வெள்ளி, 14 டிசம்பர், 2012

ஆதிவாசிகள் போராடுவது தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டுமல்ல

கண்டதாரா அருவி
ரடுமுரடான பெரும் பாறைகளைக் கொண்டு கம்பீரமாய் உயர்ந்து நிற்கும் மலைத் தொடர். அதன் மேல் உறுதியாகக் கால் பதித்து, எம்பி உச்சியிலே விரிந்து கிடக்கும் பிரகாசமான நீல வானத்தை எட்டிப் பிடிக்க ஆவல் கொண்டு நீளும் ஆயிரமாயிரம் பசுந்தளிர்க் கரங்களாய்  நெடிதுயர்ந்து நிற்கும் கானகம். இதில் இடையீடு செய்ய விரும்பாது அக்கணமே தானுருகித் தரையிறங்கும் கார் மேகம்.  அந்த வானமிழ்தம் போய்ச் சேர தன் வலப்புறத்தில் வழி விலகிய பாறை.  அந்த முகத்துவாரத்தில் இருந்து பொங்கும் பூம்புனலாய்ப் புறப்படும் ஓர் அருவி.  அதன் பால் வெண்ணிற அருவி எண்ணூறு அடிகள் செங்குத்தாய் மின்னிப் பிரகாசிக்கும் வண்ண ஜாலங்களுடன் அமுதக் கலசமாம் பாறைக் கலயத்தில் பொழிகிறது.  சமவெளி நோக்கிய அதன் பயணத்தில் அது முதல் தங்கல். அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கட்புலனாக்கவென்று தன் அகன்ற மார்பினை விரித்து நிற்கும் கருப்பும் சிவப்புமான பாறைப் பிணைப்புகள்.  காண்போர் நெஞ்சம் இனம்புரியாப் பேரின்பமும், பெரு மருட்சியும் எதிர்மோத விம்மி வெடிக்கும்.  கிட்டவொண்ணாப் பெரும்பேரு பெற்ற உவகையில் உணர்ச்சிக் குவியலால் மண்டை கனக்கும், புத்திளமை மீண்டது போல் மெய் சிலிர்க்கும், உடல் முறுக்கும்.  நிதானத்துக்கு வர சற்று நேரம் பிடிக்கும்.

ஒடிசா மாநிலத்தினுள் அடக்கப்பட்ட சுந்தர்கர் பகுதியில் அமைந்துள்ள இந்த கண்ட தாரா  இந்தியாவின் நெடிதுயர்ந்த அருவிகளுள் ஒன்று.  தண்மையான தன் பார்வை பட்ட இடமெல்லாம் பல பத்தாயிரம் ஜீவராசிகளின் உயிர் நாடியாய் காலங்காலமாய் ஒயாது ஒழியாது ஒடிக் கொண்டிருக்கிறது இந்த கண்டதாரா.  அதன் அருமை உணர்ந்த அத்துனை திணைகளும் அதனை நெஞ்சார நேசித்துப் போற்றுகின்றன.  “எல்லா உயிர்களின் இயக்கத்துக்கும் கண்டதாராவே காரணகர்த்தா” என்கிறார் அம்மலையடிவாரத்தில் அமைந்துள்ள பந்த்பர்னா கிராமத்தில் வசிக்கும் ஒரு முண்டா.  ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து இங்கு வந்து குடியேறியவர் ஆயினும், கண்டதாரா மலையும் அதன் அருவியும் பற்றிய இப்பகுதி வாழ் கிருத்தவர்கள் உள்ளிட்ட அனைத்து பூர்வகுடி மக்களின் புனித நோக்கைத் தானும் பகிர்ந்து கொள்கிறார், இந்த முண்டா.
தொன்றுதொட்டு இப்புனித பூமியின் பாதுகாவலர்களாய்த் திகழ்பவர்கள் பாரி புய்யா (Pauri Bhuiya) எனும் பழங்குடிகளே என்பது பெருவழக்கு.  இவர்கள் இடம்பெயரும் வேளாண் முறையைக் கடைபிடிக்கும் ஆதிவாசிகள்.  இம்மலையின் சிகரங்களைப் போர்த்தி இருக்கும் அடர்ந்த சால மரக் காடுகளில் பாரம்பரியமாக வாழ்ந்து வருபவர்கள்.
இந்த பாரி புய்யாக்களும், அந்தமான் தீவுக் கூட்டத்தின் ஜாரவாக்களும் 24,000 ஆண்டுகளுக்கு முன் ஒரே மூதாதையரின் வழிவந்தவர்கள் என்கிறது இவர்களின் இன மரபு பற்றிய ஆய்வு (Genetic research).  மனிதனாகப் பரிணமித்து இப்புவிப் பரப்பெங்கும் தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தன சில இனக்குழுக்கள். அந்த இனங்களுள் ஒன்றின் நேர் வாரிசாக, இந்தியப் பூர்வ குடிகளில் எஞ்சியிருக்கும் மக்கள் தான் இந்த பாரி புய்யாக்கள்.  மொழி வழியில் இந்தப் பிராந்தியத்தின் பிற ஆதிவாசிகளில் இருந்து இவர்கள் தனித்துவம் பெற்று விளங்குகிறார்கள்.  இவர்கள் தனிச்சிறப்பான ஒரு வகை ஒரிய மொழியைப் பேசுகிறார்கள்; இதுவே தொன்மையான ஒரிய மொழி என்றும் இவர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள்.
இவர்களது வாழ்விடம் வற்றாத வளம் கொழிக்கும் பூமியானது எப்படி என்று இந்த பாரி புய்யாக்களின் பாரம்பரியக் கதைகள் விவரிக்கின்றன.  இவர்களது இனத்தின் சுந்தர்கர் பிரிவினர் முன்னொரு காலத்தில் ஒரு குண்டோதரியைத் தேவதையாகக் கொண்டிருந்தனராம்.  அவள் மரம், மட்டை, மண் என ஒன்றும் பாக்கியில்லாமல் கண்டதை எல்லாம் தின்று தீர்த்து விடுவாளாம்.  வெறுத்துப் போன இந்தப் பாரி புய்யாக்கள் ஒரு நாள் அவளை ஒரு குன்றின் மேல் உட்கார வைத்து விட்டனர்.  அன்றே அந்தக் குன்றையும் அவள் தின்று தீர்த்து விட்டாள்.  அது ஒரு பெரிய குகை போலாகி அப்பால் இருந்து நீர் பெருக்கெடுத்துக் கொட்ட ஆரம்பித்தது. அதுதான் இந்த கண்டதாரா (பாறைப் பிளவு அருவி).  இப்படித்தான் அவர்கள் என்றும் வற்றாத நீராதாரத்தைப் பெற்றனர் என்கிறது இந்தக் கதை.
அடுத்தபடியாக, கண்டதாரா மலைத்தொடரின் கிழக்கு அல்லது கியோஞ்கர் பகுதியில் வசிக்கும் தமது உறவினர்களைக் காண சுந்தர்கரில் இருந்து ஒரு தம்பதியினர் சென்றிருந்தனராம்.  அவர்களை வரவேற்று விருந்தோம்ப அங்கே யாரையும் காணோம்.  அவர்கள் எங்கோ வெளியில் சென்றிருந்தனர் போலும்.  ஆனால் அவர்களது வீட்டு வாசலில் ஒரு பெரும் தானியக் குவியல் கேட்பாரற்றுக் கிடந்தது.  என்ன ஆச்சரியம், ஒரு காக்கை குருவி கூட அந்தத் தானிய மணிகளைக் கொத்திச் செல்லவில்லை. இந்தப் பிரதேசத்துக்கு பெருவளம் சேர்த்த தேவதையான கண்டகுமாரி சின்னஞ்சிறு அழகிய நங்கையாக, அந்தத் தானியக் குவியலுக்குள் இருப்பதை இத்தம்பதிகள் கண்டு கொண்டனர்.  உடனே இது தான் சமயம் என்று கண்டகுமாரியைக் களவாடி சுந்தர்கர் கொண்டுவந்து விட்டனர்.  அன்று முதல் அந்த தேவதையோடு அவள் அருளும், செல்வச் செழிப்பு அனைத்தும் சுந்தர்கர் வாசிகளுடையதாகி விட்டது என்பது மற்றொரு கதை.
இது பழம் தரும் மரம், அது நிழல் தரும் மரம் என்ற வேறுபாடெல்லாம் பாரி புய்யாக்களுக்குக் கிடையாது.  அது எதுவாயினும் அதன் உயிர்த்துடிப்புள்ள கரங்கள் எதனையும் அவர்கள் வெட்டுவதில்லை.  ஆகவே மலைகளின் உச்சி  பசுமையால் குளிர்ந்து நிற்கிறது.  தொன்மைக்குப் பங்கம் நேராத அந்த பழம்பெரும் காடுகள் யானைகள், தேன் கரடிகள், சிறுத்தைகள், காட்டெருதுகள், மாபெரும் மலைப் பாம்புகள், மயில்கள், புலிகள் என ஏராளமான உயிரினங்களின் தாயகமாய்த் திகழ்கிறது.  உயிர்ச் சூழலின் செழுமையை எடுத்துக்காட்டும் மூலாதாரக் கூறாக விளங்கும் உயிரினமாகிய கால்களற்ற பல்லி வகைகளும் தம் வாழ்விடமாக இந்த காடுகளையே கொண்டிருக்கின்றன.  அடர்ந்த இந்தக் காடுகள் பருவ மழை முழுவதையும் உள்வாங்கிக் கொண்டு, என்றும் வற்றாத ஊற்றாக அதனைக் கண்டதாராவுக்கு வழங்குகின்றன. இப்படி பன்னெடுங்காலமாய் இந்தச் சூழல் தழைத்தோங்கி வருகிறது எனினும்,  இந்தப் பாரி புய்யாக்களது இடம்பெயரும் வேளாண் முறையால் காடுகள் நாசமாவதாகப் புனைந்து 90 களில் சுமார் எண்பது பாரி புய்யா குடும்பங்கள் ”பாரி புய்யா வளர்ச்சி முகாமை”யால் (PBDA) மலையுச்சியில் இருந்து அதன் அடிவாரத்துக்குப் புலம்பெயர்க்கப் பட்டனர்.
”இங்கே எங்களுக்கு என்ன இருக்கிறது?  கழிப்பிடம் அளவுக்கு ஒரு சிறு வீடு.  தலைக்கு ஐந்து ஏக்கர் நிலம் தருவதாகச் சொன்னார்கள்.  கொடுத்ததோ சற்றேறக் குறைய ஒரு ஏக்கர் மட்டுமே.  காலில் ஒரு வெட்டுக்காயம் பட்டு விட்டது என்று வைத்துக் கொள்ளுங்களேன்.  காட்டில் இருந்தால் ஒரு பச்சிலையைப் பிடுங்கி வைத்துக் கட்டி, குணப்படுத்திக் கொள்வோம்.  இங்கோ கொளுத்தும் வெய்யிலில் மைல் கணக்காய் நடந்து டாக்டரிடம் போக வேண்டியிருக்கிறது.  அவரோ இன்று போய் நாளை வா என்கிறார்..“  என்றவாறு புலம்பித் தீர்க்கிறார், மறுவாழ்வு மையத்தில் வசிக்கும் கலிய தெகூரி.  விரக்தியும், கையறு நிலையும் பளிச்சென்று தெரிகிறது.  கீழே கொண்டுவரப்பட்ட குடும்பங்களில் குறைந்தது 15 குடும்பங்கள் மீண்டும் மலையேறி விட்டனர்.  “அங்கே பசுமை போர்த்திய குளுமையும், பழங்களும், தண்ணீரும், விறகும், கிழங்கு வகைகளும் எல்லாம் அவர்களுக்குக் கிடைக்கும்” என்று மனக் கண்ணால் அந்த சொர்க்கத்தைக் கண்டு கூறுகிறார் அவர்.
பாவம், இன்னும் எத்தனை நாட்களுக்கு நிலைக்குமோ இந்த இன்பமெல்லாம்.  கண்டதாராவுக்கு எழிலூட்டும் அந்த செம்பழுப்புப் பாறைகளும், கரும்படிகப் பாறைகளும் தன்னில் இரும்பை அல்லவா கொண்டிருக்கின்றன.  கண்டதாரா அருவியின் வழித்தடமெங்கும் சுத்தமான இரும்பின் பெரும் புதையல் பளிச்சிடுகிறது.  கண்டதாரா மலைத் தொடரைக் கண்டுகொண்ட சுரங்கக் கம்பெனிகள் அதனை தங்களுக்கு அடித்த ”ஜாக்பாட்” டாகவே (சூதாட்டத்தில் பெரும் பிடியைத் தன் கையில் வைத்திருப்பவன் வழித்து அள்ளும் பொதுப் பணம்)  கூவிக் குதியாட்டம் போடுகிறார்கள்.  இந்த வேளையில் போட்டியிடும் பலப்பல நிறுவனங்களில் எதன் கையில் துருப்புச் சீட்டு இருக்கிறது என்று தடவிக் கொண்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். கண்டதாராவின் இரண்டாயிரத்து ஐநூறு ஹெக்டேர் பரப்பளவிற்கு நடுக் கண்டம் உனக்குத்தான் என்று தென்கொரிய போஹங்க் ஸ்டீல் கம்பெனிக்கு (POSCO) உறுதியளித்திருக்கிறது ஒடிசா அரசு.  இப்படியாக சுந்தர்கர் முழுவதையும் விழுங்கி ஏப்பம் விட வந்திருக்கும் ஒடிசா மாநில அரசின் குண்டோதரியாக இருக்கிறது போஸ்கோ.
போஸ்கோ உள்ளே நுழைந்தால் என்ன நடக்கும் என்பதை அப்பிராந்தியத்தின் ஆதிவாசி மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.  அதன் முன் உதாரணத்தை அவர்கள் ஏற்கெனவே கண்டு விட்டார்கள். ஆனால், மலையடிவாரத்தில் செல்லும் பதைகளில் இருந்து பார்த்தால் நம்மால் ஒரு வித்தியாசத்தையும் கண்டுகொள்ள முடியாது.  மலைத்தொடரின் உள்ளே சற்று சென்று பார்த்தாலோ இதயம் வெடித்து விடும்படியான கொடூரக் காட்சி ஒன்று அங்கே காத்திருக்கிறது.  உயிரோடு தோலுரிக்கப்பட்டுத் துடிதுடிக்கும் ஒரு ஜீவனாக, தனது தோலும் உரோமமுமாக இருந்த மேல் மண்ணையும் மரங்களையும் இழந்து குருதி கொப்பளிக்க நிற்கும் குர்மிதார் மலை அங்கமெல்லாம் துண்டாடப்பட்ட முண்டமாய், மாபெரும் பிரமிடாய் நிற்பதை நீங்கள் காணலாம்.  அதன் மேல் சுற்றி சுற்றிச் செல்லும் பாதையின் வழியே இரும்புத்தாது என்ற மாமிச மலையைச் சுமந்தபடி ஊர்ந்து செல்லுகின்றன டிரக்குகள்.
டைனமைட் வெடி வைத்துத் தகர்க்கப்பட்டதால் உள்ளடங்கிய பாறைகள் எல்லாம் பொடிப் பொடியாகி, இரத்தம் பீறிடுவது போல் செம்புழுதிப் படலம் மேலெழும்ப, சுரங்கம் ஒரு போர்க்களம் போலக் காட்சியளிக்கிறது. பல நூறு மீட்டர் சுற்று வட்டாரத்துக்கு அதன் செம்புழுதிப் படலம் காடெங்கும் பரவி மூச்சு முட்டி, திக்குமுக்காட வைக்கிறது.   இந்த செவ்வாய்க் கிரகக் காட்சிக்குப் பின்னால் பாதி மழிக்கப்பட்ட மற்றொரு மலை கண்ணில் படுகிறது.  மிச்சமுள்ள மரங்களும் மழிக்கப்பட்டு சுரங்கப் பணி என்னும் கசாப்பு வேலைக்குத் தயாரிக்கப்பட்டு வருகிறது.  சற்று தொலைவில் கண்ணில் தெரியும் கண்டதாராவின் அலைபாயும் அந்தப் பசுமையான விளிம்புகள்  கண்டதாரா ரிசர்வ் காடுகளில் இப்போதைக்கு என்ன மிச்சமிருக்கிறது எனபதை அறிவித்த வண்ணம் இருக்கின்றன.
133 ஹெக்டேர் பரப்பளவில் குர்மிதார் சுரங்கப் பணியை கலிங்கா கமர்ஷியல் கார்ப்பரேஷன் லிட். (KCCL) மேற்கொண்டிருக்கிறது.  தனது உற்பத்தி இலக்கை, அதாவது வெட்டி ஏற்றி விடும் இலக்கை, பல நூறு சதவீதம் விஞ்சி விட்டதாக அது தனது வலைத் தளத்தில் பீற்றிக் கொள்கிறது.  இரும்புத் தாதுவை சீனாவுக்கும், மாங்கனீசு தாதுவை ஏதோ பெயர் குறிப்பிடாத கொரிய கம்பெனிக்கும் ஏற்றுமதி செய்வதாக அது அறிவிக்கிறது.  இலக்குவனை உயிர்ப்பிக்க மூலிகை எடுப்பதற்காக அனுமன் தனது தோளில் சஞ்சீவி மலை என்னும் இமயக் குன்று ஒன்றைச் சுமந்து சென்றதாக புராணக் கதை சொல்லுகிறது.  ஆனால் கே.சி.சி நிறுவனத்தை நடத்தும் புவனேசுவரின் சமல் குடும்பம் அந்த அனுமனை விட சக்தி வாய்ந்தது.  அது மொத்த மலையையே சீனாவுக்கும், அதற்கு அப்பாலும் அனுப்பிக் கொண்டிருக்கிறது.
தங்களது தேவியின் இருப்பிடமாக இருந்தது தான் அந்த குர்மிதார் மலை என்கிறார்கள் பாரி புய்யாக்கள்.  அடர்ந்த கானகமாய், யானைகள், கரடிகள் போன்ற எண்ணற்ற வனவிலங்குகள் வாழும் இடமாய், தேமதுரக் கனியான காக்ரிக் கனிகள் கொடிகளில் அசைந்தாடும் செழுமை மிக்க மலையாய், இயற்கை எழில் கொஞ்சும் தேவியின் உறைவிடமாய் இருந்தது தான் அந்தக் குர்மிதார் மலை.  அது வெடி வைத்துத் தகர்க்கப்படுவதாலும், தமது  வாழ்விடம் குலைந்து போனதாலும் யானைகள் சமவெளிகளில் தலைகாட்டத் தொடங்கி இருக்கின்றன.  மலையடிவாரக் கிராமமான புல்ஜாரில் கடந்த ஜனவரி மாதத்தில் ஒரு புலி நுழைந்திருக்கிறது. மலைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட இருபது பாரி புய்யா குடும்பங்கள் மீண்டும் தங்களது காடுகளுக்குச் சென்று குடில் அமைத்துத் தங்கி விட்டனர்.  அவர்களது குடிசைகளையும், உணவு தானிய சேமிப்பையும் வனத் துறையினர் தேடிப் பிடித்து தீ வைத்துக் கொளுத்தி, நாசமாக்கினர். இந்தச் சம்பவம் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்தேறியது.
கலிங்கா கமர்சியல் கார்ப்பரேஷன் காடுகளை அழித்ததாலும், மலை உச்சியில் நீரோடைகளின் பாதையைத் திருப்பி விட்டதாலும் கண்டதாரா அருவி பெருமளவு வற்றி விட்டது.  அதன் நீர் பிரம்மணி ஆற்றை வழக்கம் போல் வந்தடைவதில்லை.  பந்த்பர்னாவில் வாழும் மக்கள் பாசனத்துக்கும், மீன் பிடிக்கவும், தமது அன்றாடத் தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்த கால்வாய் கடந்த இரண்டு கோடைக் காலங்களாக பாளம் பாளமாய் வெடித்துக் கிடக்கிறது.  இந்தப் பிராந்தியமெங்கும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாய்க் கீழிறங்கி விட்டதால் அனைத்து ஆழ்குழாய்க் கிணறுகளும் செயலிழந்து விட்டன.  புல்ஜார் மற்றும் பிற சுற்று வட்டாரக் கிராமங்களில் நீரோடைகள் சுரங்கக் கழிவுகளால் இரத்தச் சிவப்பாகி இருக்கின்றன.  இதன் விளைவாக மீன்கள் சாகின்றன; விளைநிலங்கள் எல்லாம் பாழாகின்றன.  மழை பெய்யும் வேளைகளில் சுரங்கப் பணியால் காயம்பட்ட மலைகளின் இரத்தக் கசிவுகளாக செந்நீர் ஓடைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கண்டதாராவில் குருதி கொட்டுகிறது.  அப்போது அது கண்டதாராவாக அல்லாமல் இரத்ததாராவாகக் காட்சியளிக்கிறது.  இவை எல்லாம் ஒப்பீட்டளவில் ஒரு அச்சுறுத்தல் என்றே சொல்லலாம்.  எனினும் இந்த 133 ஹெக்டேர் பரப்பில் நடக்கும் சுரங்கப் பணியே இப்படியொரு பேரழிவைக் கொண்டு வருகிறது என்றால்,  போஸ்கோவின் 2500 ஹெக்டேர் குத்தகை பூமியில் சுரங்கப் பணி தொடங்கினால் விளைவு என்னவாகும் என்று நினைத்துப் பார்க்கவே நெஞ்சு நடுங்குகிறது.
கண்டதாரா அருவி முற்றாக அழியும்.  பல பத்தாயிரம் உயிரினங்கள் தண்ணீருக்குத் தவித்து விக்கிச் சாகும்.  அந்த அழிவின் தொடக்கம் இவ்வாறு தான் இருக்கும்.  ”இந்தச் சுரங்கக் கம்பெனிகள் பயங்கரமான பூதங்கள்.  இவை எங்களது மண்ணை, மரங்களை, மலையைத் தின்று தண்ணீரையும் ஒட்டுமொத்தமாய் உறிஞ்சித் தீர்த்து விடும்” என்கிறார் புல்ஜாரில் வாழும் ஒரு பாரி புய்யாப் பெண்மணி. “எங்களுக்கு இந்த தண்ணீரைக் கங்களதேவி கொடுத்தாள்.  இந்தப் பூதங்களோ அதையும் குடித்து ஒழித்து விடும்.  இவற்றை நாங்கள் துரத்தியடிக்கா விட்டால் இங்கு எதுவுமே மிச்சமிருக்காது” என்கின்றனர் அந்த ஆதிவாசிகள்.  கண்டதாரா மலைத்தொடர் எங்கும் ஆதிவாசி மக்கள் சுரங்கக் கம்பெனிகளுக்கு எதிராகப் போராடத் தயாராகி வருகின்றனர்.  அவர்கள் போராடுவது தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டுமல்ல, மனித இனத்தின் மாட்சிமை பொருந்திய மரபுச் செல்வங்கள் அனைத்தின் பாதுகாவலர்களாகவும் களத்தில் இறங்கத் தயாராகி வருகிறார்கள்.
நாம்?
_______________________________________________
- மது ஸ்ரீமுகர்ஜி, அவுட்லுக், ஜூன் 11, 2012
மொழியாக்கம்: செல்வன், புதிய கலாச்சாரம், அக்டோபர் – 2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக