திங்கள், 10 டிசம்பர், 2012

ஜாதிக் கலவரங்களின் சூத்ரதாரி யார்? ஏணிப் படிக்கட்டு ஜாதி அமைப்பு

ஜாதி என்பது ஏணிப் படிக்கட்டு மாதிரி - முதல் இடத்தில் மேலே நிற்பவன் ஒரு அசைப்பு அசைத்தால் அடுத்தடுத்து  ஒருவர் மீது ஒருவர் விழுவார்கள்.
அவர்களிடையே சண்டை மூளும் இந்த மூலத்தின் - சூத்திரதாரி யார் பார்ப்பன் சூழ்ச்சியை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
23.11.2012 அன்று புதுச்சேரியில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு.
ஒரு சொம்பை எடுத்துக்கொண்டு கருவறைக்குள் போகிறான்
கோவிலை கட்டி முடித்ததும், செட்டியார் வாள் நகருங்கோ, முதலியார்வாள் நகருங்கோ, நகருங்கோ நகருங்கோ  என்று சொல்லிக்கொண்டு, ஒரு சொம்பை எடுத்துக்கொண்டு கருவறைக்குள் போகிறான்.
ஒரு சின்ன மணியை ஆட்டிக்கொண்டு போய் விடுகிறானே, நம்மாள்களை பெரிய மணியை ஆட்டுவதற்காக அந்தக் கயிறை கொடுத்து விட்டான். சின்ன மணியை அவன் ஆட்டுகிறான்; இதில் கூட பாருங்க, கனமான மணியை அவன் ஆட்டுவதில்லை.
இன்னமும் நம்ம ஆள் வெட்கமில்லாமல் சாமியைத் தூக்குறான்; தேரை இழுக்கிறான்.
நீங்க சொல்ற வாதத்தின்படி, நாம் எல்லாம் கடவுள் பிள்ளைகள்தானே; கொஞ்ச நாளைக்கு நாங்கள் கடவுள் இல்லை என்பதை தள்ளி வைத்துவிட்டு, உங்ககிட்ட பேசுகிறோம்;
கட வுளை நம்புகிறோம் - கடவுள் நம்ம எல்லோரை யும் தானே படைத்தார்; ஒரு பிள்ளை தூக்கிக் கிட்டே இருக்கவேண்டும்; இன்னொரு பிள்ளை நல்லா சாப்பிட்டு புசுபுசுவென்று கொழுத்து ரோடு ரோலர் மாதிரி  மேலேயே உட்கார்ந்து கொண்டு இருக்கவேண்டுமா?
சொரணை இருப்பவன் கேட்பான் - மானம் இருப்பவன் கேட்பான் - அறிவு இருக்கிறவன் கேட்பான் - இவையெல்லாம் இல்லாதவர்கள் எங்களை எதிர்ப்பார்கள். எப்படி இருந்தது நமது சமுதாயம்? அதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.
அடித்தள மக்கள் வரலாறு என்ற நூலை - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த பேராசிரியர் அ. சுப்பிரமணியன் அவர்கள் எழுதியிருக்கிறார். அருமையான ஒரு செய்தியை அந்நூலில் எடுத்துக்காட்டியிருக்கிறார்.
நம் நாட்டு மரபு எப்படி இருந்தது; ஜாதி எப்படி இருந்தது என்று சொல்லும்பொழுது,
இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளுக்கெல்லாம் ஒரு குரு இருக்கின்றார். அவர் பெயர் என்னவென்றால், கோல்வால்கர்.
குருஜி கோல்வால்கர் போய், அடுத்த குருஜி வந்து, அந்த  குருஜியும் போய், இப்போது இன்னொரு குருஜி வந்து உட்கார்ந்திருக்கிறார்.
அந்த கோல்வால்கர் ஒரு புத்தகம் எழுதியிருக் கிறார். ஞான கங்கை என்ற நூல் அது.  அந்நூலில் என்ன எழுதியிருக்கிறது?
நாங்கள் சொல்லவில்லை, கோல்வால்கர் சொல்லியிருக்கிறார்
ஜாதி நம்ம நாட்டில் எப்படி மூளைக்கு விலங்கு போட்டிருக்கிறது? எப்படி நம்ம மக்களை அழித்திருக்கிறது? ஏன் ஜாதி ஒழிப்பு மாநாடு, தீண்டாமை ஒழிப்பு மாநாடுகளை இன்னமும் போடுகிறோம்? ஏன் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும்? என்று சொல்கிறோம் என்றால், இதோ ஒரு செய்தி:
நாங்கள் சொல்லவில்லை, கோல்வால்கர் சொல்லியிருக்கிறார் - வருணாசிரம தர்மத்தைத் தூக்கிப் பிடிப்பதுதான் அவர்களது நிலை; வருணாசிரம தர்மத்தைத் பார்ப்பான் தூக்கிப் பிடிக்கலாம் - அவன் பிராமணனாக காட்சியளிக் கிறான். யார் பாதிக்கப்பட்ட மக்களோ அந்த மக்கள், யாருடைய தாயை தாசி என்று சொல் கிறானோ, யாரை வைப்பாட்டி மக்கள் என்று சொல்கிறானோ - இவையெல்லாம் புரியாமல் தானே நாட்டில் இருந்தோம்.
பெரியார் வந்த பிறகுதானே நமக்கெல்லாம் சொரணை வந்தது; இந்த இயக்கம் மட்டும் இல்லையென்றால், இந்த மாதிரி நபர்கள் இருக் கும் காலகட்டத்திலே என்னாகும் தெரியுமா?
சூத்திரன் என்று பச்சை குத்திக் கொள்ளவேண்டும்
பார்ப்பான்கள் கையில் ஆட்சி போனால் அவன் என்ன உத்தரவு போடுவான் தெரியுமா? எல்லோரும் இனிமேல் சூத்திரன் என்று பச்சை குத்திக் கொள்ளவேண்டும் என்று சொல்வான்.
நல்ல இடமாகப் பார்த்துக் குத்துங்கள் என்று நம்மாள் சொல்வானே தவிர, அதை இவன் வேண்டாம் என்று சொல்வானா?
பார்ப்பான் காலை கழுவிக் குடித்தால், கதி மோட்சம்  அடைய முடியும் என்று சொன்னால்,  குடம் குடமாகத் தண்ணீர் வைத்துக்கொண்டு வரிசையில் நிற்பானே!  இவன் அறிவை எவ்வளவு பாழ்படுத்தி விட்டார்கள் என்பதற்கு இன்னொரு உதாரணம்: இந்த 21 ஆம் நூற்றாண்டில் புது வீட்டை அறிமுகப்படுத்துவதற்கு பசு மாட்டைப் பிடித்துக்கொண்டு வருகிறார்கள்.
பார்ப்பானை அழைத்துக்கொண்டு வந்து, பசு மாட்டை பின்னாடி விட்டு, அதை மூத்திரம் பெய்யச் செய்து, சாணி போட வைத்து, பஞ்ச கவ்யம் என்று சொல்கிறான். அதை வெள்ளைக் காரன் இங்கிலீஷ்ல எழுதியிருக்கிறான் Five Products of the Cow என்று. ஏனென்றால், சந்திர மண்டலத்திலிருந்து எடுத்து வந்திருக்கிறான் பாருங்கள்; இதை வாங்கிக் கலக்கிறான்;
நம்ம வீட்டு சொம்பு; நம்ம வீட்டு மாடு; பசு பெய்த மூத்திரம், சாணி ஆகியவற்றைக் கலந்து நம்மாள்கிட்டேயே கொடுக்கிறான். அதையும் மடக் மடக்கென்று குடிக்கிறான்; அய்.ஏ.எஸ்., அதிகாரி குடிக்கிறான், அய்.பி.எஸ். அதிகாரி குடிக்கிறான். எல்லோரும் குடிக்கிறார்கள்.
பெரியார் பிறக்கவில்லை என்றால், நம்ம கதி அதோ கதிதான்!
2012 ஆம் ஆண்டிலே மாட்டு மூத்திரத்தையும், சாணியையும் குடிப்பதை சகித்துக் கொண்டி ருக்க முடியுமா? இதைக் கேட்பதற்குப் பெயர் தானே scientific Temper இதைக் கேட்பதுதானே அறிவு! இதைக் கேட்பதுதானே சிந்தனை! இதற்குப் பெயர்தானே சீர்திருத்தம் - இதனை எண்ணிப் பார்க்கவேண்டாமா? பெரியார் பிறக்க வில்லை என்றால், நம்ம கதி அதோ கதிதான்!
கோல்வால்கர் சொல்கிறார்:
வருணாசிரம தர்மம் என்றால் என்னவென்று?
தெற்கே ஒரு ஆங்கிலேய அதிகாரி இருந்தார். அவருக்கு உள்ளூர்வாசியான நாயுடு சமூகத்தைச் சேர்ந்த ஒரு துணை அதிகாரி இருந்தார். அந்த  ஆங்கில அதிகாரிக்கு ஏவலாளராக (எடுபிடி- பியூன்) ஒரு பிராமணன் வேலை பார்த்து வந்தார். ஒரு நாள் ஏவலாள் பின்னே வர, அந்த ஆங்கில அதிகாரி முன்னே சென்று கொண்டிருந்தார். துணை அதிகாரி எதிர்த்திசையில் இருந்து வந்துகொண்டிருந்தார்.
இரண்டு அதிகாரிகளும் எதிர் எதிரே சந்தித்துக்கொண்டதும், கைகுலுக்கி நலம் விசாரித்துக் கொண்டனர். எதிர்த்திசையில் வந்த துணை அதிகாரி பின்னால் வந்த ஏவலாளான பிராமணனைக் கண்டதும், தாம் அணிந்திருந்த தலைப்பாகையை எடுத்துவிட்டு, அவன் காலைத் தொட்டு வணங்கினார்.
இதைப் பார்த்து அந்த ஆங்கில அதிகாரி அதிர்ச்சியடைந் தார்! நாமே மேலதிகாரி, நமக்குக் கீழே இந்தத் துணை அதிகாரி; இந்தத் துணை அதிகாரிக்கும் கீழே உள்ள அந்த ஏவலாளியின் காலைத் தொட்டு வணங்குகிறானே என்று!
உனக்குக் கீழே வேலை பார்ப்பவர் காலில் விழுந்து வணங்குகிறாயே...
அந்த ஆங்கில அதிகாரி, துணை அதிகாரி யான நாயுடுவைப் பார்த்து, உனக்கு மேலதிகாரி யான எனக்குக் கை கொடுத்து நலம் விசாரித்தாய்; இவ்வளவு ஜனநடமாட்டம் உள்ள இடத்தில், நமக்குக் கீழே வேலை பார்க்கும் பார்ப்பானின் காலில் விழுந்து வணங்குகிறாயே என்று கேட்கிறார். அதற்கு அந்த துணை அதிகாரியான நாயுடு பதில் சொல்கிறார்:
நீங்கள் என்னுடைய மேலதிகாரியாக இருக்கலாம்; இருப்பினும் நீங்கள் மிலேச்சர். இவர் உங்கள் வேலைக்காரராக இருக்கலாம். ஆனால், இவர் எங்கள் மக்களிடையே இத்தனை நூற்றாண்டுகளாக பெரிதும் மதிக்கப்பட்டு வருகிற வகுப்பைச் சார்ந்தவர் பிராமணர்! அவர் முன் வணங்குவது என்னுடைய கடமை என்று பதில் கூறினார். ஜாதியினுடைய தத்துவத்தை எப்படி இவன் சொல்லியிருக்கிறான் பாருங்கள்.
சாமி, சாமி என்று சொல்கிறார்களே, இப்பத்தானே அது குறைந்திருக்கிறது.
ஓட்டலுக்குள் சென்று, சாமி போண்டா இருக்கிறதா என்று கேட்பான். இவன் காசு கொடுக் கிறவன், அவன் ஓட்டல் சர்வர். அவனைப் போய் இவன் சாமி என்று சொல்கிறான்.
சாமி, எழுத ஆரம்பிச்சிட்டீங்களா?
எம்.ஆர்.ராதா, நாங்கள் எல்லாம் மிசாவிலே சிறையிலே இருந்தோம். அங்கே ஒரு சாமி சர்க்கார் உத்தியோகத்திலிருந்து பணத்தை ஏமாற்றிவிட்டு சிறைக்கு வந்திருக்கிறார்.
எல்லா கைதிகளையும் வரிசையில் நிற்க வைத்து ஆஸ்பிட்டல் டூட்டி போட்டார்கள் - ரங்காச்சாரி என்று பெயர் அந்த சாமிக்கு - அவர் ஒரு அய்யங்கார். எம்.ஆர். ராதா என்ன செய்தார் தெரியுமா? சாமி, எழுத ஆரம்பிச்சிட்டீங்களா? என்று சத்தமாகச் சொன்னார். என்ன அண்ணே இப்படி என்று கேட்டால், அதற்கு அவர் சொல்வார்,
இவன் பார்ப்பான் என்று எல்லோருக்கும் தெரியவேண்டும்; இவன் இங்கே வந்திருக்கிறான் என்பது எல்லோருக்கும் தெரியவேண்டும். உள்ளே எல்லோரும் இவனை சாமி, சாமி என்று கூப்பிடுவார்கள் அல்லவா என்று.
எதற்காக இதை சொல்கிறோம் என்றால், பார்ப்பான் உடம்பு நோகாமல், வளையாமல், சூத்திரனுக்கு ஓதல், ஓதுவித்தல் எல்லாம் அவனுக்கு. நமக்கு அடிமைத் தொழில் செய்ய வேண்டும் என்று எழுதி வைத்திருக்கிறானே. இவையெல்லாம் இன்றைக்கு மாறி இருக் கிறதல்லவா!
இன்னமும் பிராமணாள் என்று பெயர் போட்டு ஓட்டல் நடத்தினானே திருச்சியில் - நாங்க போய் சொன்னவுடன், இன்றைக்கு வேறு வழியில்லாமல் எடுத்துவிட்டார்களே!
இன்னமும் ஜாதி அடையாளத்தை வைத்துக் கொண்டு, இன்னமும் ஜாதியை மூலதனமாக வைத்து அரசியல் நடத்தலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். தருமபுரியில் எல்லாம் அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருப்பதற்கு என்ன காரணம்? ஜாதி அடையாளம்.
மிகப்பெரிய அளவிற்கு இன்றைக்கு ஈழத்திலே வாழ்வுரிமை பறிபோயிருக்கிறது; புலம் பெயர்ந்த தமிழர்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வெளி நாட்டிற்குப் போயிருக்கிறார்கள். ஜாதியைத் தூக்கிக் கொண்டு போயிருக்கிறான் புலம் பெயர்ந்த தமிழன். அங்கேயும் தமிழன் தமிழனாக இல்லையே! தமிழனா - திராவிடனா என்ற ஆராய்ச்சியெல்லாம் அப்புறம். முதலில் மனிதனா என்று பாருங்கள்!
மனித உரிமைகளுக்காகப் பாடுபடுகிற இயக்கம் வேறு என்ன இருக்கிறது?
ஒரு சமுதாய மாற்றத்தை உருவாக்கவேண்டும் என்றால், இன்னமும் ஜாதி மறுப்புத் திருமணம், கலப்புத் திருமணம் ஆகியவற்றை நடத்தினால், ஊடகங்களை வைத்து பித்தலாட்டம் செய் கிறார்களே, இன்னமும் ஆதிக்க ஜாதிகள்  நம்மைப் பிரித்து வைத்திருக்கிறானே. இதைத்தான் தந்தை பெரியார் மிக அழகாகச் சொன்னார்:
வருணாசிரம தர்மத்திலே இந்தத் தீர்த்து வைக்கக் கூடிய தந்திரத்தைப் பார்ப்பான் எப்படி கையாண்டான் என்று சொன்னால், நான்கு ஜாதி வருணம்; அப்புறம் நாலாயிரம் ஜாதி ஆக்கி விட்டான்; நாலாயிரம் ஜாதி ஆக்கிய உடனே, செட்டியார் என்றால், நான் இந்த செட்டியார் இல்லீங்க; முதலியார் என்றால், நாங்க இந்த முதலியார் இல்லீங்க; பிள்ளை என்றால், நாங்க அந்தப் பிள்ளை இல்லீங்க என்று பிரிவு, அதிலே உபபிரிவு, பிரிவுக்குள் பிரிவு என்று எல்லோரை யும் பிரித்து வைத்துவிட்டானே!
அதனுடைய விளைவுதானே இன்றைக்குத் தகராறாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஒரு ஏணிப் படிக்கட்டு; அந்த ஏணிப்படிக்கட்டு மாதிரி ஜாதீய முறை; வருணாசிரம தருமத்தின் முறை; அந்த வருணாசிரம தரும முறையிலே ஏணிப்படிக்கட்டு மாதிரி.
பெரியார் கருத்தும், அம்பேத்கர் கருத்தும் மாறுபட்ட கருத்தல்ல!
அம்பேத்கர் மிக அழகாக, சொன்னார்; தந்தை பெரியார் கருத்தும், அம்பேத்கர் கருத்தும் மாறுபட்ட கருத்தல்ல; இரண்டு கருத்துகளும் ஒரே மாதிரி. Graded inequality.
அடுக்குமுறை - ஏணிப் படிக்கட்டில், மேலே ஒருவன் நிற்கிறான்; அடுத்தபடிக்கட்டில் இன்னொருவனை நிற்க வைத்துவிட்டான்; அதற்கடுத்த படிக்கட்டில் இன்னொருவன்  நாலாவது படிக்கட்டில் கீழே ஒருவன் நிற்கிறான்; அய்ந்தாவது படிக் கட்டில் பஞ்சமர் என்று சொன்னான்.
மேல் படிக்கட்டில் நிற்கின்றவன் மிக சாமர்த் தியமாக கீழே உள்ளவர்களை எல்லோரையும் பிரித்து வைத்துவிட்டு, ஏணியை லேசாக ஆட்டி விட்டான். அப்படி ஆட்டினால் என்னாகும்? இரண்டாவது ஆளு, கீழே உள்ள மூணாவது ஆள்மீது வேகமாக விழுந்தான்;
மூணாவது ஆள் நான்காவது ஆள்மீது மிக வேகமாக விழுந்தான்; நான்காவது ஆள் கீழே உள்ள அய்ந்தாவது ஆள்மீது இன்னும் வேகமாக விழுந்தான். கீழே உள்ள அய்ந்தாவது ஆள் கீழே விழுந்து அடி பட்டவுடன், அய்ந்தாவது ஆளும், நான்காவது ஆளும் சண்டை போட்டுக் கொண்டு அடிதடியில் ஈடுபட்டனர்.
ஏணியில் முதல் படிக்கட்டில்  இருக்கிறானே ஒன்றாவது ஆள் - ஏணியை லேசாக அசைத்தவன் - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மொழியில் சொல்ல வேண்டுமானால் மேற்படியான் அவன் என்ன கேட்கிறான் என்றால், என்னங்க உங்களுக்குள் தகராறு என்று.
கீழே விழுந்தவன் கேட்கிறான், எங்களுக்கும், முதல் படிக்கட்டில் இருக்கிறவனுக்கும் எப் பொழுதும் சண்டை வருவதில்லையே என்று!
பெரியாருடைய சிந்தனை தேவை!
எப்படி சண்டை வரும்? பக்கத்தில் எவன் நெருங்குகிறானோ அவனோடுதானே சண்டை வரும். இதுதான் நாட்டில் நடைபெறக்கூடிய ஜாதிக் கலவரங்கள், ஜாதி மோதல்கள், இந்தப் பிரிவுகள் இப்படித்தான் வைத்திருக்கிறார்கள்.
இதனைப் புரிந்துகொள்வதற்கே பெரியாரு டைய கண்ணாடி தேவை; இதனைப் புரிந்து கொள்வதற்கே பெரியாருடைய சிந்தனை தேவை. இன்றைய காலகட்டத்திலே  ஜாதி மோதல் களை வைத்து அரசியல் நடத்தலாம் என்று யார் நினைத்தாலும் - இது பெரியார் பிறந்த மண் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.
ஈழப் பிரச்சினையைப்பற்றிக் கூட பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்; நேரமின்மை காரணத்தினால், ஒரு சில கருத்துகளை மட்டும் சொல்கின்றேன்.
ஈழப் பிரச்சினையைப் பொறுத்தவரையிலே இப்போது ஈழத் தமிழர்களுக்கு வாழ்வுரிமையை நாம் பாதுகாக்க வேண்டுமானால், அது இரண்டு வகையில்தான் சாத்தியமாகும். என்னதான் நாம் பொதுக்கூட்டம் போட்டு பேசினாலும், கிளர்ச்சிகள் நடத்தினாலும்.
இன்றைக்கு ஒரு திருப்பம் ஏற்பட்டிருக்கிறது!
இலங்கை அரசின் அதிபரான ராஜபக்சேவை போர்க் குற்றவாளிக் கூண்டில் உலக நாடுகளின் முன் நிறுத்த வேண்டுமானால், இந்திய அரசு தங்களுடைய கடமையைச் செய்யவேண்டும்;  வலியுறுத்தவேண்டும்; அழுத்தம் கொடுக்க வேண்டும் - அதனை மத்திய அரசில் பங்கேற் றுள்ள தி.மு.க. உள்பட செய்து கொண்டுள்ளனர்.
உலக நாடுகளுடைய பார்வை இதற்கு முன்னாலே வெறும் தீவிரவாதம் என்ற அளவிலே பார்த்த பார்வை மாறி, இப்போது தான் அங்கே நடந்த மனித உரிமை பறிப்புகள் எல்லாம்  வெளிவந்து - மனித உரிமைக் கண் ணோட்டத்தோடு - பல நாடுகளினுடைய ஆதரவோடு வந்து - இன்றைக்கு ஒரு திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.
எனவே, அய்க்கிய நாடுகள் சபை போல, பல நாடுகளுடைய ஆதரவினைப் பெற்று வாழ்கின்ற மக்களை முதலில் காப்பாற்றவேண்டும் என்று நினைக்கின்ற நேரத்திலே, அந்தப் பணியை நாம் செய்வதற்கும், நம்மிடையே கருத்து மோதல்கள் ஏற்படுவது அவசியமில்லை.
நாம் ஒன்றுபட வேண்டும். அதுதான் நன்றாக சிந்திக்கவேண்டும். எப்படித் தமிழர்களைப் பிரித்து வைத்தார்களோ, அதேபோல, அரசிய லிலும் ஜாதிகள், கட்சிகள் என்பதைப்போல பிரித்து வைத்துக் கொண்டிருந்தால், நம்முடைய இனம் வாழாது, வளராது, முன்னேறாது. பெற்ற உரிமைகளும் பறிபோகும்.
பொது வாக்கெடுப்பு நடத்தி, ஒரு பெரிய புதுமையை உருவாக்கவேண்டும்
எனவே, இந்த இயக்கத்தைப் பொறுத்தவரை யிலே, எங்களைப் பொறுத்தவரையிலே தெளி வாக இன்றைக்கு  அய்.நா. சபை முன்வந்து, மனித உரிமை ஆணையங்கள் முன்வந்து, ராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, கூண்டுக்குள்ளே இருக்கின்ற தமிழனையும், இன்னமும் சிங்கள ராணுவத்தின் பிடியில் இருக்கின்ற ஈழத் தமிழர் களையும் விடுவித்து, புலம் பெயர்ந்த தமிழர் களைக் கொண்டு வந்து, பொது வாக்கெடுப்பு நடத்தி, ஒரு பெரிய புதுமையை உருவாக்க வேண் டும்.
வாழ் கின்ற தமிழர்களையாவது காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வோடு நாம் செய்ய வேண்டும் என்றால், இதற்கு அரசியல், கட்சிப் பார்வை தேவையில்லை. சமுதாயப் பார்வை தேவை; இனப் பார்வை தேவை.
எப்படி ஜாதி ஒழிப்புக்கு ஒரு பொதுப் பார்வை தேவையோ அதுபோல தமிழின மீட்புக்கும் திராவிட சமு தாய மான மீட்புக்கும் அது தேவை தேவை என்று சொல்லி, சிறப்பான மாநாட்டினை நடத்திய தோழர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வணக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக