சவீதா
சவீதாவுக்காக போராட்டம்யர்லாந்தின் கத்தோலிக்க அடிப்படைவாத சட்டத்தின் கீழ் கருக்கலைப்பு உரிமை மறுக்கப்பட்டு உயிர் இழந்த சவிதாவின் குடும்பம் ஐரோப்பிய மனித உரிமைகளுக்கான நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்திருக்கிறது.
சுகாதரத் துறை அமைச்சர் பொது விசாரணை நடத்த மறுத்ததை அடுத்து சவிதாவின் கணவர் பிரவீன் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவரது வழக்கறிஞர் ஜெரார்ட் ஓ டொன்னல் தெரிவிக்கிறார். அயர்லாந்தின் சுகாதாரத் துறை நடத்திய இரண்டு விசாரணைகளை பிரவீனின் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை.
31 வயதான சவிதா ஒரு பல் மருத்துவர். இந்தியாவைச் சேர்ந்த கணவனும் மனைவியும் திருமணமாகி நான்கு ஆண்டுகளாக அயர்லாந்தில் உள்ள கேல்வேயில் வசித்து வந்திருக்கின்றனர். 17 வார கர்ப்பிணியான சவிதா கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி திடீரென ஏற்பட்ட கடும் முதுகு வலியால் கேல்வே பல்கலைக்கழக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்த மருத்துவர்கள், “கருவிற்கு இதயத் துடிப்பு இன்னும் இருப்பதால், கருக்கலைப்பு செய்ய முடியாது” என்று மறுத்துள்ளனர்.
“குழந்தையைக் காப்பாற்ற முடியாத பட்சத்தில் கருவை கலைத்து வெளியேற்ற வேண்டியதுதானே” என்று கேட்ட சவிதாவிற்கு,
“கருவிற்கு இதயத் துடிப்பு இருக்கும் வரை எதுவும் செய்ய முடியாது” என்று மருத்துவர்கள் பதிலளித்து உள்ளனர்.
மறுநாளும் கருக்கலைப்பு செய்து விடுமாறு மன்றாடிய சவிதாவிற்கு, “அயர்லாந்து ஒரு கத்தோலிக்க நாடு, இங்கு கருக்கலைப்பு செய்வது சட்டப்படி குற்றம்” என்றும் பதிலளித்து உள்ளனர், அதற்கு சவிதா “நான் அயர்லாந்து வாசியும் இல்லை, கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவரும் இல்லை” என்று கூறி மீண்டும் தன் உயிரைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறார். அதற்கு “எங்களால் ஒன்றும் செய்ய முடியாது” என்று சொல்லி கைகழுவி உள்ளனர் மருத்துவர்கள்.
தொடர்ந்து வாந்தி எடுத்து மயங்கிய சவிதாவின் உடல் நிலையைக் கண்டும் அசராமல், ‘கொள்கை’யை உயர்த்திப்பிடித்து நின்று உள்ளனர் மருத்துவர்கள். இறுதியில், மறுநாள் கருவின் இதயத் துடிப்பு நின்ற பிறகு, கருக்கலைப்பு செய்துள்ளனர்.
சட்டத்தையும் கத்தோலிக்க மதநெறிகளையும் காப்பாற்றிய மருத்துவர்களால் சவிதாவின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவரது உயிரும் அக்டோபர் 28-ம் தேதி பிரிந்து விட்டது.
தானாக நடந்த கருச்சிதைவை வெளிக்கொண்டு வராமல் உடலிலே விட்டதின் விளைவு தான் இது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், பிரேதப் பரிசோதனையில், “சவிதாவின் சாவிற்கு அவருக்கு இரத்தம் கொடுத்தபோது ஏற்பட்ட ஒவ்வாமைதான் காரணம்” என்று மருத்துவமனை பதிவு செய்து உள்ளது.
‘இந்த உயிர்க் கொலைக்கு பொறுப்பு அயர்லாந்து சட்டங்கள்தான், கத்தோலிக்க மதக் கோட்பாடுகள் இல்லை’ என்று சப்பைக் கட்டு கட்டுகின்றனர் கத்தோலிக்க மதவாதிகள்.
அயர்லாந்தில், 1957-ம் ஆண்டு மேமி கேடன் என்ற கருக்கலைப்பு நிபுணரின் நோயாளிகளில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது (பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது). 1983-ம் ஆண்டு அரசியல் சட்டம் திருத்தப்பட்டு ‘பிறக்காத குழந்தைக்கு கருத்தரித்தது முதலே வாழ்வதற்கான உரிமை இருக்கிறது’ என்று உறுதி செய்யப்பட்டது. கூடவே ‘குழந்தையை சுமக்கும் தாய்க்கு இருக்கும் வாழும் உரிமையை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்றும் சேர்க்கப்பட்டிருந்தது. கருவில் இருக்கும் குழந்தையின் உரிமை தாயின் உயிர் வாழும் உரிமைக்கு சமமாக (அல்லது அதிகமாக) வைக்கப்பட்டது.
அயர்லாந்தின் உச்சநீதிமன்றம் கருக்கலைப்பை தடை செய்யும் சட்டத்தை மாற்றும் படி பரிந்துரைத்தும் கத்தோலிக்கர்களின் ஓட்டுகளை இழந்து விடக் கூடாது என்ற நோக்கத்தில் அயர்லாந்தின் அடுத்தடுத்த அரசுகள் சட்ட சீர்திருத்தங்களை தள்ளிப் போட்டிருக்கின்றன.
தாய் அல்லது கருவின் உயிருக்கு ஏற்பட்டிருக்கும் அபாயத்தை முடிவு செய்வது மருத்துவர்களின் பொறுப்பு. சவிதாவின் கருவை பாதுகாப்பதில் உறுதியாக நின்ற மருத்துவர்கள் அதன் தாயின் உயிரிழப்புக்கு காரணமாகியிருக்கின்றனர்.
இன்றும் உலக மக்கள் தொகையில் 26 சதவீதம் பேர் வாழும் 68 நாடுகளில் கருக்கலைப்பு சட்டவிரோதமாக உள்ளது. பெரும்பாலான நாடுகளில் மத அடிப்படைவாதம்தான் கருக்கலைப்பை தடை செய்வதற்கு காரணமாக உள்ளது. உதாரணமாக போலந்தில் கம்யூனிச ஆட்சியின் போது அனுமதிக்கப்பட்டிருந்த கருக்கலைப்பு 1990களுக்குப் பிறகு பொது வாக்கெடுப்பின் மூலம் சட்ட விரோதமாக்கப்பட்டது. தன்னை ‘ஜனநாயகத்தை’ காவல் காக்கும் இரட்சகனாக காண்பித்துக்கொண்டு, எல்லா நாடுகளின் விஷயத்தில் மூக்கை நுழைக்கும் அமெரிக்காவிலும் அதுதான் நிலைமை.
சவிதா இறந்தது வெறும் விபத்தல்ல அது உயிருக்கு துளிக்கூட முக்கியத்துவம் கொடுக்காமல் அரங்கேற்றப்பட்ட பச்சைப் படுகொலை. இக்கொலைக்கு துணை நின்ற கத்தோலிக்க மருத்துவர்கள் எப்படியும் இந்நேரத்திற்குள் பாவமன்னிப்பு கேட்டு புனிதம் அடைந்து இருப்பார்கள்! ஆமென்!
படிக்க: