செவ்வாய், 18 டிசம்பர், 2012

படிக்கட்டு பயணம் – கொழுப்பா, நிர்ப்பந்தமா?

‌டந்த டிசம்பர் பத்தாம் தேதி பழைய மகாபலிபுரம் சாலையில் நடந்த பேருந்து விபத்தில் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள் 4 பேர் இறந்தனர். உடனே மாணவர்கள் படிக்கட்டில் நின்று சாகசம் செய்கிறார்கள் என்பதாக ஊடகங்களில் அறிவுரை பெருத்து ஓடுகிறது.
நீதிமன்றமோ தானாகவே முன்வந்து அரசை அறிக்கை தாக்கல் செய்ய சொல்கிறது. பள்ளிகளின் வேலை நேரத்தை மாற்றி அமைக்கலாம் என தினமணி அறிவுரை கூறுகிறது. நீதிபதி படிக்கட்டில் பயணம் செய்பவர்களிடம் ரூ.100 அபராதம் விதிக்க சொல்கிறது. தொடர்ந்து அப்படி பயணம் செய்தால் பள்ளியை விட்டும் நீக்க பரிந்துரைக்கிறது. வரும் ஜனவரி 2 ஆம் நாள் இதுபற்றி அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உயர்நீதி மன்றம் உத்திரவிட்டுள்ளது.
இறந்த மாணவர்கள் அனைவரும் பதின்ம வயதை சேர்ந்தவர்கள். மாணவர்கள் வயதில் படிக்கட்டில் பயணம் செய்வது போன்ற செயல்களை செய்யாமல் வந்தவர்கள் மிகவும் குறைவு தான். ஆனால் பிரச்சினையை எல்லோரும் திசைதிருப்புகிறார்கள். சென்னையின் மக்கள்தொகை ஒரு கோடியை தாண்டி விட்ட நிலையில் இயக்கப்படும் பேருந்துகளோ 3637 மட்டும்தான். ஒரு பேருந்துக்கு உட்காரும் நபர்களது எண்ணிக்கை 48 மற்றும் நிற்பவர் எண்ணிக்கை 25 மட்டும் தான் அனுமதிக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது. ஆனால் நடைமுறையில் குறைந்தது 150 பேராவது சென்னை பேருந்துகளில் காலை நேரங்களில் பயணிக்கிறார்கள். இதில் மாணவர்களுக்கு இலவச பாஸ் என்பதால் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் அவர்களை கடைசியாகத்தான் ஏறச் சொல்கிறார்கள். டிக்கெட் போடுவதற்கும் அது சௌகரியமாக இருப்பதாக கருதுகிறார்கள். இந்த நிலையில் மாணவர்களுக்கு படிக்கட்டு பயணம் என்பது அவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்று என்பதை பலரும் மறந்து விடுகின்றனர்.

சிலர் மாணவர்களுக்கு தனியாக பேருந்து விடலாம் என்கிறார்கள். பெரு நகர வாழ்வில் தனிப் பேருந்துகளை தவற விட நேர்ந்தால் மாணவர்களின் நிலைமையை யோசித்துப் பாருங்கள். தினமணி இன்னொரு ஐடியா கொடுக்கிறது. கிராமப்புற பகுதிகளில் இருப்பது போல சில சீட்டுகளை கழற்றி விட்டு நிற்க வைத்தால் அதிக நபர்களை ஏற்றலாமே என்கிறது. அரசுப் பள்ளிகள் மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைப் பற்றிய ஏளனமான பார்வையின் வெளிப்பாடு தான் அவர்களை இப்படி ஆடு, மாடு போல கருத வைக்கிறது. கிராமப்புற பகுதிகளில் இப்போதும் இடமில்லாத காரணத்தால் பேருந்தின் மேற்புற கூரையில் உட்கார்ந்து பயணிப்பதை பார்க்கலாம். உடனே இதை சாகச விருப்பம் என்று முத்திரை குத்தி பார்ப்பது சரியானதா?
கல்வி தனியார்மயமான பிறகு அருகாமைப் பள்ளிகள் என்பது இல்லாமலே போனது தான் இந்த விபத்துக்கு முக்கிய காரணம். விபத்து நடந்த பெருங்குடி பகுதியில் சாமான்யர்கள் படிக்குமளவிற்கான ஒரு ஆரம்ப பள்ளி கூட இல்லை. ஆனால் அமெரிக்க உறைவிடப் பள்ளி இருக்கிறது. லட்சங்களில் துவங்கும் கட்டணங்களை செலுத்த வழியில்லாத செம்மஞ்சேரியின் உழைக்கும் மக்கள் தங்களது குழந்தைகள் தூரத்திலிருக்கும் நகர அரசுப் பள்ளிகளில் படிக்க அனுப்புகிறார்கள். எந்த பணமில்லாமல் மாநகராட்சி பள்ளிக்கு அம்மாணவர்கள் துரத்தப்பட்டார்களோ, அதே பணத்தை அபராதமாக படிக்கட்டில் பயணம் செய்தால் வசூலிக்க சொல்லுகிறது நீதிமன்றம். பள்ளிக் கூடத்தில் ஸ்காலர்சிப் என்று எள்ளி நகையாடும் வாய்களுக்கு, பேருந்தில் ஓசி பாஸ் என்ற வசனமும் இயல்பாக வருகிறது. அது பதின்ம வயது குருத்துகளை ஃபுட் போர்டுக்கு தள்ளி பின்னால் வரும் லாரியின் சக்கரத்திற்குள்ளும் தள்ளுகிறது.
இறந்த மாணவர்களில் ஒருவன் விஜயன் (17). சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் டூ படிக்கிறான். கடந்த காலாண்டுத் தேர்வில் 1200 க்கு 1144 மதிப்பெண்கள் பெற்றிருக்கும் அவனை பள்ளி மாநில அளவில் தேர்வு பெறுவான் என கணக்கிட்டு இருந்தது. இந்த மாதிரி மாணவனிடம் சாகச உணர்வு இருந்திருக்கும் என்ற கூற்றை இன்னுமா உங்களால் நம்ப முடிகிறது? 2004 வரை சாந்தோமிற்கு அருகில் கடற்கரை மீனவ குப்பத்தில் வசித்த விஜயனின் பெற்றோரை சுனாமிக்கு பிறகு செம்மஞ்சேரிக்கு இடம்பெயர வைத்தது அரசு. நடந்து போகும் தூரத்தில் இருந்த பள்ளிக்கு பேருந்தில் பயணிக்க வேண்டிய நிலைமைக்கு ஆளான விஜயன் மட்டும் விபத்தில் இறக்கவில்லை. இரண்டாண்டுகளுக்கு முன் அடையாறு பகுதியில் சாலையை கடக்க முயன்ற அவனது தந்தையும் இப்படி ஒரு விபத்தில் தான் பலியானார். இப்போது அந்த குடும்பத்தில் ஆண்கள் யாரும் இல்லை. இரு பெண் குழந்தைகளுடன் விஜயனது தாய் காலத்தை ஓட்டியாக வேண்டும்.
செயற்கையான ந‌கர்மயமாதலை ஊதிப் பெருக்கும் தனியார்மயம் செம்மஞ்சேரி போன்ற நவீன சேரிகளை உருவாக்கவும் தவறவில்லை. பள்ளி, மருத்துவம், மின்சாரம், குடி நீர் என எதுவுமே அங்கு சரிவர கிடைப்பதில்லை. அருகிலுள்ள கண்ணகி நகர் போன்ற பகுதிகளை சமூக விரோதிகளது கூடாரம் என்பது போன்ற செய்திகளை கிசுகிசு வாக பரப்புவதை இப்போது செய்யத் துவங்கி உள்ளார்கள். விஜயன் போன்ற மாணவர்களை இழந்த பிறகும் அருகாமைப் பள்ளிகளைப் பற்றிப் பேசத் தவறினால் தனியார்மயம் நமது சந்ததியை உடனடியாக சுடுகாட்டில் சேர்ப்பதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக