ஞாயிறு, 2 டிசம்பர், 2012

Admk MLA வீட்டில் ‘அதிகாரபூர்வமற்ற’ ரெயிடு! புதையல் சூட்கேஸ்களில்!!

Viruvirup
எம்.எல்.ஏ. ஒருவர், அவரைவிட ‘பெரிய கைகளை’விட அமோகமாக இருப்பது குறித்து அ.தி.மு.க. வட்டாரங்களில் அடிக்கடி பேசப்பட்டு வந்தது. இந்த எம்.எல்.ஏ.வின் சொந்த ஊரிலுள்ள வீட்டில் இருந்து, காதும் காதும் வைத்ததுபோல சில சூட்கேஸ்கள் கைப்பற்றப்பட்டன. விஷயத்தை மெல்லவும் முடியாமல், துப்பவும் முடியாமல் தவிக்கிறார் எம்.எல்.ஏ.
நடந்தது, அதிகாரபூர்வ ரெயிடு அல்ல.
சென்னை மேலிட உத்தரவின்பேரில் அங்கிருந்து வந்த டீம் ஒன்று எம்.எல்.ஏ.வின் வீட்டை புரட்டிப் போட்டது. ரெயிடு யாருடைய உத்தரவின் பேரில் நடக்கிறது என்று சொல்லப்பட்டவுடன் முகம் வெளிறிப்போன எம்.எல்.ஏ., வீடு முழுவதும் தேடப்படுவதை தடுக்காமல் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதாயிற்று.

ரெயிடு சென்றவர்களில் சிலர், காவல்துறை ஆட்கள். ஆனால் யூனிபார்மில் இல்லை. சென்னையை சேர்ந்த முக்கிய அதிகாரி ஒருவரும் ரெயிடுக்கு சென்றிருந்தார்.
வீட்டில் இருந்த பணியாளர்கள் மூவர், வெளியே அனுப்பப்பட்டனர். மொத்தம் 4 சென்னை வாகனங்கள் எம்.எல்.ஏ. வீட்டுக்கு முன்னால் பார்க் பண்ணப்பட்டிருந்தன.
முன்பு மதுரை ஏரியாவில் போலீஸ் அதிகாரியாக இருந்து, தற்போது சென்னைக்கு இடமாற்றம் பெற்று பணிபுரிபவர் அவர். இந்த உயரதிகாரி,  ரெயிடு போனவர்கள் சென்ற வாகனத்தில் இருந்து இறங்காமல், உள்ளேயிருந்தே உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டிருந்தார்.
அத்துடன், யாருடனோ செல்போனில் அடிக்கடி பேசிக்கொண்டிருந்தார்.
சுமார் 3 மணி நேர தேடலின்போது, வீட்டை தலைகீழாக புரட்டிப் போட்டும் எதுவும் சிக்கவில்லை. மூட்டை மூட்டையாக நெல்லுதான் கிடந்தது. சென்னையில் இருந்து வந்த டீமுக்கு ஒரே குழப்பம்.
அப்போது, இவர்களுடன் வந்த கான்ஸ்டபிள் ஒருவரே, ட்ரம்ப் கார்டை தூக்கிப் போட்டு, ஜெயிக்க வைத்தார்.
எம்.எல்.ஏ. வீடு, வசதியான, ஆனால் கிராமிய டைப் வீடு. வீட்டுக்கு வெளியே இருந்த வைக்கோல் போரை சந்தேகத்துடன் பார்த்த இந்த கான்ஸ்டபிள், அதை கிளறிப் பார்த்தபோதுதான், 6 சூட்கேஸ்கள் மற்றும் ஒரு ட்ரவல் பேக் சிக்கியது.
திறந்து பார்த்தால், சென்னை டீம் தேடிவந்த செல்வம்!
திரு எம்.எல்.ஏ., திருதிருவாக அமர்ந்திருக்க, கைப்பற்றப்பட்ட புதையலுடன் சென்னைக்கு பறந்துவிட்டது டீம்.
மதுரை ஏரியாவை சேர்ந்த அமைச்சர் ஒருவரிடம் கேட்டபோது, இந்த அதிகாரபூர்வமற்ற ரெயிடு நடந்தது உண்மைதான் என்றார். “அந்தாள் 3 மாதத்தில் சம்பாதித்த ரொக்கம் மட்டும்தான் அது. அதற்கு முன்னரே கை நிறைய சம்பாதித்தார். அதெல்லாம் வெவ்வேறு பெயர்களில் சொத்துக்களாக உள்ளன. யாரும் தொட முடியாது” என்று தகவல் சொன்னதுடன் நிறுத்திக் கொண்டார்.
நம்ம எம்.எல்.ஏ, ஜாதியை வைத்து அரசியலுக்கு வந்தவர். இப்போது அரசியல் செய்வதும் அதை வைத்துதான். அவரது ஏரியாவில் ஜாதி கலவரத்துக்கு புகை போட்டதுகூட அவர்தான். அடுத்த 3 மாதத்தில், பறிகொடுத்ததை பல மடங்காக எடுத்துவிடும் வல்லமை உடையவர். ஜமாய்த்து விடுவார், இருந்து பாருங்கள்.
தோல்வியடைந்திருக்க வேண்டிய ரெயிடு வெற்றிகரமாக மாறியதற்கு வைக்கோல் போர் ஐடியா கொடுத்த கான்ஸ்டபிள் கொடுத்த கான்ஸ்டபிள் பதவி உயர்வுக்காக ரெக்கமென்ட் செய்வதாக கூறியுள்ளார் ரெயிடு சென்ற (காரை விட்டு இறங்காத) உயரதிகாரி.
அதையாவது செய்யுங்க சார்.

-விறுவிறுப்பு.காமுக்காக, மதுரையில் இருந்து அதிபன் தங்கராசுவின் குறிப்புகளுடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக