ஞாயிறு, 9 டிசம்பர், 2012

நாஞ்சில் சம்பத்: வைகோ எங்களையெல்லாம் நாயைப் போல நடத்தினார்...

சென்னை: வைகோ ஒரு சந்தேகப் பிராணி. தன்னுடைய நிழலைக்கூட அவர் சந்தேகிப்பார். எங்களையெல்லாம் ஒரு நாயைப் போலத்தான் நடத்தினார் என்று கூறியுள்ளார் மதிமுகவிலிருந்து விலகி அதிமுகவின் கொள்கைப் பரப்பு துணைச் செயலாளராக மாறியுள்ள நாஞ்சில் சம்பத்.
மதிமுகவிலிருந்து விலகியது ஏன், வைகோவுடன் என்ன ஊடல், அதிமுகவில் கிடைத்தது என்ன என்பது குறித்து நக்கீரனுக்கு பேட்டி கொடுத்துள்ளார் சம்பத். அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது...
 கழுகால் விரட்டப்பட்ட புறா சிபி சக்கரவர்த்தியின் மடியில் அடைக்கலம் நாடியது போல் அதிமுகவில் அடைக்கலம் நாடியிருக்கிறேன். இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது மாதிரி உணர்கிறேன். பள்ளத்தில் இருந்து சமவெளிக்கு வந்தது மாதிரி இருக்கிறது. மிகுந்த கனிவோடும் பரிவோடும் என்னிடம் உரையாடிய அம்மா, எனது குடும்பத்து நிலை குறித்து பரிவோடு விசாரித்தார்கள்.  
 என்மீது போடப்பட்டிருந்த வழக்குகள் திரும்பப் பெறப்படும் என சொல்லி என்மீது திணிக்கப்பட்ட விலங்குகள் நொறுங்கி விழுந்த பரவசத்திற்குள்ளாக்கினார்கள். எமக்கு வாய்த்த அடிமைகள் நல்ல உழைப்பாளிகள் http://tamil.oneindia.in/
இனி என் பயணம் அதிமுகவின் வெற்றிகளையும் பெருமைகளையும் சொல்வதாக இருக்கும். பட்டபாடுகளுக்கு உரிய பரிசுகளை இனி மேல்தான் பெறப்போகிறேன்
 எப்பொழுதும் எங்கேயும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கடமையாற்றுவதுதான் என் பழக்கம். நான் வழக்குகளுக்குப் பயந்து பதவியை எதிர்பார்த்து சூட்கேஸ் பெற்றுக்கொண்டு அதிமுகவில் சேர்ந்தேன் என என்னை அழுக்காக்கி யாரும் தன்னுடைய பேனாவின் தரத்தைக் குறைத்துக்கொள்ளக் கூடாது.
 மதிமுகவினர் பாவம்... காரணத்தைத் தேடி அலைகிறார்கள். அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அதிமுக, மதிமுக வுடன் கூட்டணி வைத்திருந்த காலத்தில் அதிமுகவை ஆதரித்தே பேசியிருக்கிறேன்.
 வைகோ குறித்து நான் தவறாகப் பேசக் கூடாது என்று அதிமுக தலைமை தடையிட்டுள்ளாக கூறப்படுவது தவறான தகவல். வெளிச்சத்தைப் பற்றி சிந்திக்க வேண்டிய நான் இனி விலங்குகளைப் பற்றி சிந்திக்கக்கூடாது, பேசக்கூடாது என நினைக்கிறேன்.
 எதிர்காலத்தில் அதிமுக, மதிமுக கூட்டணி சேர்ந்தால் வைகோவை மீண்டும் பாராட்டுப் பேசுவேனா என்ற யூகங்களுக்குப் பதில் சொல்ல முடியாது
 மதிமுக. என்பது ஒரு வித்தியாசமான கட்சி. அங்கு சேர்ந்தவர் களைவிட விலகியவர்கள்தான் அதிகம். வைகோ ஒரு சந்தேகப் பிராணி. தன்னுடைய நிழலைக்கூட அவர் சந்தேகிப்பார். அந்த நிழலுக்கு எப்பொழுது நெருக்கடி வரும் என்று தெரியவில்லை.
 என்னை ஏன் வைகோ ஒதுக்கினார் என்கிற காரணம் அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். என்னை வீட்டுக்கு அழைப்பார், சாப்பாடெல்லாம் பரிமாறுவார். அவரிடம் ஒரு கட்சித் தலைவனுக்குரிய ஜனநாயகப் பண்பு இல்லை. ஜனநாயகம் என்பது அடுத்தவன் இருப்பை ஒத்துக் கொள்வது. அந்தப் பண்பு அவரிடம் இல்லை. எங்களையெல்லாம் அவர் வீட்டு நாயைப் போல் நடத்தினார். அந்த நாய்க்கு சாப்பாடு போடுவதைப்போலத்தான் எங்களுக்கு உண வளித்தார்.
 மதிமுகவில் இருந்த 18 ஆண்டு காலமும் எதிர்நீச்சல்தான். எப்பொழுதும் எதையோ இழந்துபோன வலியோடுதான் வாழ்ந்தேன். வலிக்கு மருந்தோ, பரிகாரமோ வைகோவிடம் எப்போதும் கிடைத்ததில்லை. சரி... விதிக்கப்பட்ட வாழ்க்கை இதுதான் என இருந்தாலும் வைகோ சும்மா விடமாட்டார். அசிங்கப்படுத்துவார், அவமானப்படுத்துவார். இந்த கொடுமைகளிலிருந்து தப்பிக்கவே நான் அதிமுகவில் ஐக்கியமானேன்.
 எந்தக் கட்சியில் சேர வேண்டுமென்பது அவரவர் சொந்த முடிவு. திமுக வுக்கு நான் போவதாக யாரிடத்திலும் சொல்ல வில்லை. இதன்பொருட்டு யார் வீட்டுக் கதவையும் நான் தட்டவில்லை. கலைஞர் மீது எனக்குக் கடுமையான விமர்சன கருத்துக்கள் உண்டு. தொடர்ந்து திமுக, தமிழ் இனத்திற்கும் தமிழ் ஈழத்திற்கும் இழைத்து வந்த துரோகம் மாறவில்லை. திமுக தன்னை மாற்றிக்கொள்ளவில்லை.
 நான் எதையும் நெகட்டிவ் ஆக யோசிப்பதில்லை. அந்த பாசிட்டிவ்வைத் தான் நானும் அதிமுகவில் எதிர்பார்க்கிறேன் என்றார் சம்பத்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக