ஞாயிறு, 2 டிசம்பர், 2012

சிங்கள படத்தில் நடித்த இந்திய நடிகை அஞ்சலிக்கு ‘சிறந்த நடிகை’ விருது!

இலங்கையில் தயாரிக்கப்பட்ட சிங்கள திரைப்படம் ஒன்றில் நடித்த இந்திய நடிகை அஞ்சலி, சிறந்த நடிகைக்கான விருதை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்துள்ளார். 43-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த நடிகைக்கான விருது சிங்கள திரைப்படத்தில் நடித்த இந்திய நடிகை அஞ்சலிக்கு கிடைத்துள்ளது.
இந்திய நடிகை அஞ்சலி, பிரபல இலங்கை திரைப்பட தயாரிப்பாளரான பிரசன்ன விதானகேவின் ‘ஒப நெதுவ ஒப எக்க’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ‘ஒப நெதுவ ஒப எக்க’ என்பதற்கு தமிழில் அர்த்தம்: ‘உன்னுடனும், நீ இல்லாமலும்’ (With You Without You)
வெளிநாட்டு நடிகை ஒருவர் சிங்கள திரைப்படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான சர்வதேச விருதை பெறுவது இலங்கை, சிங்கள திரைப்படத்துறையின் 65 வருடகால வரலாற்றில் இதுவே முதல் தடவை.
இதற்குமுன் சிங்கள நடிகைகளே, சிங்கள திரைப்படங்களில் நடித்து, சர்வதேச விருதுகளை பெற்றுள்ளனர். ஸ்பெயினில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த நடிகைக்கான விருதை, இலங்கை நடிகை நிம்மி ஹரஸ்கம பெற்றுக்கொண்டார். இத்தாலியில் நடைபெற்ற லெவான்டே திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை, இலங்கை நடிகை மாலினி பென்சேகா பெற்றுக்கொண்டார்.
தற்போது, இலங்கைக்கான விருதை இந்திய நடிகை அஞ்சலி பட்டேல், ‘செல்வி’ என்ற தமிழ் பெண் கேரக்டரில் (மேலேயுள்ள ஸ்டில்) நடித்து பெற்றுள்ளார். இந்த படத்தில் வரும் ‘லக்ஷ்மி’ என்ற மற்றொரு தமிழ் பெண் கேரக்டரில் இலங்கையை சேர்ந்த மகேஸ்வரி ரத்னம் நடித்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக