய காவல்துறை மீது வழக்கு தொடுக்கப்பட்ட போது, பணம் பிடுங்க இந்தப் பெண்கள் நாடகமாடுகிறார்கள் என்றார் ஜெயலலிதா. அப்போதெல்லாம் சுஷ்மா சுவராஜ்கள் எங்கிருந்தார்கள்? ஊடகங்கள் இதை பரபரப்பாக காட்டி நடுத்தர வர்க்கத்திடம் பிரச்சாரம் செய்வதால் அரசியல்வாதிகள் அனைவரும் பாராளுமன்றத்திலேயே குமுறியிருக்கின்றனர். ஏழைப் பெண்களுக்கோ, இராணுவம், போலீசால் குதறப்படும் பெண்களுக்கோ இத்தகைய ஊடக வெளிச்சம் கிடைப்பதில்லை.
ச‌மீப‌த்தில் டிச‌ம்ப‌ர் 14 அன்று மேற்கு வ‌ங்க‌ மாநில‌ம் சிலிகுரி வ‌ட்ட‌த்தில் உள்ள‌ ராம‌ஜோதா என்ற‌ கிராம‌த்தில் 24 வ‌ய‌துப் பெண் ஒருவ‌ரை அக்கிராம‌த்தை சேர்ந்த‌ பாருய் என்ப‌வர் த‌ன‌து ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் இணைந்து கும்ப‌லாக‌ பாலிய‌ல்                         வ‌ல்லுற‌வுக்குட்ப‌டுத்தி, க‌டையில் ம‌ண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொல்ல முயன்றிருக்கிறார். இப்போது அந்த‌ப் பெண்ணும் ம‌ருத்துவ‌ம‌னையில் தான் இருக்கிறார். அவ‌ரைப் ப‌ற்றி சிஎன்என்-ஐபிஎன் டிவி பேசுகிற‌தா? 2 மாத‌ங்க‌ளுக்கு முன் மேற்கு வ‌ங்க‌த்தில் இப்ப‌டி பாதிக்க‌ப்ப‌ட்ட‌ பெண் தான் வாழ்க்கையில் அன்றே தோற்று விட்ட‌தாக‌ கூறுவ‌தை கேட்கையில் ஊடகங்களுடைய போலித்தனம் குறித்து ஆத்திரம் வருகிறது.  இந்த‌ குற்ற‌ங்க‌ளில் இதுவ‌ரை யாரும் கைது கூட‌ செய்ய‌ப்ப‌ட‌வில்லை.
ச‌மீப‌த்தில் பெண்க‌ள் மீதான‌ பாலிய‌ல் வ‌ன்முறைக‌ளில் ஈடுப‌டுவோரில் ச‌த‌வீத‌ம் பேர் அவ‌ர்க‌ளுக்கு தெரிந்த‌வ‌ர்க‌ள் ம‌ற்றும் உற‌வின‌ர்க‌ள் தான் என்கிற‌து மாந‌க‌ர‌ங்க‌ளில் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ ஆய்வு. பாலிய‌ல் வ‌ன்முறைக‌ள் ந‌ட‌க்கும்  மாந‌க‌ர‌ங்க‌ளில் டெல்லி, மும்பை, பெங்க‌ளூரு போன்ற‌ த‌க‌வ‌ல் தொழில்நுட்ப‌, நிதிமூல‌த‌ன‌ சூதாட்ட‌ம், ரிய‌ல் எஸ்டேட் தொழில்க‌ள் அதிக‌மாக‌ ந‌ட‌க்கும் ஊர்க‌ள் தான் முன்ன‌ணியில் இருக்கின்ற‌ன. இந்ந‌க‌ர‌ங்க‌ளில் ந‌ட‌க்கும்  இவ்வ‌ன்முறைக‌ளில் வெறும் மோக‌ம், காம‌ம் போன்ற‌ விச‌ய‌ங்க‌ளை விட‌     பாதிக்க‌ப்ப‌டுப‌வ‌ரை உட‌ல்ரீதியாக‌ தாக்குவ‌து, அவ‌மான‌ப்ப‌டுத்துவ‌து போன்ற‌ செய‌ல்க‌ள் அதிக‌மாக‌ இருக்கின்றன‌.
குறிப்பாக‌ இங்கு தாக்க‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ளில் பெரும்பாலோர் ந‌டுத்த‌ர‌ வ‌ர்க்க‌,     உய‌ர்ந‌டுத்த‌ர‌ வ‌ர்க்க‌ பிரிவினைச் சேர்ந்த‌ பெண்க‌ளாக‌வே உள்ள‌ன‌ர். க‌ட‌ந்த‌ வார‌ம் பெங்க‌ளூருவில் டிராபிக் போலீசு ஒருவ‌ரே காரில் வ‌ந்த‌ ந‌டுத்த‌ர‌ வ‌ர்க்க‌ பெண் சாலையில் இறங்கி ஆங்கில‌த்தில் பேசிய‌தால் க‌ன்ன‌ட‌ம் தெரியாதா என‌க்  கோப‌மாகி அவ‌ரை க‌ன்ன‌த்தில் அடித்திருக்கிறார்.
டெல்லி ச‌ம்ப‌வ‌த்தில் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ பெண்ணுக்கு நினைவு திரும்பிய‌து, ம‌ற்றும் அவ‌ருக்கு புத‌ன‌ன்று ந‌ட‌ந்த‌ அறுவைச் சிகிச்சை என‌ சீன் பை சீனாக‌ தொலைக்காட்சி ம‌ற்றும் ப‌த்திரிகைக‌ள் ப‌திவுசெய்கின்ற‌ன. அது தொட‌ர்பாக‌ விவாத‌ங்க‌ளை ஆங்கில‌ தொலைக்காட்சிக‌ள் தொட‌ர்ச்சியாக‌ ந‌ட‌த்தி   வ‌ருகின்ற‌ன. இச்ச‌ம்ப‌வ‌த்தில் ஈடுப‌ட்ட‌ 6 பேருமே உதிரித் தொழிலாளிக‌ள் தான். டிரைவ‌ர், கிளீன‌ர் போன்றோரிட‌ம் எச்ச‌ரிக்கையாக‌ இருக்க‌ வேண்டியிருக்குமோ என‌ ந‌டுத்த‌ர‌ வ‌ர்க்க‌ இள‌ம்பெண்க‌ளுக்கு ஒருவித‌ அச்ச‌த்தை இப்போராட்ட‌ங்க‌ளை விள‌ம்ப‌ர‌ப்ப‌டுத்துவ‌து தோற்றுவிக்கிற‌து. க‌டைசியில் பொதுவான‌ ஆணாதிக்க‌ மொழியில் அவ‌ள் ஒழுங்கா இருந்திருந்தா த‌ப்பு ந‌ட‌ந்திருக்காது என்ற‌ மொழியும், க‌டைநிலை சாதிக‌ள் ம‌ற்றும் தொழிலாளிக‌ள் போன்ற‌ சாமான்ய‌ர்க‌ள் தான் இது போன்ற‌ இழிசெய‌ல்க‌ளில் ஈடுப‌டுவார்க‌ள் என்றும் ந‌டுத்த‌ர‌ வ‌ர்க்க‌மும் பார்ப்பனிய ஊடகங்களும் பேசுகின்றனர்.
பெரு ந‌க‌ர‌ங்க‌ளின் நுக‌ர்வுக் க‌லாச்சார‌த்தை அணு அணுவாக‌ ருசித்து ம‌கிழும்     உய‌ர் ந‌டுத்த‌ர‌ வ‌ர்க்க‌ ம‌ற்றும் ந‌டுத்த‌ வ‌ர்க்க‌த்தின‌ருக்கும், அடிப்ப‌டை   வ‌ர்க்க‌ங்க‌ளுக்குமான‌ ச‌மூக‌, பொருளாதார‌, ப‌ண்பாட்டு வேறுபாடுக‌ள் க‌ட‌ந்த‌ 20  ஆண்டுக‌ளில் க‌ணிச‌மாக‌ அதிக‌ரித்த‌ப‌டியே உள்ள‌து.  நுகர்வு கலாச்சாரம் தோற்றுவித்திருக்கும் ஆடம்பரங்கள் இல்லையென்றால் வாழ்க்கை இல்லை என்பது ஒரு வெறியாகவே ஊட்டப்பட்டிருக்கிறது. கூடவே இந்த நுகர்வு உலகில் பெண்கள் குறித்த போகப்பொருள் என்ற சித்திரமும் அன்றாடம் உணர்த்தப்படுகிறது. இதே ஊடகங்களும், சினிமாவும்தான் அத்தகைய காமவெறியை பாலியல் சுதந்திரம், மருத்துவம், கட்டுப்பெட்டித்தனத்தை உடைத்தல் என்று பல்வேறு விதங்களில் ஊட்டி வருகின்றன. பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்திருப்பதன் பின்னணி இதுதான்.
இதில் மேட்டுக்குடி, நடுத்தர வர்க்கம், தொழிலாளி வர்க்கம் என்ற வேறுபாடு இல்லாமல் வன்முறைகள் நடக்கின்றன. செல்பேசி, இணையம் எல்லாம் பெண்களை மறைந்திருந்து படம்பிடிக்கும் அபாயங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. இதனாலேயே பல நூறு பெண்கள் இங்கே தற்கொலை செய்திருக்கின்றனர். முடியாதவர்கள் நடைப்பிணங்களாக வாழ்கின்றனர்.
தினமணி போன்ற பார்ப்பன ஊடகங்கள் இத்தகைய பண்பாட்டு சூழலைக் கண்டிக்காமல் பெண்கள் மட்டும் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்று ஆணாதிக்க மொழியில் உபதேசம் செய்கின்றன. விடலைக் காதலை புரிய வைப்பது, மேலோட்டமான காதலை உணர வைப்பதும் இத்தகைய பாலியல் வன்முறைகள் தோன்றும் பின்னணியும் ஒன்றல்ல. ‘நல்ல’ உடை உடுத்தி அடுக்குமாடிக் கட்டிடங்களில் பாதுகாப்பாக வாழும் பெண்கள் கூட தெரிந்தவர்களாலேயே குதறப்பட்டிருக்கின்றனர்.
சீரழிவுக் கலாச்சாரத்தால் வழிநடத்தப்படும் பொறுக்கி ஆண்களுக்கு இத்தகைய பாதுகாப்பு வழிமுறைகள் எதையும் ஏற்படுத்தி விடாது. நியாயமாக இத்தகைய பொறுக்கிகளை எதிர்த்து எப்படி சண்டை போடுவது என்ற போராட்ட குணத்தையும் வழிமுறையையும்தான் பெண்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அதை விடுத்து அவர்களை அடிமை போல நடக்கச் சொல்வது வெளிப்படையான ஆணாதிக்கம்தான். இதே ஆணாதிக்கம்தான் பொறுக்கிகளின் மனதிலும் சற்று தீவிரமாக இருக்கிறது. இவையிரண்டும் நாணயத்தின் இரு பக்கங்கள்!
எனவே ஊடகங்களால் பேசப்படும் டெல்லி சம்பவத்தைத் தாண்டி பாலியல் வன்முறை என்பது அதே ஊடகங்களை உள்ளிட்ட ஆளும் வர்க்க கலாச்சார நிறுவனங்களால் மறைமுகமாக தூண்டிவிடப்படுகின்றன. அதை முறியடிக்காத வரை டெல்லி மட்டுமல்ல, உசிலம்பட்டியும் பெண்களுக்கு பாதுகாப்பானதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக