செவ்வாய், 4 டிசம்பர், 2012

வெறுப்பரசியல் இடம்பெயரும் தொழிலாளிகள்: இனவெறியர்களின்


சென்னையில், அடிப்படை வசதிகளின்றித் தகரக் கொட்டகையில் வாழ வேண்டிய அவலத்தில் தள்ளப்பட்டுள்ள வடமாநில கட்டுமானத் தொழிலாளர்கள்
நீண்ட தகரக் கொட்டகை. அதில் ஆறடிக்கு நாலடியில்  சிறிய அறைகள். அறை முழுவதும் பாகள் விரிக்கப்பட்டிருக்கின்றன. ஓரத்தில் சூட்கேஸ்கள் தலையணையாக உள்ளன. சுவரில் ஆணியில் தொங்கும் சட்டைகள், பேண்டுகள். இது நான்கு பேர் தங்கும் அறை. இதுபோல் அடுத்தடுத்து பல அறைகள். வெளியே அனைவருக்கும் குளிக்க ஒரு பெரிய தொட்டி. சுகாதாரமற்ற கழிப்பறைகள். கழிவுநீர் அப்பகுதியில் சாக்கடையாகத் தேங்கி நிற்கிறது.  இவைதான் வடமாநிலங்களிலிருந்து வந்து சென்னையில் வானுயர்ந்த கட்டிடங்களை எழுப்பும் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் வாழ்விடங்கள்.
கால்களை நீட்டிப் படுக்கக்கூட இடமில்லாமலும், இரவு முழுவதும் கொசுக்கடியால் அவதிப்பட்டும் உறங்கும் அவர்கள், காலையில் ஒப்பந்ததாரர்களால் கட்டுமானப் பணி நடக்கும் இடங்களுக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறார்கள்.
சென்னையைச் சுற்றி பெருங்குடி, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், பெருங்களத்தூர், தாம்பரம், திருவான்மியூர் ரயில் நிலயத்தை ஒட்டிய பகுதி முதலான பல இடங்களிலும் கட்டுமானத் தொழிலாளர்கள் இப்படித்தான் வாழ்கிறார்கள்.
அடிப்படை வசதிகள் இல்லாத  சுகாதாரமற்ற சூழலால் இவர்களில் பலர் நோய்வாய்ப்படுகின்றனர். அண்மையில் சென்னையில் வட மாநிலத் தொழிலாளர் இரண்டு பேர்  வாந்தி-பேதியால் மாண்டு போயுள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக, இவர்களுக்குப் பணியாற்றுமிடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளோ, அவசர மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகளோ கிடையாது. சென்னை ஜேப்பியார் கல்லூரி கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் கட்டிடம் சரிந்து விழுந்து உயிரோடு கொல்லப்பட்டனர். ஓமலூர் தவிட்டுக் கம்பெனியில் தீயில் வெந்து வடமாநிலத் தொழிலாளிகள் மாண்டு போயினர். இத்தகைய அவலங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
விவசாயத்தின் அழிவும் தீவிரமாகும் உலகமயமாக்கமும் நாடெங்கும் கிராமப்புற இளைஞர்களை வாரிக்கொண்டுவந்து பெருநகரங்களில் குவித்துக் கொண்டிருக்கிறது. 2007-08 ஆம் ஆண்டின் தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் ஏறத்தாழ 30 சதவீத மக்கள், இடம் பெயரும் உழைக்கும் மக்களாக உள்ளனர். கடந்த 2001-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ஏறத்தாழ ஒரு கோடியே 70 லட்சம் பீகாரிகள் இடம் பெயர்ந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் பஞ்சாப், டெல்லி, மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் கூலித் தொழிலாளர்களாகக் குடியேறியுள்ளனர். இடம் பெயர் தொழிலாளர்களின் மையமாக மும்பை நகரம் மாறியுள்ளது. இங்கு இடம் பெயர்ந்த உழைக்கும் மக்களாக ஏறத்தாழ ஒரு கோடிக்கும் மேலானோர்  உள்ளனர்.
கடந்த ஆகஸ்டு மாதத்தில் தென்மாநிலங்களிலிருந்து உயிருக்கு அஞ்சி வெளியேறும் வடமாநிலத் தொழிலாளர்கள்
கடந்த ஆகஸ்டு மாதத்தில் தென்மாநிலங்களிலிருந்து உயிருக்கு அஞ்சி வெளியேறும் வடமாநிலத் தொழிலாளர்கள்
தமிழகத்தில் ஏறத்தாழ 10 முதல் 15 இலட்சம் பேர் இடம் பெயர்ந்த தொழிலாளர்களாக உள்ளனர். ஆந்திரா, அசாம், பீகார், சட்டிஸ்கர், ஒரிசா, உ.பி. மணிப்பூர், மிஜோரம் முதலான மாநிலங்களிலிருந்து இடம் பெயர்ந்த இக்கட்டுமான கூலித் தொழிலாளர்களுக்கு 12 மணி நேர வேலைக்கு 150 முதல் 300 ரூபாய் வரை ஊதியமாகத் தரப்படுகிறது. இவர்கள் தவிர, நாளொன்றுக்கு ரூ.100,150 கூலியுடன்  தமிழகத்தின்  உணவு விடுதிகள் – தேநீர்க்கடைகளில் பல இளைஞர்கள் பணியாற்றுகின்றனர்.
பல ஆண்டுகளாக இவர்கள் தமிழகத்தில் தங்கியிருந்த போதிலும், இவர்களுக்கு அடையாள அட்டை எதுவும் ஒப்பந்ததாரர்களால் வழங்கப்படுவதில்லை. தொழிலாளர்களுக்கு கேன்டீன், குழந்தைகள் காப்பகம், குடிநீர், கழிவறை முதலான வசதிகளைச் செய்து தர வேண்டியது முதலாளிகளின் கடமையாகும். அல்லது ஒப்பந்ததாரர்கள் அவற்றைச் செய்ய வேண்டும். மாநில அரசு அதனைக் கண்காணித்து நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால், குறைந்த பட்ச கூலி உள்ளிட்டு இந்த அடிப்படை வசதிகள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படாத போதிலும் அரசு கண்டுகொள்வதில்லை. இடம் பெயரும் தொழிலாளர்கள் சட்டபூர்வக் கூலியைக்கூட கேட்க முடியாத, அதைப் பற்றி அறிந்திராத நிலையிலேயே உள்ளனர். அவர்களை அமைப்பாக்கி தொழிற்சங்கம் கட்டக்கூட விடாமல்  முதலாளிகளும் ஒப்பந்ததாரர்களும் மூர்க்கமாகத் தடுத்து வருகின்றனர்.
இத்தகைய இடம் பெயரும் உழைக்கும் மக்களுக்கு, தேர்தல் நேரத்தில் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்த முடியாத நிலைமையே நீடிக்கிறது. அது பொதுத் தேர்தலாக இருந்தாலும் உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும் அவர்களால் தங்கள் பகுதிக்குச் சென்று வாக்களிக்க முடிவதில்லை. ஆனால், இது பற்றி தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
இடம் பெயரும் உழைக்கும் மக்களுக்கு அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழான உணவுப் பொருட்கள் இடம் பெயர்ந்த இடத்தில் வழங்கப்படுவதில்லை. ஏனெனில், அவர்கள் தற்காலிகமாக இடம் பெயர்ந்துள்ள இடத்திற்கான ஆதாரத்தைப் பெற வேண்டியிருக்கிறது. அப்படி ஒருவேளை பெற்றாலும், அந்த இடத்தில் வேலை நிரந்தரமில்லாததால், அடுத்தடுத்து வேறிடத்துக்கு மாறிச் செல்ல வேண்டியிருக்கிறது. அங்கும் ஆதாரத்தைப் பெற வேண்டியிருக்கிறது. இது தீராத நச்சுச் சுழலாக இருப்பதால் இடம் பெயரும் உழைக்கும் மக்கள் தாங்கள் செல்லுமிடங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு முறையும் ஆதாரத்தைப் பெற முடியாமல் தவித்து நிற்கின்றனர். இதனால் அவர்கள் வறுமைக் கோட்டுக்கு மேலுள்ளவர்கள் வாங்குவதைப் போலவே, தனியார் அங்காடிகளில் உணவுப் பொருட்களைக் கூடுதல் விலைக்கு வாங்க வேண்டியதாகி, தொடர்ந்து ஏழ்மை நிலையிலேயே உள்ளனர்.
இடம் பெயரும் உழைக்கும் மக்களுக்கு இலவசப் போக்குவரத்து, குடியிருப்பு, வேலைவாப்பு, மருத்துவம், அவர்களது குழந்தைகளுக்கான கல்வி முதலான அடிப்படை வசதிகளைச் செதுதர வேண்டும் எனத் தொழிற்சங்கங்களும், தன்னார்வக் குழுக்களும்,  சில அறிவுத்துறையினரும் அவ்வப்போது குரலெழுப்பிய போதிலும்,  அரசும் முதலாளிகளும் அதை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. அரசின் கொள்கை வகுப்பாளர்கள் இவர்களைப் பற்றி அக்கறை காட்டுவதில்லை. இதனால் ஏற்படும் சமூகக் கொந்தளிப்புகளைப் பற்றிய தொலைநோக்குப் பார்வையோ, தீர்வோ அவர்களிடம் இல்லை.
இடம் பெயர்ந்த பீகாரி கூலித் தொழிலாளியை சுற்றிவளைத்துத் தாக்கும் இனவெளி பாசிச ராஜ் தாக்கரே குண்டர்களின் அட்டூழியம்
இடம் பெயர்ந்த பீகாரி கூலித் தொழிலாளியை சுற்றிவளைத்துத் தாக்கும் இனவெளி பாசிச ராஜ் தாக்கரே குண்டர்களின் அட்டூழியம்
இந்திய அரசின் அடிப்படை உரிமைகள் சட்டத்தின் 19(1) பிரிவு ‘டி’ மற்றும் ‘இ’ யின் படி, எந்த ஒரு குடிமகனும் நாட்டின் எந்தப் பகுதிக்கும் இடம் பெயரவும் அப்பகுதியில் தொடர்ந்து வாழவும் உரிமை உள்ளது. இருப்பினும், கடந்த 2008-ஆம் ஆண்டில் மும்பை, புனே, நாசிக் நகரங்களில் பிழைப்புக்காகக் குடியேறிய உ.பி. பீகார் மாநிலக் கூலித் தொழிலாளிகள் மீது மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா நடத்திய வன்முறைத் தாக்குதலால் வட இந்திய உழைக்கும் மக்கள் மும்பையை விட்டுத் தப்பியோடிய அவலம் நடந்தது. அண்மையில் வட மாநிலங்களைச் சேர்ந்த ரிச்சர்டு லோயிதம் பெங்களூரிலும், தனா சங்மா குர்கானிலும் கொல்லப்பட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களிலிருந்து பிற மாநிலங்களில் கல்விக்காகவும் பிழைப்புக்காகவும் குடியேறும் மக்களைத் தாக்குவதும் இழிவுபடுத்துவதும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்து மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மைய அரசின் உள்துறை அமைச்சகம் எச்சரிக்கிறது. ஆனால், எந்த மாநில அரசும் இதனைப் பொருட்டாக மதிப்பதேயில்லை.
தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாதிக்கக் கொள்கையானது, உழைக்கும் மக்களின் பெருந்திரளான இடம் பெயர்தலையும் சமூகத்தில் முறுகல் நிலையையும் தோற்றுவித்துள்ளது. விவசாயத்தின் அழிவும், அதில் முதலீடற்ற நிலையும், திணிக்கப்படும் ஏகாதிபத்திய உலகமயமாக்கமும் இப்பிரச்சினையை மேலும் தீவிரமாக்கி வருகிறது. விவசாயத்தை விட்டு உழைக்கும் மக்கள் பெருந்தொகையில் நகரங்களில் குவிவதையும், தேவையேயில்லாமல் உழைக்கும் மக்களை விசிறியடித்து அலைக்கழிக்கப்பதையும் உலகமயமாக்கம் மூர்க்கமாகச் செது கொண்டிருக்கிறது. அற்பக்கூலியுடன் உரிமைகளற்ற அடிமை நிலையில் வாழும் இம்மக்கள், எஸ்.எம்.எஸ். பீதியால் உயிருக்கு அஞ்சி ஓட வேண்டிய அவலத்தைப் போன்று, எந்நேரமும் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில்தான் உயிர் வாழ வேண்டியிருக்கிறது. ஆக்கிரமிப்பாளர்களாகக் காட்டி இடம் பெயரும் தொழிலாளர்கள் மீது இனவெறி, சமூகப் புறக்கணிப்பு, பாலியல் தாக்குதல்கள், அச்சுறுத்துவது, விரட்டுவது, பொய்வழக்கு போடுவது, கைது செய்வது, கொள்ளையர்களாகச் சித்தரித்து சுட்டுக் கொல்வது – என்பதாக நிலைமைகள் தீவிரமாகி வருவதால், வரப் போகும் காலம் மிகவும் சிக்கலாகவே இருக்கும் என்று சில முதலாளித்துவ அறிஞர்களே ஒப்புக் கொள்கின்றனர்.
கூலித் தொழிலாளிகளாகப் பெரு நகரங்களில் குவியும் இடம் பெயரும் தொழிலாளர்கள் யாருடைய வாழ்வையும் பறிப்பதற்காக வந்தவர்கள் அல்ல. இருப்பினும், வடகிழக்கிந்தியர்களை அந்நியர்களாகப் பார்க்கும் மனோபாவம்தான் சமுதாயத்தில் நிலவுகிறது. அவர்கள் வேலை வாப்பைப் பறித்துக் கொள்கிறார்கள், அவர்களால் சமூகத்தின் ஒழுங்கு சிதைகிறது என்றெல்லாம் இனவெறியர்களால் இட்டுக்கட்டப்பட்ட பிரச்சாரத்துக்கு மக்கள் எளிதில் பலியாகியாகிறார்கள். அசாமில் நடந்துள்ள வன்முறை வெறியாட்டங்களும், அதைத் தொடர்ந்து வடகிழக்கிந்திய மக்கள் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து பெருந்திரளாக வெளியேறியதும்,  பிழைப்புக்காக நாட்டுக்குள்ளேயே நடக்கும் குடியேற்றங்களும் இன ரீதியான வன்மத்தை மக்களிடையே மௌனமாக வளர்த்துக் கொண்டிருக்கிறது. நாட்டில் ஏற்கெனவே நீடித்துவரும் சாதி, மத, இன முரண்பாடுகளும் வேலையின்மை, விலையேற்றம் முதலான பிரச்சினைகளும் தீராத நிலையில், இடம் பெயர் தொழிலாளர்கள்தான் இவையனைத்துக்கும் காரணம் என்பதாக வெறியூட்டப்பட்ட நிலையில்தான் நமது சமூக அமைப்பு உள்ளது.
வெளி மாநிலத்தவருக்குக் குடும்ப அட்டை தரக்கூடாது எனக் கோரி த.தே.பொ.கட்சியின் இளைஞர் அமைப்பினர் சென்னையில் நடத்திய ஆர்பாட்டம்
வெளி மாநிலத்தவருக்குக் குடும்ப அட்டை தரக்கூடாது எனக் கோரி த.தே.பொ.கட்சியின் இளைஞர் அமைப்பினர் சென்னையில் நடத்திய ஆர்பாட்டம்
கடந்த 2008-ஆம் ஆண்டில் வட இந்திய மாணவர்கள் ரயில்வே நுழைவுத் தேர்வு எழுத மும்பை வந்த போது இனவெறி பிடித்த ராஜ்தாக்கரேவின் குண்டர்களால் தாக்கி விரட்டப்பட்டனர். மும்பையில் டாக்சி ஓட்டுநர்களான பீகாரிகள் அடுத்தடுத்து தாக்கப்படுகின்றனர். ஆனால், இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் இல்லாமல் மும்பை ஒருநாள் கூட இயங்க முடியாது என்பதே உண்மை. டாக்சி ஓட்டுநர்கள், காய்கறி வியாபாரிகள், பால்காரர், செய்தித்தாள் போடுபவர், டெலிவரி பையன்கள் எனப் பலதரப்பட்ட வேலைகளைச் செய்பவர்கள் வடகிழக்கு மாநிலத்தவர்கள்தான். இவர்களில் பெரும்பாலோர் பீகார், உ.பி. முஸ்லிம்களாக இருப்பதால், இவர்களால் மராத்தியர்களின் வாழ்வும் வளமும் பண்பாடும் நாகரிகமும் நாசமாகிவிட்டதாகவும்,  இவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டி வெறியூட்டி வருகிறது ராஜ்தாக்கரே கும்பல். தமிழகத்தின் மணியரசன் கும்பலோ, தமிழகத்தில் பிழைப்புக்காகக் குடியேறியுள்ள வடமாநிலத் தொழிலாளர்களை வெளியேற்ற வேண்டுமென்று வெறியூட்டுகிறது.
பொதுவில் அனைத்து ஓட்டுக் கட்சிகளும் ராஜ்தாக்கரே அளவுக்கு வன்மத்தைக் காட்டாதபோதிலும், தமது ஓட்டு வங்கிக்காக இதே பாணியில்தான் செயல்படுகின்றன. காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரங்களில் குறுகிய இனவெறியூட்டி அரசியல் ஆதாயமடையும் நோக்கில்தான் கர்நாடகா மற்றும் கேரளத்தின் அனைத்து ஓட்டுக் கட்சிகளும் செயல்படுகின்றன. ஆனால், உழைக்கும் மக்களின் இன, மொழி, பண்பாட்டு அடையாளங்களைத் தகர்த்துக் கொண்டிருப்பதும், வேலையின்மை, விலையேற்றம் முதலானவற்றுக்குக் காரணமாக இருப்பதும் ஏகாதிபத்திய உலகமயமாக்கம்தான். ஒருபுறம் தரகுப் பெருமுதலாளிகளும், புதிய தரகு வர்க்கங்களும், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களும் கொழுப்பதற்கும், உழைக்கும் மக்கள் மரணப் படுகுழியில் சிக்கித் தவிப்பதற்கும் காரணமாக இருப்பது தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாக்கம்தான். இந்நிலையில், உலகமயமாக்கலை எதிர்க்காமல் குறுகிய இனவெறியூட்டுவதையே இவர்கள் தீர்வாக முன்வைக்கின்றனர்.
மகாராஷ்டிராவில் ராஜ்தாக்கரே கும்பல் மராத்தா இனவெறி-இந்துவெறி தேசியத்தை இதற்குத் தீர்வாக வைக்கிறது. தமிழகத்தில் மணியரசன் கும்பலோ தமிழ்த்தேசியத்தைத் தீர்வாகக் காட்டுகிறது. ராஜ்தாக்கரே முன்வைக்கும் இந்துத்துவ தேசியமோ, மணியரசன் முன்வைக்கும் தமிழ்த்தேசியமோ உலகமய எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல. தாக்கரே கும்பல் என்ரானை வரவேற்று ஆதரித்தது என்றால், மணியரசன் கும்பலோ தமிழகத்தில் முதலீடு செயும் அந்நிய நிறுவனங்களில் தமிழனுக்கு பங்கு கேட்கிறது. ஏகாதிபத்திய உலகமயத்துடன் கூட்டணி கட்டிக் கொண்டுள்ள இவர்கள், வடமாநிலங்களிலிருந்து பிழைப்புக்காக வந்தேறிய தொழிலாளர்களை எதிரிகளாகக் காட்டுகின்றனர். தமிழனுக்கு எதிரியாக வடமாநிலத் தொழிலாளர்களையும், மராத்தியனுக்கு எதிராக பீகார் தொழிலாளர்களையும் நிறுத்தி இவர்கள் இனவெறியூட்டி மோதவிடுகின்றனர்.
ஏகாதிபத்திய உலகமயமாக்கத்தின்கீழ் உற்பத்தியும் உழைப்புப் பிரிவினையும் உலகமயமாகியுள்ள நிலையில், ஏகாதிபத்திய மூலதனத்துக்கு – பன்னாட்டு ஏகபோக தொழிற்கழகங்களுக்கும் தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனங்களுக்கும் – எதிரான போராட்டங்களில் தேசிய எல்லைகளையும் தேசிய இன அடையாளங்களையும் கடந்த பாட்டாளி வர்க்க அமைப்புகளும் இயக்கங்களும் ஒன்றிணைய வேண்டிய தேவை எழுந்துள்ளது. இனம் கடந்த தொழிலாளர் ஒற்றுமையைக் கட்டியமைப்பதன் மூலம்தான் உலகமயமாக்கத்தை வீழ்த்த முடியும். ஆனால், உழைக்கும் மக்கள் உலகமயமாக்கலுக்கு எதிராக ஓரணியில் திரண்டு போராடுவதைத் தடுத்து திசைதிருப்பவும், குறுகிய இனவெறியூட்டி ஆதாயமடையவும் ராஜ்தாக்கரே, வட்டாள் நாகராஜ், தமிழகத்தின் மணியரசன் கும்பல் போன்றவை கிளம்பியுள்ளன. வர்க்க ஒற்றுமையைச் சிதறடித்து இனரீதியாகக் கூறுபோட்டுப் பிரிக்கும் அடையாள அரசியலையே தங்களது நிகழ்ச்சிநிரலாகக் கொண்டுள்ள இவர்கள், தங்களது வர்க்கத்தன்மைக்கேற்ப வெவ்வேறு அளவுகளில் செயல்படுத்துகின்றனர்.
எல்லாவற்றையும் தேசிய இன முரண்பாடகப் பார்க்கும் மணியரசன் போன்ற இனவாத அடையாள அரசியல்வாதிகளின் காமாலைக் கண்களுக்கு ஏகாதிபத்திய உலகமயமாக்கலையும் அதன் கொடிய விளைவுகளையும் புரிந்து கொள்ள முடியாது. வட மாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராகத் தமிழ் மக்களின் பகையைத் தூண்டுவதென்பது, ஏகாதிபத்திய உலகமயமாக்கத்துக்குத் துணைபோவதுதானேயன்றி, அது தேசிய இனச் சிக்கலுக்கோ தீவிரமாகிவரும் பிரச்சினைகளுக்கோ ஒருக்காலும் தீர்வாக முடியாது. வட இந்தியத் தொழிலாளிகளால் தமிழனக்குப் பாதிப்பு ஏதுமில்லை எனும்போது, இத்தகைய இனவெறியர்கள் தமிழனின் பெயரால், தமிழினத்தின் பெயரால் பேசுவதற்கு எந்த உரிமையும் கிடையாது. ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு எதிரான பாட்டாளி வர்க்க உலகமயமாக்கம்தான் மாற்றுத் தீர்வாக முடியும். பாட்டாளி வர்க்க சர்வதேசியம்தான் பாட்டாளி வர்க்க உலகமயமாக்கத்துக்குப் பொருத்தமான அரசியல் அமைப்பாகவும் இருக்க முடியும். அத்தகைய திசையில், இனவெறியர்களைத் தனிமைப்படுத்தி, ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு எதிராகத் தேசிய எல்லைகளையும் தேசிய இன அடையாளங்களையும் கடந்த போராட்டங்களும் தொழிலாளர்களின் ஒற்றுமையுமே இன்றைய தேவையாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக